மோட்சம் - சொர்க்கம் இரண்டும் ஒன்றா...

கருட புராணம் என்ன சொல்கிறது ?

சொர்க்கம், மோட்சம் இவை இரண்டுமே ஒன்று தானா என்ற சந்தேகம் மனிதர்களாகிய நமக்கு எழுவதை போல், திருமாலை சுமந்து செல்லும் கருடாழ்வாருக்கும் வந்தது. இந்த சந்தேகத்திற்கான பதிலை, ஸ்ரீமந் நாராயணன், கருட புராணத்தில் கருடருக்கு விளக்கமாக சொல்லி உள்ளார். ஸ்ரீமந் நாராயணன், கருடாழ்வாரை நோக்கி அவருடைய வினாவிற்கு விடை அளிக்க துவங்கினார். மோட்சம் என்பது ஒருவர் எந்தவிதமான பிறவியும் எடுக்காமல் அல்லது பிறவி நிலைகளில் இருந்து முழுவதுமாக சுதந்திரம் அடைவதாகும்.

கருடனுக்கு வந்த சந்தேகம்

பிறந்து, இறப்பு என்ற சக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது தான் மனித வாழ்க்கை. இதை தான் ஆன்மீக பெரியவர்கள் சம்சார பந்தம் என குறிப்பிடுகின்றனர். ஆசை, பற்றுகளை துறந்து, இந்த சம்சார பந்தத்தில் இருந்து விடுபட்டு, இறைவனின் திருவடிகளை அடைவதே மனித பிறவியின் நோக்கம். இறைவனின் திருவடிகளை அடைவது, மோட்சம் அடைவது, சொர்க்கத்திற்கு செல்வது, வைகுண்ட பிராப்தி, சிவலோக பதவி, முக்தி என பல வார்த்தைகளை ஆன்மீக பெரியவர்கள் குறிப்பிடுகிறார்கள்

சொர்க்கம் என்றால் என்ன?

ஸ்ரீமந் நாராயணன், கருடாழ்வாரை நோக்கி அவருடைய வினாவிற்கு விடை அளிக்க துவங்கினார். மோட்சம் என்பது ஒருவர் எந்தவிதமான பிறவியும் எடுக்காமல் அல்லது பிறவி நிலைகளில் இருந்து முழுவதுமாக சுதந்திரம் அடைவதாகும். சுருங்க சொல்லப்போனால் மீண்டும் ஜனனம், அதாவது பிறவி எடுக்காமல் இருப்பது மோட்சம் ஆகும். சொர்க்கம் என்பது பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலங்களில் நற்செயல்கள் செய்வதினால் ஏற்படும் புண்ணிய பலன்களை கொண்டு அவர் அடைக்கின்ற இன்ப வீடு ஆகும். தேவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகங்களில் இன்புற்று இருக்கும் பேறு தான் சொர்க்கம் ஆகும் என்றார்.

என்னென்ன கர்மங்கள் செய்தால் புண்ணிய லோகத்தை அடையலாம்?

ஸ்ரீரங்கம், காசி, குருச்சேத்திரம், பிருகு சேத்திரம், பிரபாச தீர்த்தம், காஞ்சி, திரி புஷ்கரம் மற்றும் புதேஸ்வரம் ஆகிய புண்ணிய ஸ்தலங்களில் இறப்பவர்களுக்கு மோட்சம் கிடைப்பது உறுதியாகும். வடமதுரை, காசி, அயோத்தி, மாயாபுரி, காஞ்சி, அவந்திகா மற்றும் துவாரகை போன்ற சந்த ஸ்தலங்களில் ஏதாவது ஒன்றில் இறப்பாராயின் அவர் வைகுண்டத்தை வந்தடைவார். சன்னியாச ஆசிரமத்தை அமைத்து அதை ஒழுக்கத்துடன் கடைபிடிப்பவர்களும், என் மீது பக்தி கொண்டவர்களும், உயிர் அவர் உடலிலிருந்து பிரியும் பொழுதும் என்னுடைய நாமங்களை உச்சரித்து கொண்டிருப்பவர்களும் பேரின்ப வீட்டை அடைவார்கள்.

யாரெல்லாம் சொர்க்கத்திற்கு செல்வார்கள்?

துளசியை பயிர் செய்து கோவிலுக்கு கொடுப்பவர் மற்றும் துளசிக்கு நீர் பாய்ச்சுகின்றவர்களின் பாவங்கள் யாவும் நீங்கி மேலோகத்தில் மகிழ்ச்சியாக இருப்பர். பசு, குழந்தைகள், பெண்கள் மற்றும் வேதம் உணர்ந்த, அறிவில் சிறந்த சான்றோர்கள் ஆகியோரை ஆபத்து ஏற்படும் காலங்களில் தன்னை பற்றி கவலைப்படாமல் சுயநல நோக்கம் எதுவும் இல்லாமல் அவர்களை காப்பாற்றக்கூடியவர்கள் இறுதியில் சொர்க்கலோகத்தில் தேவர்களால் வரவேற்கப்பட்டு இன்பமாக இருப்பார்கள்.

யார் புண்ணியம் செய்தவர்கள்?

பசு, ஆடை மற்றும் பூமி ஆகியவற்றை தானம் கொடுப்பவர்களும், கிணறு மற்றும் குளம் போன்ற நீர் நிலையங்களை பழுது பார்த்தவர்களும், ஏற்படுத்தியவர்களும், கோவில்கள் எழுப்பியவர்களும் அதில் உள்ள பழுதுகளை நீக்கி புதுப்பித்தவர்களும் புண்ணியம் செய்தவர்கள் ஆவார்கள். இவர்கள் செய்த இந்த செயலினால் உருவான புண்ணியத்தால் விஷ்ணு லோகத்தை அடைந்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். காளை கன்றினை தானம் செய்தவரும், தர்ப்பை புல்லால் வீடு கட்டி, மனை தானம் கொடுத்தவர்களும், விருஷோற்சர்க்கம் செய்தவர்களும் சொர்க்கத்தை அடைவார்கள் என்று ஸ்ரீமந் நாராயணன் கூறினார். சூதமாமுனிவர் மேற்கண்டவாறு கருடாழ்வாருக்கு ஸ்ரீமந் நாராயணன் உரைத்தவற்றை முனிவர்களுக்கு எடுத்துரைத்து கொண்டிருந்தார்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!