⁃ விச்வம் - எல்லாமாய் இருக்கிறான்.
⁃ விஷ்ணு: - எல்லாவற்றினுள்ளும் இருக்கிறான்.
⁃ விச்வம், விஷ்ணு இவை இரண்டுமே நாராயண என்கிற சொல்லுக்கு அர்த்தம் காட்டுகின்றன.
இப்படி சமஸ்த விஷயங்களையும் தன்னுள்ளே அடக்கி வைத்திருப்பதனாலே விஷ்ணு என்பது வெறும் சொல் அல்ல...
அவன் சர்வ வியாபி என்பதைக் குறிக்கும் மந்த்ரம். எல்லா வஸ்துக்களிலும் சராசரங் களிலும் பரவியிருக்கிறான்.
பூதத்தாழ்வார் சொல்கிறார் :-
"மனத்துள்ளான் மாகடல் நீருள்ளான்".
இது வேத வாக்யத்தின் தமிழ் வடிவம்தான்!
அந்தர்யாமி ப்ராஹ்மணம் என்ற உபநிஷத் பாகத்திலும் இதே பொருள்பட வாக்கியம் இருக்கிறது.
"சமுத்திரமே நமக்கு பந்து" என்ற பொருளுடன் யஜுர் வேதம் முடிகிறது.
சமுத்திரம் பந்துவா...? அது எப்படி?
சமுத்திரம் என்றால் அதிலே சயனித்திருக்கும் பகவான். வித்யாரண்யர் பாஷ்யம் எழுதுகிறார். அதில், "சமுத்திரம் என்றால் பகவான் என்று அர்த்தம்" என்கிறார்.
சமுத்திர ஸ்வரூபியாய் இருக்கிறான்;
பர்வதத்தைப் பார்த்தால் பகவத் ஸ்வரூபம் தெரிகிறது;
விருக்ஷங்களைப் பார்த்தால் அதுவும் பகவத் ஸ்வரூபம்.
ஜோதியைப் பார்த்தால் அதுவும் பகவத் ஸ்வரூபம்.
சூரியன் பிரகாசிக்கிறான், அது விஷ்ணு;
சந்திரன் பிரகாசிக்கிறான் - அது விஷ்ணு;
விருட்சங்கள் நிற்கின்றன - அவையும் விஷ்ணு;
பர்வதம், நிலம், ஜலம்... யாவும் விஷ்ணுவே.
எல்லா இடத்திலும் அவன் பரவியிருப்பதனாலே "மாகடல் நீருள்ளான்" என்பது ஏற்றமானவாக்கியம்.
உபநிஷத்தையும், ஆழ்வாருடைய திவ்ய வாக்கையும் ஒப்பிட்டுப் பார்க்கிறபோது உண்மை புரிகிறது.
உண்மை புரியும்போது ஆனந்தம் ஏற்படுகிறது.
அந்த ஆனந்தத்தை அனுபவித்தால் தான் தெரியும். வாயால் விளக்கிச் சொல்ல முடியாது!
நம் உள்ளுக்குள்ளேயும் பரமாத்மா எழுந்தருளியிருக்கின்றானே!
அதனால்தான் உறங்கி எழும் பொழுது கூட மெள்ள எழுந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.
தூக்கத்திலிருந்து தடாலென்று எழுந்து தடுமாறி, கதவில் சிலர் இடித்துக் கொள்வார்கள். அப்படியெல்லாம் அமர்க்களம் செய்யக்கூடாது!
ஏன் மெள்ள எழுந்து கொள்ளவேண்டும் என்று கேட்டால், நம்முடைய ஹ்ருதயத்திலே பகவான் இருக்கிறான் இல்லையா..?
அந்த பகவானுக்கு எந்தவித தீங்கும் ஏற்படக்கூடாது;
அவன் சுரக்ஷிதமாக இருக்கவேண்டும் என்பதற்காக, "நாம் வேகமாக எழுந்திருந்தால் அவனுக்கு என்ன ஆகிப் போகுமோ" என்கிற மென் உணர்வுடன் எழுந்திருக்க வேண்டும்.
ஹிரண்ய கசிபுவினுடைய ஆட்கள், பிரஹ்லாத னை மலை மேலிருந்து உருட்டினார்கள்.
அந்தக் குழந்தை, மலை மேலிருந்து விழுகிறது.
"நான் சின்னாப்பின்னமாகிப் போயிடுவேனோ?" என்று அந்தக் குழந்தை பயப்படவில்லையாம்.
"ஹ்ருதயத்துக்குள்ளே பகவான் உட்கார்ந்தி ருக்கிறானே, அவனுக்கு அடிபட்டுவிடப் போகிறதே! என்ன ஆகுமோ...?" என்று ஹ்ருதயத்திலே உள்ள பகவானை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு விழுந்ததாம் அந்தக் குழந்தை
அதை பகவான் பார்க்கிறார்; மஹாலக்ஷ்மி பார்க்கிறாள்; பூமாதா பார்க்கிறாள்...
நம்முடைய பர்த்தாவை - நாராயணனை இந்தக் குழந்தை இவ்வளவு ஜாக்கிரதையாக ரக்ஷிக்கிறதே, இந்தக் குழந்தையை நாம் ரக்ஷிக்க வேண்டாமா.. என்று அந்த பூமாதா ம்ருதுவாக மாறி, வெல்வெட்டு மெத்தையிலே விழுகிற மாதிரி பிரஹ்லாதனைத் தாங்கிக் கொண்டாள்.