ஆண்டாளுக்கு பால் மாங்காய் நைவேத்தியம் - வைகாசி பௌர்ணமி

வைகாசி பௌர்ணமி !

நமது ஆண்டாள்  ரங்கமன்னாரோடு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மீண்டும் எழுந்தருளிய தினம்

பங்குனி உத்திரத்தன்று ஆண்டாள் ரங்கமன்னார் கல்யாணம் ஸ்ரீரங்கத்தில் நடந்தேறியது. அதன் பிறகு பெரியாழ்வாருக்கு அரங்கன் "விஷ்ணு சித்தரே... நீங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று வடபத்திரசாயிக்கு மாலை கைங்கரியம் செய்துகொண்டிருங்கள்" என்று பணித்தான். ஆழ்வாரும் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து தன் கைங்கரியங்களை செய்துகொண்டிருந்தார்.

ஆனால் பெரியாழ்வாருக்கோ ஆண்டாளைச் சுற்றியே மனம் இருந்தது. அப்போது அரங்கன் அவர் கனவில் தோன்றி, வைகாசி பௌர்ணமி அன்று ஆண்டாளோடு ஸ்ரீவில்லிபுத்தூர் வருகிறேன் என்று அருளினான்.

பெரியாழ்வாரும் வைகாசி பௌர்ணமிக்காகக் காத்திருந்தார்.  அதன்படியே அரங்கன் ஆண்டாளோடு ஸ்ரீவில்லிபுத்தூர் எழுந்தருள, பெரியாழ்வார் மாப்பிள்ளைக்கும், பெண்ணுக்கும் என்ன பரிசு தருவது என்று ஆண்டாளைப் பார்த்து யோசித்துக் கொண்டிருந்தார்.

ஆண்டாள் தனது தந்தையின் மனமும், தனமும் உள்ளபடி அறிந்தவளாயிற்றே. ஆழ்வாரின் மனமோ பகவானுக்கே பல்லாண்டு பாடும் விசாலமான மனம். தனம் பகவத் கைங்கரியம் மட்டுமே அவரின் நீங்காத செல்வம்.

அதனால் ஆண்டாள் யோசித்து அவரிடம் எனக்கு மாங்காயை துண்டு துண்டாக நறுக்கிப் பரிசாக தருவீர்களா ? என்று கேட்டாள். வைகாசி வசந்தகாலத்தில் மாங்காய் நிறைய கிடைக்குமே. சுலபமும், ருசியானதும் விலை மலிவானதும் கூட. கண்ணன் அரங்கனும் எல்லா பழங்களையும், காய்களையும் ரசித்து ருசிப்பவனாயிற்றே. இன்றும் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபஸ்வாமி தினமும் உப்பிலிட்ட கண்ணிமாங்காயை ஆசையாய் ஏற்பவனன்றோ. நாமும் சிறுவயதில் புளிக்கும் மாங்காய், உப்பு தொட்டுச் சாப்பிடுவோம் அல்லவா. நம் பாரதியாரும் காயிலே புளிப்பதென்னே ? கண்ண பெருமானே - நீ கனியிலே இனிப்பதென்னே?! கண்ண பெருமானே! என்று புளிப்பும், இனிப்பும் அவனே என்றாரன்றோ. கல்லெடுத்து எறிந்தவனுக்கும் சுவை மாறாமல் தன்னையே உவந்து மாங்காய் தருவது போலே, அரங்கனும் தன்னை வெறுப்பவருக்கும் அருளே செய்பவனன்றோ..

ஆனால் பெரியாழ்வார் மாங்காய் உஷ்ணமாயிற்றே என்று யோசித்தார். அதனால் மாங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி நெய், வெல்லம், பசும்பால் எல்லாம் சேர்த்து உண்டாக்கி ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கும் ஆசையாய் சமர்ப்பித்தார். பெருமாளுக்கே பரிந்து பல்லாண்டு பாடினவர், தன் செல்ல மகளுக்கு சாதாரண மாங்காய் தருவாரா என்ன ?!

இன்று வரை இந்த பால் மாங்காய் சமர்ப்பிக்கும் வழக்கம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் வம்சத்தாரால் எல்லா வைகாசி பௌர்ணமியன்றும் நடைபெறுகிறது. ஆண்டாள் வெண்பட்டுடுத்தி, மல்லிக்கைப்பூச்சுட்டி, சந்தனம் பூசி பால் மாங்காயை ஏற்கின்றாள்.

நாமும் இன்று சமர்ப்பிக்கலாமா....
ஒரு வேளை மாங்காய் கிடைக்கவில்லையென்றால் இப்போதைக்கு மானசீகமாக சமர்ப்பியுங்கள். 

பின்னர் இன்னொரு நாளில் ஆசையாய் நம் செல்லமகள் ஆண்டாளுக்கு பால் மாங்காய் சமர்பிப்போம்.

அரங்கன் திருவடிகளே சரணம்...
ஆண்டாள் திருவடிகளே சரணம்...
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்...

பால் மாங்காய் செய்முறை
(பல விதமாக செய்வர். அதில் இது சுலபமான முறை)

மண் வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி அதில் சிறிதளவு மிளகு சேர்த்து வறுத்து, மிளகு மட்டும் தனியாக எடுத்து தூளாக்கிக்கொள்ளவும்.

வாணலியில் உள்ள அதே நெய்யில் சிறிது சீரகம், மாங்காய் துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் வறுக்கவும். பின்னர் நறுக்கிய மாங்காய் துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடம் வறுக்கவும். இரண்டு கல் உப்பு சேர்த்து கொள்ளவும். சிறிதளவு மட்டும் தண்ணீர் சேர்த்து வாணலியை மூடிவிடவும்.

நான்கைந்து நிமிடம் கழித்து மாங்காய் வெந்ததும், தூளாக்கிய வெல்லம் சேர்த்து வெல்லம் முழுவதும் கரைந்ததும் சுண்டக்காய்ச்சிய பசும்பாலை ஊற்றி, ஏற்கனவே நெய்யில் வறுத்த மிளகு தூள் சேர்த்து விட்டால்  ஆண்டாளுக்கு நிவேதனம் செய்ய பால் மாங்காய் பிரசாதம் தயார்.

ராதேக்ருஷ்ணா !
ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ !

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!