பராசர பட்டர், ஸ்ரீரங்கத்து அரங்கநாதனின் முன்னே நின்றார்...

‘என்னையும் என்னுடைய அழகையும் பாடிவிடுவீரோ நீர்?..’ என அரங்கன் கேட்க…

‘முதலில், உம்முடைய ஆதிசேஷனைப் போல எனக்கு ஆயிரம் நாக்குகளைத் தாருங்கள், பிறகு பார்க்கலாம்...’ என்றாராம் பட்டர்..

‘அட… ஆயிரம் நாக்குகள் இருந்தால்தான் பாடுவீரோ?..’ என்று சிரித்த அரங்கன், கருணையும் வாஞ்சையும் மேலிட… பராசரபட்டருக்கு, ஆயிரம் நாக்குகளை வழங்கினான்.

ஆனந்தத்தில் கைகள் குவித்து, சிரம் தாழ்த்தி நமஸ்கரித்தார் பட்டர்...

”மன்னிக்கவும் ரங்கா! என்னால் இப்பவும் உன்னை பாட முடியாது!..” என்று சொல்லிவிட்டு, அமைதியாகி விட்டார் பட்டர்..

ஆச்சரியம் தாங்கவில்லை அரங்கனுக்கு!..

பின்னே இருக்காதா?..

...பட்டர் கேட்டபடியே,
ஆயிரம் நாக்குகளையும் அவருக்கு வழங்கியாகிவிட்டது.. அப்படியும் ‘பாட முடியாது’ என்று மறுத்தால், அரங்கனுக்கு ஆச்சரியம் எழத்தானே செய்யும்?..

”என்ன விளையாடுகிறாயா? ஆயிரம் நாக்குகள் கேட்டாய்; கொடுத்தேன்..

பிறகென்ன?…
பாட வேண்டியதுதானே?.. முடியாது என்கிறாயே!” என்றான் அரங்கன்.

பராசர பட்டர், மீண்டும் கைகளைக் குவித்துக்கொண்டார்; மொத்த உடலையும் இன்னும் குறுக்கிக் கொண்டார்;

முதுகை வளைத்து இன்னும் கூனாக்கிக்கொண்டு,

”அரங்கா… உன் ஒளி பொருந்திய அழகை என்னால் பாடமுடியாது என்று சொல்வதற்கே, எனக்கு நீ கொடுத்த இந்த ஆயிரம் நாக்குகள் தேவையாக இருக்கும்போது,

...பரஞ்சோதியாகத் திகழும் உன்னையும், உனது பேரழகையும் பாடுவதற்கு, எனக்கு இன்னும் எத்தனை எத்தனை நாக்குகள் தேவையோ?!..”
என்று வியந்தாராம் பட்டர்..

அவரது சாமர்த்யமான பதிலைக் கேட்ட அரங்கன் முகத்தில் புன்னகைப் பூவொன்று பூத்து,

அவன் அழகை மேலும் கூட்டியது!..