மங்களப்பள்ளியில் சாந்த ரூபியாக நரசிம்மர் அருள்புரிகிறார். இந்த ஆலயம் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்
தசாவதாரங்களிலேயே சிறப்பு மிக்கதாக விளங்குவது நரசிம்மர் அவதாரம். பக்தர்களின் துன்பத்தை உடனடியாக தீர்ப்பவர் என்பதால், நரசிம்மருக்கு இந்த சிறப்பு. இப்பூவுலகில்வெறும் இரண்டு நாழிகைகள் மட்டுமே நீடித்திருந்த அந்த அவதாரத்திலேயே, ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைதல் ஆகிய ஐம்பணிகளையும் செவ்வனே செய்து முடித்தார். அப்படிப்பட்ட அவதார தரிசனம் தனக்குக் கிடைக்கவில்லையே என்று, கருடன் வருந்தினார். இதனால் கருடனுக்கு நவ நரசிம்மராக இறைவன் காட்சி தந்த இடம் தான் அகோபிலம். இந்த திருத்தலம் தற்போதைய ஆந்திர மாநில கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது. இங்கு செல்ல உடல் உறுதியும், மன உறுதியும், கடின முயற்சியும் தேவை. ஆனால் சுலபமாக தரிசனம் செய்யும் வகையில், தமிழ்நாட்டில் திண்டுக்கல் நகரைச் சுற்றி அகோபிலம் போலவே நவ நரசிம்மர் கோவில் கொண்டுள்ளார்.
புராண காலத்தில் திண்டுக்கல் ‘பத்மகிரி’ என்று அழைக்கப்பட்டது. பத்மம் என்றால் ‘தாமரை’ தாமரைப் பூவில் இருக்கும் மகாலட்சுமி அருளும் தலம் என்பதால் பத்மகிரி என்ற பெயர் உண்டானது. திண்டுக்கல் பகுதியில்
ராமகிரி,
கன்னிவாடி,
நிலக்கோட்டை,
கொத்தப்புள்ளி,
அம்மைய நாயக்கனூர்
மங்களப்பள்ளி,
வி.மேட்டுப்பட்டி
வேடசந்தூர்,
நரசிங்கபுரம் என ஒன்பது தலங்களில் நரசிம்மர் எழுந்தருளியுள்ளார்.
இவற்றுள் மங்களப்பள்ளியில் சாந்த ரூபியாக நரசிம்மர் அருள்புரிகிறார். இந்த ஆலயம் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. கி.பி.1529-ல் மதுரை மகாமண்டலேசுவர விசுவநாத நாயக்கர் பேரரசு அமைத்தபொழுது, இந்தப் பகுதியில் இருந்த குறுநிலத் தலைவர்களையும், தன்னுடன் வந்த கன்னட, தெலுங்கு மொழி பேசும் படைத்தலைவர்களையும் அரசு நிர்வாகத்தில் அங்கமாக்கினார். அதனைத் தொடர்ந்து 72 பாளையங்கள் உருவாக்கப்பட்டன. திண்டுக்கல் பகுதியில் மட்டும் 18 பாளையங்கள் அமைக்கப்பட்டன. இவர்கள் கோவில்களில் திருப்பணிகளில் ஈடுபட்டனர்.அப்படி திருப்பணி செய்யப்பட்ட ஆலயங்களில் ஒன்றுதான் இந்த நரசிம்மர் ஆலயம். கன்னட, தெலுங்கு மன்னர்கள் காலத்தில் சிவ - விஷ்ணு ஆலயமாக சிறந்து விளங்கிய இத்திருத்தலத்தின்
மகா மண்டபத் தூண்களில் ஏராளமான புடைப்புச் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருந்தன. இங்கிருந்த 18 தூண்களிலும் விநாயகர், சிவலிங்கம், ஆனிலையப்பர், கண்ணன், ஆஞ்சநேயர் சிற்பங்களும், இசைக்கருவிகளை வாசித்துக்கொண்டு நடனமாடும் பெண்களும் சிற்பங்களாக இடம்பெற்றிருந்தன. கால ஓட்டத்தில் கவனிப்பாரின்றி போய்விட்ட இந்த கோவிலில், பல சிற்பங்கள் சிதைந்து விட்டன. கடந்த 2002-ம் ஆண்டுதான் கல்லூரி மாணவர்கள் சிலரின் முயற்சியால் இந்த ஆலயம் வெளியுலகுக்கு தெரியவந்தது. தற்போது இந்த ஆலயத்தில் ஸ்ரீதேவி - பூதேவி சமேத சீனிவாசன் சிலை மட்டுமே உள்ளது.
தற்போதுதான் நரசிம்மர் சிலை தயார் செய்து வருகின்றனர். அறநிலையத்துறைக்குட்பட்ட இவ்வாலயம் அரசு ஆவணங்களில் லட்சுமி நரசிங்கப்பெருமாள் என்றே உள்ளது. லட்சுமி நரசிம்மருக்குப் பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.
இங்கு ஒவ்வொரு மாத சுவாதி நட்சத்திரம் அன்றும் காலையில் சுதர்சன ஹோமமும், கோபூஜையும் நடக்கின்றன. இங்கே நரசிம்மரை மனதில் நிறுத்தி வழிபாடு செய்தால்
மன அமைதி கிட்டும்,
சர்வரோக நிவாரணம் ஏற்படும்.
திருமணத் தடங்கல் நீங்கும்
சந்தான பாக்கியப்பேறு வாய்க்கும்.
லட்சுமி கடாட்சம் ஏற்படும்
நரசிம்மர் குழந்தை மனம் கொண்டவர். தம் பக்தர்களின் மனம் மகிழச் செய்பவர். குழந்தையைக் கண்டதும் தாயின் முகம் மலர்வது போல பக்தர்களைக் கண்டதும் பகவானின் முகம் மலர்கிறது. ஏராளமான பக்தர்களை ஒருங்கே காண நேரிடும்போது, சீனிவாசனுக்கு ஆனந்தக் களிப்பு தலைக்கேறி முகம் மலர்கிறது. அந்த மலர்ச்சியைக் காண நீங்களும் ஒரு முறை இந்த ஆலயம் சென்று வாருங்கள்.
அமைவிடம் :
திண்டுக்கல் - கரூர் சாலையில் உள்ள தாடிக்கொம்பு என்னும் ஊரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் மங்களப்பள்ளி அமைந்துள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து நவாமரத்துப்பட்டி செல்லும் பேருந்தில் ஏறி, கோவில்பட்டிப் பிரிவில் இறங்கி 1 கி.மீ. மேற்கே சென்றால் இத்தலத்தை அடையலாம்.கோடாங்கிப்பட்டி செல்லும் பேருந்தில் பயணித்து மன்னார் கோட்டையில் இறங்கி 1 கி.மீ. கிழக்கே சென்றும் இக்கோவிலுக்கு வரலாம்.