KOORAM ADI KESHAVA PERUMAL
கூரத்தாழ்வார் தனி சன்னதியில் உள்ள ஆலயம்.
கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உள்ளவர்கள் வழிபட வேண்டிய ஆலயம்.

தலவரலாறு
காஞ்சி மாநகரில் கூரம் என்ற தேசத்துத் தலைவனாக இருந்து ஆட்சி செய்து வந்தவர் கூரத்தாழ்வான். இவரது இயற்பெயர் ஸ்ரீவத்ஸாங்கமித்ரர் என்பதாகும். நாள்தோறும் அன்னதானம் வழங்கியும், இல்லாதவர்களுக்கு காணிக்கை தந்தும் தர்மத்தின் ஒப்பற்ற தலைவனாகவும் திறமையான நிர்வாகியாகவும் திகழ்ந்து வந்தான். வரதராஜப் பெருமாள் மீது பரம பக்தி நிரம்பியவன்.

இவரது அரண்மனை வாயிற்கதவைச் சாத்தும்போது அதில் கட்டப்பட்டிருக்கும் மணிகளின் `கிண்கிணி' ஓசை பல மைல் தூரம் கேட்கும் என்றால் எத்தனை பெரிய வாயில்களைக் கொண்டதாக இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்! இவரது திருமாளிகையின் கதவுகள் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் சன்னதியின் கதவுகள் சாத்தப்பெற்ற பிறகே சாத்தப்படுமாம்.
ஒரு முறை கோவில் கதவு மூடப்படுவதற்கு சற்று தாமதம் ஆகிவிட்டது. அது அறியாத ஆழ்வார் மாளிகைச் சேவகர்கள் கதவைச் சாத்த ஆரம்பிக்க, கதவில் இருந்த மணிகளின் கிண்கிணி ஓசை எழுந்து காஞ்சிபுரம் வரை ஒலித்ததும், அந்த ஓலியைக் கேட்ட பெருந்தேவியார், பெருமாளிடம் எங்கிருந்து வருகிறது இந்த ஓசை என்று கேட்க, அது ஆழ்வானின் திருமாளிகையின் கதவில் உள்ள மணிகளின் ஓசை என்று கூறினாராம். அதைக்கேட்டு வியப்புற்ற தாயார், அத்தனை ஐஸ்வர்யங்களைப் பெற்ற அந்த ஆழ்வாரை, தான் காண வேண்டும் என்று கூற, பெருமாளும் திருக்கச்சி நம்பியிடம் கூறி ஆழ்வாரிடம் தெரிவிக்கச் சொன்னாராம்.
திருக்கச்சி நம்பியும் ஆழ்வாரின் திருமாளிகையை அடைந்து தாயார் வியப்புற்ற செய்தியைக் கூறி, தங்களைக் காண வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறார் என்று கூறி அழைத்துச் சென்றார். அந்த நாள் முதலே ஆழ்வார் தனது செல்வம், புகழ், பெருமைகள் அனைத்தையும் விட்டு ஒரு நல்ல ஆச்சார்யன் கீழ் சேவை செய்யத் தீர்மானித்து சன்னியாசிக் கோலத்தைப் பூண்டு கிளம்பிவிட்டாராம்.

இப்படியாகத்தான் கூரத்தாழ்வார் ராமானுஜரை வந்தடைந்து அவரது பிரதான சீடரானார். ஆழ்வாரும் ராமானுஜர் சேவையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட மகான். ஒருவகையில் ராமாவதாரத்தில் தமக்கு சேவை செய்து தொண்டாற்றிய இளையபெருமாளுக்கு இந்த ஆழ்வார் அவதாரத்தில் தாம் சேவை செய்து ஸ்ரீராமர் தனது எண்ணத்தைப் பூர்த்தி செய்து கொண்டாராம்.

இத்தகைய புராண வரலாற்றுச் சிறப்புமிக்க கூரத்தாழ்வான் தினமும் பூஜித்து வந்த தலம் பங்கஜவல்லி உடனுறை ஆதிகேசவப் பெருமாள் என்ற திருத்தலமாகும்.

ஆலய அமைப்பு
அழகிய வயல்வெளிகள் நிறைந்த சூழலின் மத்தியில் அமைந்த ஆலயம். நுழைவு வாயிலை அடுத்து பெரிய கருங்கல் தீபஸ்தம்பம், பலிபீடம், கருடாழ்வார் சன்னதிகள் உள்ளன.

கோயில் கிழக்குப் பார்த்து அமைந்திருக்கிறது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஆதிகேசவப் பெருமாள் கம்பீரமாக வீற்றிருந்து நமக்கு சேவை சாதிக்கின்றார். ஆழ்வார் பூஜித்துவந்த ஸ்ரீ ராம, லட்சுமண, சீதாதேவி விக்ரகங்கள் இன்றும் மூலவரான ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் சன்னதியில் உள்ளது. வலதுபுறம் தனிச் சன்னதியாக பங்கஜவல்லித் தாயாரும், இடது புறம் ஆண்டாள் சன்னதியும் அமைந்திருக்கிறது. சுற்றுப்பிராகாரத்தில் சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயருக்கு தனிச் சன்னதிகள் அமைந்துள்ளன.
கூரத்தாழ்வானுக்கு தனிச் சன்னதி இக் கோயிலில் அமைந்துள்ளது.

அமைவிடம்
காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் நெடுஞ்சாலையில் கூரம் கேட் என்ற இடத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது இத்திருத்தலம் காஞ்சிபுரத்திலிருந்து கூரத்துக்கு மினி பேருந்துகள் செல்கின்றன.

ஆலய முகவரி
அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் ஆலயம்,கூரம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.