sri mahavishnu
ஸ்ரீ வைஷ்ணவத்தில், ஸ்ரீ வைஷ்ணவர்கள் பத்து விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர், அவை: 

1. அத்வேஷி.
2. அனுகூலன்
3. நாமதாரி
4. சக்ராங்கி
5. மந்திரபாடி
6. வைஷ்ணவன்
7. ஸ்ரீ வைஷ்ணவன்
8. ப்ரபந்நன்
9. ஏகாந்தி
10. பரம ஏகாந்தி

1. அத்வேஷி:
விஷ்ணுவின் பேரிலும் அவனது அடியார்களிடத்திலும் த்வேஷம் (வெறுப்பு ) கொள்ளாமல் இருப்பவன் அத்வேஷி.

2. அனுகூலன்:
அத்வேஷியாக இருப்பதோடு, வைஷ்ணவர்களோடு நட்புடன் நடந்து கொள்வது, பெருமாள் கோவிலுக்குச் செல்வது, உற்சவங்களில் கலந்து கொள்ளுதல், அடியவர்களைப் போற்றி, அவர்களுக்கு மரியாதை செய்து உபசரிப்பது, மற்ற வைஷ்ணவர்களோடு இணைந்து செயல்படுவது, இவற்றை  விருப்பத்துடன் செய்பவன் அனுகூலன்.

3. நாமதாரி:
முன்சொன்ன குணங்களோடு மஹாவிஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களில் ஒன்றைத் தன் பெயராக வைத்திருப்பவன்.

4. சக்ராங்கி:
மேலே சொன்ன மூன்றோடு, வேத சாஸ்திரங்களில் சொன்னபடி மஹாவிஷ்ணுவின் திவ்ய ஆயுதங்களான சங்கு சக்ர சிஹ்நங்களை ஆச்சார்யன் மூலமாகத் தன் தோள்களில் தரித்து, திருமண் காப்பு தரித்து இருப்பவன்.

5. மந்த்ரபாடி:
முன் சொன்ன நான்கோடு, ஸகல ஐஸ்வர்யங்களையும் கொடுக்கவல்ல, பகவத் மந்த்ரமான திருவெட்டெழுத்து மந்த்ரத்தை ஆச்சார்யன் மூலமாக உபதேசம் பெற்று, ஜபித்து காரியஸித்தி பெறுபவன்.

6. வைஷ்ணவன்:
மேலே சொன்ன ஐந்தையும் மேற்கொண்டு, ஐம்புலன் இன்பங்களையும், இதர தேவதைகளை வழிபடுவதையும் விட்டவன், மோக்ஷம் அடைவதற்கு உரிய வழிகளான கர்ம ஜ்ஞான அல்லது பக்தி மார்க்கங்களை கடைபிடிப்பவன்.

7. ஸ்ரீவைஷ்ணவன்:
முன் சொன்ன ஆறையும் கடைப்பிடித்து, அவிச்சின்ன தைலதாரைப் போல (ஒழுகுகின்ற எண்ணெயானது பிசிறு இல்லாமல் தொடர்ச்சியாக ஒழுகுவது போல), சிந்தனையானது வேறு நினைவு இல்லாமல், சிந்தாமல் சிதறாமல் மஹாலக்ஷ்மியுடன் கூடிய ஸ்ரீமந் நாராயணனை மட்டும் மனதில் நிறுத்தி,  த்யானிப்பவன்.

8. ப்ரபந்நன்:
மேலே சொன்ன ஏழு தகுதிகளோடு, பகவானை அடைவதற்கு ப்ரபத்தி நெறியாகிய சரணாகதியே தகுந்தது என்று ப்ரபத்தியை கடைபிடிப்பவன். வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள கர்ம ஜ்ஞான பக்தி யோகங்களை கடைப்பிடிப்பது கடினமானது. அப்படியே கடைப்பிடித்தாலும் பகவானை அடைய பலபிறவிகள் எடுக்க வேண்டி வரும். ஆகையால் சரணாகதியின் மூலமாகவே பகவானை அடையப் பாடுபடுபவன்.

9. ஏகாந்தி:
முன்சொன்ன எட்டுத் தகுதிகளோடு, எம்பெருமானை அடைய தான் மேற்கொள்ளும் சரணாகதியும் ஏற்றதல்ல என்று முடிவு செய்து, அந்த பகவானையே உபாயமாகப் பற்றிக்கொள்ளுபவன்.

10. பரமைகாந்தி:
மேற்சொன்ன ஒன்பது தகுதிகளோடு பகவானை அடைய சரணாகதி மேற்கொள்ளுவதும், பகவானை உபாயமாகப் பற்றிக்கொள்ளுவதும் கூட கடினமானதுதான். ஆகவே நமக்கு நல்லவழிகாட்டியாக இருக்கும் நல்லதொரு ஆச்சார்யனை சரணமடைந்து, அவர் மூலமாக எம்பெருமானை அடையலாம் என்று முடிவு எடுப்பவன்.

"வைஷ்ணவ பரிபாஷை''

பெருமாள் - ஸ்ரீமந் நாராயணன், விஷ்ணு

பிராட்டி-   ஸ்ரீதேவி, லக்ஷ்மி, மற்றும் பூதேவி, நீளாதேவி 

தாயார் -ஸ்ரீதேவி, லக்ஷ்மி, மற்றும் பூதேவி, நீளாதேவி

நம்பெருமாள்-   ஸ்ரீரங்க கோவில் உற்சவர்

பெரிய பெருமாள் -ஸ்ரீரங்க கோவில் மூலவர்

பெரிய பிராட்டி-   ஸ்ரீரங்கநாயகி (ஸ்ரீதேவி) 

தேவ பெருமாள் -காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் 

உற்சவர்-  கோவிலிலிருந்து வெளியே எழுந்து அருளும் மூர்த்தி 

மூலவர்-  கோவிலேயே நிரந்தரமாக எழுந்து அருளும் மூர்த்தி 

செல்வர்-   உற்சவரின் பிரதிநிதி (உற்சவரைப் போலவே வழிபடும் மூர்த்தி) 
யாக பேரர்-  பவித்ரோற்சவம் முதலிய உற்சவங்களில் யாகசாலையில் எழுந்து அருளும் உற்சவ மூர்த்தி. 

கோயிலொழுகு-  கோவிலின் வரலாறு 

கிடந்த திருக்கோலம் - சயநினித்து எழுந்தருளும் சேவை. 

வீற்றிருந்த திருக்கோலம்-  அமர்ந்து எழுந்தருளும் சேவை. 

நின்ற திருக்கோலம் -நின்றோ, நடந்தோ எழுந்தருளும் சேவை.        

ஆழ்வார் - பொதுவாக 12 ஆழ்வார்களைக் குறிக்கும்

பெரிய உடையார் -ஜடாயு 

இளைய பெருமாள் -  இலக்குவன்/லக்ஷ்மணன் 

எம்பெருமானார் - இராமாநுஜாசார்யன் 

இளையாழ்வார் - இராமாநுஜாசார்யன் 

யதிராசர் -  இர்ராமாநுஜாசார்யன் (சன்யாசிகளின் தலைவன்) 

யதீந்திரர் - இர்ராமாநுஜாசார்யன் (சன்யாசிகளின் தலைவன்) 

ஸ்வாமி -  முதலாளி

ஆழ்வான் - கூரத்தாழ்வான் 

ஆண்டான் -   முதலியாண்டான் 

லோகாச்சார்யர் -   நம்பிள்ளையின் மற்றொரு பெயர் 

பட்டர் -   பராச‌ர பட்டர் 

நாயனார் - அழகிய மணவாள பெருமாள் நாயனார் (பிள்ளை லோகாச்சார்யரின் தம்பி) 

வேதாந்தாசாரியார் - வேதாந்த தேசிகன் 

ஜீயர் - ஸன்யாசி

பெரிய ஜீயர், யதீந்திர ப்ரவணர் -  மணவாள மாமுனிகள் 

வரத த்வய ப்ரஸாதம் - பிள்ளை லோகாச்சார்யார் - 2 வரதனுக்கான வெகுமதி - காஞ்சி வரதன், நம்பூர் வரதாச்சாரியார் 

சடாரி (ஸ்ரீ சடகோபம்) -   எம்பெருமானாரின் பாத கமலங்கள் 

ஸ்ரீ ராமானுஜம் - ஆழ்வார்திருநகரியிலுள்ள நம்மாழ்வாரின் பாத கமலங்கள் 

மதுரகவிகள் - நம்மாழ்வாரின் பாத கமலங்கள் 

முதலியாண்டான் - இராமாநுஜரின் பாத கமலங்கள் 

அந்ந்தாழ்வான் - திருமலையில் இராமானுஜரின் பாத கமலங்கள் 

பொன்னடியாம் செங்கமலம் - மணவாள மாமுனியின் பாத கமலங்கள் 

அரையர் - எம்பெருமானின் முன் பிரபந்த்த்தை இசையுடனும் பாவத்துடனும் அனுசந்திப்பவர் 

தேவரீர் - பிறரை குறிக்கும் முறை 

அடியேன் -  தன்னை கூறிக்கொள்ளும் முறை 

அடியோங்கள் - தன்னை கூறிக்கொள்ளும் முறை 

தாஸன் - அடிமை, அடியேன் 

ஆசார்யர் -  குரு, ஆசான் 

பூர்வாசார்யர் -  ஆசாரியரின் முன்னோடிகள் 

பரமாசார்யர் - ஆசாரியரின் ஆசார்யர்

திவ்யப்ரபந்தம் -அருளிச்செயல் ஆழ்வார்களின் பாசுரங்கள் 

உபயவேதாந்தம் - ஸமஸ்கிருத வேதம் (வேதம், உபநிஷது, புராணம், இதிஹாஸம்) மற்றும் திராவிட வேதம் (திவ்யப்ப்ரபந்தம்) 

ஸ்ரீசூக்தி - ஆழ்வார் ஆசார்யரின் பாசுரங்கள் 

க்ரந்தம் -  புத்தகம் 

வ்யக்யானம் - விளக்கம் 

காலக்ஷேபம் -  க்ரந்தம் மற்றும் வியாக்யான்ங்களின் வரி விளக்கங்கள்/சொற்பொழிவு 

உபன்யாசம் - சொற்பொழிவு 

உபயவிபூதி - நித்ய மற்றும் லீலா விபூதிகள் 

நித்ய விபூதி - ஸ்ரீவைகுண்டம் - எம்பெருமானின் ஆன்மீக பாகம் - லௌகீக பாகத்தின் 3 மடங்கு 

லீலா விபூதி - எம்பெருமானின் சொத்தின் லௌகீக பாகம் - ஆயிரமாயிரம் லோகங்களைக் கொண்ட 14 லோகங்கள் 

விரஜா - நித்ய விபூதி மற்றும் லீலா விபூதியை பிரிக்கும் நதி 

விஷயந்தரம் - எம்பெரும்மானை தவிர உள்ள மற்ற விஷயங்கள் 

சேஷி - தலைவன் 

சேஷன் - தொண்டன் 

சேஷத்வம் - தலைவனுக்கு தொண்டனாய் பணி செய்யும் அறிவு 

பார‌த‌ந்த்ரிய‌ம் - தொண்டனாய் இருந்து தலைவனின் ஆசைகளை நிறைவேற்றுதல் 

அன்ய சேஷத்வம் - எம்பெருமான் மற்றும் பாகவதர்களை தவிர மற்றுள்ளவர்களின் தொண்டனாக விளங்குதல் 
தேவதாந்த்ரம் - ப்ரம்மா, சிவன், இந்திரன் மற்றும் இதர தேவதைகள் 

பஞ்ச ஸம்ஸ்காரம் - ஒருவரை ஸ்ரீவைஷ்ணவராக நியமிக்கும் பொழுது செய்யும் 5 சடங்குகள் 

பர அன்ன நியமம் - தன் வீட்டில் சமைத்த பிரஸாத்த்தை மட்டும் உட்கொள்ளுதல் (கோயில் மற்றும் மடங்கள் விதிவிலக்கு) - குறிப்பு: ஸ்ரீவைஷ்ணவர் புஜிக்கும் உணவு மற்றும் எம்பெருமானுக்கு படைக்கும் 
உணவுகளில் கட்டுப்பாடு உள்ளன 

பொன்னடி சாற்றுதல் - ஸ்ரீவைஷ்ணவரை இல்லத்திற்கு அழைத்தல் 

நோவு சாற்றிக்கொள்ளுதல் -  ஸ்ரீ வைஷ்ணவர் உடல் நலமின்மை 

கண் வளருதல் - உற‌க்க நிலை 
கண்டருளப் பண்ணுதல், அமுது செய்தல் - சாப்பிடுதல், நெய்வேத்யம் (எம்பெருமான் மற்றும் ஸ்ரீவைஷ்ணவருக்கு உணவு பரிமாறுதல்) 

எழுந்தருள பண்ணுதல் - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யர்களை ஒரிடத்திலிருந்து மற்றொரு இட்த்திருக்கு எடுத்துச் செல்லுதல் 

புறப்பாடு கண்டருளல் - திரு உலா 

குடிசை - தன் இல்லத்தை குறிக்கும் சொல் 

திருமாளிகை - மற்றொரு ஸ்ரீவைஷ்ணவரின் இல்லத்தை குறிக்கும் சொல் 

நீராட்டம் - குளித்தல் 
 
போனகம் - உணவு 
 
ப்ரஸாதம், சேஷம் - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர் உணவு உண்ட மிச்சம்   
 
காலக்ஷேபம் பண்ணுகிரார் - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர் ப‌ற்றிய‌ விஷ‌ய‌ங‌க‌ள் கேட்கிறார் 
 
காலக்ஷேபம் சாதிக்கிரார் - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர் ப‌ற்றிய‌ விஷ‌ய‌ங‌க‌ள் சொல்லுகிறார் 
 
சாதித்து அருள்(சாத்துமறை ) - பாசுரம் மற்றும் வேதம் ஓத ஆரம்பித்தல் 
 
நாயந்தே - அடியேன் 
 
திருநாடு அலங்கரித்தார் - உடலை விடுத்து வைகுண்டம் எய்தல் 
 
திருவடி சம்பந்தம் - ஆசார்யனின் சம்பந்தம் 
 
அலகிடுதல் - பெருக்குதல் (சுத்தம் செய்தல்)     
 
ப்ரஸாதம் - அன்னம் 
 
குழம்பமுது(நழிகரமது) - குழம்பு/சாம்பார் 
 
சாற்றமுது - ரசம் 
 
கரியமுது - காய்கரி/பொரியல் 
 
திருக்கண்ணமுது - பாயசம் 
 
தயிரமுது(தோத்தியோனம், தாச்சி மம்மு) -தயிர் சாதம் 
 
புளியோதரை - புளி சாதம் 
 
அக்கார அடிசில் - சர்க்கரையால் செய்த சாதம்...

திருமண் காப்பு - ஏன்?  எப்படி இட வேண்டும்?

மஹாவிஷ்ணுவின் அழகிய இணை தாமரை திருவடிகளின் வடிவத்தை கொண்டு விளங்குகிறது,  

மேல் நோக்கி எழுதப்பட்ட திருமண் காப்பு. 

அடிமூக்கில் இரண்டு அங்குல பாதமும், 

நெற்றியின் நடுவில் ஒன்றரை அங்குலம் இடமும் விட்டு 

இரண்டு பக்கத்திலும் அரை அங்குலம் தரித்து 

தலையின் உச்சி வரையிலும் சாற்றிக் கொள்ள வேண்டும்.

ஸ்ரீ வைஷ்ணவனின் பொதுவான லக்ஷணங்கள் மூன்று.

(1) கழுத்தில் துளசி மணி  
(2) நெற்றியில் திருமண் காப்பு 
(3) பஞ்ச ஸம்ஸ்காரம்

ஒருவன் பஞ்ச ஸம்ஸ்காரம் முடித்து, கழுத்தில் துளசி மணியுடன், நெற்றியில் திருமண் காப்பும் துலங்க லோகத்தில் சஞ்சரிப்பதால் மட்டுமே இந்த அண்டம் உய்கிறது என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது.

பஞ்ச ஸம்ஸ்காரத்திற்கு முன்பே அனைவரும் திருமண் காப்பினை தரித்து கொள்ளலாம். திருமண் காப்பை தரித்துக் கொள்ள பேதங்கள் கிடையாது, ஸ்ரீ வைஷ்ணவனாக இருந்தல் மட்டும் வேண்டும்.

ஆன்மா 101வது நாடியான சூஷூம்னா நாடியை பற்றிக்கொண்டு உயர் கதியான வைகுண்டத்தை அடைகிறது. இதன் அறிவுறுத்தலே நெற்றியில் திருமண் காப்பை மேல் நோக்கி அணிகின்றோம். திருமண் காப்பினை முதலில் துளசி மண்ணினாலும், திவ்யக்ஷேத்ர மண்ணினாலும் தான் பூர்வர்கள் அணிந்து வந்தார்கள்.

ஸ்ரீ வராஹவதாரம் தோன்றி பூமிதேவியை காத்ததன் பொருட்டு துதிக்க வந்த தேவர்கள், முனிவர்கள் நெற்றி சூன்யமாக இருந்தது கண்டு திருமண் காப்பின் பெருமை பற்றி அருளிச் செய்கிறார் வராஹமூர்த்தி. வைகுண்டத்திற்கு அழைத்து செல்ல உதவும் ஒரு சின்னம் தான் திருமண் காப்பு என்று வராஹமூர்த்தி உபதேசிக்கிறார்.

வராஹமூர்த்தி கருடனுக்கு ஆணையிட, அவரும் க்ஷீராப்தியிலிருந்து (திருப்பாற்கடல்) பால் கட்டிகளைக் கொண்டு வந்து பல திவ்யக்ஷேத்ரங்களில் தெளித்தார். அந்த கட்டிகள் விழுந்த க்ஷேத்ரங்கள் தான் இன்றளவும் ஸ்வேதகிரி, ஸ்வேத புஷ்கரணி என பல பெயர்களில் விளங்குகிறது, மேலும் திருமண் என்றும் அறியப்படுகிறது.

ஆக திருமண்னை பூலோகத்திற்குக் கொண்டு வந்த அவதாரம் ஸ்ரீ வராஹவதாரம்.

ஆசார்யன் பஞ்ச ஸம்ஸ்காரத்தின் போது திருமந்திரத்தை உபதேசித்து திருமண் காப்பை தரித்துக் கொள்ளும் முறையையும் தெரிவிக்கிறார் 

நெற்றியில் தொடங்கி பன்னிரண்டு திருமண் காப்புகளை உடலின் பல்வேறு அங்கங்களில் அந்தந்த இடத்திற்குரிய ப்ரணவத்தோடு கூடிய நாமத்தை உச்சரித்து 

கை நகம் படாமல் திருமண்ணைக் குழைத்து இட்டுக் கொள்ள வேண்டும்.

வராஹர் மூலமாகத் திருமண் தோன்றியது என்பதைப் பார்க்கும்போது அவரது மடியில் அமர்ந்திருந்த பிராட்டியின் சரீரம் அவரது அரைச் சிவந்த ஆடையின் மேலன்றோபட்டுக் கொண்டிருந்தது. அதனால் அவளது நிறமும் சிவப்பாயிற்று. அந்த ஸமயத்தில் தோன்றிய ஸ்ரீசூர்ணமும் சிவப்பாயிற்று.

பகவானின் திருமார்பில் நித்யவாசம் செய்யும் மஹாலக்ஷ்மியுடன் கூடிய ஸ்ரீநிவாஸனை அடையும் பொருட்டு விளக்கு ஜ்வாலை வடிவில் ஸ்ரீசூர்ணம் தரிக்க வேண்டும்.

ஸ்ரீசூர்ணம் மங்களகரமானது, தெய்வீகமானது, மோக்ஷம் அளிக்கவல்லது.

திருமண் காப்பும் ஸ்ரீசூர்ணமும் தரிக்கும்போது சொல்ல வேண்டிய பெருமாள் நாமங்கள் !

நாராயணனின் பனிரெண்டு நாமாக்களை குறிக்கும் வகையில் பனிரெண்டு இடங்களில் திருமண் காப்பு இட்டுக்கொள்வது சம்பிரதாயம்.

நெற்றி

நடு வயிறு (நாபி)

நடு மார்பு (மார்பு)

நடுகழுத்து (நெஞ்சு)

வலது மார்பு

வலது கை

வலது தோள்

இடது மார்பு

இடது கை

இடது தோள்

பின்புறம் அடிமுதுகு

பின்புறம் பிடரி

இவ்வாறு திருமண் காப்பும் ஸ்ரீசூர்ணமும் தரிக்கும்போது சொல்ல வேண்டிய பெருமாள் நாமங்கள் இவை:

கேசவாய நம என்று நெற்றியிலும்

நாராயணாய நம என்று நாபியிலும்

மாதவாய நம என்று மார்பிலும்

கோவிந்தாய நம என்று நெஞ்சிலும்

விஷ்ணவே நம என்று வலது மார்பிலும்

மதுஸூதனாய நம என்று வலது புயத்திலும்

த்ரிவிக்ரமாய நம என்று வலது தோளிலும்

வாமனாய நம என்று இடது நாபியிலும்

ஸ்ரீதராய நம என்று இடது புயத்திலும்

ஹ்ருஷீகேசாய நம என்று இடது தோளிலும்

பத்மநாபாய நம என்று அடிமுதுகிலும்

தாமோதராய நம என்று பிடரியிலும்

திருமண் தரித்துக் கொள்ள வேண்டும் .

வைணவத்தில் 24 தத்துவங்களை கடந்த நிலையில் உள்ள பொருளே இறைவன். 

24 தத்துவங்களின் குறியீடுகள்.அதாவது 

தந் மாத்திரைகள் 5; 

ஞானேந்திரியங்கள் 5; 

கருமேந்திரியங்கள் 5; 

பூதங்கள் 5; 

ஆக இவை 20. 

இவற்றுடன் 

பிரகிருதி l, 

மகான் 1, 

அகங்காரம் 1, 

மனம் 1 

ஆக நான்கும் சேர 24 தத்துவங்களாகின்றன. இவற்றுடன் புருடன்: 1,  மகாபுருடன் (பரமான்மா) சேர்ந்து வைணவ தத்துவம் 26 ஆகின்றது. 
 
இறைவன் ஒருவன் தான், ஆனால் அவனே உயிரின் பக்குவத்திற்கேற்ப பலவாய் தெரிகிறான்.