Sri Venkatesa Mahatmiyam - ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் - 1

Sri Venkatesa Mahatmiyam

Sri Venkatesa Mahatmiyam - 1

திருமலை திருப்பதி திருக்கோவிலின் வரலாறு, புராணக்கதைகள், பெருமாளின் அவதாரம் என ஸ்ரீ வேங்கடேஸ்வரப் பெருமாளின் பெருமைகளைப் போற்றும் மஹாத்மியம் Sri Venkatesa Mahatmiyam "ஸ்ரீ வேங்கடேச மஹாத்மியம்" என அழைக்கப்படுகிறது. "கலௌ வேங்கட நாயக" என்று கலியுக தெய்வமாகக் கொண்டாடப்படும் திருவேங்கடவன் உகந்து அர்ச்சாரூபியாய் பக்தர்களின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்து அருளும் திருவேங்கட மாமலை எனும் ஸ்வயம் வ்யக்த திவ்ய ஷேத்ரம் ஆந்திர மாநிலத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் மூவாயிரம் அடி உயரத்தில் மலையில் எம்பெருமான் கோவில் கொண்டருளி சேவை சாதிக்கிறார்.

ஷேத்ரம் : ஆதிவராக ஷேத்ரம்
விமானம் : ஆனந்த நிலைய விமானம்
புஷ்கரணி : ஸ்வாமி புஷ்கரணி
பெருமாள் திருநாமம் : திருவேங்கடவன் (ஸ்ரீநிவாசன், கோவிந்தன், ஏழுமலையான், பாலாஜி)
திருக்கோலம் : நின்ற திருக்கோலம்.
மங்களாஸாசனம் : 9 ஆழ்வார்கள், ஆண்டாள், தேசிகன்.

ஏழுமலைகள் :-
திருமலை திருப்பதியில் ஏழு மலைகளின் மேல் எம்பெருமான் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் கோவில் கொண்டருள்கிறார். ஏழுமலைகளின் பெயர்கள் :- 1.வெங்கடாத்ரி, 2.சேஷாசலம், 3.வேதாசலம், 4.கருடாசலம், 5.வ்ருஷபாத்ரி, 6.அஞ்சநாத்ரி, 7.ஆனந்தாத்ரி.

தீர்த்தம் :-

இந்த ஷேத்ரத்தில் 14 தீர்த்தங்கள் உள்ளன. அவை
1. வைகுண்ட தீர்த்தம்
2. சக்ர தீர்த்தம்
3. ஜாபாலி தீர்த்தம்
4. வருண தீர்த்தம்
5. ஆகாச கங்கை
6. பாப விநாசம்
7. பாண்டவ தீர்த்தம்
8. குமாரதாரை
9. இராமக்ருஷ்ண தீர்த்தம்
10. தும்புரு தீர்த்தம்
11. சேஷ தீர்த்தம்
12. ஸநக ஸநந்தன தீர்த்தம்
13. யுத்தகள தீர்த்தம்
14. சீதம்ம தீர்த்தம்

புராண மஹாத்மியம் :-

இந்த ஷேத்ரத்தின் (தலத்தின்) மஹாத்மியம் 12 இடங்களில் படிக்கப்பட்டிருக்கின்றன. அவையாவன :-
1. வராஹ புராணம்
2. பாத்ம புராணம்
3. கருட புராணம்
4. பிரஹ்மாண்ட புராணம்
5. மார்க்கண்டேய புராணம்
6. ஹரிவம்சம்
7. வாமன புராணம்
8. ப்ரஹ்ம புராணம்
9. ஆதித்ய புராணம்
10. ஸ்கந்த புராணம்
11. பவிஷ்யோத்தர புராணம்
12. வெங்கடேச்வர ரஹஸ்யம்
இந்த தலத்தின் மஹாத்மியத்தைப் பற்றி அனைவரும் நன்கு அறிந்துள்ளீர்கள் என்றே கருதுகிறேன். ஆகையால், என்னால் இயன்றவரை மிக விரிவாக விவரிக்கிறேன்.

முனிவர்களின் யாகம் :-

த்வாபரயுகம் முடிந்து, கிருஷ்ண அவதாரமும் முடிந்து, கலியுகம் ஆரம்பமானது. மக்கள் பகவான் ஒருவர் இருப்பதையே மறந்து பலவித பாவங்களைச் செய்தனர். இதனைக் கண்ட நாரதர் மனம் வருந்தி, பிரம்மாவிடம் சென்று பூலோகத்திலுள்ள மக்கள் பகவானைப் பற்றிய எண்ணமில்லாமல் இருப்பதைப் பற்றிக் கூறினார். இதைக் கேட்ட நான்முகனான பிரம்ம தேவர், "நாராயணன் பூலோகத்தில் இல்லாவிட்டால் மனிதர்கள் பக்தியற்றவர்களாய் மடிவார்கள்". பகவான் பூலோகத்தில் அவதரிக்க ஒரு உபாயத்தைச் செய் என்று கூறினார். உடனே நாரதர் கங்கா தீர்த்தத்தில் யாகங்கள் செய்யும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு கச்யபர் தலைமையில் யாகம் நடந்து கொண்டிருந்தது. நாரதர் கச்யபர் முதலிய முனிவர்களைப் பார்த்து "நீங்கள் யாரைக் குறித்து யாகம் பண்ணுகிறீர்கள்? யாகத்தின் ஹவிர்பாகத்தைப் பெறும் தேவதை எது? என்று கேட்டார். அக்கேள்விக்கு முனிவர்களால் பதில் கூற இயலவில்லை. மஹரிஷிகளே! மும்மூர்த்திகளில் ஸத்வகுணம் உடையவரே "ஸகல ஸகத்காரகன்". அவரே மோக்ஷத்தைக் கொடுக்க வல்லவர். அவர் பொருட்டே யாகத்தின் ஹவிர்பாகத்தை ஸமர்ப்பியுங்கள் என்று நாரதர் முனிவர்களிடம் கூறிவிட்டு சென்று விட்டார்.

அடுத்த பதிவில்...

முனிவர்கள் யாகத்தின் பலனை மும்மூர்த்திகளில் யாருக்கு ஸமர்ப்பித்தார்கள் என்பது பற்றி அடுத்த பதிவில் காணலாம். ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் தொடரும்..

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!