ஆகாசராஜன் மரணமும் வசுதனன் தொண்டை மான் யுத்தமும்
ஸ்ரீனிவாசரான விஷ்ணுவும் பத்மாவதியும் சில காலம் வசிஷ்டரின் ஆஸ்ரமத்தில் தங்கிக் கொண்டு இருந்தபோது ஒரு நாள் ஆகாசராஜன் உடல் நலமின்றி இருப்பதினால் உடனே அவர்களை கிளம்பி வருமாறு செய்தி வர இருவரும் மீண்டும் அரண்மனைக்குக் கிளம்பிச் சென்றார்கள். உண்மையைக் கூறினால் ஆகாசராஜன் அவர்கள் வரும்வரை தனது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்தார். அவர்கள் வந்ததும் ஸ்ரீனிவாசரின் கைகளைப் பிடித்துக் கொண்டு தான் மரணம் அடைந்து விட்டப் பின் அந்த ராஜ்யத்தை ஆள்வதற்கு தக்க ஏற்பாட்டை செய்துவிட்டுப் போக வேண்டும் என்றும், தனது மகனான வசுதானன் மற்றும் அவருடைய தம்பியான தொண்டைமான் இருவரையும் அவரே ஒற்றுமையுடன் இருந்து நாட்டை ஆளச் செய்ய வழி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டப் பின் மரணம் அடைந்தார்.
ஆகாசராஜர் மரணம் அடைந்து அனைத்துக் காரியங்களும் முடிந்த உடனேயே அவருடைய பிள்ளையான வசுதானன் மற்றும் அவருடைய தம்பியான தொண்டைமான் இருவருக்கும் யார் அரசுப் பொறுப்பை ஏற்பது என்பதில் சண்டை வந்தது. அப்போது அவர்கள் இருவருமே ஆகாசராஜரின் இரு பகுதிகளை ஆண்டு வந்த சிற்றரசர்களாக இருந்ததினால் குதிரைப் படையை திரட்டிக் கொண்டு போர் முனைக்கு வந்தார்கள்.
குதிரைப் படையை திரட்டிக் கொண்டு போர் முனைக்கு வந்தார்கள். அதுவும் நடந்து கொண்டிருந்த நாடகத்தின் ஒரு அங்கம்தான். அதற்குக் காரணம் தொண்டைமான் பூர்வ ஜென்மத்தில் ஒரு பெண் பித்தராக இருந்தவர். ஆனால் அவர் தீவிர விஷ்ணு பக்தராகவும் இருந்தார். ஆகவேதான் அவரை விஷ்ணு நல்வழிப்படுத்தி பெண்களை துன்புறுத்திய பாவத்தைக் களைய அடுத்த ஜென்மத்தில் பூவுலகில் அரச வம்சத்தில் பிறவி எடுத்து, பல மனக் கஷ்டத்தை அனுபவித்தப் பின் அரசாண்டு அதே பூவுலகில் தனக்கு ஒரு ஆலயம் அமைக்க வேண்டும் என அதற்கான பிராயச்சித்தம் கூறி இருந்தார். ஆகவேதான் தொண்டைமான் இந்த ஜென்மத்தில் ஆகாசராஜரின் தம்பியாகப் பிறப்பு எடுத்திருந்தார்.
நிற்க யுத்தத்தை துவக்கிய இருவருமே ஸ்ரீனிவாசர் விஷ்ணு பக்தர்கள் என்பதினால் அவருடைய துணையை நாடினார்கள். ஆகவே இருவருமே தனக்கு வேண்டியவர்கள் என்பதினால் சோழி குலுக்கிப் பார்த்தார். அதில் கிடைத்த வழிகாட்டுதலின்படி வேறு வழி இன்றி ஸ்ரீனிவாசர் தன்னிடத்தில் இருந்த சக்ராயுதத்தை தொண்டைமானுக்கு கொடுத்து விட்டு யுத்தத்தில் தானே நேரடியாக வசுதனன் பக்கத்தில் சேர்ந்து கொண்டு போர் புரிந்தார். சண்டை பயங்கரமாக நடந்தது. ஒரு கட்டத்தில் தொண்டைமானின் மகன் வேறு வழி இன்றி ஸ்ரீனிவாசர் கொடுத்த சக்கரத்தை அவர் மீதே வீச அது தாக்கி ஸ்ரீனிவாசர் நினைவை இழந்தார்.
யுத்தத்தில் தான்தொண்டைமானுக்கு கொடுத்த ஆயுதமே தன்னைத் தாக்கியதினால் மயங்கி விழுந்தார் ஸ்ரீனிவாசர். அந்த நிலையைக் கண்ட அனைவரும் யுத்தத்தை உடனிடியாக நிறுத்தி விட்டு அவரை மீண்டும் சுய நினைவுக்கு கொண்டு வருவதில் முழு முனைப்புடன் ஈடுபட்டார்கள். கண் விழித்த ஸ்ரீனிவாசரிடம் அனைவரும் மன்னிப்பைக் கேட்டு அவர் எப்படி சொல்கிறாரோ அப்படியே அவர்கள் நடப்பதாக உறுதி மொழிக் கூற அவரும் ராஜ்யத்தை இரண்டாகப் பிரித்து ஒன்றை தொண்டைமானுக்கும், இன்னொன்றை வசுதனனுக்கும் அரசாளக் கொடுத்தார் அனைவரும் அதை முழு மன நிறைவோடு ஏற்றுக் கொண்டார்கள். அதன் பின் மீண்டும் ஸ்ரீனிவாசரும், பத்மாவதியும் அகஸ்தியர் ஆஸ்ரமத்துக்கு கிளம்பிச் சென்று விட்டார்கள்.