Sri Venkatesa Mahatmiyam part 2

முந்தைய பதிவில் நாரதர் காஷ்யபர் மற்றும் முனிவர்களிடம் யாகத்தின் பலனை மும்மூர்த்திகளில் யாரிடம் "ஸத்வகுணம்" உள்ளதோ அவர்களிடம் யாகத்தின் பலனை ஸமர்ப்பியுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றார். இன்று அதன்பின் நடந்ததைக் காணலாம்.

பிருகு மஹரிஷிகள் பரீட்சை :-

காஷ்யப முனிவர்கள் பிருகு முனிவரிடம் ஸத்வகுணமுள்ள (சாந்தமான) கடவுளைக் கண்டு வருமாறு பிருகு முனிவரிடம் கூறினார்கள். மும்மூர்த்திகளில் சாந்தமானவரைத் தேடி பிருகு முனிவர் புறப்பட்டார். அவர் முதலில் சத்யலோகம் சென்றார். பிரம்மாவை வணங்கினார். இதனை பிரம்மா (சதுர்முகன்) கவனிக்கவில்லை. உடனே, நான்முகனான பிரம்மன் மக்களால் ஆராதிக்கத் தகுதியற்றவன் என்று பிருகு முனிவர் பிரம்மனைச் சபித்து விட்டு கைலாசம் சென்றார். கைலாயத்தில் சிவன், பார்வதி தேவியோடு சேர்ந்திருந்தார். பிருகு முனிவர் வருவதை பரமசிவன் பார்க்கவில்லை. பார்வதிதேவி பார்த்து விட்டாள். மிக்க லஜ்ஜைப்பட்டு பார்த்தாவிடம் பிருகு முனிவர் வருவதைத் தெரிவித்தாள்.

தன்னை விட்டு விட்டு போகும்படியும் கோரினாள். ருத்ரன் அவளை விட்டுவிட்டார். மிக்க கோபத்துடன் பிருகு முனிவரை பார்த்தார். அப்பொழுது பிருகு முனிவர் மஹாதேவனுக்கு பூலோகத்தில் அங்கபூஜை இல்லாமல் இருக்க வேண்டும் என்று சபித்தார். உடனே, கைலாசத்திலிருந்து புறப்பட்டு வைகுண்டத்திற்குச் சென்றார். கிருஷ்ணாவதாரத்தை முடித்த பெருமாள் வைகுண்டத்தில் தங்கியிருந்தார். பெருமாள், மஹாலக்ஷ்மியுடன் ஆதிசேஷதல்பத்தில் சயனித்திருந்தார். பிருகு முனிவர் வருவதை அவர் பார்க்கவில்லை. பிருகு முனிவர் கோபம் கொண்டு, பெருமாளின் வக்ஷஸ்தலத்தில் (மார்பில்) காலால் உதைத்தார். உதை பட்டதும் விஷ்ணு பரபரப்புடன் எழுந்திருந்து பிருகு முனிவரின் பாதத்தை பிடித்தார். கால் வலிக்கிறதோ? நான் நீங்கள் வந்ததைக் கவனிக்கவில்லை என்று கூறிக்கொண்டே பாதத்தைத் தடவிக் கொடுத்தார். என்னை மன்னித்தருள வேண்டும் என்று கூறிக்கொண்டே பிருகுவின் பாதத்தொல் உள்ள மூன்றாவது கண்ணை நசிக்கிவிட்டார். பிருகு முனிவருக்கு ஞானம் பிறந்தது. பிருகு முனிவரும் ஸர்வலோக ஸரண்ய! ஸ்ரீமந் நாராயண! நாரத முனிவர் மூன்று மூர்த்திகளில் "ஸத்வகுணம் (சாந்தகுணம்)" நிறைந்தவருக்கு யாகத்தின் ஹவிர்பாகத்தினை ஸமர்ப்பிக்கும்படி கூறினார்.

அந்த சாந்தகுணம் நிறைந்த கடவுளை கண்டு வரும்படி காஷ்யபர் முதலிய மஹரிஷிகள் அடியேனை நியமித்தார்கள். இன்று நானறிந்தேன் நாராயணனே நான்முகனுக்கும், ஈசனுக்கும் தெய்வம். ஸர்வலோக சரண்யனும், ஸத்வகுண பூர்த்தியுள்ளவனும் ஸகலபலன்களை அளிப்பவனும் நீயே என பலவிதமாக ப்ரார்த்தித்தார். தாம் செய்த குற்றத்தை பொறுத்தருளும்படி ப்ரார்த்தித்து விடை பெற்று சென்றார். கங்கா தீர்த்தத்தை அடைந்து மஹாவிஷ்ணுவே ஸத்வகுணமுள்ளதேவன் என்று காஷ்யப மஹரிஷியிடம் கூறினார். யக்ஜ பலத்தை ஸ்ரீமந்நாராயணனுக்கு ஸமர்ப்பித்து ஸந்துஷ்டரானார்கள்.

அடுத்த பதிவில் :-
மஹாலக்ஷ்மி மஹாவிஷ்ணுவிடம் கோபம் கொள்வதைப் பற்றிப் பார்க்கலாம்.
ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் தொடரும்.

"ஓம் நமோ வெங்கடேசாய நமஹ"