அன்னை மகாலட்சுமி பிரிந்த பின் உலகின் நிலை
தான் வசிக்கும் எம்பெருமானின் திருமார்பை முனிவர் எட்டி உதைக்க, அவரை தன் நாயகன் கண்டிக்க வில்லையே என்ற கோபம் திருமகளுக்கு. எனவே, பெருமாளை விட்டுப் பிரிந்தாள். லட்சுமி ஒரு இடத்தில் இருக்கும் வரை தான் யாருக்குமே மதிப்பு...
லட்சுமி பிராட்டியார் பூலோகம் சென்று ஆகாது ராஜன் மகளாக பிறந்து கொல்லாபுரத்தில் தங்கி விட்டதால், வைகுண்டத்தின் செல்வச்செழிப்பு அகன்றது. ஸ்ரீதேவி சென்று விட்டதால், தரித்திர தேவி உள்ளே புகுந்தாள்.
தேவர்கள் வேண்டுதல்
உலகில் அன்னை லட்சுமியின் அருட்கடாட்சம் பெறாமல் தேவர்களெல்லாம் கலங்கினார்கள்.அவர்கள் திருமாலிடம், பெருமாளே! தாங்கள் லட்சுமி தாயார் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து, அவர்களைச் சமாதானம் செய்து மீண்டும் வைகுண்டம் அழைத்து வர வேண்டும். தேவலோகமே வறுமைக்கு ஆட் பட்டால், செல்வம் வேண்டி வணங்கும் நம் பக்தர்களுக்கு எப்படி வாரி வழங்குவது! உலக உயிர்களுக்கு படியளக்காவிட்டால், நமக்கு எப்படி மதிப்பிருக்கும்? என்றனர்.திருமாலும், அவர்கள் முன்னால் நாடகமாட ஆரம்பித்து விட்டார். ஆமாம்..ஆமாம்...லட்சுமி இங்கிருந்து செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். பிருகுவைக் கண்டித்திருந்தால், அவள் இங்கிருந்து சென்றிருப்பாளா? பின்விளைவுகளைப் பற்றி சிந்தியாமல் இருந்து விட்டேனே, என வருத்தப்படுவது போல நடித்தவர், பூலோக சஞ்சாரத்துக்கு தயாராகி விட்டார்.
லட்சுமி அங்கேயே இருந்திருந்தால், பூலோகத்தில் முனிவர்களின் கோரிக்கையை எப்படி நிறைவேற்ற முடியும்? கலியுகத்தில் நடக்கும் பாவங்களை எப்படி தடுக்க முடியும்? இந்தக் காரணத்தால், லட்சுமிக்கு கோபம் வரச் செய்த திருமால், அவளுக்கு பூலோகம் செல்லும் மனநிலையை உண்டாக்கி விட்டு, தானும் அங்கே செல்ல தயாரானார். தேவர்களே! லட்சுமி எங்கிருந்தாலும் நான் அழைத்து வருகிறேன். அதுவரை பொறுமை காக்க வேண்டும், என்றவர் அவள் மறைந்திருக்கும் இடத்தை தேடி பல இடங்களிலும் சுற்றினார்.
சீதையைப் பிரிந்த ஸ்ரீராமன் காட்டில் எப்படியெல்லாம் தேடியலைந்தாரோ! செடி, கொடிகளிடம் எல்லாம் என் சீதையைப் பார்த்தீர் களா! என்று கேட்டு புலம்பினாரோ, அதுபோல திருமால், என் லட்சுமியைப் பார்த்தீர்களா! என்று செடி, கொடிகளிடமெல்லாம் கேட்டுக்கொண்டே நடந்தார்.எங்கு தேடியும் லட்சுமி கிடைக்காமல், ஏழு மலைகளை உள்ளடக்கிய திருமலை என்னும் மலைக்கு வந்தார்.
அப்பகுதியில் ஆதிவராஹர் குடியிருந்தார். திருமால் எடுத்த அவதாரங்களில் பன்றி முகம் கொண்ட வராஹ அவதாரமும் ஒன்று. வராஹமாக அவதாரமெடுத்து, பூமியைத் தோண்டி வேதங்களைக் கண்டெடுத்து பிரம்மாவிடம் ஒப்படைத்த பிறகு, அதே வடிவில் திருமலையில் அவர் குடியிருந்தார். ஆதியில் தோன்றியவர் என்பதால், அவர் ஆதிவராஹர் எனப்பட்டார். இதனால், திருமலையில் அவர் தங்கியிருந்த இடமும் ஆதிவராஹ க்ஷேத்ரம் எனப்பட்டது.இந்த தலத்தை ஆதிவராஹ நரசிம்ம க்ஷேத்ரம் என்றும் அழைப்பர். நரசிம்மரும் இதே மலையை ஒட்டிய அஹோபிலத்தில், தன்அவதார காலத்தை முடித்து விட்டு தங்கியிருந்தார்.திருப்பதி வெங்கடாசலபதியின் செல்வச்செழிப்புக்கு காரணமே இந்த நரசிம்மர் தான் என்ற கருத்தும் உண்டு.இங்கு வந்த திருமால், ஒரு புளியமரத்தில் இருந்த புற்றில் அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்து விட்டார்.
நாரதர் பிரம்மா சந்திப்பு
திருமால் ஒருபுறம், லட்சுமி ஒருபுறம் இருந்தால் உலக இயக்கம் என்னாகும்? இதை சரிசெய்ய எண்ணினார் கலக முனிவர் நாரதர். அவர், தன் தந்தையான பிரம்மாவிடம் சென்றார்.தந்தையே! பிருகு முனிவர் செய்த சோதனையால் கோபமடைந்த லட்சுமி தாயார் இப்போது கொல்லாபுரத்தில் இருக்கிறார்.திருமாலோ, ஆதிவராஹ க்ஷேத்ரத்தில் தவத்தில் ஆழ்ந்து விட்டார். அவர் லட்சுமியைக் காணாமல் அன்னம் கூட புசிப்பதில்லை. இப்படியே போனால் என்ன செய்வது?முதலில் திருமாலுக்கு அன்னம் புகட்ட வேண்டும். அதற்கு தாங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும், என்றார். பிரம்மா உடனடியாக சிவபெருமானிடம் சென்றார். நடந்த விஷயத்தைச் சொன்னார். மேலும், பெருமானே! நாம் இருவரும் பசு, கன்று வேடத்தில் செல்வோம்.அவருக்கு பால் புகட்டி வருவோம், என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதனிடையே நாரதர் பூலோகம் சென்று கொல்லாபுரத்தில் தவத்தில் இருந்த லட்சுமி தாயாரைச் சந்தித்தார்.நாராயணா என்ற திருநாமம் முழங்க வந்த அவரை லட்சுமி வரவேற்றாள்.தாயே! தாங்கள் சிறு பிரச்னைக்காக கோபித்துக் கொண்டு வந்து விட்டீர்கள். நீங்கள் இல்லாமல் திருமாலால் ஒரு கணமாவது வைகுண்டத்தில் இருக்க முடியுமா? அவர் உங்கள் மீது கொண்டுள்ள அன்பைக் குறைத்து மதிப்பிட்டு விட்டீர்களே! தாங்கள், அவரைப் பிரிந்த ஏக்கத்தால் அவர் மனம் பட்ட பாடு தெரியுமா? அவர் உங்களைத் தேடி காடுகள், மலைகள், குகைகளில் எல்லாம் அலைந்தார். எங்கும் கிடைக்காமல், இப்போது திருமலையிலுள்ள ஆதிவராஹ க்ஷேத்ரத்தில் தங்கியுள்ளார். தங்களை எண்ணி புலம்பி அலைந்த அவர், சாப்பாடு, உறக்கம் ஆகியவற்றை மறந்து, தாங்கள் கிடைக்க வேண்டுமென்பதற்காக ஒரு புளியமரப்பொந்தில் தவத்தில் ஆழ்ந்து விட்டார். தாங்கள் அவரைக் காப்பாற்ற உடனடியாக கிளம்ப வேண்டும், என்றார். அன்னை லட்சுமிக்கு பகீரென்றது. அவசரப்பட்டு பிரிந்து வந்து விட்டோமோ என வருந்திய அவள் திருமாலைக் காப்பாற்ற வேண்டி தன் அண்ணன் சர்வேஸ்வரனை பார்க்க கிளம்பிவிட்டார் .
அடுத்து என்ன நடந்தது அடுத்த பதிவில் பார்க்கலாம்.