Sri Venkatesa Mahatmiyam - ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் - 6

Sri Venkatesa Mahatmiyam - ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் - 6
பசு புற்றின் உள்ளேயே அமர்ந்து தவம் செய்யும் சீனிவாசனுக்கு பால் தருவதை கண்ட இடையன் கோவம் கொண்டு தாக்குகிறான். பசுவை காப்பற்ற வந்த சீனிவாசனுக்கு காயம் ஆக மயங்கி விடுகிறார். காயம் பட்ட பசு அரண்மனை சென்று மன்னனை காண, நடந்த செய்தி அறிய வேண்டி பசுவை பின் தொடர்ந்து வந்து சீனிவாசன் தவம் செய்த புற்றை அடைகிறார். இனி

புற்றின் அருகில் பல்லக்கில் வந்து இறங்கிய மன்னன், ஒவ்வொரு காட்சியையும் கண்டு கதி கலங்கினான். நீதிநெறி தவறாத தனது ஆட்சியில் ரத்தம் சிந்தும் அளவிற்கு ஊறு நடந்துவிட்டது என்று எண்ணி வருந்தினான். தன் செங்கோல் வளைந்துவிடக் கூடாதே என்று சங்கடப்பட்டான். சத்தியம் ஜெயிக்க வேண்டுமே என்று எண்ணிக் கலங்கினான்.

"ஆதிவராக மூர்த்தியே! இந்த அடியவனின் அறநெறி வழுவாத ஆட்சியில் இப்படியொரு அராஜகம் நடக்கக் காரணம் யாதோ? முற்பிறப்பில் யாருக்கு என்ன தீங்கிழைத்தேன்? யார் குடியை நான் கெடுத்தேன்? என்ன நடந்தது? ஏது நடந்தது? ஒன்றும் புரியவில்லையே! கோவிந்தா! கோபாலா! நாராயணா!" என்றெல்லாம் பலவாறு கதறி அழுதான்; பயத்தால் புலம்பினான்; செய்வதறியது திகைத்தான்.

நீதி தவறா வேந்தன் நெஞ்சங் குமுறி இங்ஙனம் புலம்பிக் கதறியதும் மலை எடுத்து மாரி காத்த மாயவண்ணன் மயக்கத்திலிருந்து எழுந்தருளினார். திருநெற்றியிலே குருதி சொட்ட எழுந்தருளிய கோபலனைப் பார்த்து இடியுண்ட நாகம் போல துடிதுடித்துப்போனான் சோழப்பேரரசன். வேரறுந்த மரம்போல் நிலத்தில் வீழ்ந்து பகவானைப் பணிந்து வணங்கினான்.அவர் அணி நெற்றியிலே இரத்தம் கசிவதைக் கண்டு வேந்தன் பதை பதைத்தான்.

நீதிநெறி வழுவாக் கொற்றவன் மெய்சிலிர்க்கக் கண்கள் நீரைச் சொரிய, "ஸ்ரீ பரந்தாமா பத்மநாபா! வைகுண்டபதே!" என்றெல்லாம் பகவானது நாமத்தைக் கூவி அழைத்தான்.

"பகவானே! என் பிழையைப் பொறுத்தருளுங்கள். தேவரீர் திருமேனிக்குக் களங்கம் ஏற்படக் காரணமாக இருந்தது இன்னாரென்று இந்த எளியேன் அறிந்து கொள்ளலாமா?" என்று வேதனையுடன் கேட்டான்.

மன்னனைத் தண்டித்து ரக்ஷிக்க எண்ணினார் எம்பெருமான். கொண்ட கோலத்திற்கு ஏற்ப குணத்தை மாற்றிக் கொண்டார். சாந்த சொரூபியான நாராயணன் உக்ர சொரூபியானார்.

"ராஜ நீதியையும், ராஜ தர்மத்தையும் மறந்த நீ சோழ சாம்ராஜ்யத்தை நிலையாக ஆளுவதற்கு தகுதியற்றவன். பரந்தாமனுக்கு உன்னுடைய பிரஜை பாதகம் புரிந்ததை ஆராய்ந்து அறிந்து விசாரணை நடத்தத் தவறியவன் நீ. உனக்கு இப்பிறவியில் மோட்சமே கிடையாது. கலியுகத்தில் பூமண்டலத்தைக் காத்தருளுவதற்காக வேண்டி புற்றுள் வாசம் செய்கிறேனே! அதை நீ உணர்ந்து பார்க்கத் தவறிவிட்டாய்!"

"எனக்குப் பாலைப் பொழிந்த பசுவை இவன் கோடாரியால் வெட்டப் போனான். பசுவைக் காப்பாற்றப் புற்றுள் இருந்து வெளியே வந்தபோது, இவன் கோடாரியால் என்னைத் தாக்கினான். மக்கள் தவறு புரிந்தால் அதற்குக் காரணம் மன்னன்தானே! அதனால் இவன், எனக்கு இழைத்த இப்பாதகச் செயலுக்கு, நீ தண்டனை அனுபவித்துத்தான் ஆக வேண்டும்! எனக்குப் படுபாதகம் புரிந்த நீ, பிசாசாக மாறி இக்கொடிய கானகத்தில் அலைந்து திரிவாய்!''

என சாபம் கொடுத்தார். சாபம் கொடுத்து ஸ்ரீநீவாசன், சோழவேந்தனுக்கு தாம் இன்னாரென்பதனை உணரும்படிச் செய்தார். மன்னனுக்கு ஞானம் பிறந்தது. "ஸ்ரீ கிருஷ்ணா! நீயே பரமேசுவரனும், பரமாத்மாவும், ஆதி அந்தமும் இல்லாதவனும், புருஷோத்தமனுமானவன். அண்டியவரை ஆதரிக்கும் கலியுகவரதா! என் பிழையைப் பொறுத்தருளுதல் வேண்டும். தாமரைச் செங்கமண்மாலே! அடியார்க்கு அபயம் அளிக்கும் அமலனே! அன்பர்களின் நெஞ்சக் கமலங்களில் களி நடனம் புரியும் கார்மேக வண்ணனே! எனக்குத் திருவருள் புரிந்து உய்யும் மார்க்கத்தை அருளுவாய்!"

"நாராயணா! ஜனார்த்தனா! உனக்குத் தண்டன் சமர்ப்பிக்கிறேன். எனது தண்டனையை நீக்கிவிடும்! பிழையைப் பொறுத்திடுவீர்! தேவர்களையும், தவசியர்களையும் சகல ஜீவராசிகளையும் காத்தருளும் கோவிந்தா! இந்த அறிவிலி அறியாது செய்த பிழையை மன்னித்து சாபவிமோசனம் செய்தருளும்" என்றெல்லாம் மெய்யுருகினான் வேந்தன்.

பக்தனின் அன்பிற்கும் ஆராதனைக்கும் உளங்கனிந்த பரந்தாமன், கோபம் தணிந்து, சோழவேந்தன் மீது கருணை கொண்டார். பரந்தாமன் மன்னனுக்கு சாப விமோசனம் தந்தாரா, மன்னன் சாபத்தில் இருந்து மீளும் வழி என்ன?

அடுத்த பதிவில் பார்க்கலாம்

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!