மன்னன் சாப விமோசனம்
காயம் பட்ட பசுவின் பின் வந்து, ரத்த காயம் பட்ட சீனிவாசனை காண்கிறார். தவறினை ஆராயாமல் தண்டனை வழங்கிய காவலனின் தவறுக்கு மன்னனும் ஒரு காரணம் என்பதை அறிந்த பகவான் மன்னன் பிசசாக மாற சாபமளிக்கிறார். இனி...
பகவானது சாபம் கேட்ட சோழராஜன் நடுநடுங்கி, சுவாமி! என் தவறுக்கு நானே பொறுப்பேற்கிறேன். இருப்பினும், அறியாமல் நடந்து விட்ட இந்த தவறை மன்னித்து சாபத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன், என மன்றாடினான். அப்போது ஸ்ரீஹரி அவன் முன் சுயரூபம் காட்டி தரிசனம் தந்தார்.சோழராஜா! காரண காரியங் களுடனேயே எல்லாச் செயல்களும் நடக்கிறது. பசுக்களை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை உலகுக்கு எடுத்துக்காட்டவே, நான் இந்த லீலையை நிகழ்த்தினேன். என் சாபத்தை விலக்கிக் கொள்ள இயலாது. நீ சில காலம் பிசாசாக திரிந்து, அடுத்த பிறவியில் ஆகாசராஜன் என்ற பெயரில் பிறப்பாய். அப்பிறவியிலும் நீ மன்னனாகவே இருப்பாய். என் தேவி லட்சுமி, பத்மாவதி என்ற பெயரில் உனக்கு மகளாகக் கிடைப்பாள். அவளை எனக்கு மணம் முடித்து வைப்பாய், என்று அருள்பாலித்தார்.
ஸ்ரீமன் நாராயணா! பத்மநாபா! புண்டரீக! மதுசூதனா! கோபாலா! உன் தரிசனம் கிடைத்ததே போதும், இனி பேயாய் அலைந்தாலும் உன் நினைவுடனேயே திரிவேன், என்ற சோழராஜன் பேய் வடிவம் அடைந்து அங்கிருந்து அகன்றான். இதன் பிறகு, மயக்கமடைந்து கிடந்த கோபாலன் எழுந்தான். அவன் தன் முன்னால் நாராயணன் நிற்பதைக் கண்டு ஆனந்தம் கொண்டு, ஹரிஹரி... ஹரி ஹரி... என்று சொல்லி வணங்கினான். தெய்வமே! நான் செய்த மாபெரும் தவறுக்காக என்னை நரகத்துக்கு அனுப்பினாலும் அந்த தண்டனையை உளமாற ஏற்கிறேன். நாங்கள் அறிவொன்றும் இல்லாத ஆயர் குலத்தினர். படிப்பு எங்களுக்கு இல்லை. ராணியார் கொடுத்த நெருக்கடியால், இந்தத் தவறைச் செய்யும்படி ஆயிற்று. இருப்பினும், பசு ஏன் பாலைச் சொரிகிறது என்று நான் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். நீ தரும் தண்டனையை நான் ஏற்கிறேன், என்றான்.
நாராயணன் சிரித்தார். கோபாலா! இந்த பூலோகத்துக்கு நான் வந்து, இந்த மரப்புற்றில் தங்கினேன். எல்லோரும் என்னை பல்வேறு விதங்களில் வழிபடுவார்கள். நீ அடித்து வழிபட்டாய். பசு மேய்ப்பவர்கள் எனது பக்தர்கள். ராணியின் நிர்ப்பந்தம் காரணமாகவே நீ பசுவை அடிக்கப் பாய்ந்தாய். அதனால், தவறு உன் மீதல்ல. மேலும், பூலோகம் வந்த என்னை முதன்முதலாகத் தரிசித்தவனும் நீ தான்! எனவே, ஒரு சிறப்பான வாய்ப்பைத் தரப்போகிறேன். நான் இந்த வேங்கடமலையில் ஸ்ரீனிவாசன் என்ற பெயரில் தங்குவேன். என் கோயில் திறந்ததும், முதல் தரிசனம் உனது வம்சத்தவர்களுக்கே தருவேன், என்று அருள் செய்து மறைந்தார். இப்போதும், திருப்பதி கோயிலில் கோபாலனின் வம்சத்தினரே, அதிகாலையில் முதல் தரிசனம் பெறுகிறார்கள்.
வகுள மாலிகா சந்திப்பு
அடுத்து, ஸ்ரீனிவாசன் மானிட வடிவில், தான் அந்த மலையில் தங்குவதற்குரிய வேறு இடத்தைத் தேடி புறப்பட்டார். தலையில் ரத்தம் தொடர்ந்து வழிந்து கொண்டிருந்தது. காயம் அதிகமாக வலித்தது. அதை சகித்துக் கொண்டு, சீனிவாசன் நீண்ட தூரம் அந்தக் காட்டுக்குள் நடந்தார். அப்போது, தேவகுருவான பிரகஸ்பதி அங்கே வந்தார். சீனிவாசனை வணங்கினார். நாராயணா! கலியுகத்தில் மக்களைப் பாதுகாக்க தாங்கள் பூலோகம் வந்தீர்கள்! ஆனால், அந்தக் கலி, கடவுளாகிய உங்களையே விட்டு வைக்கவில்லையே! தங்கள் தலையில் ரத்தம் வழிவதைக் காண சகிக்காமல், தேவலோகத்தில் இருந்து ஓடோடி வந்தேன். எருக்கு இலையில் ஆலமரத்து பாலைக் கட்டி புண்ணிருக்கும் இடத்தில் வைத்துக் கட்டுங்கள். விரைவில் இந்தக்காயம் குணமாகி விடும், என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.
சீனிவாசன் நடையைத் தொடர்ந்தார். காட்டில் ஓரிடத்தில் ஹரே கிருஷ்ணா! ஹரே கிருஷ்ணா! ஹரே கிருஷ்ணா என்று பாடும் குரல் கேட்டது. அது ஒரு பெண்ணின் குரல். சீனிவாசன், தன்னை யாரோ நினைத்துப் பாடுகிறார்களே என்று மகிழ்ச்சியுடன் குரல் வந்த திசை நோக்கி நடந்தார். ஒரு குடிசையில் விளக்கொன்று எரிந்து கொண்டிருக்க, நடுத்தர வயது பெண் ஒருத்தி, கிருஷ்ணகானம் இசைத்துக் கொண்டிருந்தாள்.தன்னை நினைத்துப் பாடும் அந்த பக்தை யாரென்று அந்த பரமாத்மாவுக்கு தெரியாமலா இருக்கும்!ஆனால், மானிட அவதாரம் எடுத்து வந்து விட்டாரே! அதற்கேற்ற வகையில் தன் இயல்பை மாற்றிக்கொண்ட அவர், தன்னிலை மறந்து ஏதும் அறியாதவராய், அம்மா, அம்மா என்று அழைத்தார்.
இந்தக் குரலைக் கேட்டதும், உள்ளிருந்த அந்தப் பெண்மணிக்கு இதயத்தைப் பிசைவது போல் இருந்தது.ஆ... இது என் குழந்தையின் குரல் அல்லவா! துவாபராயுகத்தில் இவன் என் வயிற்றில் பிறக்காத பிள்ளையாக என் வீட்டில் வளர்ந்தானே! இவனைப் பெற்றவளை விட, என்னைத்தானே அந்த யுகத்திலும், இந்தக் கலியிலும் உலகம் கொண்டாடுகிறது! ஆ...அப்படியானால் அவன் தான் இவனா? அவள் வெளியே ஓடிவந்து பார்த்தாள்.
ஆம்! அதே முகம்! அதே நீல வண்ணம், இவன் தான்! நான் வளர்த்த கண்ணன் என்னும் செல்லப்பிள்ளை தான் இவன். எனக்கு அந்தப் பிறவியில் நடந்தது இவனைப் பார்த்ததும் முழுமையாக நினைவுக்கு வந்து விட்டது.கடந்த துவாபரயுகத்தில் இவன் மதுராபுரியில் பிறந்தான். இவனது தந்தை இவனைக் கூடையில் சுமந்து கொண்டு, யமுனை நதியை கடந்து மறுகரையில் இருந்த ஆயர்பாடியில் வசித்த என்னிடம் ஒப்படடைத்தார். இவன் நாராயணனின் அவதாரமென்று சொன்னார். இவன் நீல வண்ணத்தில் இருந்ததால், இவனுக்கு கிருஷ்ணா என்று பெயர் சூட்டினேன்.கிருஷ் என்றால் நீலமேகம் என்று பொருள். அந்த கிருஷ்ணனின் குழந்தைப் பருவ லீலைகளை நான் சுகித்தேன், என்று நினைத்தவள் அவரை உள்ளே அழைத்தாள்.
மகனே வா! உன்னைத் தாலாட்டி எத்தனை நாளாகிறது? பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்து இப்போது உன்னைப் பார்க்கிறேன். நான் யார் என உனக்குத் தெரிகிறதா? ஐயோ! இது என்ன ரத்தம்? என அலறினாள்.சீனிவாசனாகிய நாராயணன் சகலமும் அறிந்தவர் என்றாலும், மானிடப்பிறப்பாக வந்து விட்டதாலும், பக்தர்களுக்கு சோதனை தருவதில் இன்பம் கொண்டவன் என்பதாலும் ஏதுமே தெரியாதவர் போல் நடித்தார். அம்மா! தாங்கள் யார்? நான் ஒரு வழிப்போக்கன். இந்தக் காட்டிலுள்ள புளியமரப் பொந்தில் தங்கி தவமிருந்தேன். இந்நாட்டு மன்னனின் பணியாள் என்னை அடித்து விட்டான். நான் இருப்பதை அவன் அறியவில்லை. அதனால் அவன் மீது தவறில்லை, என்றவர் நடந்த விபரங்களையும், பிரகஸ்பதி சொன்ன மருத்துவம் பற்றியும் சொன்னார். சற்று நேரத்தில் அந்தப் பெண் எருக்கிலை பறித்து வந்து, ஆலம்பால் எடுத்து இலைக்குள் வைத்து, அதை சீனிவாசனின் நெற்றியில் கட்டினாள். ரத்தம் வழிவது குறைந்தது. அவரைத் தன் மடியில் படுக்க வைத்து, மகனே! நீ ஸ்ரீமன் நாராயணனாகவே என் கண்ணுக்குத் தெரிகிறாய். மேலும், கிருஷ்ணாவதாரம் எடுத்த போது, நான் யசோதை என்ற பெயரில் உன் தாயாக இருந்ததை அறிவாய் அல்லவா? என்றார். சீனிவாசனை நெற்றியிலுள்ள காயம் வேதனைப்படுத்தினாலும், அவள் சொன்ன கதையை சுவாரஸ்யமாகக் கேட்பது போல நடித்த சீனிவாசன், வலி குறைந்து விட்டது போல் பாவனை காட்டினார்.
மகனே! நான் அன்று கேட்ட வரத்தைக் கொடுக்கத்தானே இன்று வந்திருக்கிறாயா? என்றாள் அந்தப் பெண். அம்மா! என் பெயர் சீனிவாசன். நான் யாரென்று எனக்கே புரியவில்லை. தாங்களோ துவாபரயுகத்தில் நடந்த ஏதோ ஒன்றைப் பற்றி பேசுகிறீர்கள்! தாங்கள் சொல்வது ஏதும் எனக்கு புரியவில்லையே! ஒருவேளை தலையில் அடிபட்டதில் நான் தங்களை யார் என்று மறந்திருப் பேனோ, என்று இன்னும் நடிப்புக்காட்டிய மகாவிஷ்ணுவான சீனிவாசன், அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு அவள் என்ன சொல்லப்போகிறாள் எனக் கேட்கத் தயாரானார்.
ஸ்ரீனிவாசன் என்று சொன்னால் என்ன! கிருஷ்ணன் என்றால் தான் என்ன! எல்லாம் ஒன்று தான். நீ லட்சுமி உன் மார்பில் இருக்க இடம் கொடுத்தவன். அதனால் தானே ஸ்ரீனிவாசன் என்ற பெயரே உனக்கு ஏற்பட்டது. ஸ்ரீ என்பது லட்சுமியைத் தானே குறிக்கும், என்றதும், ஸ்ரீனிவாசனின் முகம் வாடியது. அம்மா! இப்போது எல்லாம் என் நினைவுக்கு வந்து விட்டது. ஆனால், நீங்கள் நினைப்பது போல், நான் ஸ்ரீனிவாசன் என்ற பெயருக்கு அருகதை இல்லாதவன் ஆகிவிட்டேன். என் மனைவி லட்சுமி என்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டாள், என்றார். என்ன! லட்சுமி உன்னைப் பிரிந்தாளா? அப்படியானால், நீ எனக்கு கொடுத்த வரம் என்னாவது? அவள் பதறினாள்.
அன்னையை பகவான் சீனிவாசன் எப்படி சமாளித்திருப்பார்? அடுத்த பதிவில் பார்க்கலாம்.