வகுல மாளிகா திருப்பதி ஏழுமலையானின் தாயாராக பிறப்பெடுக்க காரணம்
அன்னை வகுல மாளிகா லட்சுமி தாயார் பகவான் நாராயணரை பிரிந்து போன செய்தி கேட்டு இப்படி பதறிப் போவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஏனெனில் கடந்த யுகத்தில் அவளே ஆயர்குலத்தில் யசோதையாக அவதரித்து, கண்ணனை வளர்க்கும் பாக்கியத்தைப் பெற்றவள். அவனைப் பெற்ற தாய் தேவகிக்கு கூட அவனது பாலப் பருவத்தைக் கண்டு ரசிக்க கொடுத்து வைக்காமல் சிறையில் அடைபட்டுத் தவித்தாள். ஆனால், வளர்த்தவளுக்கு அத்தகைய கிருபையைச் செய்தார் நாராயணன். அவள் தான் இந்தப் பிறவியில் இந்தத் தாயாகப் பிறந்திருக்கிறாள்.
இப்பிறவியில் தாயார் தேவகியின் பெயர் வகுல மாளிகா தேவி. இவன கோகுலத்தில் யசோதையிடம் வளரும் போது, செய்யாத சேஷ்டைகள் இல்லை. தெருவில் போகும் சண்டையை வீட்டுக்குள் இழுத்து வந்து விடுவான். கோபியரிடம் வம்பு செய்வான். பல பெண்களைத் திருமணம் செய்து கொண்டான். ஆனால், பால பருவத்தைக் கண்டுகளிக்கும் வாய்ப்பு கிடைத்த யசோதைக்கு அந்த திருமணங்களில் ஒன்றைக் கூட பார்க்கின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருநாள், கண்ணனைப் பார்க்கின்ற வாய்ப்பு யசோதைக்கு கிடைத்தது. கண்ணா! சிறுவயதில் நீ என் வீட்டில் வளர்ந்தாய். அதன்பின் மதுராபுரி, துவாரகை, அஸ்தினாபுரம், இந்திரப்பிரஸ்தம் என சுற்றிக் கொண்டிருக்கிறாய். உன் பால பருவ லீலையைப் பார்த்த எனக்கு, பல கல்யாணங்கள் செய்தும் அதைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஒரு திருமணத்தையாவது காணும் பாக்கியத்தைத் தரமாட்டாயா? எனக்கேட்டாள்.
பகவான் கேட்காமல் என்ன வேண்டுமானாலும் தருவான். எதை எப்போது தர வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும், ஆனால், எதிர்பார்த்து சென்றால் அவ்வளவு எளிதில் எதுவும் கிடைப்பதில்லை. அதற்காக, சில யுகங்கள் வரை கூட காக்க வைத்து விடுகிறான். அந்த நிலை யசோதைக்கே வந்திருக்கிறது என்றால், சாதாரண பிறவிகளான நம் நிலையைக் கேட்கவா வேண்டும்? பெற்ற தாயான தேவகிக்கும், தந்தை வசுதேவருக்குமே தனது குழந்தைப் பருவ லீலைகளைக் காட்ட மறுத்த மாயாவி ஆயிற்றே அவன். இப்போது தன் திருமணத்தை தன் தாய்க்கு காட்டுவதற்கான நேரம் வந்திருக்கிறது. லட்சுமியை கோபப்பட வைத்து, அவளை பூலோகத்துக்கு அனுப்பிவிட்டு, அறியா பிள்ளை போல அவரும் பின்னால் வந்து விட்டார். ஆண்டவனிடம் நாம் வைக்கும் கோரிக்கைகள் வீண்போவதில்லை. பெரும் தாமதமாகுமே தவிர, நிச்சயம் கேட்டதைத் தருவான். நமது பொறுமையின் அளவு எவ்வளவு என்பதைச் சோதித்துப் பார்ப்பதில் அவனுக்கு அப்படி ஒரு ஆனந்தம்! பொறுமை பெருமை தரும் என்பது இதனால் தான்!
வகுல மாளிகா தேவி, சீனிவாசனை அழைத்து கொண்டு, அந்த மலையின் அதிபதியான வராஹ சுவாமியிடம் சென்றாள். அவரது ஆஸ்ரமத்தில் தான் வகுளாதேவி சேவை செய்து கொண்டிருந்தாள். வராஹ சுவாமி தன் அவதாரத்துக்குப் பிறகு, திருமலையில் தங்கி விட்டார். (திருப்பதியில் வெங்கடாசலபதி கோயில் புஷ்கரணி (தெப்பக்குளம்) கரையில் அவரது கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது).
சீனிவாசனைப் பார்த்ததும், வராஹசுவாமி தன்னிலை மறக்காமல், அவரும் தானும் ஒன்றே என்பதை அறிந்தார். இருப்பினும், அதை பூலோகத்தார் கண்களுக்கு காட்டாமல், ஏதும் அறியாதவர் போல், அவர் யார், என்ன விபரமென விசாரித்தார்.
சீனிவாசன் அவரிடம், ஐயனே! நான் இத்தலத்தில் வசிக்க வேண்டும் என வந்திருக்கிறேன். தாங்கள் இடம் கொடுத்தால் இங்கேயே கோயில் கொள்வேன், என்றார். அதற்கு வராஹசுவாமி, சீனிவாசா! உனக்கு என் ஆஸ்ரமத்தின் அருகிலுள்ள இடத்தையே தருகிறேன். ஆனால், நீ அதற்கு வாடகை தர வேண்டும், என்றார்.
சீனிவாசன் அவரிடம், சுவாமி! என் கதையைக் கேளுங்கள். என் மனைவி லட்சுமி என்னிடம் இருந்த வரை நான் செல்வந்தன். இப்போது அவள் என்னை விட்டுப் பிரிந்து விட்டாள். லட்சுமி என்னிடம் இல்லாததால், என்னிடம் அறவே பணமில்லை. என்னால் வாடகையோ, இடத்திற்கு விலையோ தர இயலாது. ஆனால், ஒரு சகாயம் மட்டும் என்னால் செய்ய இயலும், என்றார்.அது என்ன? என்று கேட்டார் வராஹசுவாமி.
சீனிவாசன் என்ன சகாயம் செய்வதாக கூறி இருப்பார்? அடுத்த பதிவில் பார்க்கலாம்