Sri Venkatesa Mahatmiyam - ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் - 9

ஸ்ரீனிவாசர் வராஹ ஸ்வாமிக்கு தந்த வாக்குறுதி

வகுல மாளவிகா தாயார் தங்கி இருந்த குடில் மிகவும் சிறியது. அவருடன் சீனிவாசன் அவதாரத்தில் வந்தவர் தங்க இடம் போதாது என்பதால் தங்குவதற்கு நல்ல இடம் வேண்டும் என்பதற்காக அருகில் இருந்த வராஹப் பெருமானின் ஆலயத்துக்குச் சென்று அவரை வேண்டிக் கொள்ளலாம் என்று கூறி அவரை வகுல மாளவிகா அழைத்துச் சென்றாள்.

வராஹப் பெருமானின் ஆலயத்துக்குச் சென்று அவரை வேண்டிக் கண்டதும், தன் பரப்பிரம்ம சொரூபமான விஷ்ணுவை அடையாளம் கண்டு கொண்ட வராகர் அவர் முன் தோன்றி அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். மனித அவதாரத்தில் இருந்த விஷ்ணுவும் தான் வந்தக் காரியத்தைக் கூறி விட்டு தனக்கு தங்க இடம் வேண்டும் என்று கூறியதும், வராகப் பெருமானோ தனக்கு தக்க காணிக்கை செலுத்தினால் அங்கு தங்கிக் கொள்ள தான் அனுமதிப்பதாகக் கூறினார்.

அது என்ன காணிக்கை? அது ஏன் தான் உருவாக காரணமான பரப்பீரம்மத்திடமே காணிக்கை கேட்கிறார்? பார்க்கலாம் வாங்க...

ஒவ்வொரு அவதாரத்துக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உண்டு. அதை அவர்கள் நிறைவேற்றிக் கொள்வார்கள். விஷ்ணுவோ ‘வராஹப் பெருமானே, என்னிடம் தற்போது லஷ்மி இல்லை என்பதினால் என்னிடம் பணம் இல்லை. ஆகவே எனக்கு இப்போது தங்க இடம் கொடுத்தால், நான் எப்போது இந்த இடத்தில் ஒரு ஆலயத்தில் குடி அமர உள்ளேனோ அந்த நேரம் வரும்போது யார் என்னை தரிசனம் செய்ய வருவார்களோ அவர்கள் முதலில் உம்மை வணங்கியப் பிறகே என்னை வந்து தரிசிக்கலாம் என்று கட்டளை இடுகிறேன். உம்மை வந்து தரிசிக்காமல் என்னை வந்து தரிசித்தால் அவர்களுக்கு என்னை தரிசித்த பலன் கிடைக்காது என்று உறுதி தருகிறேன். அதை ஏற்றுக் கொண்டு எனக்கு தங்க இடம் கொடுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ள வராஹப் பெருமான் அதை ஏற்றுக் கொண்டு அவரை அங்கேயே தங்கிக் கொள்ள அனுமதித்தார். அதனால்தான் இன்றும் திருப்பதிக்கு செல்பவர்கள் முதல் நெய்வித்தியத்தை வராஹருக்குப் படைத்த பின்னரே வெங்கடேசப் பெருமானுக்கு படைக்க வேண்டும் என்ற நியதி ஏற்பட்டது. அதுவே வராஹப் பெருமான் விஷ்ணுவிடம் இருந்து பெற்றுக் கொண்டக் காணிக்கை.

வராஹர் ஏன் அப்படிபட்ட காணிக்கை கேட்டார்?

விஷ்ணுவை அடையாளம் தெரிந்து கொண்டு விட்ட வராஹர் எப்படி அவருக்கு இடம் கொடுக்க மறுக்க முடியும்? வராஹரே விஷ்ணு எடுத்த அவதாரம்தானே என்ற கேள்வி எழும். நியாயமான கேள்விதான். இந்தக் கதையில் தற்போது விஷ்ணுவின் நிலை அவர் ஒரு மானிட உருவம் படைத்தவர். அந்த மானிட உருவத்துக்கு ஏற்றாற்போலத்தான் பூமியில் நிகழ்வுகளை நடத்திக் கொள்ள முடியும். நான்தானே விஷ்ணு என்று எண்ணிக் கொண்டு அவரால் எதையும் செய்ய இயலாது. இது நிர்ணயிக்கப்பட்ட நியதி. அதே நேரத்தில் முன்னரே நான் கூறி உள்ளது போல ஒரு கடவுளினால் ஒரே நேரத்தில் பல அவதாரங்களை எடுத்துக் கொண்டு இருக்க முடியும் என்பதும் நியதி.

வராஹராக உள்ள விஷ்ணுவின் அவதாரத்துக்கு என சில தனிப்பட்ட சக்திகள் அந்த அவதாரத்தில் உண்டு. அதை விஷ்ணுவினாலும் தடுக்க முடியாது. காரணம் அந்த அவதாரம் எடுக்கும்போதே அதற்கென சில நியமங்கள், நியதிகள், சக்திகள் போன்றவற்றுடன்தான் அந்த அவதாரத்தை எடுக்கிறார்கள். இப்போது மனித அவதாரத்தில் உள்ள விஷ்ணு பகவான் வராஹரின் முன்னால் சக்தி அற்றவராகவே இருப்பார். ஆகவே வராகார் வைக்கும் கோரிக்கைகளை விஷ்ணு பகவான் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். அதனால்தான் வராஹராகவே உள்ள விஷ்ணுவும், ஸ்ரீனிவாசராக உள்ள விஷ்ணுவும் ஒருவரே என்றாலும் கூட, ஸ்ரீனிவாச அவதாரத்தில் உள்ள விஷ்ணு அந்த அவதாரத்தில் வேறானவர். அது போலவேதான் அவர் ஆலயத்தின் அருகில் உள்ள சன்னதியில் உள்ள வராஹரும் வேறானவர்தான். அதனால்தான் வராஹர் அவதாரத்தில் உள்ள விஷ்ணுவிற்கு மரியாதை கிடைத்தப் பிறகே (நெய்வித்தியம் படைத்தலில்) ஸ்ரீனிவாசர் அவதாரத்தில் உள்ள விஷ்ணுவும் மரியாதை பெறுகிறார். இவை அனைத்துமே பரப்பிரும்மனின் நாடகத்தின் தவிர்க்க முடியாத காட்சிகள்.

பூர்வ ஜென்மத் தாயாரான வகுளா தேவியின் அரவணைப்பில் இருந்த அவதாரப் புருஷரான விஷ்ணுவிற்கு ஸ்ரீ வராஹா ஸ்வாமியின் ஆலயத்தில் தங்க இடம் கிடைத்ததும் அவருக்கு ஸ்ரீனிவாசன் என்ற பெயரை வகுளாதேவி சூட்டினாள். விஷ்ணுவின் அவதாரமான இந்த ஸ்ரீனிவாசரே முன் அவதாரத்தில் கிருஷ்ணராக இருந்தவர். யசோதைக்கு அவள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்வதாக முன் அவதாரத்தில் கிருஷ்ண அவதாரத்தில் இருந்தபோது கொடுத்திருந்த வாக்கைக் காப்பாற்ற வகுளாதேவிக்கு இப்போது மகனாக வந்துள்ளார்.

அவர்கள் இருவரும் வராஹப் பெருமான் கொடுத்திருந்த இடத்தில் சிறிய குடிலை அமைத்துக் கொண்டு அங்கு வாழத் துவங்கினார்கள்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!