மூலவர் மலை அடிவாரக்கோயில் : பிரகலாத வரதன், லட்சுமி நரசிம்மன்.
மலைக்கோயில் : அஹோபில நரசிம்மர்உற்சவர் : மலையின் மேலும் மலையின் கீழுமாக மொத்தம் 9 உற்சவ மூர்த்திகள்.
அம்மன்/தாயார்
மலை அடிவாரக்கோயில் : அமிர்தவல்லி, செஞ்சுலட்சுமி.
மலைக்கோயில் : லட்சுமி
தீர்த்தம் மலை அடிவாரக்கோயில் : இந்திர தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம், பாபநாச தீர்த்தம் தீர்த்தம், கஜதீர்த்தம், பார்க்கவ தீர்த்தம்.
மலைக்கோயில் : பாபநாசினி
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருச்சிங்கவேள் குன்றம்
ஊர் : அஹோபிலம்
மாவட்டம் : கர்நூல்
மாநிலம் : ஆந்திர பிரதேசம்
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார்
மென்ற பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் அவுணன் பொன்ற ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம் நின்ற பசுந்தீ மொன்டு சூறை நீள் விசும் பூடிரிய சென்று காண்டற் கரிய கோயில் சிங்க வேள் குன்றமே.
- திருமங்கையாழ்வார்
திருவிழா
நரசிம்மர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி,
தல சிறப்பு
மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட "உக்கிர ஸ்தம்பம்' (தூண்) உள்ளது.
பொது தகவல்
இங்கு மலை அடிவாரத்தில் ஒரு கோயிலும், மலை மேல் ஒரு கோயிலும் உள்ளன. அடிவாரத்திலிருந்து மலைமேல் உள்ள கோயிலுக்கு 10 கி.மீ. தூரம் உள்ளது. மலைமீதுள்ள நரசிம்ம தலங்களை தகுந்த பாதுகாப்புடன் சென்றால் தான் தரிசிக்க முடியும். மாலை நேரத்தில் மிருகங்களின் நடமாட்டம் இருக்கிறது. கரடுமுரடான பாதைகளுடன், செங்குத்தான மலைமீதும் ஏற வேண்டும். மாலை 6 மணிக்குள் மலைக்கோயில் தரிசனத்தை முடித்து இறங்கி விட வேண்டும்.
மலை அடிவாரக்கோயிலில் உள்ள மூலவர் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் குகை விமானம்.
பிரார்த்தனை
எதிரிகளால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து விட பிரார்த்தனை செய்யலாம்.
நேர்த்திக்கடன்
நரசிம்மருக்கு அபிஷேகம் செய்து துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
தலபெருமை
"அஹோ' என்றால் "சிங்கம்'. "பிலம்' என்றால் "குகை'. பிரகலாதனுக்கு காட்சி கொடுத்ததால் மூலவர் பிரகலாத வரதன் எனப்படுகிறார்.
மலை அடிவாரக்கோயிலில் நரசிம்மரை தரிசனம் கண்டவர்கள்
கருடன், அஹோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான அழகிய சிங்கர்.
மலைக்கோயிலில் நரசிம்மரை தரிசனம் கண்டவர்கள்
பிரகலாதன், கருடன்.
நவ நரசிம்ம க்ஷேத்ரம்
மலையின் மேலும் கீழுமாக மொத்தம் 9 நரசிம்மர் கோயில்கள் உள்ளன. எனவே இதனை "நவ நரசிம்ம க்ஷேத்ரம்' என்பர்.
மலையின் கீழ் உள்ள அஹோபிலத்தில்,
1. பார்கவ நரசிம்மர் (சூரியன்)
2. யோகானந்த நரசிம்மர் (சனி)
3. சக்ரவட நரசிம்மர் (கேது) ஆகிய கோயில்களும், மேல் உள்ள அஹோபிலத்தில்
4. அஹோபில நரசிம்மர் (குரு)
5. வராக (குரோதா) நரசிம்மர் (ராகு)
6. மாலோலா நரசிம்மர் (வெள்ளி)
7. ஜுவாலா நரசிம்மர் (செவ்வாய்)
8. பாவன நரசிம்மர் (புதன்)
9. காரஞ்ச நரசிம்மர் (திங்கள்) ஆகிய கோயில்கள் உள்ளன.
இந்த 9 கோயில்களையும் தரிசித்தால் நவக்கிரகங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கருடனின் வேண்டுகோளின்படி நரசிம்ம அவதாரம் எடுப்பதற்காக வைகுண்டம் விட்டு கிளம்பிய பெருமாள், இத்தலத்தில் வேடுவர் கோலத்தில் லட்சுமியை திருமணம் செய்ததாக ஐதீகம்.இங்குள்ள மலையின் மீது பாவநாசினி என்ற நீர்வீழ்ச்சி உள்ளது.
இங்கிருந்து மேலே சென்றால், வராஹ நரசிம்மரின் சன்னதியை தரிசிக்கலாம்.
அங்கிருந்து 2 கி.மீ. தூரம் சென்றால் மாலோலா நரசிம்மரை தரிசிக்கலாம்.
அடுத்து 3 கி.மீ. தூரம் சென்றால் நரசிம்மர் அவதாரம் எடுத்த தூணும், நரசிம்மர் தூணிலிருந்து வெளிப்பட்ட இடமும் உள்ளது.
மலையடிவாரக்கோயிலின் முன்பு 85 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன தூண் ஒன்று உள்ளது. இதை "ஜெயஸ்தம்பம்' அதாவது வெற்றித்தூண் என்கிறார்கள். இந்த தூணை பூமிக்கடியில் 30 அடி தோண்டி நிலை நிறுத்தி உள்ளார்கள் என்பது ஆச்சரியமான விஷயம். இந்த தூணின் முன்பு நாம் மனமுருகி வேண்டினால் அது நிறைவேறும் என்பது நம்பிக்கை. ராமபிரான் சீதையை தேடி வரும் போது இந்த தூணின் முன்பு வழிபாடு செய்ததாகவும், வழிபாடு செய்தவுடன் சீதை கிடைத்து விட்டதைப்போன்ற உணர்வு ராமனுக்கு ஏற்பட்டதாகவும் புராணங்கள் கூறுகிறது.அஹோபில மடங்களுக்கு தலைமைப்பீடம் இதுதான்.
தற்போது ஸ்ரீ நாராயண யதேந்திர மகாதேசிகன் சுவாமிகள் 45வது ஜீயராக உள்ளார்.ஆதிசங்கரர் இங்குள்ள நவ நரசிம்மர்களை வழிபாடு செய்ய வந்தபோது, அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாகவும், நரசிம்மரே வந்து ஆதிசங்கரரை காப்பாற்றியதாகவும் வரலாறு உள்ளது.
தல வரலாறு
இரணியகசிபுவின் மகன் பிரகலாதன். இவனுக்கு நாராயணனின் மீது அளவுகடந்த பக்தி. ஆனால், தந்தையோ, தானே கடவுள் என்று கூறி வந்தான். ஒருமுறை உன் நாராயணனைக் காட்டு என இரணியன் கூற, "அவர் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார், அகில உலகத்தையும் அவரே காத்து வருகிறார்' என நாராயணனின் புகழ் பாடினான். கோபம் கொண்ட இரணியன், தன் கதாயுதத்தால் ஒரு தூணை ஓங்கி அடித்தான். தூண் பிளவுபட்டு, நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை அழித்தார். இந்த அவதாரம் இத்தலத்தில் நிகழ்ந்தது. முன்பு பிரகலாதன் இங்கு வாழ்ந்த அரண்மனைப்பகுதி தற்போது காடாக மாறிவிட்டது. நரசிம்ம அவதார தரிசனத்தை காண்பதற்கு கருடாழ்வாருக்கு ஆசை ஏற்பட்டது. எனவே இந்த தரிசனம் வேண்டி இங்கு தவமிருந்தார். மகிழ்ந்த பெருமாள், மலை உச்சியில் நரசிம்ம அவதாரம் காட்டியருளினார். பக்தபிரகலாதனுக்காக தூணிலிருந்து வெளிப்பட்டது, இரணியனை வயிற்றைக் கிழித்தது, ஆக்ரோஷம் அடங்காமல் கர்ஜித்தது, பிரகலாதனின் வேண்டுகோளுக்கிணங்க சாந்த நரசிம்மனாக அமர்ந்தது போன்ற இந்த அவதாரத்தின் 9 திருக்கோலங்கள் இங்குள்ளன. கருடன் தவமிருந்ததால் இந்த மலைக்கு "கருடாச்சலம்' என்றும், "கருடாத்ரி' என்றும் பெயர். சேஷாத்ரியாக உயர்ந்திருப்பது திருவேங்கடமலை (திருப்பதி) என்றால் கருடாத்ரியாக உயர்ந்திருப்பது அஹோபிலமாகும்.
சிறப்பம்சம்
மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட "உக்கிர ஸ்தம்பம்' (தூண்) உள்ளது.
அமைவிடம்
தமிழ்நாட்டிலிருந்து செல்பவர்கள் திருப்பதியிலிருந்து பஸ்சில் ஆலகட்டா (200 கி.மீ.) சென்று, அங்கிருந்து அகோபிலம்(23 கி.மீ.) செல்லலாம். ரயிலில் செல்பவர்கள் சென்னை - மும்பை ரயிலில் கடப்பா ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து பஸ்சில் அகோபிலம் (70 கி.மீ.) செல்லலாம்.
அருகிலுள்ள ரயில் நிலையம் : நந்தியால், கர்நூல்
அருகிலுள்ள விமான நிலையம் : திருப்பதி
தங்கும் வசதி :
கர்நூல் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி, அங்கிருந்து கோயிலுக்கு செல்லலாம்.
திறக்கும் நேரம் :
மலை அடிவாரக்கோயில்
காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரை, மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மலைக்கோயில்
காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை, மதியம் 3 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி
அருள்மிகு பிரகலாத வரதன் (லட்சுமி நரசிம்மன்) திருக்கோயில், அஹோபிலம்- 518 545 கர்நூல் மாவட்டம் ஆந்திர மாநிலம்.