Thirukodithanam Arpuda Narayana Temple
மூலவர் : அற்புதநாராயணன் (அம்ருத நாராயணன்)
அம்மன்/தாயார் : கற்பகவல்லி நாச்சியார்
தீர்த்தம் : பூமி தீர்த்தம்
பழமை : 2000-3000 வருடங்களுக்கு முன்
ஊர் : திருக்கடித்தானம்
மாவட்டம் : கோட்டயம்
மாநிலம் : கேரளா
மங்களாசாஸனம் : நம்மாழ்வார்

கோயில் கொண்டான் திருக்கடித்தானத்தை கோயில் கொண்டான் அதனோடு என்னெஞ்சகம் கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ வைகுந்தம் கோயில் கொண்ட குடக்கூத்த அம்மானே.
- நம்மாழ்வார்

திருவிழா
திருக்கார்த்திகையில் 10 நாள் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒன்பதாம் நாள் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு "சங்கேதம்' என்று பெயர். இந்த தீபங்கள் மறுநாள் காலை வரை எரிந்து கொண்டிருக்கும். இதைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். இந்த தீபம் ஏற்றும் விழாவிற்கு புராண நிகழ்ச்சியை கூறுகின்றனர். முன்னொரு காலத்தில் சிவபெருமான் இப்பகுதியில் தீப்பிழம்பாக தோன்றியதாகவும், இந்த வெப்பத்தால் இப்பகுதி அழிந்து விடாமல் இருக்க பிரம்மனும் விஷ்ணுவும் சிவனிடம் வேண்டினர். சிவன் சிறிய தீபமாக மாறி அருள்புரிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி திருக்கார்த்திகை தினத்தில் நடந்தாக கூறப்படுகிறது. இவை தவிர கோகுலாஷ்டமி மற்றும் பெருமாளுக்குரிய விசேஷங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தல சிறப்பு
"கடி' என்ற சொல் கடிகை என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். பெருமாளின் 108 வைணவத்தலங்களில் கடி என்ற சொல்லைக்கொண்டு மூன்று தலங்கள் விளங்குகின்றன. அவைகளுள் திருக்கடிகை என்ற சோளிங்கபுரம், வடநாட்டில் உள்ள கண்டமென்னும் கடிநகர், கேரளாவில் திருக்கடித்தானம். அதாவது ஒரு கணப்பொழுதில் தூய்மையான மனத்துடன் இறைவனை நினைத்து இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால், எடுத்த காரியத்தில் வெற்றியும், மோட்சமும் கிட்டும் என்பது ஐதீகம். இத்தல பெருமாள் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சக்தி பெறுவதாகவும், கலியுக முடிவில் ஒளியாக மாறி விண்ணில் கலந்து விடும் என்றும் கூறுகிறார்கள்.

பொது தகவல்
கோயில் சுற்றுப்பிரகாரத்தில் சாஸ்தா, சுப்பிரமணியர், நாகர் விக்ரகங்கள் உள்ளன. இத்தலத்து பிரமாண்டமான கோட்டைசுவர்கள் பூதங்களால் கட்டப்பட்டது என கூறுவர். இக்கோயிலின் முன் ஒரு மனிதனின் உடல் ஒரு கல்லின் மேல் வைக்கப்பட்ட நிலையில் இருக்கும். அதற்கு ஒரு புராண கதை உள்ளது. ஒரு முறை இப்பகுதியை ஆண்ட ராஜா சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அவர் வந்த போது நடை சாத்தப்பட்டிருந்தது. ஆனால் கோயில் மெய்க்காப்பாளன் ராஜாவிடம் பணம் வாங்கி கொண்டு கோயில் நடையை திறந்து விட்டான். இதன் தண்டனையாகத் தான் அந்த மெய்க்காப்பாளனின் உடல் கோயில் வாசல் முன் வைக்கப்பட்டுள்ளது என்பர்.
பிரார்த்தனை
எடுத்த காரியத்தில் வெற்றியும், மோட்சமும் வேண்டி பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்
பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்கின்றனர்.

தலபெருமை
வட்ட வடிவமான ஒரே கர்ப்பகிரகத்தில் பெருமாள் கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்கள். எனவே இக்கோயிலில் இருவருக்கும் தனித்தனியாக இரண்டு கொடிமரம் உள்ளது. இது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். இதில் நரசிம்மரின் உருவம் பிற்காலத்தில் பிரதிஷ்டை செய்ததாக கூறுவர். கருவறையின் தென்பகுதியில் தெற்கு நோக்கி தெட்சிணாமூர்த்தியும், விநாயகரும் அருள்பாலிக்கிறார்கள். இவர்களது சன்னதிக்கு கதவுகள் கிடையாது. அங்கு அமைக்கப்பட்டுள்ள மரத்துவாரங்கள் வழியாகத்தான் இவர்களை தரிசிக்க முடியும். நரசிம்மருக்கு, அவரது உக்கிரத்தை குறைப்பதற்காக பால் பாயாசம் நைவேத்யம் செய்யப்படுகிறது. நரசிம்மருக்குரிய ஒவ்வொரு பூஜையின் போதும் "நாராயணீயம்' சொல்லப்படுகிறது. இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவருக்கு மேலே உள்ள விமானம் புண்ணியகோடி விமானம் எனப்படுகிறது. இந்த பெருமாளை ருக்மாங்கதன் மற்றும் தேவர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

தல வரலாறு
சூரிய வம்சத்தை சேர்ந்த ருக்மாங்கதன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். இவனது நந்தவனத்தில் அரிய மலர்கள் பூத்து குலுங்கின. இந்த மலர்களை தேவர்கள் பறித்து சென்று பெருமாளுக்கு அணிவித்தனர். தினமும் மலர்கள் காணாமல் போனதை அறிந்த காவலர்கள் மன்னனிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட மன்னன் மலர்களை பறிப்பவர்களை கைது செய்யும்படி உத்தரவிட்டான். மறுநாள் தேவர்கள் பூ பறிக்க வந்த போது காவலர்கள் தேவர்கள் என தெரியாமல் கைது செய்து மன்னன் முன் நிறுத்தினர். உண்மையை அறிந்த மன்னன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விடுவித்தான்.

இருந்தாலும் மனிதர்களால் கைது செய்யப்பட்ட தேவர்கள் தங்கள் சக்தியை இழந்து வானுலகம் செல்ல இயலாமல் போனது.இதற்கு என்ன வழி என தேவர்களிடம் மன்னன் கேட்க, "நீ ஆண்டுதோறும் இருக்கும் ஏகாதசி விரத பலனை எங்களுக்கு அளித்தால் நாங்கள் வானுலகம் செல்ல முடியும்,''என தேவர்கள் கூறினர். இதைக்கேட்ட மன்னன் மகிழ்ச்சியுடன் தேவர்களை அழைத்துக்கொண்டு, இத்தலத்து பெருமாளின் முன்னிலையில் தனது ஏகாதசி விரதபலனை தேவர்களுக்கு தானமாக அளித்தான். தேவர்களும் வானுலகம் சென்றனர். இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு கடிகை நேரத்தில் இத்தலத்தில் நடந்ததால் இத்தலத்திற்கு "திருக்கடித்தானம்'' என பெயர் வந்ததாக கூறுவர். இத்தலத்து பெருமாளை சகாதேவன் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது. இப்பகுதியில் பிரதிஷ்டை செய்ய விக்ரகம் கிடைக்காமல் மனம் வருந்திய சகாதேவன், அக்கினிப்பிரவேசம் செய்ய முயன்றான். அப்போது அந்த இடத்தில் பெருமாளின் சிலை தோன்றி சகாதேவனின் துயர் துடைத்ததாம். இதன் காரணமாக இத்தல பெருமாள் "அற்புத நாராயணன்'' என அழைக்கப்படுகிறார். இப்பகுதியில் சகாதேவன் கட்டிய கோயில் என்றால் தான் அனைவருக்கும் தெரிகிறது.

சிறப்பம்சம்
இத்தல பெருமாள் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சக்தி பெறுவதாகவும், கலியுக முடிவில் ஒளியாக மாறி விண்ணில் கலந்து விடும் என்றும் கூறுகிறார்கள்.

அமைவிடம்
கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து (21கி.மீ.) திருவல்லா செல்லும் வழியில் செங்கணாச்சேரியில் இறங்கி அங்கிருந்து 2 கி.மீ. ஆட்டோவில் செல்ல வேண்டும்.

அருகிலுள்ள ரயில் நிலையம் : செங்கணாச்சேரி

அருகிலுள்ள விமான நிலையம் : நெடும்பாசேரி.

தங்கும் வசதி :
கோட்டயத்தில் உள்ள ஹோட்டல்களில் தங்கி கோயிலுக்கு சென்று வரலாம்.

திறக்கும் நேரம் :
காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி :
அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில், திருக்கடித்தானம் - 686 105 கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம்.

போன் : +91- 481-244 8455