Thirupuliyur Sri Mayapiran Temple
மூலவர் : மாயப்பிரான்
அம்மன்/தாயார் : பொற்கொடி நாச்சியார்
தீர்த்தம் : பிரக்ஞாசரஸ் தீர்த்தம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : குட்டநாடு
ஊர் : திருப்புலியூர்
மாவட்டம் : ஆலப்புழா
மாநிலம் : கேரளா
மங்களாசாஸனம் : நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்

அன்றி மற்றோர் உபாயமென் இவளந் தண்துழாய் கமழ்தல்குன்ற மாமணி மாட மாளிகைக் கோலக் குழாங்கல் மல்கிதென்திசைத் திலதம் புரை குட்டநாட்டுத் திருப்புலியூர்நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே.
- நம்மாழ்வார்


திருவிழா
மார்கழி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கொடியேற்றி, பத்தாம் நாள் ஆறாட்டு நடைபெறுகிறது. தை மாதம் முதல் தேதியில் காவடியாட்டம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தல சிறப்பு
பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. கேரள மாநிலத்தில் பாண்டவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ததாக கூறப்படும் பெருமாள் கோயில்களில் இத்தலம் பீமன் பிரதிஷ்டை செய்தது. இங்குள்ள மிகப்பெரிய "கதாயுதம்' பீமன் உபயோகித்ததாக கூறுவர். பீமனைப்போன்றே கோயிலும் அகன்று விரிந்து பரந்த கட்டுமான அமைப்பை கொண்டுள்ளது.

பொது தகவல்
இங்குள்ள கொடிமரம் மற்ற கோயிலை விட மிக அழகான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரார்த்தனை
தீராத நோய்களெல்லாம் தீர, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்
கோயிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதுடன், பெருமாள் மற்றும் தாயாருக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.

தலபெருமை
நம்மாழ்வார் காலத்தில் இப்பகுதியில் ஒரு பெரிய நகரம் இருந்ததாக அவரது பாடலில் அறிய முடிகிறது.பண்டைத்தமிழகத்தில் 12 உட்பிரிவுகள் இருந்ததாக தொல்காப்பியம் கூறுகிறது. அதில் ஒரு பிரிவு குட்டநாடு. இத்தலத்தை இப்பகுதி மக்கள் "குட்டநாடு திருப்புலியூர்' என்று அழைக்கின்றனர்.இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருளுகிறார். இவரது சன்னதிக்கு மேல் உள்ள விமானம் புருஷஸுக்த விமானம் எனப்படுகிறது. இத்தல பெருமாளை சப்த ரிஷிகள் வழிபாடு செய்துள்ளனர்.

தல வரலாறு
ஒரு முறை சிபிச்சக்கரவர்த்தியின் மகனான விருஷாதர்பி என்பவன் இப்பகுதியை அரசாண்டு வந்தான். அப்போது அவனுக்கு ஏதோ ஒரு சாபத்தினால் கடுமையான நோய் உண்டானது. அத்துடன் அவனது நாட்டில் கொடிய வறுமையும் ஏற்பட்டது. அச்சமயம் இந்த நாட்டிற்கு சப்தரிஷிகள் வருகை புரிந்தனர். அவர்களிடம் மன்னன், தனக்கும் தன் நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள பெரிய ஆபத்தை போக்கினால் தான், தன்னால் தானம் ஏதும் கொடுக்க முடியும் என கூறினான்.தானம் என்ற சொல்லைக்கேட்ட ரிஷிகள் கோபத்துடன்,""மன்னா! உன் போன்ற மன்னர்களிடம் தானம் பெறுவது மிகப்பெரிய பாவமாகும்,''என மறுத்துவிட்டனர்.ஆனாலும் மன்னன் ரிஷிகளுக்கு கொடுப்பதற்காக மந்திரிகள் மூலம் தங்கத்தையும், பழங்களையும் அனுப்பி வைத்தான். இதையும் முனிவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். ரிஷிகளின் இந்த செயலால் மன்னன் கோபமடைந்தான். மாபெரும் யாகம் ஒன்றை நடத்தி அதில் தோன்றிய தேவதையை, சப்தரிஷிகளை கொல்வதற்காக அனுப்பி வைத்தான்.இதனையறிந்த ரிஷிகள் தங்களை காக்க மகாவிஷ்ணுவை வேண்டினர். இவர்களது வேண்டுதலை ஏற்ற விஷ்ணு, இந்திரனை புலியாக மாறும்படி செய்தார். புலி தேவதையை கொன்றது. இதனால் இத்தலம் "திருப்புலியூர்' ஆனது என்பர். ரிஷிகள் அனைவரும் பெருமாள் ஒருவரே பரம்பொருள். மற்ற அனைத்தும் மாயை என நினைத்து வழிபாடு செய்தனர். இதனால் பெருமாள் இவர்களுக்கு மாயப்பிரானாக காட்சிதந்தார்.

அமைவிடம்
செங்கணூரிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் திருப்புலியூர் உள்ளது. கேரளாவின் அனைத்து மாவட்டத்திலிருந்தும் செங்கணூருக்கு பஸ் வசதி உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் : செங்கணூர்

அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம்

தங்கும் வசதி
ஆழப்புழாவில் உள்ள ஹோட்டலில் தங்கிக் கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.

திறக்கும் நேரம்
காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி
அருள்மிகு மாயப்பிரான் திருக்கோயில், திருப்புலியூர் (குட்டநாடு)- 689 510 ஆழப்புழா மாவட்டம் கேரளா மாநிலம்.