Sri Vanamamalai Perumal Temple
மூலவர் : தெய்வநாதன், வானமாமலை (தோத்தாத்ரிநாதர்).
தாயார் : வரமங்கை தாயார்.
தல விருட்சம் : மாமரம்,
தீர்த்தம் : சேற்றுத்தாமரை
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : வானமாமலை, திருவரமங்கை
ஊர் : நாங்குனேரி
மாவட்டம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு
மங்களாசாசனம் : நம்மாழ்வார்

ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே கண்ணா என்றும் என்னையாளுடை வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே தேனமாம் பொழில் தண் சீரிவர மங்கலத்தவர் கைதொழவுறை வான மாமலையே அடியேன் தொழ வந்தருளே.
- நம்மாழ்வார்


திருவிழா
பங்குனி, சித்திரை மாதங்களில் நடக்கும் பிரம்மோற்ஸவம் இத்தலத்தில் மிக முக்கிய திருவிழாக்கள் ஆகும்.

தல சிறப்பு
ஒவ்வொரு தலத்திலும் ஒரு சுயம்பு மூர்த்தி தான் இருக்கும். ஆனால் இத்தலத்தில் மூலஸ்தானத்திலுள்ள தோத்தாத்ரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன், பிருகுரிஷி, மார்க்கண்டேயர், ஊர்வசி, திலோத்தமை ஆகிய ஒன்பது பேரும், அர்த்தமண்டபத்திலுள்ள கருடாழ்வாரும், விஷ்வக்சேனரும் ஆக11 பேர் சுயம்பு மூர்த்திகளாக உள்ளனர். இத்தகைய அமைப்பு இங்கு மட்டுமே உள்ளது. பெருமாள் சுயம்புமூர்த்தியாக அமைந்த எட்டு தலங்களில் வடஇந்தியாவில் உள்ள பத்ரிநாத்தில் ஆறுமாத காலம் கடும் பனியால் கோயில் மூடியிருக்கும். இங்கு ஆண்டு முழுவதும் பெருமாளைத் தரிசிக்கலாம். ஆண்டு முழுவதும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் நடக்கும்.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 90 வது திவ்ய தேசம்.

பொது தகவல்
மூலவரின் மேல் உள்ள விமானம் நந்தவர்த்தன விமானம் ஆகும். பிரம்மா, இந்திரன், சிந்து நாட்டரசன், கருடன், ஊர்வசி, திலோத்தமை ஆகியோர் இத்தல பெருமாளை தரிசனம் கண்டுள்ளனர்.

தோதாத்ரி
Sri Vanamamalai Perumal Temple
ராஜகோபுரம் உயர்ந்தோங்கி கம்பீரமாக உள்ளது. கோயிலின் உட்புறம் பந்தல் மண்டபமும், அதனை அடுத்து பெரிய மண்டபமும் உள்ளன. இங்கு தங்கரதம், தங்கசப்பரம் ஆகியன இருப்பதைக் காணலாம். பங்குனி உத்திரத்தன்று தங்கத்தேர் இழுக்கப்படும். செவ்வந்தி நாயக்கர்கள் செய்துள்ள தெய்வத் திருப்பணிகளுள் ஒன்று, இங்குள்ள செவ்வந்தி மண்டபம். திருவிழாக் காலங்களில் இந்த மண்டபத்தில் உற்சவமூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வீரப்பநாயக்கர் மண்டபம், கண்டுகளிக்க வேண்டிய ஒன்று. அற்புதமான சிற்பங்கள் கலைப் பொக்கிஷங்களாகத் திகழ்கின்றன. இந்தக் கலைக்கூடத்திற்கு அப்பால் லட்சுமிவராகர், லட்சுமி நாராயணர், வேணுகோபாலன், மச்ச முதல் கல்கி வரையிலான தசாவதார மூர்த்திகளுக்குத் தனிச் சன்னதிகள் உள்ளன. கொடிமரம், பின்பு குலசேகரன் மண்டபம். இந்த மண்டபத்தில் பதினோராழ்வார்களைத் தரிசிக்கலாம். நம்மாழ்வார் சடாரியாக உற்சவரின் முன் இருக்கிறார். குலசேகரன் மண்டபத்தில் வடக்கு நாச்சியார், தெற்கு நாச்சியார், மணவாள மாமுனிகள், உடையவரான இராமானுஜர் ஆகியவர்களின் சன்னதிகள் உள்ளன. மேலும் இராமர், கண்ணன், சக்கரத்தாழ்வார் சன்னதிகளும் தனித்தனியே உள்ளன. கர்ப்பகிருகத்தில் தோதாத்ரிநாதன் பிராட்டியர் இருவருடன் பட்டாபிஷேக கோலத்தில் வீற்றிருக்கிறார். ஆதிசேஷன் தங்கக்குடை பிடிக்கிறார். இத்தல எம்பெருமான் பிருகு மகரிஷி, மார்க்கண்டேயர், சந்திரசூரியர், விஷ்வக்ஸேனர், ரம்பை, திலோத்தமை என அனைவரும் ஒருசேர ஏக ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அரிய நிலையையும் கருவறையில் கண்டு வியக்கலாம். கருவறையைச் சுற்றியுள்ள பிராகாரத்தை வலம்வந்தால் அங்கே 32 ரிஷி, முனிவர்கள் தும்பிக்கை ஆழ்வார் ஆகியோர் காட்சி தருகிறார்கள்.

பிரார்த்தனை
ஆண்டு முழுவதும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் நடக்கும். இந்த எண்ணெயை ஒரு கிணற்றில் ஊற்றி வைப்பார்கள். தோல்வியாதி உள்ளவர்கள், இந்த எண்ணையை உடலில் தேய்த்து, சில சொட்டுக்கள் சாப்பிட்டால் குணமாகி விடும்.

நேர்த்திக்கடன்
பெருமாளிடம் பிரார்த்தனை செய்பவர்கள், வேண்டுதல் நிறைவேறியதும் கோயில் அலுவலகத்திலேயே நல்லெண்ணெய் வாங்கி அபிஷேகத்திற்கு கொடுத்து விடுவார்கள்.

தலபெருமை
இத்தலம் நான்கு ஏரிகளால் சூழப்பட்டதால் நாங்குனேரி ஆனது. பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ராஜதர்பார் கோலத்தில் அரசராக அமைந்திருப்பதும் இத்தலத்தில் மட்டுமே. பெருமாள் ஒரு கையை பாதத்தை நோக்கியபடி வைத்து, எவன் தன் பாதத்தில் சரணடைகிறானோ, அவனுக்கு தன் மடியில் இடம் உண்டு என்பது போல் ஒரு கையை மடியில் வைத்திருக்கிறார். பெருமாளின் கையில் பிரத்யேக சக்கரம் உள்ளது. இதை பார்ப்பவர்களுக்கு எதிரிகளே இருக்கமாட்டார்கள்.

திருப்பதியில் இருந்து வந்த தாயார்
இங்குள்ள தாயாரின் உற்சவர் சிலை முதலில் திருப்பதியில் தான் இருந்ததாம். அங்குள்ளவர்கள் திருவேங்கடப் பெருமாளுக்கு ஸ்ரீவரமங்காதேவியை கல்யாணம் செய்ய இருந்தனர். அப்போது ''பெரிய ஜீயரின் கனவில் பெருமாள் தோன்றி," இவள் நாங்குநேரியிலுள்ள வானமாமலைப் பெருமாளுக்காக இருப்பவள்,'' என கூறியதால் இத்தலத்திற்கு வந்து விட்டாள்.மணவாள மாமுனிகளால் ஸ்தாபிக்கப்பட்ட அஷ்டதிக் கஜங்களில் ஒருவரான வானமாமலை ஜீயர் அவர்களின் தலைமையிடம் இங்கு உள்ளது. இங்குள்ள சடாரியில் சடகோபனின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

தல வரலாறு
மது, கைடபன் என்ற இரு அரக்கர்களை மகாவிஷ்ணு அழித்த போது, அரக்கர்களின் துர்நாற்றம் பூமியெங்கும் வீசியது. பூமாதேவி தன் இயல்பான தூய்மையை இழந்ததால் மிகவும் வருந்தினாள். இத்தலத்தில் தவமிருந்து, விஷ்ணுவின் அருள் பெற்றாள். "மாசு கழுவப்பெற்றாய்'' என்று சொல்லி, வைகுண்டத்தில் வீற்றிருப்பது போலவே இங்கும் வைகுண்ட விமானத்தில் ஆனந்தமயமாக பூமாதேவிக்கு காட்சி கொடுத்ததாக தல வரலாறு கூறுகிறது.

சிறப்பம்சம்
ஒவ்வொரு தலத்திலும் ஒரு சுயம்பு மூர்த்தி தான் இருக்கும். ஆனால் இத்தலத்தில் மூலஸ்தானத்திலுள்ள தோத்தாத்ரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன், பிருகுரிஷி, மார்க்கண்டேயர், ஊர்வசி, திலோத்தமை ஆகிய ஒன்பது பேரும், அர்த்தமண்டபத்திலுள்ள கருடாழ்வாரும், விஷ்வக்சேனரும் ஆக11 பேர் சுயம்பு மூர்த்திகளாக உள்ளனர். இத்தகைய அமைப்பு இங்கு மட்டுமே உள்ளது. பெருமாள் சுயம்புமூர்த்தியாக அமைந்த எட்டு தலங்களில் வடஇந்தியாவில் உள்ள பத்ரிநாத்தில் ஆறுமாத காலம் கடும் பனியால் கோயில் மூடியிருக்கும். இங்கு ஆண்டு முழுவதும் பெருமாளைத் தரிசிக்கலாம்.

அமைவிடம்
திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் அனைத்து பஸ்களும் நாங்குநேரி வழியாகத்தான் செல்லும். ஊரின் நடுவில் கோயில் அமைந்துள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் : வள்ளியூர்

அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை

தங்கும் வசதி : திருநெல்வேலி

திறக்கும் நேரம் :
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி :
அருள்மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில் நாங்குனேரி - 627108 திருநெல்வேலி மாவட்டம்.
Sri Vanamamalai Perumal Temple