பேச்சுக் குறைபாடு உடையவர்கள் நல்ல குரல் வளம் வேண்டுவோர் வேண்டியபடி அருளச் செய்யும்
"ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராய பெருமாள் திருக்கோயில்'' !!
வேலூர் திருவண்ணாமலை சாலையில் வேலூரிலிருந்து 26 kM தொலைவில் உள்ளது!
வேலூரில் இருந்து அரிதான நேரடி பேருந்து வசதியும் (TIME BUS) கண்ணமங்கலத்தில் இருந்து AUTO வசதியும் உள்ளது.
மற்றபடி கோவிலுக்கு சென்றுவர நல்ல தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது ! இந்த பேசாதவரையும் பேச வைக்கும் பிருந்தாவனத்திற்கு...
சென்னை, மதுரை, விருதுநகர் நெல்லை, திருப்பூர், குமரி மாவட்டங்களிலிருந்தும் .
பெங்களூர் மைசூர் மாண்டியா போன்ற பக்கத்து கர்நாடக மாநிலத்திலிருந்தும்..
சித்தூர் திருப்பதி முதலிய ஆந்திரா மாவட்டத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள் என்பதை அவர்கள் அமைத்துக் கொடுத்த படிக்கட்டுகள் மற்றும் ஆலய திருப்பணிகளில் இருந்து அறிய முடிகிறது !
அருள்மிகு உத்தமராயப் பெருமாள்
திருக்கோயில்
மூலவர் : உத்தமராயப் பெருமாள்
உற்சவர் : ஸ்ரீதேவி, பூதேவியருடன் உத்தமராயப் பெருமாள்
தீர்த்தம் : பெருமாள்குளம்
ஆகமம்/பூஜை : வைகானஸம்
பழமை : 500 வருடங்களுக்குள்
ஊர் : பெரிய அய்யம்பாளையம்
மாவட்டம் : திருவண்ணாமலை
மாநிலம் : தமிழ்நாடு
தல வரலாறு :
இங்கிருந்த மலையில் ஆடு மேய்த்த சிறுவன் முன், ஒரு பெரியவர் வந்து நின்றார். அவரை அவன் அதற்கு முன் பார்த்ததில்லை. அவனால் பிறவியில் இருந்தே பேச முடியாது. அவனது தலை மீது கை வைத்த பெரியவர், "ஊருக்குள் போய் நான் வந்திருக்கிறேன் எனச் சொல்!'' என்றார்.
மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல சிறுவன், ஊரில் இருந்தவர்களை அழைத்து "நம்ம ஊரு மலைக்கு ஒரு பெரியவர் வந்திருக்காரு' என்றான்."
அதுவரை பேசாத சிறுவன் பேசியதைக் கேட்டவர்களுக்கு ஆச்சரியம் அடைந்தனர் ! அவனுக்கு பேசும் சக்தி வந்தது குறித்து கேட்டபோது மலைக்கு வந்த பெரியவர் தன் தலையில் கை வைத்து ஆசிர்வதித்ததைக் கூறினான். வியந்த மக்கள், குன்றுக்கு வந்தனர்.!
அங்கு சங்கு, சக்கரத்துடன் பெருமாள் சிலை இருந்தது மகிழ்ந்த மக்கள் அவருக்கு கோயில் எழுப்பினர். ஊமைச் சிறுவனுக்கு பேசும் தன்மையைக் கொடுத்ததால் இவர் "ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயப் பெருமாள்' என்று பெயர் பெற்றார். விஜயநகர மன்னர்கள் இக்கோயிலில் திருப்பணி செய்துள்ளனர்.!
திருவிழா:
நவராத்திரி, விஷ்ணு தீபம், வைகுண்ட ஏகாதசி, தை மாதம் மகரத் திருவிழா
தல சிறப்பு:
சிறுவனுக்கு காட்சி கொடுத்தவர் என்பதால் உத்தமராயப்பெருமாள் சிறுவன் போலவே பால்ய மூர்த்தியாக காட்சியளிப்பது சிறப்பான அமைப்பு
பொது தகவல்:
பாலகன் வடிவில் பெருமாள் சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்க 300 படிகளுடன் கூடிய குன்று மீது அமைந்த கோயில் தை, புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிகளவில் மாவிளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள். !
பிரார்த்தனை :
மனதில் இருக்கும் தீய சிந்தனைகள் விலகவும். திருமணமாகாதோர் உத்தமமான வரன் அமையவும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதோர் குழந்தை வரம் வேண்டியும் ஊமைக் குழந்தைகளுக்கு பேச்சு வரவும் இங்கு வழிபடுகிறார்கள்.
நாகதோஷம் :
நாக தோஷம் உள்ளவர்கள் தோஷ நிவர்த்திக்காக இங்கு மஞ்சள் காப்பிட்டு வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
மாவிளக்கு, தேன் அபிஷேகம் செய்தும், துலாபாரம் செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.!
தலபெருமை:
இத்தல பெருமாள் சிறுவனுக்கு காட்சி கொடுத்தவர் என்பதால்.. உத்தமராயப்பெருமாள் சிறுவன் போலவே பால்ய மூர்த்தியாக காட்சியளிப்பது சிறப்பான அமைப்பு.!
இவர் சங்கு, சக்கரம் ஏந்தி, ஆவுடையார் மீது நின்றிருக்கிறார். சுவாமி தனியே வந்து தங்கியவர் என்பதால், தாயாருக்கு சன்னதி கிடையாது. சனிக்கிழமை தோறும் சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும்.!
பேச்சுக்காக பிரார்த்தனை :
சில குழந்தைகள் பிறந்ததில் இருந்தே பேசும் தன்மையற்ற ஊமைகளாக இருப்பர்..! இன்னும் சிலர் திக்குவாய் பிரச்னையுடனோ, சரியான உச்சரிப்பு இல்லாதவர்களாகவோ இருப்பர்...!இவர்கள் நன்கு பேசவும், ஊமைக் குழந்தைகளுக்கு பேச்சு வரவும் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கின்றனர்.!
பேசாத குழந்தைகளுக்காக சுவாமிக்கு தேன் அபிஷேகம் செய்கின்றனர். அபிஷேக தேனை சுவாமி முன்பாக குழந்தையின் நாக்கில் துளசியால் தொட்டு வைக்கின்றனர். பின், அந்த தேனையே பிரசாதமாகத் தருகின்றனர். தினமும் தேனைப் பருகி, சுவாமியை வழிபட விரைவில் பேசும் தன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை பேச்சாளர்கள், பாடகர்கள் தாங்கள் குரல் வளத்துடன் இருக்கவும் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், துலாபாரம் செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
சிறப்பம்சம்:
உத்தமராயப்பெருமாள் எதிரே கருடாழ்வார் மட்டும் இருக்கிறார். மற்ற பரிவார மூர்த்திகள் கிடையாது. இங்குள்ள துவாரபாலகர்கள் சிலை விசேஷமானது. இவர்களது சிலை அரிதாக கிடைக்கும் சிவப்பு நிறமான ஒரு வகை கற்களால் செய்யப்பட்டதாகும். சுவாமி சன்னதிக்கு இருபுறமும் உள்ள பாறையில் புடைப்புச் சிற்பமாக நாகர் இருக்கிறார். சன்னதிக்கு வலப்புறம் தியான குகை உள்ளது. இதன் முகப்பின் இருபுறமும் பெருமாளின் வாகனமான கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளனர். பெருமாள், சிறுவனுக்கு இந்த குகையில்தான் காட்சி தந்ததாக தல வரலாறு சொல்கிறது.!
மகரத்திருவிழா:
சிறுவனுக்கு சுவாமி காட்சி தந்த விழா, தை மாதம் காணும் பொங்கலுக்கு மறுநாள் நடக்கும். இதை "மகரத்திருவிழா' (மகரம் என்பது தை மாதத்தைக் குறிக்கும்) அன்று சுவாமிக்கு விசேஷ அபிஷேகம். சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவார். மாலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சுவாமி புறப்பாடும் உண்டு. தவிர, விஜயதசமி, விஷ்ணு கார்த்திகை (திருக்கார்த்திகைக்கு மறுநாள்) ஆகிய நாட்களிலும் சுவாமி வீதியுலா செல்வார்.!
முன் மண்டபத்தில் வைணவ ஆச்சாரியார் சன்னதி உள்ளது.
ஸ்ரீமன் நாராயணன் திருவடிகளே சரணம் !!