வாரணம் ஆயிரம் விளக்கவுரை | Vaaranam Aayiram

Vaaranam Aayiram
ஶ்ரீ ஆண்டாள் அருளிய வாரணம் ஆயிரம் - விளக்கவுரை
வாரணம் ஆயிரம் (Vaaranam Aayiram)


"சூடிக் கொடுத்த சுடர்க்கொடி"யாம் ஆண்டாள், கண்ணன் மேல் ஆராக் காதல் கொண்டு, அவனை மணம் செய்து கொண்டதாகத் தான் கண்ட கனவை விவரித்துத் தன் தோழிக்குக் கூறும் தூய தமிழ்மாலை "வாரணம் ஆயிரம்".

வாரணம் ஆயிரம் - பாசுரம் 1

வாரண மாயிரம் சூழ வலம் செய்து,
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.


பாடல் பொருள்:
தோழீ, கல்யாண குணங்கள் நிறைந்தவனான நாராயணமூர்த்தி, ஆயிரம் யானைகள் சூழ்ந்துவர எழுந்தருளி வலம் வருகிறான் என்று அவனை வரவேற்று எதிரே பொன்னாலான பூரணக் குடம் வைத்து, நகரம் முழுவதும் தோரண கம்பங்கள் நாட்டி அலங்கரிக்கும் இந்நிலையினை நான் கனவில் கண்டு களித்தேன்.

பாடல் விளக்கம்:
கோதையைத் திருமணம் செய்துகொள்ள கோவிந்தன் மணக்கோலம் கொண்டு வருகிறான். அப்படி வரும்போது அவனைச் சுற்றி ஓராயிரம் யானைகள் உடன் வருகின்றன. அவனை அந்த ஊரே பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்கிறது. இவ்வாறு கண்ணன் மணப்பந்தலுக்கு வரும் அழகையும் கம்பீரத்தையும் தோழியிடம் சொல்லிப் பூரிக்கிறாள் கோதை.

வாரணம் என்றால் யானை என்று பொருள். இச்சொல், யானை என்னும் ஒரு பொருளைக் குறிக்க சேந்தன் திவாகரம் என்னும் நிகண்டு நூலில் கூறப்பட்டுள்ள முப்பத்தெட்டுப் பெயர்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. யானையின் முப்பத்தெட்டுப் பெயர்களாவன : தும்பி, கடிவை, புகர்முகம், தோல், கரி, உம்பல், வயமா, பகடு, நால்வாய், கரிணி, குஞ்சரம், கயமே, களபம், மருண்மா, தந்தி, மாதங்கம், ஒருத்தல், களிறு, சிந்துரம் , கறையடி, எறும்பி, வழுவை, வாரணம், வேழம், வல்விலங்கு, நாகம், மதகயம், அத்தி, இபம், கும்பி, போதகம், உவாவே, தூங்கல், மாதிரம், மறமலி கைம்மா, ஆம்பல், கோட்டுமா, புழைக்கை.

கம்பநாட்டாழ்வார் தாம் இயற்றிய இராமகாதையில், இராகவன் சீதையை மணம்புணரத் திருமண மண்டபத்தைச் சென்றடையும்போது, யானைக் கூட்டம் புடைசூழத் தேரின் மேல் வந்து சேர்ந்தான் என்று கூறுவதையும் இங்கு ஒப்பு நோக்கி மகிழலாம். இங்கு சிற்றரசர்கள் வெள்ளமெனப் பெருந்திரளாகக் கூடியிருந்ததையே யானைக் கூட்டம் என்று குறிப்பிடுகிறார்.

வாரணம் ஆயிரம் - பாசுரம் 2

நாளை வதுவை மணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்.

பாடல் பொருள்:
தோழீ, "நாளைய தினம் கண்ணனுக்கும் கோதைக்கும திருமணவிழா" என்று நாள் நிச்சயித்து பின்னர் விவாகத்தின் முதல்நாள் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்வதற்காக, பாளையோடு கூடிய கமுகினால் அலங்காரம் செய்யப்பட்ட மணப்பந்தலின் கீழே, நரசிம்மன், மாதவன், கோவிந்தன் என்னும் திருநாமங்கள் பூண்ட கண்ணன் என்னும் இளங்காளை போல்வான் பிரவேசிக்க நான் கனாக் கண்டேன்.

பாடல் விளக்கம்:
'வாரணம் ஆயிரம் சூழ' நகரில் வலம் வந்த மதுசூதனன் திருமணப் பந்தலின்கீழ் பிரவேசிக்கும் காட்சியை விளக்குகிறது இந்தப் பாடல்.

'வதுவை' = திருமணம். "குயில்இனம் வதுவை செய்ய, கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞை" என்னும் கம்பர் கவிதையும் இங்கு நோக்கத்தக்கது. காட்டில் ஆண்குயிலும் பெண்குயிலும் இன்புற்று இருக்கின்றன. இந்த அழகான காட்சிக்கு மேலும் அழகேற்ற அருகே மரத்தில் மயில்கள் நின்று ஆடுகின்றன. இவ்வருணனையின் மூலம், 'வதுவை' என்னும் சொல்லுக்கு 'களித்தல்' என்னும் புதிய அர்த்தத்தையும் கொண்டு வருகிறார் கம்பர்.

"பாளை கமுகு பரிசுடைப் பந்தல்" என்னும் இடத்தில் திருமணப் பந்தலின் அழகை விவரிக்கிறாள் கோதை. மணப்பந்தலானது பாக்குமரத்தின் பாளைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கமுகு என்றால் பாக்குமரம். பாளைகள் என்பவை பாக்கு மட்டைகள். இப்பாளைகள் விரியும்போது வாசனை மிகுதியாக இருக்கும். இதையே தொண்டரடிப்பொடியாழ்வாரும் திருப்பள்ளியெழுச்சியில் "பாக்குமரங்களின் மடல்களைக் காலைநேரக் காற்று கீறுகிறது. அதனால் அவற்றின் பாளைகளின் மணம் எங்கும் கமழ்கிறது" என்று பாடுவார்.

வாரணம் ஆயிரம் - பாசுரம் 3

இந்திர னுள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்,
வந்திருந் தென்னை மகட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடி யுடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.

பாடல் பொருள்:
தோழீ, கண்ணனுக்கும் எனக்கும் நடக்கும் திருமணத்தைக் காண, இந்திரன் முதலிய தேவர்கள் மாப்பிள்ளை வீட்டாராக இந்தப் பூவுலகத்துக்கு வந்திருந்து, கண்ணனுக்கு மணமகளாக என்னைத் தரும் படி கேட்டு நிச்சயித்தனர். அதன் பின், கண்ணனின் உடன் பிறந்தாளான துர்க்கை எனக்குத் தூயதான புதிய ஆடையை உடுத்தி வாசனையுள்ள மலர்மாலையும் அணிவித்தாள், இவ்வாறு கனாக் கண்டேன்.

பாடல் விளக்கம்:

இந்தப் பாடலில், மகள் பேசுதல், மந்திரித்தல், மந்திரக் கோடி உடுப்பித்தல் ஆகிய மூன்று விதமான மணச்சடங்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவையாவும், திருமணத்திற்கு முன்னர் நடைபெறக்கூடிய நிகழ்வுகள்.

மகள் பேசுதல் என்னும் சடங்கு, 'உங்கள் பெண்ணை எங்கள் பிள்ளைக்கு வாழ்க்கைத்துணையாக்கித் தரவேண்டும்' என்று மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் வேண்டிக் கேட்டுக்கொள்வதைக் குறிக்கிறது. இங்கு மாப்பிள்ளை வீட்டாராக கண்ணபிரானின் திருமணத்தை நடத்தி வைக்கும் பொருட்டு, வானுலகை விட்டுத் தரைமீது தாள்பதித்து, இந்திரன் முதலிய தேவர்கள் பெருமகிழ்வுடன் வருகிறார்கள்.

அடுத்து நிகழ்வது மந்திரித்தல். 'மந்திரித்தல்' என்னும் சொல், 'மந்திரம்' என்னும் வடமொழி வார்த்தையிலிருந்து வந்தது. 'மந்திரம்' என்னும் வடசொல்லுக்கு 'ஆலோசனை' என்னும் பொருள் உண்டு. மகள் பேசிய பின்னர் பொதுவாக துணிமணிகளைப் பற்றியும், ஆபரணங்களைக் குறித்தும் இருவீட்டாரும் கலந்து பேசி ஆலோசிப்பார்கள். அந்த ஆலோசனையைத் தான், 'மந்திரித்தல்' என்னும் இந்தச் சடங்கு குறிக்கிறது.

மந்திரித்தல் நிகழ்ந்தபின்னர், 'கோடி உடுப்பித்தல்' அல்லது 'மந்திரக் கோடி உடுத்தல்' என்னும் சடங்கு நடைபெறும். 'கோடி' அல்லது 'மந்திரக் கோடி' என்றது கூறைப்புடவையைக் குறிக்கின்றது. 'மந்திரக் கோடி உடுத்தி' என்று குறிப்பிடுவதன்மூலம், மணமகளுக்கு நாத்தனார் புதுப்புடவை அணிவிக்கும் சடங்கை விவரிக்கிறாள் கோதை. இங்கு, நாத்தனார் ஸ்தானத்தில் இருப்பவள் 'அந்தரி' என்று போற்றப்படும் துர்க்கை. 'அந்தரி' என்றால் 'உயிர்கள் அனைத்தினுள்ளும் அந்தர்யாமியாக இருக்கும் சக்தி' என்று சிலர் பொருள் கூறுவர். வேறு சிலர், 'அந்தரம் (ஆகாயம்) உள்ளிட்ட பஞ்ச பூதங்களிலும் அந்தர்த்தானமாக (மறைந்து) அருள்புரிபவள்' என்று பொருள்கூறுவர். அப்படிப்பட்ட புகழ்வாய்ந்தவளான துர்க்கையானவள், கோதைக்குக் கோடி உடுத்துகிறாள்; மேலும் மணமாலையும் அணிவிக்கிறாள்.

வாரணம் ஆயிரம் - பாசுரம் 4

நாற்றிசைத் தீர்த்தங் கொணர்ந்து நனிநல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லா ரெடுத்தேத்தி,
பூப்புனை கண்ணிப் புனிதனோ டென்றன்னை,
காப்புநாண் கட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.


பாடல் பொருள்:
தோழீ, அந்தணர்கள் பலர் சேர்ந்து, நான்கு திசைகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட புண்ணியத் தீர்த்தங்களை நன்றாக எங்கள்மீது தெளித்து, மந்திரம் சொல்லி வாழ்த்தினர். பின்னர் பலவகை மலர்களாலான மாலையணிந்த தூயோனான கண்ணனுக்கும் எனக்கும் காப்புக் கயிறு கட்டினர். இந்நிகழ்வுகளை நான் கனவில் கண்டேன்.

பாடல் விளக்கம்:
இங்தப் பாசுரத்திலும் மூன்று மணச்சடங்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

முதலில் விவரிக்கப்படுவது,'தீர்த்தம் நல்குதல்' அல்லது 'ப்ரோக்ஷித்தல்' என்று கூறப்படும் நிகழ்வு. ஶ்ரீராமனின் பட்டாபிஷேகத்தின் போது நான்கு சமுத்திரங்களிலிருந்தும் புண்ணிய தீர்ந்தங்கள் கொண்டுவரப்பட்டது போலவே, கோதைக்கும் நாராயண நம்பிக்கும் நடைபெறும் இந்தத் திருமணத்திற்கும் புண்ணிய நீர் நான்கு திக்குகளிலிருந்தும் கொண்டுவந்தனர். அவ்வாறு கொண்டுவரப்பட்ட தீர்த்தங்களால் திருத்தம்பதிகளின் மீது வேத வித்தகர்கள் மந்திரம் சொல்லித் தெளித்தனர். 'சிட்டர்' - 'ஸ்ரேஷ்டர்' என்னும் வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். 'ஸ்ரேஷ்டர்' என்றால் சிறந்தவர் என்று பொருள். இங்கு 'எடுத்து ஏத்தி' என்று வருவதால், வேதங்களைக் குறையற ஓதுவதில் சிறந்தவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். 'நனி' - மிகுதியைக் குறிக்கிறது. 'நல்குதல்' - தெளித்தல். 'நனி நல்கி' - மிக நன்றாகத் தெளித்து என்று பொருள்படும். நன்றாகத் தெளித்த புண்ணிய நீர் தெளிக்கப்பட்டவர்களுக்கு நீண்ட ஆயுளும் நீங்காத செல்வமும் அளிக்கும் என்பது பெரியோர் வாக்கு.

பின்னர், அவ்வேதியர்கள், வேத மந்திரங்களை எடுத்து ஓதி, சர்வ நலங்களும் பெறுமாறு ஆசி கூறி மங்கல வாழ்த்தொலி எழுப்பினர். இந்த நிகழ்வே 'எடுத்து ஏத்துதல்' என்று குறிப்பிடப்படுகிறது. இது தெய்வத் தம்பதிகளை வாழ்த்தும் நிகழ்வாதலால், இதனை 'மங்களா சாஸனம்' பண்ணுதல் என்றும் குறிப்பிடுவர். 'எடுத்து ஏத்துதல்' - 'உச்சைஸ்ஸ்வரம்' அல்லது உரத்த குரலால் உச்சரித்தல். வேத மந்திரங்களின் பலனை முழுவதுமாகப் பெறுவதற்கு மிகுந்த சிரத்தையுடன் 'குரல் எடுத்து' உரக்க ஓதுதல் முக்கியம் என்பர்.

அதனை அடுத்து நிகழ்வது 'காப்பு நாண் கட்டுதல்'.'காப்பு நாண்' என்பது, மணமக்களை இணைப்பதன் பொருட்டும், திருஷ்டி தோஷம் ஏற்படாமல் மணமக்களின் நலத்தைக் காப்பதற்காகவும் கையில் கட்டப்படும் ஒரு மங்கலக் கயிறாகும்.

'பூப்புனை கண்ணிப் புனிதன்' - காப்பு நாண் கட்டும்போது கண்ணன் இருந்த திருக்கோலத்தை அழகுற விவரிக்கிறாள் கோதை. பூக்களைத் தொடுத்துச் செய்யப்பட்ட மாலையை அணிந்திருக்கிறான் கண்ணன். அதுமட்டுமல்ல, புருஷோத்தமனான கண்ணன், புண்ணிய தீர்த்தங்களாலும் வேத மந்திரங்களாலும் மேலும் பொலிவுகூடிப் புனித ஸ்வரூபனாக விளங்குகிறான். அதனால், அவனைப் 'புனிதன்' என்றே அழைக்கிறாள் கோதை.

வாரணம் ஆயிரம் - பாசுரம் 5

கதிரொளி தீபம் கலச முடனேந்தி,
சதிரிள மங்கையர் தாம்வந் தெதிர்கொள்ள,
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்.


பாடல் பொருள்:
தோழீ, பெருமை வாய்ந்த அழகினையுடைய இளம் பெண்கள் சூரியனது ஒளி போன்ற பேரொளியுள்ள குத்துவிளக்குகளையும் பொற்கும்பங்களையும் கையில் ஏந்தி, எதிர்கொண்டு அழைத்துவர, வடமதுரையின் மன்னனாகிய கண்ணன் பாதுகைகளைத் தரித்துக்கொண்டு பூமியெங்கும் அதிரும்படியாக மணமண்டபத்தில் எழுந்தருளுவதை நான் கனவில் கண்டேன்.

பாடல் விளக்கம்:
மாப்பிள்ளை வரவேற்பின் சிறப்பினையும், மணமண்டபத்தில் மதுசூதனன் பிரவேசித்த காட்சியையும் விவரிக்கிறது இப்பாசுரம்.

மாப்பிள்ளை அழைப்பின்போது, இளம்பெண்கள் மங்கல விளக்குகளை ஏந்தி வருகின்றனர். அவர்கள் ஏந்தியுள்ள மங்கல விளக்கினைப் பற்றிச் சொல்லும் போது, 'கதிரொளி தீபம்' என்கிறாள் கோதை. 'கதிர் ஒளி தீபம்' என்றால் சூரியனைப் போன்ற ஒளிமிக்க தீபம் என்று பொருள். அத்தகைய தீபம் என்றும் அணையாது. அணையாத தீபம் நல்ல சகுணத்தைக் குறிக்கும்; நலம் பெருக்கும். மேலும், அப்பெண்கள் கையில் பொற்கலசங்களையும் கொண்டு வருகின்றனர். 'கதிரொளி தீபம் கதிரொளி கலசம்' என்று பொருள் கொள்வோமானால், 'கதிரொளி' என்னும் அடைமொழி கலசத்துக்கும் பொருந்துகிறது. இதனால் அந்தக் கலசத்தின் பொன்மயமான தோற்றத்தின் பொலிவும் குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறது.

இந்த ஒளி விளக்குகளையும் கலசங்களையும் ஏந்தி வருகின்ற பெண்களின் சிறப்பினைக் கூறும்போது ''சதிர் இள மங்கையர்' என்று புகழ்கின்றாள் கோதை. 'சதிர்' என்றால் பெருமை வாய்ந்த என்று பொருள். அவர்களது பெருமை எத்தகையது என்றால், 'தங்கள் பேரழகால் தங்களையே எல்லாரும் நோக்கிக் கொண்டிருக்கும்படியான' பெருமைமிக்கவர்கள் என்று உரையாசிரியர்கள் கூறுவர். கோதையின் திருமணத்தில் இப்பெண்கள் மாப்பிள்ளையை அழைக்க வருவதை, பரமபதத்துக்கு எழுந்தருளும் ஜீவன் முக்தர்களை வரவேற்க வரும் இளம் பெண்களோடு ஒப்பிடுவார், அண்ணங்கராச்சாரியார் . "நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே" என்று கூறும் திருவாய்மொழியும் இங்கு ஒப்புநோக்கத் தக்கது.

'வடமதுரை மைந்தன்' என்று திருப்பாவையில் கண்ணனை அழைத்த கோதை, வாரணம் ஆயிரத்தில் அவனை 'மதுரையார் மன்னன்' என்கின்றாள். கண்ணனும் ஒரு அரசனுக்குண்டான மிடுக்கும் கம்பீரமும் பொலிந்த தோற்றத்துடன் திருமண மண்டபத்தை நோக்கி நடந்து வருகிறான். அவன் நடந்து வரும் சிறப்பைக் கோதை சொல்லும்போது, அழகிய பாதுகைகளைப் பதித்தலால் நிலத்தில் அதிர்வு உண்டாகுமாறு பீடு நடையுடன் மண்டபத்துக்குள் புகுகின்றான் என்கிறாள். இங்கு ' வந்தான்' என்று கூறாமல், 'புகுந்தான்' என்று கூறுவதன்மூலம் அவனது நடையில் தெரிந்த வேகத்தையும் தெரியப்படுத்துகிறாள் கோதை. அடியவர்களுக்கு அருள்புரிய சிறிதும் காலதாமதம் செய்யாமல் காத்தளிக்கும் கண்ணன், அடியவளான பட்டர்பிரான் மகளையும் தன்னுடன் சேர்த்துக்கொள்ள நெடுங்காலம் காத்திருக்க வைக்காமல் மணம்செய்து கொண்டு அருள விரைவாக வருகின்றான் என்று கோதை உருகிக் களிக்கின்றாள்.

வாரணம் ஆயிரம் - பாசுரம் 6

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்.


பாடல் பொருள்:
தோழீ, மத்தளம் முதலிய வாத்தியங்கள் முழங்கவும் வரிகளையுடைய சங்குகள் ஒலிக்கவும், மைத்துனன் முறையுடையவனும் நற்குணங்கள் நிறைந்தவனும் மதுசூதனன் என்னும் பெயர் பூண்டவனுமான கண்ணன், முத்து மாலைகள் வரிசையாகத் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழே வந்து என் கைகளைப் பற்றிக் கொண்டருள நான் கனாக் கண்டேன்.

பாடல் விளக்கம்:
முதல் ஐந்து பாசுரங்களில் திருமணத்திற்கு முன் நிகழவேண்டிய சடங்குகளை விவரித்த ஆண்டாள், இந்தப் பாசுரத்தில் 'கைத்தலம் பற்றுதல்' என்றும் 'பாணி க்ரஹணம்' என்றும் கூறப்படும் திருமணக் காட்சியைப் பாசுரமாக்கிக் காட்டுகிறார்.

மேளங்கள் கொட்ட அழகிய சங்குகள் ஒலிமுழங்க கோதையின் திருமணம் நடைபெறுகிறது. 'நின்று ஊத' என்று சொல்லும்போது, 'நின்று' என்னும் சொல் 'இடைவிடாமல்' அல்லது 'நிறுத்தாமல்' என்னும் பொருளில் இங்கு வருகிறது. அதாவது, திருமணத்தின் துவக்கத்தில் எழுந்த இந்த மேளவொலியும் சங்கின் நாதமும், திருமணம் முடியும் வரை ஒலித்துக்கொண்டே இருந்தது என்பதை 'நின்று' என்னும் ஒரே சொல்லின் மூலம் உணர்த்துகிறார் ஆண்டாள்.

இங்குக் கண்ணபிரானைக் குறிப்பிடும்போது 'மைத்துனன் நம்பி' என்று அழைக்கிறார் ஆண்டாள். 'மைத்துனன்' என்றால் 'அத்தை மகன்' அல்லது 'மாமன் மகன்' என்று பொருள். கண்ணனை மணந்த நங்கையான நப்பின்னைக்கு யசோதை அத்தை முறை ஆதலால், நப்பின்னையாகவே தன்னைப் பாவிக்கும் கோதையும் கண்ணனை 'அத்தை மகன்' அல்லது 'மைத்துனன்' என்கிறாள்.

மேலும், 'நம்பி' என்றும் எம்பெருமானை அழைக்கிறாள். 'நம்பி' என்றால் 'ஆண்களில் சிறந்தவன்' என்று பொருள் என்று முன்னர் கண்டோம். இந்த உலகினையே காக்கும் பரம்பொருளான கண்ணன், ஒரு பட்டரின் மகளை மணக்க முன்வந்த விதத்தைப் போற்றியே ஆண்டாள் அவனை 'நம்பி' என்று அழைக்கிறாள்.

'மைத்துனன்' என்றும் 'நம்பி' என்றும் பாடியதோடு மட்டும் ஆண்டாள் அளித்த புகழாரம் நின்றுவிடவில்லை. கண்ணனை 'மதுசூதனன்' என்றும் அழைக்கிறாள். 'மதுசூதனன்' என்றால், 'மது' என்ற அசுரனை (கைடபனோடு சேர்ந்து) அழித்தவன் என்று பொருள். அந்தக் கொடிய அசுரனை அழித்ததோடு மட்டுமல்லாமல், அவ்வசுரன் அபகரித்துச் சென்ற வேதங்களையும் (ஹயக்ரீவ அவதாரம் எடுத்து) மீட்டான் கண்ணபெருமான். அவ்வாறு, வேதங்களைத் தீமையிலிருந்து காத்தவன், காதல் மனையாளான தனக்கும் எந்தவிதமான தீங்கும் நேராமல் காப்பாற்றுவான் என்று உறுதியாக நம்புகிறாள் கோதை. அதனால், அவனைக் கைத்தலம் பற்றும் அத்தருணத்தில் அவனை 'மதுசூதனன்' என்னும் திருநாமம் கொண்டே போற்றுகிறாள்.

'வந்து என்னைக் கைத்தலம் பற்றினான்' என்கிறாள் கோதை. அதாவது, நான் அவனுக்கு உரியவளாதலால், அவனுக்கு உரியதைப் பெறுவதற்கு அவனே வருவதுதான் முறைமை. அதனால், கண்ணன் தன் அருகில் அவனாகவே வந்து கைத்தலம் பற்றினான் என்று சொல்லிப் பெருமையுறுகிறாள்.

வாரணம் ஆயிரம் - பாசுரம் 7

வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
தீவலம் செய்யக் கனாக்கண்டேன் தோழீநான்.


பாடல் பொருள்:
தோழீ, வாய்மையுடைய நல்ல வேதியர்கள், பொருத்தமான சிறந்த வேத மந்திரங்களை ஓத, அந்தந்தக் காரியங்களுக்கு இசைந்த மந்திரங்களின்படி, பசுமையான இலைகளையுடைய நாணல் புற்களைப் பரப்பி, சமித்துக்களையிட்டு தீ வளர்க்க, மிக்க சினத்தையுடைய பெருங்களிறு போன்ற கம்பீரம் கொண்ட கண்ணன் என் கையைப் பிடித்துக் கொண்டு அத்தீயினை வலமாகச் சுற்றிவர நான் கனாக் கண்டேன்.

பாடல் விளக்கம்:
கைத்தலம் பற்றிக்கொண்ட கண்ணனும் கோதையும் தங்கள் அன்பை அக்கினி சாட்சியாக்கும்படி, தீயை வலம் வந்து வணங்குகிறார்கள். 'தீவலம் வருதல்’ என்று சொல்லப்படும் இந்த மணச்சடங்கு இப்பாசுரத்தில் விவரிக்கப்படுகிறது.

முதலில் அந்தணர்கள் வேதங்கள் ஒதித் தருப்பை சாத்தி ஓமக்கனல் வளர்க்கும் திறத்தைச் சொல்கிறாள் கோதை. அவ்வாறு மறை ஓதும் வேதியர்களைப் பற்றிச் சொல்லும்போது, 'வாய் நல்லார்' என்று குறிப்பிடுகிறாள். இதற்கு, 'வேதங்களைச் சரியாக உச்சரித்து நன்முறையில் ஓதும் திறம் வாய்ந்த மறையோர்கள்' என்று பொருள். அப்படிப்பட்ட வேதியர்கள் 'நல்ல மறை' ஓதுகிறார்கள். இங்கு 'நல்ல மறை' என்பதற்குத் 'திருமணச் சடங்குகளின் போது ஓதத்தக்க வேத மந்திரங்கள்' என்று பொருள் கொள்வர்.

'பாசிலை நாணல்' - பசுமையான இலைகளையுடைய தருப்பை (நாணல்) புல். ஓமத்தில் அக்கினியைப் பிரதிஷ்டை செய்யுமுன், ஓமகுண்டத்தைச் சுற்றி நாற்புறத்திலும் தருப்பை வைக்கப்படும். இவ்வாறு அக்கினியைச் சுற்றி உரிய இடங்களில் முறைப்படி பரப்பி வைக்கப்படும் தருப்பைகளை பரிஸ்தரணம் என்பர். பரிஸ்தரணம் வைப்பதையே இங்கு 'நாணல் படுத்துதல்' என்று கோதை அழைக்கிறாள். அடுத்து சமித்துகளை (குச்சிகளை) அக்கினியில் போட்டு ஆகுதி செய்யும் சடங்கு நடைபெறுகிறது. இச்சடங்கினைப் 'பரிதி (சமித்து) வைத்தல்' என்று அழைப்பர்.

இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்ட அக்கினியைக் கண்ணனும் கோதையும் வலம் வருகின்றனர். ஏழு அடிகள் எடுத்து வைத்துத் தீவலம் செய்யும் இச்சடங்கினை 'சப்தபதி' என்று சொல்வர். வடமொழியில் 'சப்தம்' என்றால் ஏழு, 'பதம்' என்றால் அடி. அவ்வாறு தீவலம் வரும்போது, 'எல்லாப் பிறப்பிலும், எல்லா உலகிலும், எப்போதும், எங்கும் இணைந்து இல்லறத்தை நல்லறமாக நடத்துவோம்' என்று இருவரும் சேர்ந்து உறுதிமொழி கொடுக்கின்றனர். இல்லறம் செழிக்க வேண்டி, ஒவ்வொரு அடி வைக்கும்போதும் செபிக்கப்படும் மந்திர வாக்குகள் மூலம் இருவரிடையேயும் நட்பும் புரிதலும் அன்பும் மலர இச்சடங்கு வகைசெய்கின்றது.

வாரணம் ஆயிரம் - பாசுரம் 8

இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்.


பாடல் பொருள்:
தோழீ, இப்பிறப்பிற்கும் இனிவரும் ஏழேழ் பிறவிக்கும் பற்றுக் கோடாய் அடைக்கலம் தருபவனும் நம்மையெல்லாம் தனது உடைமையாகக் கொண்டவனும் சகல நற்குணங்களுடையவனும் நாராயணனுமான கண்ணன், சிறந்த தனது திருக்கைகளாலே எனது காலைப் பிடித்து அம்மியின் மேல் எடுத்து வைக்க, என்னை அம்மி மிதிக்கச் செய்ய, நான் கனாக் கண்டேன்.

பாடல் விளக்கம்:
முந்தைய பாசுரத்தில் கோதையைக் கைத்தலம் பற்றிய கண்ணன், இங்கே அவளது பாதத்தைப் பற்றி அம்மி மிதிக்கச் செய்தருளுகின்றான்.

இராமனாகிய உயிரை ஏழேழ் பிறவியிலும் தொடர்ந்து செல்லும் உடல் போலத் தன்னைப் பாவித்த சீதையைப்போல், கோதையும் கண்ணனை ஏழ்பிறப்புக்கும் பற்றுக்கோடாகக் காண்கிறாள். 'எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம்! உனக்கே நாம் ஆட்செய்வோம்!’ என்று திருப்பாவையில் அன்பொழுக அறிவித்த கோதை, தன் திருமணத்தில் அம்மி மிதிக்கும் அரிய வேளையில் அந்த சரணாகதித்துவத்தை உறுதிப்படுத்திச் சொல்கிறாள். அதுமட்டுமல்ல, ‘குறையொன்றும் இல்லாத கோவிந்தா! உன் தன்னோடு உறவே நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது’ என்று கண்ணனோடு தனக்குள்ள உறவின் அழிவற்ற தன்மையைக் குறித்துத் திருப்பாவையில் பாடிப் பெருமைப்பட்ட கோதை. அம்மிக்கல்லைப் போன்ற ஸ்திரமான அந்த உறவு இந்த மண நிகழ்வில் நிலைநாட்டப்படுவதை எண்ணி மனம் உருகுகின்றாள்.

திருமாலின் தாள்தொட்டுத் தொண்டு செய்வதே தன் வாழ்வின் பயனாகக் கருதி, 'கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள் என்னும் இப்பேறு எனக்கு அருளுகண்டாய்' என்று மன்மதனை வேண்டிக்கொண்டவள் கோதை. அவ்வாறு இறைவனின் காலைப் பிடித்துத் தொண்டாற்ற விரும்பிய அடியவளாகிய தன்னுடைய பாதத்தை, அந்தப் பரம்பொருளே பற்றி எடுத்து அம்மிமீது வைப்பதை நினைத்து நாணமும், பெருமையும், அன்பும், நன்றியும் ஒருசேரப் பொங்க நெஞ்சுருகி மகிழ்கிறாள் கோதை.

இங்கு இருவகையான பற்றுகள் விவரிக்கப்படுவதைக் காணலாம். முதல் பற்றாவது கண்ணனைச் சரண்புகுந்து ஏழேழ் பிறப்பிலும் அவன் பாதங்களே தஞ்சமாகப் பிடித்துக்கொள்ளும் பற்று. இரண்டாவது பற்றானது, அவ்வாறு சரண்புகுந்த பக்தர்களை நன்னெறியில் செலுத்தும் பொருட்டு, இறைவனே அவர்களது பாதங்களைப் பற்றி வழிகாட்டுவதைக் குறிக்கிறது. 'பற்றுக பற்றற்றான் பற்றினை' என்பது வள்ளுவர் வாக்கு. பற்றற்ற இறைவனும், தன் மீது பற்று வைக்கும் அடியவர்கள் காட்டும் அன்பின்மீது பற்று வைத்து அருள் புரிவான் என்னும் பேருண்மையை நமக்கு இங்கு உணரவைக்கிறாள் கோதை.

வாரணம் ஆயிரம் - பாசுரம் 9

வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.


பாடல் பொருள்:
தோழீ, அழகிய வில் போன்ற புருவத்தையும் ஒளிபொருந்திய முகத்தையுமுடைய எனது தமையன்மார் வந்து அக்கினியை நன்றாக எரியச் செய்து, அந்த அக்கினியின் முன்னே என்னை நிற்கச் செய்தார்கள்; பின்னர், நரசிம்மனாய் சிங்க முகத்தை உடையவனும் அச்சுதனனுமான கண்ணனுடைய திருக்கையின் மேலே என் கையை வைத்து நெற்பொரியை அள்ளியெடுத்து அக்கினியிலிட்டு ஆகுதி செய்வதை நான் கனவில் கண்டேன்.

பாடல் விளக்கம்:
அம்மி மிதித்து அருந்ததி கண்டபின், 'பொரியிடுதல்' என்னும் மணச்சடங்கு நடைபெறுகிறது. 'நெற்பொரிஹோமம்' என்றும் 'லாஜஹோமம்' என்றும் அழைக்கப்படும் இச்சடங்கில், கணவனுக்கு நீண்ட ஆயுளை வேண்டி அக்கினியில் பொரியிட்டு ஆகுதி செய்கிறாள் மனைவி.

இந்நிகழ்வின்போது, மணமகளின் உடன்பிறந்தவர்கள் அவள் கைகளில் பொரியிடுகிறார்கள்; மணமகன் அவள் கைகளில் உள்ள பொரிகளின் மீது நெய் இட்டு, தகுந்த மந்திரங்களைச் சொல்லி, அவள் கைகளின்கீழ்த் தன் கைகளை வைத்துக்கொண்டு அப்பொரிகளை அக்கினியில் சேர்ப்பிக்கின்றான்.

பாட்டின் முதலடியில், கோதை தன் தமையன்மார்களின் பெருமையைச் சொல்லி, மற்ற மூன்று அடிகளிலும் தான் பொரியிடுவதற்கு அவர்கள் துணைசெய்த விதத்தையும் விளக்குகிறாள்.

தன் தமையன்மார்களின் முகப்பொலிவினை விவரிக்கும்போது, 'வரிசிலை வாள்முகத்து என்னைமார்' என்று சொல்கிறாள் கோதை. 'வரிசிலை' என்பதற்கு 'வளைந்த வில்' என்றும்,'வாள் முகம்' என்பதற்கு 'ஒளிவீசும் முகம்' என்றும் பொருள். வரிசிலை போன்ற புருவம் என்று சொல்வதற்கு பதிலாக 'வரிசிலை' என்று மட்டும் சொன்னது முற்றுவமை. அதனால், 'வரிசிலை வாள்முகம்' என்பதற்கு 'வளைந்த வில் போன்ற (புருவங்களைக் கொண்ட) ஒளி வீசும் முகம்' என்றே பொருள் கொள்ளவேண்டும். புருவத்திற்கு வளைந்த வில்லை உவமையாகக் கூறுவது மரபு. 'வில்லைத் தொலைத்த (தோற்கடித்த) புருவத்தாள்' என்று தனது புருவத்தின் அழகையே புகழ்ந்து பாடிக்கொண்டவள் கோதை என்பதை இங்கு நினைவில் கொண்டு பார்த்தால், அவளது தமையன்மார்களின் புருவத்தையும் அவள் வில்லெனச் சொல்லிப் பெருமைப்படுகிறாள் என்பதில் வியப்பேதும் இருக்காது. அத்தகைய அழகு வாய்ந்த தமையன்மார்களின் முகத்தை 'ஒளி பொருந்திய முகம்' என்றும் சொல்கிறாள். அவர்களின் முகம் ஒளிவீசுவதற்குக் காரணம் என்ன என்று பார்த்தால், கோவிந்தனோடு கோதையின் திருமணம் இனிதே நடந்தேறியதை நினைத்து அவர்கள் அடைந்த உள்ளக்களிப்பே எனலாம்.

என்னைமார் = என்+ஐ+மார். இங்கு ‘ஐ' என்றால் தலைவன் அல்லது மூத்தவன் என்று பொருளாதலால், ஐமார் என்றால் அண்ணன்மார் என்று பொருள்படுகிறது. ஐமார் என்பது இப்பொருளில் வருவதைத் திருவாய்மொழியில் இடம்பெறும் இந்த அழகிய பாடலின் மூலமும் அறியலாம்:

வாரணம் ஆயிரம் - பாசுரம் 10

குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம்செய்து மணநீர்,
அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.


பாடல் பொருள்:
தோழீ, குங்குமக் குழம்பை உடலெங்கும் தடவி, குளிர்ந்த சந்தனச் சாந்தை மிக அதிகமாகப் பூசி, யானையின் மீது கண்ணபிரானோடு சேர்ந்திருந்து, திருமணத்திற்காக அலங்கரிக்கப்பட்ட வீதிகளிலே ஊர்வலமாக வந்து, பின்னர் மணம் கமழும் மங்கல நீரினாலே எங்கள் இருவருக்கும் நீராட்டுவதாக நான் கனவில் கண்டேன்.

பாடல் விளக்கம்:
திருமணம் நிறைவடையும்போது மஞ்சனநீர் தெளித்து மணநீராட்டும் சடங்கு நடைபெறுகிறது. மஞ்சன நீராட்டுமுன், அக்கினியின் வெம்மையால் வாடியுள்ள மணமக்களின் மேனியைக் குளிர்விக்கும் பொருட்டுக் குங்குமமும் சந்தனமும் குழைத்த குழம்பினை அவர்களது அங்கங்களில் இடுவார்கள்.

உடலில் பூசப்படும் குங்குமம் உஷ்ண நிலையைச் சரிசமமாக வைத்துக் கொள்ள உதவுகிறது; தோலையும் பாதுகாக்கின்றது. சந்தனமானது உடலின் வெம்மையைத் தணித்துக் குளிர்விக்கின்றது. குறிப்பாக மலையில் தோன்றிய சந்தனத்தில் வெப்பத்தை ஒழிக்கும் சக்தி மிகுந்திருக்கும் என்பதை இந்தக் குறுந்தொகை வரிகளால் அறியலாம்:

சூருடை அடுக்கத் தாரங் கடுப்ப
வேனி லானே தண்ணியள்
- குறுந்தொகை
(சூர் உடை = அச்சத்தைத் தருகின்ற, அடுக்கத்து = மலைச்சாரத்தில் வளர்கின்ற, ஆரம் = சந்தனம், கடுப்ப = போல, வேனிலானே = வேனில் காலத்தில், தண்ணியள் = குளுமையானவள்)

நரசிம்மமாய் விளங்கும் திருமாலின் தோளைக் 'குங்குமத் தோள்' என்று திருக்குறுந்தாண்டகத்தில் பாடுவார் திருமங்கை ஆழ்வார்.

செங்குருதி சோரா கிடந்தானை
குங்குமத் தோள் கொட்டி
ஆரா எழுந்தான்
- திருமங்கை ஆழ்வார்
[பொருள்: சிவந்த ரத்த வெள்ளத்தில் கிடந்த இரணியனை, குங்குமச் சேற்றினால் அலங்கரிக்கப்பட்ட தனது திருத்தோள்களின் மேல் தூக்கிக்கொண்டு (நரசிம்ம அவதாரம் எடுத்த திருமால்) ஆரவாரத்துடன் எழுந்தான்.]

'மலையில் பிறந்த சந்தனத்தின் குழம்பு, சிறந்த அணிகலன்கள், பட்டு, வாசனை மிகுந்த வெண்மல்லிகை' இவற்றைக் கொண்டு திருமாலை பூசித்துப் பணிய வேண்டும் என்று சொல்வார் பேயாழ்வார்.

வரைச் சந்தனக் குழம்பும் வான்கலனும் பட்டும்
விரைப்பொலிந்த வெண் மல்லிகையும் - நிரைத்துக்கொண்டு
ஆதிக்கண் நின்ற அறிவன் அடியிணையே
ஓதிப் பணிவது உறும்.
- பேயாழ்வார்

'நல்ல வாசனை மிக்க சந்தனத்தை எனக்குக் கொஞ்சம் கொடுப்பாயாக' என்று கண்ணனே ஒரு முதியவளிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டு அவளது கூனை நிமிர்த்தி அருள்செய்த விதத்தைப் பெரியாழ்வாரும் புகழ்ந்து பாடுகிறார்.

"நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு" என்னத்
தேறி அவளும் திருவுடம்பிற் பூச
ஊறிய கூனினை உள்ளே ஒடுங்க அன்று
ஏற உருவினாய்!
- பெரியாழ்வார்
(நாறிய = வாசனை மிக்க, சாந்தம் = சந்தனம், இறை = கொஞ்சம், நல்கு = தா)

இவற்றிலிருந்து, குங்குமமும் சந்தனமும் மருத்துவச் சிறப்போடு தெய்வீகச் சிறப்பையும் பெற்றிருக்கின்றன என்பதை நாம் அறியலாம்.

'அப்பி', 'மட்டித்து' என்னும் சொற்கள், குங்குமத்தையும் சந்தனத்தையும் தாராளமாக எடுத்து இடுவதைக் குறிக்கின்றன.

இதுவரை சூடியிருந்த மலர்மாலைகளைக் கழற்றி வைத்துவிட்டு, குங்குமத்தையும் சந்தனத்தையுமே அணிந்துகொண்டவர்களாகிய கோதையும் கண்ணனும், அடுத்து யானைமேல் ஏறி ஊர்வலம் வருகின்றனர். அவர்கள் வலம் வரும் வீதிகள் மணவிழாவின் பொருட்டு அங்கங்கே மங்கலத் தோரணங்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தன. அத்தகைய மங்கல வீதிகளில்தான் முதல்முதலில் ஆயிரம் யானைகள் புடைசூழ வலம் செய்து கோதையை மணம் புரிய வந்தான் கண்ணன். அவ்வாறு ஆயிரம் யானைகளில் நண்பர்கள் அவனைச் சூழ்ந்திருக்க நேற்று வலம் வந்த கண்ணன், இன்று திருமணத்திற்குப்பின் யானையின்மேல் தன்னுடன் மட்டும் வலம் வருவதை நினைத்துப் பெருமகிழ்வு கொள்கிறாள் கோதை.

வாரணம் ஆயிரம் - பாசுரம் 11

ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல்
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே.


பாடல் பொருள்:
வேயர் குலத்தவரால் புகழப்பட்டவராய்த் திருவில்லிபுத்தூருக்குத் தலைவராக விளங்கும் பெரியாழ்வாருடைய திருமகளாகிய ஆண்டாள், தான் கோபால கிருஷ்ணனுக்கு வாழ்க்கைப்பட்டதாகக் கனவு கண்டபடியைக் குறித்து அருளிச்செய்த தூய தமிழ் மாலையாகிய இந்தப் பத்துப் பாடல்களையும் பாராயணம் செய்பவர்கள் நற்பண்புகள் வாய்ந்த சிறந்த பிள்ளைகளைப் பெற்று மகிழ்வார்கள்.

பாடல் விளக்கம்:
இப்பாசுரத்தில், முதலடியில் கோதை தான் கண்ட கனவின் சிறப்பைப் பற்றிக் கூறுகிறாள். இரண்டாம் அடியில், தன்னைப் பற்றி மொழிகின்றாள். மூன்றாம் அடியில் 'வாரணம் ஆயிரம்' என்னும் இந்தத் திருப்பதிகத்தின் பெருமையைக் கூறி, அதைப் பாராயணம் செய்வதால் வாய்க்கக்கூடிய நன்மைகளை இறுதி அடியில் விவரிக்கிறாள்.

கோதை தான் வாழும் திருவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும், தன்னை இடைப்பெண்ணாகவும், தன் தோழியரை ஆயர்குலத்து மகளிராகவும் வடபெருங்கோயிலுடையான் (வடபத்திரசாயி) சந்நிதியை நந்தகோபன் இல்லமாகவும், அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாளை ஆயர்குலத்தில் தோன்றிய மணிவிளக்காகிய கண்ணனாகவும் பாவனை செய்து திருப்பாவையை அருளிச்செய்தாள். அதே பாவனையுடன் 'வாரணம் ஆயிரம்' பாடும் போதும் அச்சுதனை ஆயனாகப் பார்க்கின்றாள். முதல் பாசுரத்தில் 'நாரணன் நம்பி' என்று கண்ணனைப் பரமாத்மாவாகப் பார்த்தவள், திருமணத்திற்குப் பின் தனக்குரியவன் ஆன கண்ணனை உரிமையுடன் 'ஆயன்' என்றே அழைத்துப் பெருமைப்படுகிறாள்.

அத்தகைய ஆயனைக் கைத்தலம் பற்றுமாறு கண்ட கனவினை 'ஆயனுக்காகத் தான் கண்ட கனவு' என்று குறிப்பிடுகிறாள். 'ஆயனுக்காக' என்னும் சொல்லை 'ஆயனுக்கு + ஆக' என்று பிரித்துப் பார்த்தால் 'ஆயனுக்குத் துணைவியாகும்படி' என்று பொருள்படும்.

அடுத்து, தன்னைப் பற்றிச் சொல்லும்போது, தன்னை 'வேயர் குலத்தில் தோன்றியவரும் வில்லிபுத்தூரின் தலைவருமாகிய பெரியாழ்வாரின் திருமகள்' என்று பெருமையுடன் கூறுகிறாள். 'வேயர்' என்றால் 'அந்தணர்' என்று பொருள். அவ்வாறு வேயர்குலத்தில் தோன்றிய கோதை, ஆடுமாடுகளை மேய்க்கும் இடையனாக ஆயர்குலத்தில் அவதரித்த கண்ணனை மணம்புரிய விரும்பினாள். அவ்வாறு கோபாலகிருஷ்ணனுக்காகக் குலகோத்திரங்ககளைப் பாராமல் அவனைச் சரணடைந்ததால் ஆயன் உருவில் இருக்கும் அச்சுதன் வெளிப்பட்டுவந்து கோதையின் கைத்தலம்பற்றி அருள்புரிந்தான். ஆயன் மேல் கொண்டிருந்த அளவற்ற அன்பின் ஆற்றலால், தான் இருக்கும் இடத்திற்கு அவனை மணமகனாக வரவழைத்து மனத்தினால் மணந்து கொண்ட கனவின் சிறப்பைச் சொல்வதால் இதைத் 'தூய தமிழ்மாலை' என்று போற்றுகின்றாள் கோதை.

வாரணம் ஆயிரமாகிய இந்தத் தூய தழிழ்மாலை இரண்டு பிரிவுகளைக் கொண்டது. முதல் பிரிவு முதல் ஐந்து பாசுரங்களைக் கொண்டது. இது திருமணத்துக்கு முன்பு நிகழும் சடங்குகளை விவரிக்கும். மற்ற ஐந்து பாசுரங்களைக் கொண்ட பிரிவு, திருமண நிகழ்வுகளைச் சொல்வது. இவ்வாறு அமைந்த பத்துப் பாசுரங்களையும் 'ஈர் ஐந்து' என்கிறாள். இந்தத் தமிழ்மாலையைப் பாடிப் பணியும் பக்தர்களை 'வல்லவர்' என்கிறாள் கோதை. 'பாடுபவர்', 'படிப்பவர்', 'கற்பவர்' என்று கூறாமல் 'வல்லவர்' என்று சொல்வதற்குச் காரணம் என்னவென்று பார்ப்போம். தம் நெஞ்சில் கொண்ட உறுதியாலும், உண்மையான அன்பாலும், உயர்வான பக்தியாலும் ஒருவர் கடவுளை அடைவது சாத்தியம் ஆகும். அவ்வாறு அவர்களுக்குக் கடவுளுடன் வாய்க்கும் உறவு கனவு நிலையில் ஏற்பட்டாலும், அந்தப் பந்தம் நனவில் வாய்த்ததைவிடப் பலமடங்கு சக்திவாய்ந்த பற்றாக ஏழேழ் பிறவியிலும் துணைவந்து காக்கும். இந்த உண்மையைப் புரிந்து கொள்ள வல்லவர்கள் தான் இந்தப் பாசுரங்களின் பலனை முழுமையாகப் பெற முடியும். அத்தகைய அன்பின் ஆழமும் தூய மனமும் கொண்டு இந்தப் பத்து பாடல்களையும் ஓதுபவர்களையே 'வல்லவர்' என்கிறாள் கோதை.

இவ்வாறு பாட வல்லவர்கள் பெறும் பேற்றை கடைசி அடியில் விவரிக்கும் போது, 'நல்ல மக்களைப் பெற்றெடுத்து மகிழ்வர்' என்கிறாள். அத்தகைய குழந்தைகளின் பெருமையைச் சொல்லும்போது 'வாயும் நன்மக்கள்' என்று சொல்கிறாள். வாயும் = வாய்க்கும். எந்தெந்த நலங்கள் வாய்க்கும் என்று குறிப்பிட்டு இங்கே சொல்லவில்லை ஆதலால், குழந்தைகளுக்கு என்னென்ன நற்குணங்கள் வாய்க்கவேண்டும் என்று நம் மனம் நினைக்கின்றதோ, அந்தக் குணங்கள் அனைத்தும் வாய்க்கும் என்று அர்த்தம். இதன்மூலம், 'கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள்' என்னும் பேற்றைத் தான் பெற்றாற்போல், இப்பாசுரங்களைப் பாடவல்ல பெண்கள், நாரண நம்பியைப் போன்ற நலமுடையவர்களைத் தம் வாழ்க்கைத் துணைவராக அடைந்து மகிழ்வர் என்றும் அருள்பாலிக்கின்றாள்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!