பாகவதர் (Bhagavata) என்ற சொல், இந்து சமயத்தில் குறிப்பாக பக்தி இயக்கத்தின் போது, வைணவ சமயத்தில், பகவான் திருமாலின் மேலான அடியவர்கள், திருமால் மீதான பக்தியை, இசையாலும், நாம ஜெபங்களாலும், நாம சங்கீர்த்தனைகளாலும், உபன்நியாசங்களாலும் திருமாலின் கல்யாண குணங்களையும், அவதார மகிமைகளையும் மக்களிடையே பரப்பியவர்களை பாகவதர்கள் என்பர்.

பக்தி இயக்கத்தின் எழுச்சியால் உருவான பாகவத மரபினர் தங்கள் குடும்ப வருமானத்திற்காக எத்தொழிலும் செய்யாது, உஞ்சவிருத்தியின் மூலம் கிடைக்கும் உணவை மட்டுமே உண்டு, எப்பொழுதும் திருமாலின் நாமத்தையும்; கல்யாண குணங்களையும் இசையுடன் பாடுதல், நாமங்களை ஜெபித்தல், திருமாலின் அவதார மகிமைகளையும், கல்யாண குணங்களையும், குறிப்பாக பாகவத புராணம், இராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களை மக்களிடையே எடுத்துச் சொல்வதன் மூலம் திருமால் பக்தியை மக்களிடையே பரப்புவதே பாகவத மரபினரின் முதன்மைப் பணியாகும். பாகவத மரபு முதலில் மத்திய இந்தியா மற்றும் மேற்கு இந்தியாவில் தோன்றி பின்னர் தென்னிந்தியா மற்றும் கிழக்கிந்தியாவில் நன்கு பரவியது. தற்காலத்தில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினர் மற்றும் சுவாமிநாராயண் இயக்கத்தின் பாகவதர்கள் உலகெங்கும் கிருஷ்ணர், இராமர் மற்றும் நர நாராயண பக்தியைப் பரப்பினர்.

பாகவதர்களின் மேன்மையை விளக்கும், பாகவதர்களின் கதைகள் அடங்கிய ஸ்ரீமத் பக்த விஜயம் எனும் நூல் பிற்காலத்தில் பிரபலமானது.

புகழ் பெற்ற பாகவத மரபினர்
துளசிதாசர்
நாமதேவர்
ஜெயதேவர்
தியாகராச சுவாமிகள்
துக்காராம்
ஏகநாதர்
வல்லபாச்சார்யா
சைதன்யர்
நிம்பர்க்கர்
ரவிதாசர்
இராமாநந்தர்
வேங்கடரமண பாகவதர்
நடனகோபாலநாயகி சுவாமிகள்
அன்னமாச்சாரியார்
ஊத்துக்காடு வெங்கட சுப்பையர்

பாகவத அபச்சாரம்
பாகவதர்கள் என்ற சொல்லைப் பொதுவாகப் பாட்டுப் பாடுபவர்கள் என்ற கருத்தில் இப்போது நாம் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் பாகவதர்கள் என்ற சொல், சிறப்பாக வைணவத்திற்கு உரிய ஒரு சொல்லாகும். வைணவ மரபில் பாகவதர்கள் என்றால் பக்தர்கள், அடியார்கள், பகவானை வழிபடுபவர்கள் என்பது பொருள். பக்தர்களுக்குத் துன்பம் விளைவிப்பது, அவர்களை மனம் வருந்தச் செய்வது, அவர்கள் மனம் வருந்தும்படி பேசுவது, பக்தர்களின் குற்றங்களையும் குறைகளையும் பார்ப்பது, அதைப் பற்றி பேசுவது போன்றவை பாகவத அபச்சாரம் எனப்படும். இத்தகைய குற்றங்களைத் தவிர்த்து வாழ வேண்டும் என்று வைணவம் வலியுறுத்துகிறது.