மூலவர் : வைஷ்ணவ நம்பி
தாயார் : குறுங்குடிவல்லி நாச்சியார்தீர்த்தம் : திருப்பாற்கடல், பஞ்சதுறை
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருக்குறுங்குடி
ஊர் : திருக்குறுங்குடி
மாவட்டம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு
மங்களாசாசனம் : திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார்
கரண்ட மாடு பொய்கையுள் கரும்பனைப் பெரும் பழம் புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய் திரண்டு தோளி ரணியன் சினங்கொளாக மொன்றையும் இரண்டு கூறு செய்துகந்த சிங்க மென்ப துண்ணையே.
- திருமழிசையாழ்வார்
திருவிழா
சித்திரை வசந்தோற்சவம், வைகாசி ஜேஷ்டாபிஷேகம், ஆவணி பவித்ர உற்சவம், புரட்டாசி நவராத்திரி விழா, ஐப்பசி ஊஞ்சல் உற்சவம், தை தெப்ப உற்சவம். பங்குனி பிரம்மோற்சவம்.
தல சிறப்பு
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 89 வது திவ்ய தேசம். இங்கு மற்ற கோயில்களைப் போலல்லாமல் கொடிமரம் விலகி இருப்பது தனிச்சிறப்பு.
பொது தகவல்
இங்கு மூலவர் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் பஞ்சகேத விமானம்.
தரிசனம் கண்டவர்கள்
சிவபெருமான், கஜேந்திரன்
பிரார்த்தனை
மோட்சம் வேண்டி இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.
நேர்த்திக்கடன்
தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்படுகிறது.
தலபெருமை
நம்பாடுவானுக்காக நகர்ந்த கொடிமரம்
திருக்குறுங்குடியின் அருகே உள்ள மகேந்திரகிரி மலையடிவாரத்தில் வசித்து வந்த தாழ்ந்த வகுப்பை சேர்ந்தவர் நம்பாடுவான். கோயில் மூலவரான அழகிய நம்பியை பார்க்கமால் போனதற்காக மிகவும் வருத்தப்பட்டார். அப்போது பெருமாள் கொடிமரத்தை விலகி இருக்க சொல்லி நம்பாடுவானுக்கு தாமே தரிசனம் தந்தார். இங்கு மற்ற கோயில்களைப் போலல்லாமல் கொடிமரம் விலகி இருப்பதை நாம் இப்போதும் காணலாம்.
சைவ வைணவ ஒற்றுமை
சைவ கோயில்களில் பெருமாள் எழுந்தருளி இருப்பதும், வைணவ கோயில்களில் சிவன் எழுந்தருளி இருப்பதும் சைவ - வைணவ ஒற்றுமையை எடுத்துக்காட்டும். அதே போல் வைணவ கோயிலான இங்கு கோயிலின் உள்ளேயே சிவன் கோயிலும், பைரவர் சன்னதியும் அமைந்திருப்பது மிகச்சிறந்த அம்சமாகும்.
கோயில் மூலவரான அழகிய நம்பிக்கு பூஜை நடக்கும் போது, இங்குள்ள சிவனுக்கும் பூஜை நடந்து விட்டதா? என்பதை அறிய, சுவாமியின் பக்கத்தில் நிற்கும் அன்பர்க்கு குறையேதும் உண்டா? என்று பட்டர் கேட்பார். அதற்கு "குறை ஒன்றும் இல்லை' என பட்டர்கள் பதில் அளிப்பார்கள். இது இன்றும் நடைமுறையில் உள்ளது. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார், பெரியாழ்வார் என நான்கு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. நம்மாழ்வாராக அவதரித்ததும் இந்த அழகிய நம்பி தான். திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்க பெருமாளிடம் மோட்சம் கேட்டபோது, திருக்குறுங்குடி போ அங்கு மோட்சம் கிடைக்கும் என்றார். திருமங்கையாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்தது இத்தலம் தான். நின்ற, அமர்ந்த,நடந்த, கிடந்த, இருந்த என ஐந்து நிலைகளிலும் பெருமாள் காட்சி தருகிறார். குரங்கம் என்றால் பூமாதேவி. பூமாதேவி இத்தல இறைவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு குரங்கச் க்ஷேத்திரம் என்ற பெயர் உண்டு.
பெயர்க்காரணம்
நம்பியாற்றின் கரையில் அமைந்திருக்கும் இத்தலத்தின் தீர்த்தம் திருப்பாற்கடல். வராஹ அவதாரம் கொண்டு திருமால் தனது நாயகியுடன் இத்தலத்தில் தங்கி, தனது பயங்கர வராஹ ரூபத்தை குறுங்கச் செய்தமையால் இத்தலம் "குறுங்குடி' ஆனது. அதேபோல் திருமால் வாமன அவதாரம் எடுத்து ஆகாயத்தை அளந்த போது தனது திருவடி சதங்கையில் இருந்து உருவாக்கிய சிலம்பாறு இங்கு உண்டானதாக புராணம் கூறுகிறது.
தல வரலாறு
ஒரு சமயம் இரண்யாட்சகன் என்ற அசுரன் பூமியை கொண்டு செல்ல முயல்கிறான். அப்போது விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்கிறார். அப்போது பூமித்தாய் இந்த பூமியிலுள்ள ஜீவராசிகள் பகவானை அடைய வழி கூறுங்கள் என வராகமூர்த்தியிடம் கேட்க, இசையால் இறைவனை அடையலாம் என்கிறார். இதன் பலனாகவே ஒரு முறை பின்தங்கியவகுப்பை சேர்ந்த மனிதனுக்கும், பூதம் ஒன்றிற்கும் பிரச்னை ஏற்படுகிறது. பிரச்னை முற்றி மனிதனை சாப்பிட பூதம் விரும்புகிறது. அதற்கு அந்த மனிதன் பூதத்திடம், இன்று ஏகாதசி. எனவே கைசிகம் என்ற விருத்தத்தில் பகவானை பாடிவிட்டு வருகிறேன். அதன்பின் நீ என்னை உண்ணலாம் என்று கூறுகிறான். ஏகாதசி தினத்தில் இத்தலத்தில் பாடியதால் அந்த மனிதனுக்கும், பாடலை கேட்டதால் பூதத்திற்கும் மோட்சம் கிடைத்தது.
சிறப்பம்சம்
பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. இங்கு மற்ற கோயில்களைப் போலல்லாமல் கொடிமரம் விலகி இருப்பது தனிச்சிறப்பு.
அமைவிடம்
திருநெல்வேலியிலிருந்து மேற்கு திசையில் 42 கி.மீ தூரத்தில் உள்ளது திருக்குறுங்குடி. திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் பஸ்சில் வள்ளியூர் சென்று, அங்கிருந்து திருக்குறுங்குடி செல்லலாம்.
அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை, திருவனந்தபுரம், தூத்துக்குடி
தங்கும் வசதி : திருநெல்வேலி
திறக்கும் நேரம்
காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி
அருள்மிகு அழகிய நம்பிராயர் (வைஷ்ணவ நம்பி) திருக்கோயில் திருக்குறுங்குடி- 627 115. திருநெல்வேலி மாவட்டம்.