சீனிவாசன் அவதார முடிவில் அவதார தெய்வங்களின் நிலை

லட்சுமி அன்னை சிலையாக நின்ற சீனிவாசனிடம் "இப்படி சிலையாக நின்று விட்டால் நான் என்ன செய்வது என்று கேட்கிறார்? அதற்கு பதிலளித்த சீனிவாசன் கலியுகம் முடியும் வரையே நமக்கு இங்கு வேலை. அதன்பிறகு அசலை அடைத்துவிட்டு நாம் வைகுண்டம் சென்றுவிடலாம். நீ இனிமேல் என் மார்பில் தங்குவதில் உனக்கு எந்த தடையும் இருக்காது. பிருகு முனிவரால் மிதிக்கப்பட்ட என் மார்பு இப்போது பவித்திரமாகிவிட்டது. ஆகையால் உன் இடத்தில் நீ தாராளமாக வசிக்கலாம், என கூறி ஆசீர்வதித்தார்.

பின்னர் பத்மாவதியிடம், நீயும் லட்சுமியின் பிம்பம்தான். அவள் அவதாரத்தின் இன்னொரு வடிவம் நீ. இங்கிருந்து சற்று தூரத்தில் பத்மசரோவர் என்ற ஏரி இருக்கிறது. அந்த ஏரிக்கரையில் நீ வசிப்பாயாக. அங்கு வரும் பக்தர்களுக்கு செல்வத்தை வாரி வழங்குவாயாக! உன்னை அலமேலு என்று மக்கள் அழைப்பார்கள். அலமேலு என்றால் வாரி வழங்குபவள் என பொருள். உன் இருப்பிடம் அலமேலு மங்காபுரம் என அழைக்கப்படும். இங்கே வரும் பக்தர்கள் முதலில் உன்னை தரிசித்த பிறகே என்னை தரிசிக்க வரவேண்டும் என ஆணையிடுகிறேன். உனக்காக விஸ்வகர்மா பத்மசரோவர் ஏரிக்கரையில் ஒரு கோயில் நிர்ணயித்து உள்ளார். அங்கு சென்று நீ தங்குவாயாக! என்றார். பத்மாவதியும் அவரிடம் விடைபெற்று அலமேலுமங்காபுரம் சென்றாள். கோயிலுக்குள் சென்று சிலை ரூபமானாள்.

சீனிவாசனும் லட்சுமியும் சேஷாசலத்தில் தொண்டைமானால் எழுப்பப்பட்ட கோயிலுக்குள் சென்று சிலை வடிவமாயினர். இத்தனை விஷயமும் வகுளாதேவிக்கு தெரியாமல் போய்விட்டது. தன் மகன் சீனிவாசனும் மருமகள் பத்மாவதியும் இன்னும் வீடு வந்து சேரவில்லையே என அவள் கவலைப்பட்டாள். தனது மூத்த மகன் கோவிந்தராஜனிடம் சென்று, மகனே! சீனிவாசனையும் பத்மாவதியையும் அகத்தியரின் ஆஸ்ரமத்தில் விட்டு வந்தோமே! அவர்களை இதுவரை காணவில்லையே. ஆறு மாதங்கள் கடந்தும் ஏன் வராமல் இருக்கிறார்கள்? அவன் எங்கிருக்கிறான் என தேடிப் பிடித்து வா, என்றாள்.

கோவிந்தராஜன் அவளிடம் நடந்த விஷயங்களை எல்லாம் விளக்கினார். உன் மகன் சிலை வடிவமாகி விட்டான். பத்மாவதி பத்மசரோவர் கரைக்கு சென்றுவிட்டாள். லட்சுமிதேவி உன் மகனின் மார்பில் அடைக்கலம் புகுந்துவிட்டாள். நீ நம் வீட்டின் அருகில் உள்ள ஆனந்த நிலையத்திற்கு செல். அதன்கீழே உன் மகன் சிலையாக இருக்கிறான், என்றார். பதறிப்போன வகுளாதேவி ஆனந்த நிலையத் திற்குள் சென்று சிலையாக நின்ற தன் மகனைக்கண்டு கதறிக் கண்ணீர் வடித்தாள்

அப்போது சிலையினுள் இருந்து சத்தம் எழுந்தது. அம்மா ! தாங்கள் என் நிலைக்காக கவலை கொள்ளக் கூடாது. லட்சுமியைத் தேடி பூலோகம் வந்த என் செயல்பாடுகள் முடிந்து விட்டன. இனி என் அண்ணா கோவிந்தராஜன் இங்குள்ள நிதிநிலவரங்களைக் கவனித்துக் கொள்வார். நீ துளசிமாலையாக மாறி, என் கழுத்தை அலங்கரிப்பாய். எனக்கு இங்கே தினமும் துளசி அர்ச்சனை நடக்கும், என்றார். தன் மகனுடன் துளசிமாலையின் வடிவில் வசிக்கப்போவது கண்டு வகுளாதேவி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. சற்றுநேரத்தில் அவள் துளசிமாலையாகி சீனிவாசனின் கழுத்தை அலங்கரித்தாள்.

கோவிந்தராஜன் சீனிவாசனிடம், தம்பி ! உனக்கு குவியும் காணிக்கையை அளந்து அளந்து என் கை சலித்து விட்டது. எவ்வளவு அளந்தாலும் குறைந்த பாடில்லை எனக்கு ஓய்வுதேவை. நான் என்ன செய்யட்டும் ? என்றார். அண்ணா! நீங்கள் அளந்தாலும் அளக்காவிட்டாலும் தங்கள் கைகளில் தனரேகை ஓடுவதால் இங்கே செல்வம் குறையப் போவதில்லை. தாங்கள் இனி அளக்கும் பணியைச் செய்ய வேண்டாம். இந்த மலையடிவாரத்துக்குச் சென்று ஓய்வெடுங்கள். தங்களை வணங்குவோர் எல்லாரும் எல்லா செல்வங்களையும் அடைய தாங்கள் கருணை செய்ய வேண்டும், என்றார் சீனிவாசன். கோவிந்தராஜனும் மலையடிவாரத்துக்கு வந்து ஓரிடத்தில் பணம் அளக்கும் மரக்காலை தலைக்கு வைத்து சயனித்து விட்டார். அந்தக் கோயில் தான் திருப்பதியில் தற்போதுள்ள கோவிந்தராஜப் பெருமாள் கோயிலாகும். ஆரம்பத்தில் இவ்வூர் கோவிந்தராஜ பட்டணம் என்று தான் அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் தான் திருப்பதி என மாறியது. இவ்வாறாக சீனிவாசனின் குடும்பத்தினர் ஒவ்வொரு இடத்தில் தங்க, பக்தர்கள் பலர் அவரைத் தரிசிக்க குவிந்த வண்ணம் இருந்தனர்.

திருப்பதி ஆலய வழிபாட்டை நெறிமுறைப்படுத்திய ஹாதிராம் பாபாஜி

ஒருமுறை, வடநாட்டைச் சேர்ந்த பாவாஜி என்ற பக்தர் திருமலைக்கு வந்தார். சீனிவாசனை உளம் குளிர சேவித்த அவருக்கு அவ்வூரை விட்டு செல்ல மனமில்லை. அங்கேயே ஓரிடத்தில் ஆஸ்ரமம் அமைத்து தங்கிவிட்டார். தினமும் புஷ்கரணியில் மூன்று முறை குளியல், ஏழுமலையானின் தரிசனம் என ஏக அமர்க்களமாக பக்தி செலுத்தினார்.

பக்தன் பாவாஜியை பகவான் பாலாஜிக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. ஒரு நாள், பாவாஜி ஆஸ்ரமத்தில் அமர்ந்திருந்த போது, கட்டம் வரைந்து அதன் முன் அமர்ந்து, மறுபக்கம் ஏழுமலையான் அமர்ந்திருப்பது போல பாவனை செய்துகொண்டு, சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தார். அப்போது, ஒரு அதிசயம் நிகழ்ந்தது. பாவாஜி முன்னால் பேரொளி தோன்றியது. அது கண்ணைப் பறித்ததால் பாவாஜியால் அதைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அவ்விடத்தை விட்டு எழுந்தார். படிப்படியாக ஒளி குறைந்ததும், அங்கே சீனிவாசனின் திவ்யமான சிலை ஒன்று இருப்பதைப் பார்த்தார். அவருக்கு பெரும் ஆனந்தம்.

சீனிவாசா ! இது என்ன அதிசயம் ! என்னைத் தேடி நீ வந்தாயா ! அதிருக்கட்டும் ! சிலை வடிவில் நீ இங்கு வந்துள்ளதன் மூலம் நான் உனக்கு தினமும் பூஜை செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன். ஆனால், ஏன் நேரில் காட்சி தரவில்லை. உனக்காக இவ்வளவு நேரமும் சொக்கட்டான் ஆடினேனே ! ஒருநாளாவது என்னோடு நீ விளையாட வரக்கூடாதா ? என்று உளமுருகி கண்ணீர் வடித்தார். அப்போது, அந்தச் சிலையில் இருந்து சீனிவாசன் வெளிப்பட்டார். பாவாஜி ! என்று அழைத்தார். பாவாஜிக்கு தன் கண்களை நம்பவே முடியவில்லை. ஆக, சாட்சாத் பரப்பிரம்மமான நாராயணன், சீனிவாசனின் வடிவில் அங்கே இருந்தார்.

வா, பாவாஜி ! சொக்கட்டான் ஆடலாம், என்றார். பாவாஜி அவரது பாதங்களில் விழுந்து ஆசிபெற்று, உன்னைப் பார்த்ததன் மூலம் பிறந்த பயனை அடைந்தேன். வா விளையாடலாம், என்று அவரது கையைப் பிடித்து அமர வைத்தார். இருவரும் விளையாடினர். பக்தன் தோல்வியடைவதை ஆண்டவன் என்றுமே விரும்பமாட்டான். சீனிவாசன், தன் நண்பனுக்காக ஆடத்தெரியாதவர் போல நடித்து, ஆட்டத்தில் கோட்டை விட்டார். பாவாஜி ! நீ இந்த விளையாட்டில் மகா சமர்த்தன். உன் அளவுக்கு என்னால் விளையாட முடியாதப்பா, என்று தன் தோல்வியை ஒப்புக்கொண்ட சீனிவாசனிடம் பாவாஜி, பகவானே ! தாங்கள் தினமும் இந்த ஆஸ்ரமத்துக்கு வர வேண்டும். உங்களோடு நான் சொக்கட்டான் ஆடி மகிழ வேண்டும் என்றார்.

சீனிவாசனும் ஒப்புக்கொண்டு, தினமும் பாவாஜியின் இல்லம் வர ஆரம்பித்தார். இவ்வாறாக நல்ல நண்பர்களாக மாறிவிட்டனர் அவர்கள். பக்தர்களைச் சோதித்துப் பார்ப்பதில் சீனிவாசனுக்கு அலாதிப்ரியம். ஒருநாள், சீனிவாசன் விளையாட வந்தார். தன் கழுத்தில் இருந்த முத்துமாலையைக் கழற்றி அங்கேயே வைத்துவிட்டு சென்று விட்டார். பகவான் மாலையைக் கழற்றி வைத்து விட்டு சென்றுவிட்டாரே, இதைக் கொண்டு போய் கொடுத்து விடலாம் என எண்ணிய பாவாஜி மாலையுடன் திருமலையிலுள்ள சீனிவாசனின் கோயிலுக்குள் சென்றார்.

அங்கே ஒரே களேபரமாக இருந்தது. ஐயையோ ! சீனிவானின் கழுத்தில் இருந்த மாலையைக் காணவில்லையே ! யார் திருடினார்களோ என்று அர்ச்சகர்கள் குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர். அதிகாரி ஒருவர் கையைப் பிசைந்தபடி நின்றார். அப்போது, பாவாஜி காணாமல் போன மாலையுடன் கோயில் பக்கமாக வர, பிடியுங்கள் அவனை ! அந்த திருடனின் கையில் சுவாமியின் மாலை இருக்கிறது, என்று கத்தினர் அர்ச்சகர்கள். அங்கே நின்றவர்கள் ஓடிச் சென்று பாவாஜியைப் பிடித்து மாலையைக் கைப்பற்றினர். அத்துடன் அவரை நையப் புடைத்தார்கள். பாவாஜி கதறினார். பாலாஜி!

" சீனிவாசா ! நான் திருடனா ! என் இடத்துக்கு வந்து என்னோடு சொக்கட்டான் ஆடியது இப்படி என்னை சோதிக்கத்தானா ? என் உயிரை எடுத்துக்கொள். ஆனால், பிறர் பொருளைக் கவர்ந்தவன் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக்கி விடாதே, என்று ஓங்கி குரல் கொடுத்தார். பகவான் இந்த பாமரனோடு சொக்கட்டான் ஆட வந்தாராம்... ஆஹ்ஹ்ஹா... என்று ஏளனச் சிரிப்பு சிரித்தனர் அங்கிருந்தோர். இந்தப் பொய்யனை அரசர் கிருஷ்ணதேவராயரிடம் இழுத்துச் செல்லுங்கள், என்று சிலர் குரல் கொடுக்க அவர்கள் பாவாஜியை இழுத்துச் சென்றனர்.

மன்னர் கிருஷ்ணதேவராயர் மகாநீதிமான். எதையும் எளிதில் விசாரிக்காமல் செய்யமாட்டார். அது மட்டுமல்ல, அவரும் பெருமாள் பக்தர். பெருமாளின் திவ்யலீலைகளை அவர் அறிவார். தன் முன்னால் நிறுத்தப்பட்ட பாவாஜியின் முகத்தைப் பார்த்த அவருக்கு, இந்த மனிதன் தவறு செய்திருக்க மாட்டார் என்றே தோன்றியது. இருப்பினும், ஏழுமலையானின் ஆரத்துடன் பிடிபட்டதால் விசாரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்.

பாவாஜி! உம் மீது திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இதுபற்றி என்ன சொல்கிறீர்! என்று அதட்டலுடன் கேட்டார். அரசே! இது சுத்தப்பொய். பெருமாள் என்னுடன் தினமும் சொக்கட்டான் ஆட வருவார் என்பது நிஜம். அவரே இந்த மாலையை என் ஆஸ்ரமத்தில் கழற்றி வைத்து விட்டு வந்துவிட்டார். அதை அவரிடம் சேர்க்கவே வந்தேன். இதற்கு அவரும் நானும் மட்டுமே சாட்சி. அந்த பரமாத்மாவே வந்து சாட்சி சொன்னால் தான் உண்டு. தாங்கள் எனக்கு மரணதண்டனை விதித்தாலும் அதற்காக நான் கலங்கமாட்டேன். ஏனெனில், மரணம் என்றும் நிச்சயமானது. இறைவன் குறிப்பிட்ட நாளில் அது வந்தே தீரும். ஆனால், கெட்ட பெயருடன் நான் மரணமடைந்து விட்டால், என் மீதான களங்கம் உலகம் உள்ளளவும் பேசப்படும். அதை நினைத்தே கலங்குகிறேன், என்றார். பாவாஜியின் பேச்சு தேவராயருக்கு நம்பிக்கையைத் தந்தது.

சரி, பாவாஜி! நீர் பாலாஜியின் நண்பர் என்பது உண்மையானால் உமக்கு ஒரு பரீட்சை வைக்கிறேன். ஒரு வண்டி கரும்பை நிலவறையில் வைத்திருக்கிறேன். நீர் சொல்வது உண்மையானால், அவற்றை நீ முழுமையாகத் தின்று விட வேண்டும். புரிகிறதா? என்று சொல்லி விட்டார். ஏவலர்கள் பாவாஜியை நிலவறைக்கு இழுத்துச் சென்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரும்புகளை உடைய வண்டியின் முன்னால் அமர வைத்து விட்டனர்.

ஆயிரம் கரும்புகளை வரிசையாக ஒருவனால் எப்படி உண்ண முடியும்? ஒரு துண்டு கரும்பைத் தின்பதற்குள்ளேயே சலிப்பு தட்டிவிடும். இது நடக்கிற காரியமா? பாவாஜி கண்ணீர் வடித்தபடியே, பரந்தாமா! உன் நண்பனை, உன் பக்தனை நீ நடத்தும் விதம் இதுதானா? எந்தப் பாவமும் செய்யாத என்னை சிக்கலில் மாட்டிவிட்டாயே! இது நாடகமா? நிஜமா? விரைவில் வா! உன் மீது பாரத்தைப் போட்டு விட்டேன். என் மீதான களங்கத்தைப் போக்கு, என்றார். அழுதபடியே அவர் தூங்கியே விட்டார்.

அப்போது ஏழுமலையான் ஒரு யானையின் வடிவில் நிலவறைக்குள் வந்தார். விடிவதற்குள் ஆயிரம் கரும்புகளையும் தின்று தீர்த்தார். அத்துடன் தும்பிக்கையை நீட்டி பாவாஜியை எழுப்பி ஆசிர்வாதம் செய்தார். பின்னர் பிளிறினார். நிலவறையில் யானையின் பிளிறல் சப்தம் கேட்டதும், காவலர்கள் ஓடி வந்து பார்த்தனர். கரும்பு முழுமையாக காலியாகி விட்டிருந்தது. குறுகிய வாசல் கொண்ட அந்த நிலவறைக்குள் யானை எப்படி புகுந்தது? இதென்ன ஆச்சரியம், என அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

உடனடியாக கிருஷ்ண தேவராயரிடம் சென்று, அரசே! கேளுங்கள். பாவாஜியை அடைத் திருந்த நிலவறைக்குள் ஒரு யானை எப்படியோ புகுந்திருக்கிறது. அது எப்படி உள்ளே வந்தது என்பதை நாங்கள் அறியமாட்டோம். ஆனால், நிகழ்ந்திருப்பது நிச்சயமாக அதிசயம். அங்கிருந்த ஒரு வண்டி கரும்பும் காலியாகி விட்டது, என்றனர். தேவராயர் அவசர அவசரமாக நிலவறைக்குள் வந்தார். பாவாஜியை அணைத்துக் கொண்டார்.

பாவாஜி! தாங்கள் சொன்னது நிஜமே! உங்களை விட உத்தமர் உலகில் இல்லை. அந்த சீனிவாசனே யானையாக வந்து கரும்புகளை உங்களுக்காக தின்றிருக்கிறார் என்றால், உங்கள் இருவரிடையே உள்ள நட்பை என்னவென்று புகழ்வேன்! எங்களை மன்னிக்க வேண்டும். இனி, நீங்களே இந்தக் கோயிலின் அதிகாரி. கை சுத்தமானவர்களே கோயிலில் அதிகாரியாக இருக்க தகுதியுடையவர்கள், என்றார்.

பாவாஜியும் அரசரின் வேண்டுகோளை ஏற்று, ஏழுமலையான் கோயிலின் நிர்வாக அதிகாரியானார். ஏழுமலையானுக்கு தினமும் பணிவிடை செய்தார். அவரது நினைவாக திருமலையில் கோயிலுக்கு தென்புறம் ஒரு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் அந்த மண்டபத்தை தரிசித்து செல்கிறார்கள். மலை உச்சியில் பாலாஜியும், பாவாஜியும் விளையாடிய மண்டபம் இருக்கிறது.

ஏழுமலையானை எல்லாருமே பணக்கார சுவாமி என்பர். ஆனால், அவர் கடன்காரர் மட்டுமல்ல! எளிமையையே அவர் விரும்புவார். திருப்பதி அருகிலுள்ள சுத்தவாகம் என்ற கிராமம் உள்ளது. அங்கு தன் மனைவி மாலினியுடன் வசித்த பீமன் என்ற மண்பாண்டத் தொழிலாளி, பானைகள் செய்து விற்று வந்தார். அவர் ஏழுமலையானின் தீவிர பக்தர். மண்ணால் செய்யப்பட்ட புஷ்பங்களைத் தயாரித்து, தன் வீட்டில் இருந்த வெங்கடாசலபதி சிலைக்கு அணிவித்து வழிபட்டு வந்தார். அவரது நிஜ பக்தியைப் பாராட்டும் விதத்தில் ஏழுமலையான் அந்த மண்சிலையில் பிரசன்னமானார். பீமனே! உன் பக்தி அபரிமிதமானது. என் கோயிலில் இனி எனக்கு மண்பாண்டத்திலேயே நைவேத்யம் செய்ய வேண்டும், என்று அருளியதுடன் தேவலோகத்தில் இருந்து விமானம் வரவழைத்து அந்த தம்பதியரை வைகுண்டத்தில் தங்க அனுப்பி வைத்தார்.

ஏழுமலையான் குடியிருக்கும் மலையும் சிறப்பு மிக்கது. ஆதிசேஷன் வடிவத்தில் இம்மலை இருப்பதால் சேஷாசலம் என்றும், அந்த மலையில் வேதங்கள் இருப்பதால் வேதாசலம் என்றும், பூலோகத்திற்கு இந்த மலையைக் கருடன் கொண்டு வந்ததால் கருடாசலம் என்றும், விருக்ஷன் என்ற அசுரன் இங்கு மோட்சம் பெற்றதால் விருக்ஷõத்ரி என்றும், அஞ்சனாதேவி தவம் செய்து அனுமனைப் பெற்றெடுத்த தலம் என்பதால் அஞ்சனாத்ரி என்றும், ஆதிசேஷனும். வாயுபகவானும் தங்கள் பலத்தை பரிசோதிக்க தேர்ந்தெடுத்த மலை என்பதால் ஆனந்தகிரி என்றும், பாவங்களைப் போக்கும் மலை என்பதால் வேங்கடாசலம் என்றும் அழைக்கப்படுகிறது.
திருப்பதி பெருமாளை வணங்குபவர்களின் பாவம் நீங்கும். வெங்கடேச மகாத்மியம் சரிதத்தைப் படித்தவர்களின் இல்லங்களில் செல்வம் பெருகும்.

ஓம் நமோ நாராயணாய! கோவிந்தனே சரணம்!
திருப்பதி ஏழுமலையான் திருவடிகளே சரணம்
ஓம் நமோ வெங்கடேசாய ஓம் நமோ நாராயணாய