ஆலிலையில் ஸ்ரீகிருஷ்ணர் | Aalilai kannan (kannan on the Banyan leaf)

Aalilai kannan
மரங்களிலேயே மிக உயர்வு பெற்றது, ஏன்.. தாவர வகைகளிலேயே சிறப்பு வாய்ந்தது ஆலமரம் என்று சொன்னால் மிகையாகாது. ஆல மரத்தின் நிழலில் அமர்ந்துதான் தட்சிணாமூர்த்தி ஞானம் அருள்கிறார்கள். மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற, பிதுர் தர்ப்பணத்திற்குரிய பிண்டம் வைக்கும் சடங்கை ஆலமரத்தின் கீழ் அமர்ந்து செய்வது பெரும் புண்ணியத்தைப் பெற்றுத் தரும். இப்படி ஞானத்தையும், கர்மத்திற்குரிய பலனையும் தரக் கூடிய ஆலமரத்தின் இலையில் ஆலிலைக் கண்ணனாக, கண்ணபிரான் படுத்துக் கொண்டார்.

இந்த ஆலிலைக்கு ஒரு விசே‌ஷமான சக்தி உண்டு. அது வாடினாலும் கூட நொறுங்கிப் போகாது. சருகானாலும் மெத்தை போன்று காணப்படும். இதுவும் ஆலியை கண்ணன் தேர்வு செய்ய ஒரு காரணமாக புராணங்கள் கூறுகின்றன. ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால், அது இழந்த பச்சையை மீண்டும் பெறும். கண்ணன் வாட்டம் காணாத ஆத்மா என்பதை இதன்மூலம் நிரூபிக்கிறார்.

கண்ணன் ஆலிலையில் படுத்தபடி மிதக்கும் கண்ணனின் வடிவம், ஒரு தத்துவார்த்த சிந்தனையை உதிர்க்கிறது. ‘பக்தர்களே! எதற்கும் கலங்காதீர்கள். நீங்கள் எப்போதும் என்னைப் போல் குழந்தை உள்ளத்துடன் இருந்தால், உலக வாழ்க்கை என்னும் கொடுமையான அலையால் தாக்கப்படமாட்டீர்கள். குடும்பம் என்னும் சம்சாரக் கடலில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒரு விளையாட்டாய் எடுத்துக் கொண்டு, என்னைப் போல் ஆனந்தமாய் இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்’ என்பதே அந்த தத்துவம்.

கிருஷ்ணர் காலின் கட்டை விரலை வாயில் வைத்திருப்பது ஏன்

மாந்தாதா என்ற சூரிய வம்சத்து ராஜா பிறந்த போது பால் கொடுப்பதற்கு அன்னை இல்லாததால் அழுது கொண்டிருந்தார். இதனை கண்ட இந்திரன் மனமிரங்கி, ''நான்கொடுக்கிறேன் மாந்தாதா'' என்று சொல்லி குழந்தையின் கை கட்ட விரலை எடுத்து வாயினுள் வைத்தார்.

மனித சரீரத்தில் ஒவ்வொரு அங்கத்திலும் ஒரு தேவதை வசிக்கிறது. அதில் கைக்குரிய தேவதை இந்திரன். தான் சாப்பிடும் அமிர்தத்தை கையின் கட்டை விரலின் மூலம் குழந்தையின் வாய்க்கு போகும்படி இந்திரன் அனுக்கிரஹம் செய்தார். அதனால்தான் அநேக குழந்தைகள் பசியின்போது வாயில் விரல் இட்டுக் கொள்கிறது.

ஆனால் இங்கு ஸ்ரீகிருஷ்ணர் வாயில் போட்டுக் கொண்டிருப்பது கை கட்டை விரல் அல்ல. கால் கட்டை விரலை! அவரது சரீரம் முழுவதும் அமிர்த மயமாக இருப்பதால், விஷ்ணு ஸஹஸ்ர நாமம் அவரை 'அமிர்த வபு' என்கிறது.

இந்திராதி தேவர்கள் கையினால் செய்வதை, தாம் காலால் செய்ய முடியும் என்று காட்டுவதைப்போல கால் விரலை வாயில்போட்டு கொண்டிருக்கிறார்.
இடது கட்டை விரல்தான் அவர்வாயில் போட்டிருப்பது. நடராஜனது தூக்கிய திருவடியும் இடதுதான்! சந்திரன் அமிர்தத்தை பெருக்குகிறவன். யோக சாதனை செய்வதன்மூலம் உடலின் இடது பாகத்தில் உள்ள சந்திரநாடியில் அமிர்தம் பெருகும்.

அந்த சந்திர நாடியில் வெளிப்படும் அமிர்தத்தைப் பருகுவதற்காக ஸ்ரீகிருஷ்ணர் இடது கால்கட்டை விரலை ருசிக்கிறார்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!