Sri Srinivasa Perumal Temple,Singapore
ஆலய வரலாறு : சிங்கப்பூர் தேசத்தில் அமைந்துள்ள மிகப் பழைமையான ஆலயம் தான் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம். இந்நாட்டின் மிகப் பழைமையான இந்து ஆலயங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகின்றது. இது சிங்கப்பூரில் “லிட்டில் இந்தியா” என்னும் இடத்தில் சிரங்கூன் சாலையில் அமையப் பெற்றிருக்கிறது. இந்த ஆலயத்தின் 20 அடி உயரம் கொண்டுள்ள ராஜகோபுரத்தில் விஷ்ணு பெருமானின் பல்வேறு அவதாரங்களை குறிக்கின்ற அற்புதமான மிக நுண்ணியதாய் சித்தரிக்கப்பட்டுள்ள சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த ஆலய வளாகமானது 1855-ம் ஆண்டிலேயே விஷ்ணு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட போதிலும், ஐந்து நிலைகளைக் கொண்ட 20 அடி ராஜகோபுரம் பின் வந்த காலங்களில் அதாவது 1966-ம் ஆண்டில் தான் கட்டி முடிக்கப்பட்டது. இந்த ராஜகோபுரம் கட்டி முடிப்பதற்கு பல லட்சம் டாலர்கள் செலவானதாக சொல்லப்படுகின்றது. சிங்கப்பூர் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் ஆலய பக்தர்களில் ஒருவரான பி.கோவிந்தசாமி பிள்ளை என்பவர் ஆலய நிர்மாணிப்பு பணிகளில் மிகுந்த ஈடுபாடுகளை கொண்டிருந்தார். ஆலயப் பணிகளை விரைவில் முடிப்பதற்கு சொந்த முயற்சியில் பெரும் பொருளை வழங்கியுள்ளார் இவர். இவருடைய மற்றும் இவருடைய புத்திரர்களின் பரோபகார நடவடிக்கைகள் இன்றும் இதர பக்தர்களால் நினைவில் வைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம் அமைந்திருக்கும் இடமானது ஒரு காலத்தில் நீர் நிறைந்த குளங்களாகவும் காய்கறி தோட்டங்களாகவும் விளங்கின. இவற்றின் அருகில், ஆலயத்தின் மிக அருகாமையிலேயே சிறிய நீரோடை ஒன்றும் இருக்கின்றது. இது ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்களுக்கு வழிபாட்டிற்கு முன்பாக தம்மை தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது. இந்த சிறிய நீரோடையின் காரணமாக ஆலயத்தில் அமையப் பெற்றுள்ள கிணற்றிலும் தண்ணீர் ததும்புகின்றது. துளசி மாடம் ஒன்றும் ஆலயத்தில் இருக்கின்றது. இவ்வாலயத்தில் பிரதான தெய்வமாக விஷ்ணுவும் அவருடைய மனைவியரான லட்சுமியும் ஆண்டாளும் மற்றும் கருடனும் காணப்படுகின்றார்கள். பெருமாள் ஆலயமாக இருந்த போதிலும் விஷ்ணுவின் அவதாரங்களில் முக்கியமானதாக போற்றப்படும் கிருஷ்ணவதாரத்திற்கே இந்த ஆலயம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Sri Srinivasa Perumal Temple,Singapore
சிங்கப்பூர் ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயத்தில் அருள்பாலிக்கும் பெருமாளானவர் கிருஷ்ணராய் போற்றப்படுவதால் அவரின் திருவுருவம் ஆகாச வண்ணமான நீல நிறத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இங்குள்ள லட்சுமியும் ஆண்டாளும் முறையே செல்வ வளத்திற்கும் அழகிற்கும் பிரதிநிதித்துவம் பெறுகின்றார்கள். ஆலயத்தின் கருவறைக்கு மேல் உள்ள விமானமானது வண்ண மயமான வட்ட வடிவத்தில் ஒன்பது கோள்களையும் சித்தரிக்கின்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயமானது 1993-ம் ஆண்டில் ஒரு சங்க அமைப்பாக பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த ஆலயம் ஒரு தேசிய சின்னமாக 1978-ம் ஆண்டிலேயே பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. சிங்கப்பூரின் லிட்டில் இந்தியாவை சுற்றுலா பயணிகள் பார்க்க வரும் போது இந்த ஆலய வளாகத்தை பார்வையிடவில்லை என்றால் அவர்களின் சுற்றுலா பயணம் முழுமை அடையாது என்றே சொல்லப்படுகின்றது.

ஸ்ரீனிவாச பெருமாள் ஆலய கட்டிட அமைப்பானது தென்னிந்திய கட்டிட கலை நிபுணத்துவத்தை தழுவியதாகவே இருக்கின்றது. இந்த ஆலயத்தில் ஆச்சரியப்படும்படியான ஓவியங்களும், சிற்பங்களும் அதிகளவில் இடம் பெற்றுள்ளன. நுழைவு வாயிலை ஒட்டிய சுவர்களில் கடவுள்களின் சிற்பங்கள் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தில் பிரமோற்சவம், வைகுண்டஏகாதசி மற்றும் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் செய்யப்படுகின்றன. சிங்கப்பூரில் வாழ்கின்ற இந்து பெருமக்களுக்கு இந்த ஆலய வளாகம் ஒரு கலை மற்றும் பண்பாட்டு மையமாகவும் வழிபாட்டு தலமாகவும் விளங்குகின்றது என்றால் அது மிகையாகாது.