அரங்கனின் தினசரி அமுதுபடிகள் | Aranganathan's Daily Menu

Aranganathan's Daily Menu
பெருமாள் பிரசாதம்

அரங்கனின் தினசரி அமுதுபடிகள் – ( பிரசாதம் )

ஸ்ரீ ரங்கம் ரங்க நாதனுக்கு தினமும் ஆறு கால அமுதுபடி சமர்ப்பிக்கப்படுகிறது

தினமும் நடைபெறும் அமுது படிகளில் எந்த வேளையில் என்னென்ன பிரசாதங்கள் பெருமாள் அமுது செய்கிறார் என்பதை பற்றி விரிவாக அறிவோம்.

நண்பர் ஒருவர் நான் பெரியபெருமாள் போல் தினமும் காலையில் சப்பாத்தி தான் எடுத்துக் கொள்கிறேன் என்று நகைச்சுவையாக கூறினார்.

உமக்கு பெரிய பெருமாளின் அமுது படிகளில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெரிந்திருக்கிறது போலும்!! என்று கூறினேன்.

பெருமாள் அகடித கடனா சாமர்த்தியம் படைத்தவர். அதாவது சேராத இரண்டு விஷயங்களை சேர்க்கும் வல்லமை படைத்தவர்.

இந்த வல்லமையை நமக்கு விளக்கவே கூரத்தாழ்வான் அதிமானுஷ ஸ்தவம் என்ற ஸ்லோகத்தை அருளியுள்ளார்.

பொதுவாக ஒருவர் சில ஆண்டுகள் வெளி மாநிலத்திலோ/நாட்டிலோ இருந்து விட்டு திரும்பி இருந்தால் அந்த இடத்தின் உணவு பழக்கம் சற்று ஒட்டிக் கொள்ளும்

இது நாம் அறிந்த ஒரு விஷயம்.

அழகிய மணவாளன் டெல்லி அரசனின் மகள் பீபி ராணியிடம் அந்தப்புரத்தில் சில காலம் இருந்து திரும்பியதனால் அவர்களது உணவு பழக்கம் அரங்கனுக்கு சற்று சேர்ந்து உள்ளது.

இது உணவுப் பழக்கம் என்று சொல்வதை விட, ஒரு பக்தையின் குரலுக்கு பெருமாள் அருள்பாலிக்கிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் அரங்கன் தினமும் முதலில் அமுது செய்வது ரொட்டியை தான்!!

திருவரங்கநாதனுக்கு தினப்படி 3 வேளை திருவாராதனம் & 6 வேளை அமுது படிகளும் சமர்ப் பிக்கப் படுகின்றன.

காலை முதல் பிரசாதம்:

கோதுமை ரொட்டி (பெருமாளுக்கு 11, தாயாருக்கு- 6),

வெண்ணை, கும்மாயம் (குழைந்த பாசிப்பருப்பு),

பச்சைப் பால் (2 லிட்டர்).

ரொட்டியும் & பருப்பும் வடநாட்டு உணவு.
துலுக்க நாச்சியாருக்காக முதல் அமுதாக நடை பெறுகிறது.

அரங்கனுக்கு ரொட்டி செய்யப் படும் முறை:

வெல்லத்தை நைசாகத் தேய்த்து இழைக்கணும். அந்த ஈரப்பதத்தோட கோதுமை மாவு போட்டு பிசையணும்.

வெல்லமும் மாவும் இரண்டறக் கலந்ததும் உருண்டைகளாகப் பிடிச்சு கையில தட்டணும். அதனை நெய்யில் போட்டு எடுக்கணும்.

இந்த அமுது படிகள் முடிந்த பின்னர் காலை திரு ஆராதனம் நடைபெறும்.

காலை இரண்டாவது பிரசாதம்: பொங்கல், வடிசல் (சாதம்), தோசை, புத்துருக்கு நெய் (தினமும் புதிதாக மண்பானையில் காய்ச்சப்பட்டது) கூட்டு, கறியமுது, ஊறுகாய் & ஜீரண மருந்து – சுக்கு, வெல்லம், சீரகம் & ஏலக்காய்.

இதுதவிர சில அதிகப் படி தளிகைகள்.

வெண் பொங்கல் – பாசிப்பருப்பு, பச்சரிசி & நெய் மட்டும் சேர்த்துக் கொள்ளப் படும்.

பச்சரிசி உளுந்து தோசை – பெருமான் அமுது செய்யும் தோசை சற்று தடிமனாக இருக்கும்.

சாதாரண மனிதர்களாகிய நம்மைப் போல் இருப்பவர்களால் காலை உணவாக ஏதேனும் ஒன்றை தான் எடுத்துக் கொள்ள முடியும்.

ஆனால் அரங்கனோ பெரும் தெய்வம்!! அதனால் தான் ரொட்டி மற்றும் பொங்கல் இரண்டையும் ஒரு வேளையில் அமுது செய்கிறார்.

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் இந்த அகடித கடனா சாமர்த்தியம்.

காலை தணிக்கைகள் அமுது செய்யப் படும் நேரம்: 7.45 – 9.15

மதியம் பெரிய அவசரம் அதனுடன் திருவாராதனம்: வடிசல் (சாதம் – 18 படி ) கூட்டு, கறியமுது, சாத்தமுது (தக்காளி சேர்க்காமல் புளி, மிளகு, சீரகம்), திருக்கண்ணமுது (அரிசி, பாசிப்பருப்பு, பால் & வெல்லம்) மற்றும் அதிரசம்-11
கோயிலோ பெரிய கோயில்!

பெருமாளோ பெரிய பெருமாள்!

தளிகையோ பெரிய அவசரம்!!

பெரிய அவசரத்தில் 50 ஆண்டுகள் முன்னர் வரை கூட்டு, கரியமுது என்பது செடி 5 & கொடி 5 என்ற வகையில் 10 காய்கறிகள் இருந்ததாக சொல்லப்படுகிறது.

தற்போதைய காலங்களில் ஒரு கறியமுது மற்றும் ஒரு கூட்டு என்று குறைந்திருப்பதை நாம் அறிகிறோம்.

கொடியில் காய்க்கும் காய் கறிகள் – அவரை, புடலை, பூசணி, பாகற்காய், வெள்ளரிக்காய்.

செடியில் காய்க்கும் காய்கறிகள் – கொத்தவரை, வாழைக்காய் & கிழங்கு வகைகள்

குறிப்பு:

ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபத்துக்கு அருகே, அமைந்து உள்ள,”மதுரகவி திருநந்தவனத்தில்” இருந்து மதுரகவி சுவாமிகளால் மேற் கொள்ளப்பட்ட ஊறுகாய் சேவை நடந்து வருகிறது.

பெருமாளுக்குத் தினமும் 10 எலுமிச்சம் பழங்களும் தாயாருக்கு 5 எலுமிச்சம் பழங்களும் நந்த வனத்தில் இருந்து கொடுக்கப்பட்டு வருகின்றன.

மாலை ஷீரான்னம் தளிகை:

ஷீராண்ணம் (அரை தித்திப்பாக இருக்கும் பொங்கல்), கறியமுது, திருமால் வடை, அப்பம், தேன் குழல், தோசை மற்றும் அதிகப்படி தளிகைகள்
Aranganathan's Daily Menu
மேலே படத்தில் உள்ளது
திருமால் வடை, தேன்குழல் , அப்பம்

பெருமாளுக்கு அமுது செய்யப்படும் பணியாரங்கள் –

பெரிய அப்பம் (6), பெரிய வடை (11) & பெரிய தேன்குழல் (6) ஆகியவை எண்ணிக்கை குறைவு தான்.

தாயாருக்கு மட்டும் ஷீராண்ணத்துடன், பச்சரிசிப் புட்டு தினமும் மாலையில் அமுது செய்யப்படும்.

இரவு செலவு சம்பா திரு ஆராதனம்:

வடிசல் (சாதம்) மற்றும் பாசிப்பருப்பு.
இந்த திரு ஆராதனத்தில் செல்வ பெருமாளுக்கு அருகில் இருக்கும் சின்ன பெருமாள் எழுந்தருளி பலி சாதித்து வருவதால் இதற்கு செல்வர் சம்பா என்ற பெயர் ஏற்பட்டது.

காலப்போக்கில் இதுவே செலவு சம்பா என்று மருவியது.

இரவு கடைசி தளிகை

அரவணை & சுண்டக் காய்ச்சிய பசும்பால்
அரவணை (ஒரு விதமான சக்கரை பொங்கல்), கறியமுது மற்றும் காய்ச்சிய பால்.

ஸ்ரீரங்கவாசிகள் பலரும் இந்த அரவணை பிரசாதம் விரும்பிகள்.

இரவு 10 முதல் 11 மணி ஆகும். (பக்கத்தி்ல் உள்ள ஜீயபுரம் செல்லும் நாளில் மட்டும் மாலை 6 மணிக்கு அமுது செய்வார்).

தாயார் சன்னதியில் அரவணையுடன் கீரை சேர்த்து செய்யப்படும் !

இந்தப் பால் காய்ச்சப் படும் முறை ஒரு சிறப்பான முறை.

அதாவது மண் பானையில் முதலில் தண்ணீரை ஊற்றி காய்ச்சி அதன் மூலம் பானை சற்று இறுகி விடும்.

அதன் பின்னர் பச்சை பாலை சுண்டக் காய்ச்சி அதனை சூடு போக ஆறவைத்து அதற்குப் பின்னர் குங்குமப்பூ, ஏலக்காய் & வெல்லம் சேர்த்து அமுது செய்யப்படும்.

உடையவரும் ( ராமானுஜரின் ) கஷாயமும்:

ஸ்வாமி ராமானுஜர் ஒருமுறை பெருமாளின் முகம் வாடி இருப்பது கண்டு, முதலி யாண்டானை பார்த்து பெருமானுக்கு என்ன அமுது செய்யப் பட்டது என்று கேட்டார்.

அதற்கு தயிர்சாதமும் & நாவல் பழமும் என்று முதலி யாண்டான் சொன்னாராம்.

உடையவர் உடனே அரங்கன் ஒரு குழந்தை போல! அவருக்கு ஜல தோஷம் வந்து விடும் என்று சொல்லி அதற்காக கஷாயம் தன்வந்திரி சன்னதியிலிருந்து தயார் செய்து பெருமாளுக்கு அமுது படைக்க சொன்னாராம்.

இதுவே உடையவருக்கு பெரிய பெருமாளிடம் ( ரங்கநாதன் ) இருந்த பரிவை நமக்குக் காட்டு கின்றது.

முன்னர் அரவணையுடன் கஷாயம் அமுது நடந்ததாகவும் அது தன்வந்திரி சந்நிதியில் இருந்து வந்ததாகவும் செய்தி உண்டு.

திருவரங்கநாதனுக்கு தளிகை செய்வது தினமும் புது மண் பானையில் தான்.

மற்ற கோவில்களை போல் இங்கு பாத்திரங்களைக் கொண்டு தயார் செய்யப் படுவதில்லை.

குறிப்பு:

கோவிலில் கூட்டம் அதிகமாக வருவதாலும், பலருக்கும் பிரசாதம் தேவைப் படுவதாலும், அதிகப்படி சேர்க்கப் பட்டு தற்போது விற்பனை செய்யப் படுகின்றன

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!