தலபுராண வரலாறு
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் தாலுகா சின்னமசமுத்திரம் கிராமத்தில், கல்வராயன் மலைத்தொடர் உள்ளது. 2,200 அடி உயரத்தில் உள்ள, இம்மலைகுன்றில் கால்நடை மற்றும் விவசாய நிலத்துக்கும், இலை, தழைகள் அறுப்பதற்குப் பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். மலைகுன்றின் மேலேறி ஆண்கள் அவ்வவ்போது விளையாடி வருவதுமுண்டு. இம்மலையில் மூலிகை செடிகள் அதிகம் இருப்பதால் அங்குள்ள மக்கள் அவற்றினைப் பயன்படுத்தியும் வந்துள்ளனர். தினமும் காலை நேரங்களில் ஆண்களோடு பெண்களும் சேர்ந்து ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு மலை உச்சிக்குச் செல்வதுண்டு. அங்கு ஆண்கள் மரங்கள் ஏறி காய்கனிகளைப் பறித்தும் காய்ந்த விறகுகளை வெட்டிக் கொண்டிருப்பர். அந்நேரத்தில் பெண்கள் நல்ல விளைச்சலுள்ள பகுதியில் ஆடு மாடுகளைக் கட்டிப்போட்டுவிட்டு தாயம், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் ஆடுவதுண்டு.

கோவில் உருவான வரலாறு
புரட்டாசி வெள்ளிக்கிழமை ஒருநாள் விளையாடிக் கொண்டிருந்த பெண்களில் ஒருத்தியின் காதில் அணிந்திருந்த தோடு (தோடு என்பதற்கு கொப்பு என்று பொருள் உண்டு) திருகாணி கழன்று கீழே விழுந்துள்ளது. அது தெரியாமல் அவளும் தன்கணவனுடன் வீட்டுற்குச் சென்று விடுகிறாள். வீட்டை அடைந்ததும் மாமியார் மருமகளிடம் ஒருபக்க காதில் தோடு இல்லாமையைக் கண்டு திட்டியுள்ளார். மருமகளும் அழுதுகொண்டே கணவனிடம் சொல்ல, இருவரும் அடுத்தநாள் புரட்டாசி சனிக்கிழமை காலையில் மலை உச்சிக்குச் சென்றார்கள். பெண்கள் ஆடுமாடுகள் மேய்த்த இடம், விளையாடிய இடம் என்று ஒன்றுவிடாமல் தேடிப்பார்த்தபோது, அப்பெண்கள் விளையாடியிருந்த இடத்தில் புற்று ஒன்று எழும்பி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றார்கள். புற்று இருந்த இடத்தில்தான் தோடு விழுந்திருக்க கூடும் என்று நினைத்த அப்பெண் அப்புற்றினை இடித்துத் தோட்டினை எடுத்துக் கொடுக்கும்படி கணவனிடம் கூறுகிறாள். கணவனும் மனைவி சொன்னதைக் கேட்டுக் கடப்பாறையால் புற்றினை இடிக்க முயல்கிறான்.

அப்போது ஒரு அசரரீ ஒலித்ததாகவும், அதிலிருந்து, திருமால் குடிக்கொண்டிருப்பதாகவும் அப்பெண்ணின் தோட்டினை (கொப்பு) ஆதாரமாகக் கொண்டு இவ்விடத்தில் உறைவதாகவும் ஒலித்துள்ளது. மேலும், கரடுமுரடான மலைப்பாதையினை மென்மையான கற்களைக் கொண்டு சரிசெய்து ஒரு நடைபாதையாகத் தானாகவே உருவானது என்றும் ஊரிலுள்ள வயதானவர்கள் இன்றளவும் சொல்லி வருகின்றனர். அவர்களுக்கு அவர்களுடைய முன்னோர்கள் வழிவழியாகச் சொல்லியதாகவும் கூறுகிறார்கள்.

பெண்ணிடமிருந்து கொப்பையைக் கொண்டதால் ”கொப்புகொண்ட பெருமாள்” என அழைக்கப்படுகின்றார். அதன்பிறகு கொப்புகொண்டபெருமாள் கோவில் கட்டப்பட்டு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், சனிக்கிழமைகளில் பச்சை பந்தல் அமைத்து, கொப்பு கொண்ட பெருமாளுக்கு திருவிழா எடுத்துப் பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். சின்னமசமுத்திரத்தில் இத்திருக்கோவில் அமைந்திருந்தாலும் அதற்கு அடுத்துள்ள காளிச்செட்டியூர் கொண்ட ஆட்களே பூசாரிகளாகவும் இக்கோவில் நிர்வாகப் பிரிவுகளையும் கவனித்து வருகின்றனர்.

கோவிலின் படிக்கட்டுகள்
ஆரம்பகாலத்தில் கோவில் மலைமேல் செல்வதற்கு சிவப்பு மஞ்சளால கற்கள் மற்றும் கூலாங்கற்களால் ஆன நடைபாதையே இருந்தது. இப்பாதையானது வளைந்து வளைந்து மலையைச் சுற்றிச் செல்லும். அதன்பிறகு இக்கோவிலின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மலைமேல் சென்று வருகின்ற மாதிரி சாலை அமைத்தால் நன்றாக இருக்கும் என எண்ணினார்கள். அதனால் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் இம்மலையை குடைந்து குறுக்கும் நெடுக்குமாகச் சாலை போட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பணத்தொகை அதிகம் ஆகும் என்பதாலும், ஒருபகுதிக்குமேல் சாலை அமைக்க முடியாத சூழ்நிலைகள் இருந்ததாலும் மலைமேல் போதியவசதி இல்லாமல் இருந்ததால் அந்த திட்டத்தைக் கைவிடப்பட்டது.

கொப்புகொண்ட பெருமாள் மலை – ஓர் அதிசயம்
ஆரம்பத்தில் மலைஉச்சியில் புற்று இருந்த இடமானது சிறிய கோவிலாக மட்டுமே இருந்தது. கோவில் பக்கத்தில் ஆங்காங்கு சின்னசின்ன கோவில்கள் (குடில்கள்) இருந்தன. கோவிலுக்கென்று என்றுமே வற்றிப்போகாத நல்ல தண்ணீர் கிணறும் இருந்தது. இக்கோவிலில் சந்தனக்கல் ஒன்றும் இருந்தது. தண்ணீர் கொஞ்சம் ஊற்றி கல்லோடு கல் உரச சந்தன திரவியம் உண்டாகும். பொதுமக்கள் அதனை அரைத்து அரைத்துப் பூசிக்கொள்வதும் உண்டு. கீழிருந்து மேல் போகும் வழியெல்லாம் அரக்கு செடிகள் ஏரளமாய் உண்டு. பை நிறைய பறித்து வந்து காயவைத்துத் தலைக்குத் தேய்த்துக் கொள்ளவும் செய்கின்றனர். கோவிலுக்குச் சென்று வந்தால் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று பொதுமக்கள் எண்ணினர். புத்திசுவாதினம் இல்லாதவர்கள், உடல் ஊனமுற்றோர்கள் போன்றோர்கள் மலைமீது ஏறி இறங்கிவிட்டால் ஏதோ அவர்களுக்குள் மாற்றம் நிகழ்ததாகக் கூறுவார்கள்.

புரட்டாசி மாதம் திருவிழா
வருடாவருடம் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதும். பெத்தநாயக்கன் பாளையம் சுற்றுவட்டார ஊர்களான கொத்தாம்பாடி, கல்பகனூர், செல்லியம்பாளையம், ராமநாயக்கன் பாளையம், ஆத்தூர், ஓலப்பாடி, ஒட்டப்பட்டி, ஆரியபாளையம், புத்திரகவுண்டன் பாளையம், ஏத்தாப்பூர், தும்பல், பனைமடல், பாப்பநாயக்கன் பட்டி, கருமந்துறை போன்ற இடங்களிலிருந்தும் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் பெரும்திரளாக வருகை தருகின்றனர்.

பெத்தநாயக்கன் பாளையம் சுற்றியுள்ள மக்களுக்கு ஒரு பெரிய மலைகோவிலாக இருக்கும் பழமை வாய்ந்த கொப்புகொண்ட பெருமாள் கோவிலை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு சென்றார்கள். மலைமேல் கொஞ்சம் விரிவுபடுத்தியும் கோபுரங்களைச் சீரமைத்தும் சரிசெய்தனர். மூன்று நிலை கொண்ட, 37 அடி உயர ராஜகோபுரம் கட்டிடமும் மற்றும் 11 அடி உயரத்தில், ஆஞ்சநேயர் சிலையும் புதிதாக கட்டப்பட்டது. கோவிலுக்குச் செல்லும் வழிப்பாதையில் எப்போதும் உள்ள கல்லால் ஆன சாலையை நீக்கிவிட்டு கிரானைட் கற்கள் கொண்டு படிக்கட்டுகளாக அமைக்கப்பட்டுள்ளன. நன்கொடையாளர்கள் மூலம், 1,893 கருங்கல் படிகள் அமைத்தனர்