ஶ்ரீசைலேச தயாபாத்ரம் | Sri Saileshadayapathram Thaniyan

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

"ஸ்ரீசைலேச" தனியன் அவதாரத் திருநாள்
ஆனி மூலம்

"ஶ்ரீசைலேச தயாபாத்ரம், தீபக்யாதி குணார்ணவம்
யதீந்திர ப்ரவணம், வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம்"

இது, மாமுனிகளுக்கு, திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் வழங்கிய அரும்புகழ் வாய்ந்த தனியனாகும்.

ஸ்ரீ ரங்கநாச்சியாருடைய தனிக்கேள்வனான அழகிய மணவாளன் (நம்பெருமாள்) தன் இன்னருளால், குறையேதுமற்ற, சிறப்புமிக்க, அன்பு கலந்த அறிவை அளித்து, ஆழ்வார்களைப் பாடச்செய்தான். ஆழ்வார்கள் அருளிச்செய்த தேனும் பாலும் கன்னலும் அமுதுமான 4000 திவ்யப்ரபந்தத்தின் பெருமைகளையும் அவற்றுக்கு பூருவாசாரியர்கள் அருளிய மிகச்சிறப்பான வளம்மிக்க உரைகளின் சிறப்புகளையும், பெரிய ஜீயாரான மணவாள மாமுனிகளின் பெருமைகளையும் உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பினான். அவ்வெம்பெருமான் ஒரு சமயம் புறப்பாடு கண்டருளும்போது, அதே சமயம், மாமுனிகள் தன் சிஷ்யர்களுடன் சேர்ந்து பெருமானுக்கு மங்களாசாசனம் செய்தபோது, பெருமான், மாமுனிகளிடம் நாளை முதலாக தம்முடைய பெரிய திருமண்டபத்திலே பெரியவண்குருகூர் நம்பியான நம்மாழ்வாரது திருவாய்மொழியின் பொருளை ஈடு 36000த்துடனே அருளிச்செய்யும் என்று ஆணையிட, மாமுனிகளும் மகிழ்ந்து, மறுநாளே தொடங்கி ஈடு 36000த்துடனே கூடிய ஐந்து வ்யாக்யானங்களுடன், திருவாய் மொழியின் பொருளை விரித்துரைக்கத் தொடங்கினார் மாமுனிகளால் அருளிச்செய்யப்பட்ட பகவத் காலக்ஷேபத்தை ஒரு வருட காலம் (தன் உற்சவ விழாக்களை எல்லாம் நிறுத்திக்கொண்டு) திருச்செவி சாத்தி (கேட்க) அகம் மகிழ்ந்த நம்பெருமாள், சாற்றுமறை (கடைசி நாள்) தினத்தன்று, 4 வயது நிறைந்த ரங்கா நாயகம் என்று பெயர் கொண்ட சிறு பிள்ளையாக (அர்ச்சக குமாரனாக) அந்த காலக்ஷேப கோஷ்டியில் அனைவரும் காணும்படி தோன்றி, கைகூப்பிக்கொண்டு,

"ஶ்ரீசைலேச தயாபாத்ரம், தீபக்யாதி குணார்ணவம்
யதீந்திர ப்ரவணம், வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம்"

என்று சொல்லிவிட்டு ஓடிச்சென்று மறைய, கூடியிருந்த பெரியோர்களெல்லாம் மிகவும் வியப்புற்று, இந்த ஸ்லோகத்தை பட்டோலை கொண்டு, ஒரு ஓலைச்சுவடியில் இந்தத்தனியனை எழுதி மஞ்சள் காப்பு சாத்திக் கொண்டாடினர்.

அர்த்தம்:- திருமாலை ஆழ்வான் என்கிற திருவாய்மொழிப்பிள்ளை இன்னருளுக்கு ஏற்ற பாத்திரமாய் இருப்பவரும், ஞானம், பக்தி, வைராக்கியம் முதலிய குணங்களும் கூடியிருப்பவரும், யதீந்த்ரரான சுவாமி எம்பெருமானாரிடத்திலே (இராமானுசர்) பேரன்பு பூண்டிருப்பவருமான அழகிய மணவாள மாமுனியை வணங்குகிறேன்

இப்படிப்பட்ட ஒரு உயர்ந்த தனியன் நம்பெருமாளால் மாமுனிக்கு சாற்றப்பட்டது "ஆனி" மாதம் "மூலம்" நக்ஷத்திரம் பொருந்திய நன்னாளாகும். மாமுனிகள் திரு அவதரித்தது ஐப்பசி மாதம் மூல நக்ஷத்திரத்தில்.

இதன் பின்னணியைப் பார்த்தோமானால், மாமுனிகள் ஈடு காலக்ஷேபம் செய்யும்படி பணித்தது ஸ்ரீரங்க திவ்யதேசத்து மூல மூர்த்தியான பெரிய பெருமாள் ஆவார். பெருமான் பணித்தபடி ஒருவருட காலம் ஈடு காலக்ஷேபம் நடத்தி இறுதிநாளன்று சாற்றுமறை செய்தார் மாமுனிகள். தான் இட்ட பணியை மாமுனிகள் குறைவின்றி நிறைவேற்றியதைக் கண்டு அகமகிழ்ந்தான் பெருமான். மகிழ்ச்சி பொறுக்கமாட்டாமல், மாமுனிகளைச் சிறப்பித்து அருள தான் சயனித்துக்கிடக்கும் ஆதிசேஷ பர்யந்தத்திலிருந்து எழ முற்பட்டான். ஆனால் பெருமானுக்குக் காவலராய் கர்பக்ருஹத்தில் இருந்த விளக்கு சேர்க்கும் ஊழியர் பெருமான் எழ முற்பட்டதைப் பார்த்து, "அர்ச்சாமூர்த்தியாய் இருப்பவர் ஆசனத்தை விட்டு அகல்வதாகாது என்று கூறி, எழுந்த பெருமானைப் படு" என்று பணித்தார் பெருமானும் அவர் சொல்வதைக் கேட்டு ஆதிசேஷன் மீது மீண்டும் சயனித்துக் கொண்டான்

ஆனால், மூல மூர்த்தியின் பிரதிநிதியாய் இருக்கும் உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் அர்ச்சகர் வடிவில் ஒரு சிறு பிள்ளையாய்த் தோன்றி, ""ஸ்ரீஸைலேஸ" தனியனை வழங்கி மாமுனிகளை பெருமைப் படுத்தி, அங்கிருந்துமறைந்து சென்றார் அன்று முதல் மாமுனிகளைத் தனது ஆசார்யனாகவே கொண்டார் நம்பெருமாள். ஒருவரை ஆசார்யராக ஏற்றுக்கொண்டால், சிஷ்யரானவர் ஆசார்யரது திருநாமத்தைத் தன் பெயரில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதன் அடையாளமாக அன்றுவரை நம்பெருமாள் என்ற திருநாமத்துடன் விளங்கிய உற்சவமூர்த்தி, மாமுனிகளின் "அழகிய மணவாளன்" என்ற திருநாமத்துடன் விளங்கினார். மேலும் மாமுனிகளைப் பெருமைப்படுத்தும் வண்ணம், தன் சயன பர்யந்தமான ஆதிசேஷனை அவருக்குப் பீடமாக அளித்தான் அன்றுமுதல் திவ்யதேசங்களிலும் மாமுனிகள் ஆதிசேஷனையே பீடமாகக் கொண்டு சேவை சாதித்து அருளுகின்றார். மாமுனிகள், பகவத் ஸ்ரீராமானுஜரைப் போலவே ஆதிசேஷனின் அவதாரம் ஆவார். அரங்கன் ஆனந்தாழ்வானை அழைத்து பூலோகத்திற்குச் சென்று திரு அவதரித்து, 200 ஆண்டுகள் வாழ்ந்து உலகோருக்கு க்ஷேமங்களை அளித்தருள்வாய் என்று பணித்தான். அப்படி அனந்தாழ்வான் இந்தப் பூமியில் வந்து திரு அவதரித்தது பகவத் ஸ்ரீராமானுஜராய். இவரது பெருமைகள் எண்ணில் அடங்காதது. இருப்பினும், பகவத் ஸ்ரீராமானுஜரால் அரங்கன் பணித்தபடி 200 வருடங்கள் இந்தப் பூமியில் இருக்க ஒழியவில்லை; 120 வயதில் எம்பெருமானிடம் உத்தரவு பெற்று திருநாட்டுக்கு எழுந்தருளினார். இருப்பினும், இன்றளவும் அவர் தரித்திருந்த திருமேனியை அரங்கன் இந்தப் பூமியில் நிலையாக இருக்கும்படி செய்து தனது கோயிலில் தனிச்சன்னிதியில் இடமளித்து அனைவரும் இவரது திருமேனியைத் தரிசித்து இன்னருள் பெரும்வண்ணம் செய்தான். ஆனால், எதுவாயினும் பெருமான் இட்ட கட்டளை பகவத் ஸ்ரீராமானுஜர் மூலமாக முழுவதும் நிறைவேறவில்லையே. அதன் பலனாகவே, ஸ்ரீராமானுஜரைப் போல மாமுனிகளும் அனந்தாழ்வானின் அம்சமாக இந்தப் பூமியில் திரு அவதரித்து 80 ஆண்டுகள் வாழ்ந்து இந்த உலகோர் உய்யும்வண்ணம் செயற்கரிய கைங்கர்யங்களைச் செய்தார் ஆக அனந்தாழ்வான் பகவத் ஸ்ரீராமானுஜராகவும் மற்றும் ஸ்ரீமத் மணவாள மாமுனிகளாகவும் அவதரித்து பெருமான் பணித்தபடி மொத்தமாக 200 வருடங்கள் இந்தப் பூமியில் இருந்து வைணவம் தழைக்கும் வண்ணம் கைங்கர்யங்கள் புரிந்தான் இருவருமே அனந்தாழ்வானின் அம்சம்தான் என்றாலும், நம்பெருமாளால் அருளப்பட்டதால், மாமுனிகள் மட்டுமே அனைத்து திவ்யதேசங்களிலும் ஆதிசேஷனை ஆஸ்தானமாகக் கொண்டு சேவை சாதித்தருளுகின்றார். எப்படி பரதன் இராமனே தெய்வம் என்று வாழ்ந்தானோ, மாமுனிகளும் இராமானுசரே தெய்வம் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட உயர்ந்த பின்னணியைக் கொண்ட ஆனி மூல நாளானது "ஸ்ரீசைலேச" அவதாரத் திருநாளாகியது. இந்த நன்னாள் திருவரங்கத்தில் இன்றளவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் திருவரங்கத்தில் இந்த நன்னாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. திருவரங்கத்து கோமடத்தைச் சேர்ந்த அர்ச்சகர்கள் நம்பெருமாளின் திரு முன்பு மாமுனிகளை எழுந்தருளச் செய்து "சைலேச" தனியனை வாசித்து இந்த நன்னாளைக் கொண்டாடுகின்றனர். இது தவிர, திருவஹீந்திரபுரத்திலும் மேல்நாட்டிலும் (திருநாராயணபுரம்) இந்த நன்னாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஒரு காலத்தில் அனைத்து திவ்ய தேசங்களிலுமே இந்த நன்னாள் கொண்டாடப்பட்டு வந்தது என்றும் காலப்போக்கில் நிறைய திவ்யதேசங்களில் இது நின்றுவிட்டது என்றும் கேள்வி. இதப் பற்றி சரியான தகவல்கள் தெரிந்தவர்கள், அத்தகவலைப் பகிறுமாறு தாழ்மையுடன் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!