நில உலகில் நாம் காணமுடியாத திவ்யதேசம் வானுலகம் 1
நில உலகினில் நாம் காணமுடியாத பெருமாள் ஷீராப்திநாதன் திருப்பாற்கடல் மேலோகம்திருப்பாற்கடல்
திருப்பாற்கடல் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பத்து ஆழ்வார்களால் பாடல்பெற்ற இத்தலம் இப்பூமியில் இல்லாத தலமாகும். இந்து தொன்மவியலில் பாற்கடல் என்பது திருமாலின் இருப்பிடமாக கூறப்படுகிறது. இந்த பாற்கடலில் ஆதிசேசன் என்ற பாம்பு படுக்கையில் திருமால் படுத்துக் கொண்டிருப்பதாக திருமுறைகள் குறிப்பிடுகின்றன.
மூலவர் - பாற்கடல்வண்ணன் (சஷீராப்திநாதன்)
தாயார் - கடல்மகள் நாச்சியார், பூமாதேவித் தாயார்
விமானம் - அஷ்டாங்க விமானம்
தீர்த்தம் - அமிர்த தீர்த்தம், திருப்பாற்கடல்
திருநாமம் - ஸ்ரீ கடல்மகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ க்ஷீராப்திநாதாயநமஹ:
திருப்பாற்கடல் மேலோகம்
பாசுரம்
பையர விண்ணைப் பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி
உய்யவுலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை
வையமனிசரைப் பொய் யென்றெண்ணிக் காலனையு முடனே படைத்தாய்
ஐயனி யென்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளியானே
- பெரியாழ்வார் திருமொழி (427)
பாசுரம் பதவுரை
பால்கடலுள் - திருப்பாற்கடலில்
பை அரவ இன் அணை - (பரந்த) பாடல்களையுடைய திருவனந்தாழ்வானகிய இனிய படுக்கையின் மீது
பள்ளி கொள்கின்ற - திருக்கண் வளர்ந்தருளா நின்ற
பரம மூர்த்தி - பரம சேஷியானவனே !
உய்ய - (எல்லாவுயிர்களும் தன்னை அடைந்து) உஜ்ஜிவிக்கும்படி
உலகு - லோகங்களை
படைக்க வேண்டி - ஸ்ருஷ்டிக்க விரும்பி
உந்தியில் - திருநாபிக் கமலத்தில்
நான் முகனை - பிரமனை
தோற்றினாய் - தோற்றுவித்தவனே!
அவயம் - பூமியிலுள்ள
மனிசர் - மனுஷ்யர்கள்
பொய் என்று எண்ணி - (நமது கட்டளையாகிய சாஸ்த்தர மரியாதையில் நிற்கமாட்டாது) க்ருத்ரிமராய் நடப்பவர்களென்று நினைத்து (அந்த விபரீதாசரணத்துக்கு தக்க தண்டம் நடத்துதற்காக)
காலனையும் - யமனையும்
உடனே - கூடவே
படைத்தாய் - ஸ்ருஷ்டித்தருளினவனே!
ஐய - பரம பந்துலானவனே!
அரங்கத்து அரவு அணைப்பள்ளியானே! - இவர் என்னை காக்க வேண்டும்
பாசுரம் விளக்க உரை
(பரமமூர்த்தி) “மூர்த்திசப்தம்- ஐச்வர்யத்துக்கும் விக்ரஹத்துக்கும் வாசகமாகையாலே, இவ்விடத்தில் ஐச்வர்யவாசகமாய்க் கொண்டு,சேஷித்வத்தைச் சொல்லுகிறது” என்ற வியாக்கியாகவாக்கிய மறியத்தக்கது. மூன்றாமடியில், மணிசரை என்றவிடத்து, ஐ- அசை; அன்றி, உருபுமயக்கமுமாக “பொய்யை” என்கிறவித்தைப் பொய் என்று குறைந்துக் கிடக்கிறது.
*** என்றபடி தனது கட்டளையான சாஸ்த்ரங்களை மீறி ஸ்வேச்சையாகக் கபடநடைகளில் ஒழுகுபவர்கள் இவ்வுலகத்தவர்கள் என்று எம்பெருமான் திருவுள்ளத்திற்கொண்டு, அவ்வக்காலங்களில் அவரவர்கள் செய்யும் பாபங்களுக்கீடாகத தண்டம் நடத்தியாகிலும் இவ்வுலகைக் காக்க வேணுமென்ற கருணையினால், சிக்ஷைக்குக்கடவனான யமனையும் படைத்தருளினமை மூன்றாமடியில் விளங்கும். காலன்- வடசொல். தோற்றினாய், படைத்தாய்- விளிகள்...(ஓ)
- ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்
ஸ்தல வரலாறு
திருப்பாற்கடல் என்பது இந்நிலவுலகில் இல்லை. பரமபதம் போன்று அதுவும் விண்ணுலகிலேயே உள்ளது. இந்த ஸ்தூல சரீரத்துடன் அங்கு செல்ல முடியாது. 106 திவ்ய தேசங்களைச் சேவித்த பின் இறைவன் திருவடிப்புகச்செல்லும் பக்தன் ஒருவனை பெருமாளே திருப்பாற்கடலுக்கு நேரில் அழைத்துச் சென்று சேவை சாதிக்கிறான் என்பது ஐதீஹம். இதற்கு வெள்ளையந் தீவு என்ற பெயருமுண்டு.
சஷீராப்தி என்னும் இந்த பாற்கடலில் பக்தர்களின் தரிசனத்திற்காக தன்னை வ்யூகப்படுத்தி அதாவது பல பிரிவாகப் பிரித்து வியூக வாசுதேவன் என்ற திருநாமத்தோடு யோக நித்திரையில் தம்மைச் சங்கர்ஷணன், ப்ரத்யுமனன், அநிருத்தன் என்னும் 3 உருவங்களாகப் பிரித்து ஆதிசேடனின் படுக்கையில் நிலமகளும் திருமகளும் திருவடி வருட பள்ளி கொண்ட நிலையாகும் திருப்பாற்கடல் வடிவம்.
கிழக்குப் பக்கம் சிரிப்புடன் கூடின __ வாசுதேவனாகவும்
தெற்கு நோக்கி சிங்கமுகமாக __ சங்கர்ஷணனும்
வடக்கு பக்கம் _ பிர்த்யுமனனாகவும்
மேற்கு பக்கம் _ அநிருத்தனாகவும் திகழ்கிறார்.
பக்தர்களின் அபயக் குரல், குறிப்பாக தேவர்களின் அபயக் குரல் கேட்டு பகவான் அபயமளிப்பது இவ்விடத்தில் தான் அதனால் இவ்வுலகுக்கு கூப்பாடு கேட்கும் உலகு என்று பெயர் பாட்டுக் கேட்டும் உலகான பரமபதத்திற்கு தேவர்களும் செல்ல முடியாது. அது சித்திப்பது நித்ய சூரிகள் எனப்படும் முக்தர்கட்கு மட்டும் தான். எனவே தான் தேவர்கள் தங்கட்கு பிரச்சினை வரும்போதெல்லாம் அல்லது பிரச்சினைகளை உண்டாக்கிக் கொண்டு அல்லற்படும் போதெல்லாம் திருப்பாற்கடல் கரையருகில் நின்று எம்பெருமானை பள்ளியெழுப்பித் தமது முறையீட்டைத் தெரிவிப்பது வழக்கமாம்.
ப்ரளய காலம் வரை தான் திருப்பற்கடல் வாசம். ப்ரளய காலம் முடிந்ததும் மீண்டும் பரமபதம். எனவே ப்ரளய காலத்தில் திவ்யதேசங்கள் மீண்டும் அவனுள் ஐக்கியமாகி விடுகின்றன. திவய்தேசங்களுக்குத் தொடக்க திவ்யதேசமாகவும் இதனைக் கொள்ளலாம். சங்கர்ஷணன் அநிருத்தன், ப்ரத்யுமனன் என்னும் 3 உருவங்களும் ப்ரளயகாலத்தில் வ்யூக வாசுதேவனோடு ஐக்கியமாகி விடுகின்றன.
சிறப்பு
இங்குதான் பிரம்மதேவன் படைக்கப்பட்டான். இது வொன்றே இதன் தனிச் சிறப்பம்சமாகும்.
ஸ்ரீமகாவிஷ்ணுவின் பஞ்ச வ்யூகங்கள் (திருமால் தனது 5 நிலைகளில் தோன்றுதல் இங்குதான் ஆரம்பமாகிறது)
திருப்பாற்கடலுக்கு சஷ்ராப்தி நாதனாக (பாற்கடல் வண்ணனாக) வந்துற்றது முதல் வாசுவேதன் அநிருத்தன். ப்ரத்யுமணன், சங்கர்ஷ்ணன் என்றும் 4 வியூகங்களாகப் பிரிந்த நிலைகளும் சேர்ந்து பஞ்ச வ்யூகங்கள் ஆகும். இந்த வ்யூக மூர்த்திகட்கும் சில திவ்யதேசங்கட்கும் தொடர்புண்டு.
1. சஷ்ஷிராப்தி நாதன் என்னும் பாற்கடல் வண்ணன் - திருக்கோட்டியூர் உரக மெல்லனையாளனாக ஸ்ரீதேவி பூமிதேவியுடன் எழுந்தருளியது.
2. வாசுதேவன் - திருநறையூரில் திருமகளை மணந்த திருக்கல்யாணக் கோலம்
3. அநிருத்தன் - திருஅன்பில் அழகிய வல்லிநாச்சியாருடன் அருளல்
4. ப்ரத்யுமனன் - திருவெள்ளறை இங்கு ஸ்ரீதேவி மனித உருவில் நின்று கைங்கர்யம்
5. ஸங்கர்ஷ்ணன் - உறையூர் கமலவல்லி என்ற பெயரில் சோழன் மகளாக வளர்ந்த திருமகளை மணத்தல் அதாவது பாற்கடலில் முதல் நிலையில் தேவிமாரோடு எழுந்தருள்கிறான்.
இதர வ்யூகங்கட்கு பிராட்டிகள் திவ்யதேசங்களில் 4 நிலைகளில் நின்ற பெருமாளைச் சேர்ந்து எழுந்தருள்கின்றனர் என்பதும் ஐதீஹம்.
இறைவன்
இங்கு இறைவன் பாற்கடல் வண்ணனாக (சீராப்திநாதன்)பாம்பணை மேல் தெற்கு நோக்கிய சயனக் கோலத்தில் காட்சியளிக்கிறான். இறைவி கடல்மகள் நாச்சியார், பூமாதேவி ஆகியோர். இத்தலத்தின் தீர்த்தம் அமிர்த தீர்த்தம், திருப்பாற்கடல் ஆகியன. விமானம் அஷ்டாங்க விமானம்.
சிறப்புக்கள்
நிலவுலகில் இல்லாத இந்த திருப்பாற்கடல் மொத்தம் 51 பாக்களால் திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், பேயாழ்வார் முதலிய பத்து ஆழ்வார்களாலும் பாடல் பெற்றது.
பாற்கடல் கடைதல்
இந்து தொன்மவியலில் பாற்கடல் கடைதல் பெரும் நிகழ்ச்சியாகும். அமுதத்திற்காக வேண்டி பாற்கடலை கடைய தேவர்களும், தேவர்களின் அரசனான இந்திரனும் முடிவு செய்தார்கள். அதற்காக மந்திர மலையை மத்தாகவும், சிவபெருமானின் கழுத்தில் நாகாபரணமாக இருக்கும் வாசுகி பாம்பினை கயிறாகவும் கொண்டு கடைய முடிவெடுத்தார்கள். அதற்கு தேவர்கள் மட்டும் போதாதென அரக்கர்களுக்கும் சமபங்கு தருவதாக கூறி அவர்களையும் அழைத்தார்கள். வாசுகி பாம்பின் ஒரு புறம் தேவர்களும், மறுபுறம் அரக்கர்களும் இணைந்து பாற்கடலை கடையத் தொடங்கினார்கள்.
மந்திரமலையானது பாற்கடலினுள் மூழ்க தொடங்கியது. எனவே திருமால் ஆமையாக அவதாரம் எடுத்து, மந்திர மலையை தாங்கினார். தேவர்களும் அரக்கர்களும் மீண்டும் பாற்கடலை கடைந்தனர். நீண்ட நேரம் கடைந்ததன் காரணமாக வாசுகி பாம்பினால் வலி தாங்க முடியாமல் ஆலகால விஷத்தினை கக்கியது. அந்த விசத்தினால் உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும், தேவர்களும், அரக்கர்களும், இன்னபிற தேவகனங்களும் அழிய நேரிடும் என்பதால் அனைவரும் சிவபெருமானிடம் தங்களை காக்குமாறு வேண்டினார்கள்.
சிவபெருமான் அந்த ஆலகால விசத்தினை உண்டார். அவருடைய வயி்ற்றுக்குள் இருக்கும் உலக உயிர்களை விசம் அழிக்காமல் இருக்க, பார்வதி தேவி சிவபெருமானது கண்டத்தை பிடித்தார். அதனால் சிவபெருமானுடைய கண்டத்தில் விசம் தங்கி, நீலகண்டமாக உருவாகியது. அதன் பின் மீண்டும் அரக்கர்களும், தேவர்களும் பாற்கடலை கடைந்தார்கள்.