ThirupParamapadham (Parathuvam) | திருப்பரமபதம் | திவ்ய தேசம் - 108

நில உலகினில் நாம் காணமுடியாத பரமபதநாதன் பெருமாள் திருப்பரமபதம் மேலோகம் 2

திருப்பரமபதம் (திருநாடு, வைகுண்டம்)
அருள்மிகு பரமபதநாதன் பெரியபிராட்டியார் தரிசனம் திருப்பரமபதம்
மூலவர் - பரமபதநாதன், வைகுந்தநாதன்
தாயார் - ஸ்ரீதேவி, பூமிதேவி, நீளாதேவி
தீர்த்தம் - விரஜா நதி, அயிரமத புஷ்கரணி
திருநாமம் - ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஸமேத ஸ்ரீ பரமபதநாதாய நமஹ:


திருப்பரமபதம் அல்லது வைகுண்டம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். வைணவ அடியவர்கள் கடைசி நிலையாகிய வீடுபேறு அல்லது மோட்சம் அல்லது முக்தி என்ற நிலை எய்தி செல்லும் இடமாகும். 8 ஆழ்வார்களால் 36 பாசுரங்களில் பாடல் பெற்ற தலமாகும். வைணவ அடியார்கட்கு, இறைவனன்றி தமக்குப் புகலிடம் யாதுமில்லை என்றெண்ணி அடியவர்கட்கு மோட்சத்தை நல்கும் இந்தப் பரமபதமே வைணவர்களின் கடைசி இலக்காகும்.

இதனை திருநாடு என ஆழ்வார் பாசுரங்களில் குறிக்கின்றனர். திருநாட்டைப் பற்றிப் புராணங்களாலும் ஆழ்வார் பாசுரங்களாலும் உணரலாம். இராமானுஜர் இயற்றிய வேதாந்த சங்கிரஹம் என்னும் நூல் திருநாட்டைப் பற்றித் தெளிவாகவும், நேரில் பார்ப்பது போலவும் விளக்கிப் பேசுகிறது. இராமானுஜர் இயற்றிய கத்யத்ரயத்தில் ஒன்றான வைகுண்டகத்யத்தில் பரமபத வர்ணனை சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. இராமானுஜரின் வரலாற்றைப் பேசும் “ப்ரபந்நாம்ருத தர்ப்பணம்” என்னும் நூலில் பரமபதம் விளக்கப்பட்டுள்ளது.

பரமபதம் மேலோகம்

பாசுரம்
வைகுந்தம்புகுதலும் வாசலில்வானவர் *
வைகுந்தன்தமர்எமர் எமதிடம்புகுதென்று *
வைகுந்தத்தமரரும் முனிவரும்வியந்தனர் *
வகுந்தம்புகுவது மண்ணவர்விதியே.
- திருவாய்மொழி (3763)

8 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட நாடாகும் இது. நம்மாழ்வார் வைகுந்தம் செல்லும் காட்சிகளை பத்துப் பாசுரங்களில் விளக்குகிறார்.

பாசுரம் பதவுரை
வைகுந்தம் புகுதலும் - ஸ்ரீ வைகுண்டத்திலே சென்று புகுந்தவளவிலே
வாசலில் வானவர் - திருவாசல்காக்கும் முதலிகளானவர்கள்
வைகுந்தன் தமர் எமர் - “ஸ்ரீவைகுண்ட நாதனுடையார்கள் எங்களுடைய ஸ்வாமிகள் (ஆகையாலே)
எமது இடம் புகுது என்று வியத்தனர் - எங்களதிகாரத்திலே புக வேணும்” என்றுசொல்லி உகந்தார்கள்;

வைகுந்தத்து - அவ்விடத்திலே
அமரரும் முனிவரும் - கைங்கரிய நிஷ்டராயும் குணாநுபவ நிஷ்டராயுமுள்ளவர்கள்
மண்ணவர் வைகுந்தம புகுவது விதியே (என்று) வியந்தனர் - “லீலாவிபூதியி லிருந்தவர்கள் நித்ய விபூதியேற வருவது மஹா பாக்யமே!” என்று சொல்லி உகந்தார்கள்.

பாசுரம் விளக்க உரை
அங்குள்ள நித்யஸூரிகள் இவர்களைக் கண்டு ‘இப்படி பரமபதத்திலே வருவதே இதென்ன பாக்யம்! இதென்ன பாக்யம்!!’ என்று வியந்து மகிழ்ந்தனரென்கிறதிப்பாட்டில். வாசலில் வானவர்-திருவாசல் காக்கும் முதலிகள் என்ன சொன்னார்களென்னில்; (வைகுந்தன் தமர் எமர்) வைகுந்தநாதனுக்கு அடியவர்களாக வருகின்ற இவர்கள் எமக்கு ஸ்வாமிகள் என்றார்கள். இன்னமும் என்ன சொன்னார்கள்? (எமதிடம்புகுதென்று) எங்களுடைய பதவியை நீங்கள் வஹித்து நிர்வஹிக்கவேணுமென்று சொல்லிக் கையிலே பிரம்பையும் கொடுப்பர்களாம். வியந்தனர்-ஆச்சாரியப்பட்டார்கள்; மண்ணவர் விண்ணவராயினரே என்று வியப்படைந்தனர்.

அப்படி வியந்தவர்கள் யாவரென்னில்; (வைகுந்தத்து அமரரும் முனிவரும்) “ஸ்ரீ பரதாழ்வானையும் இளையபெருமாளையும் போலே குணநிஷ்டரூம் கைங்காரிய நிஷ்டரும்” என்பது ஈடு, வைகுண்டே து பரே லோகே ச்ரியா ஸாரித்தம் ஜகத்பத்:, ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்iதர் பாகவதைஸ் ஸஹ என்று பகவச் சாஸ்த்ரத்திலும் பக்தை பாகவதை: என்கிற இரண்டு சொற்களையிட்டுச் சொல்லிற்று. உள்ளத்துக்கொண்டு முனிவர்களும் யோகிகளும் என்கிறாள் ஆண்டாளும். குணாநுபவமே போதுபோக்கா யிருப்பவர்களும் கைங்காரியமே காலகூஷபமாயிருப்பவர்களுமான இருவகுப்பினருமுளரே!

“வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே” என்ற ஈற்றடியை “மன்னவர் வைகுந்தம் புகுவது விதியே” என்று அந்வயித்துக்கொள்வது பாங்கு. ஸம்ஸாரிகள் பரமபதத்தே வந்து சேரும்படியாக நாம் பாக்யம் பண்ணினோமே! என்று சொல்லி வியந்தனராயிற்று. தைவம் தீஷ்டம் பாகதேயம் பாக்யம் ஸத்ர் நியதிரி வீதி: என்ற அமரகோசத்தின்படி விதியென்னுஞ் சொல் பாக்யத்தைச் சொல்லக்கடவது.

இதன் பரமதாற்பாரியம் யாதெனில்

திருமங்கையாழ்வார் ஏரார்துமுயல்விட்டுக் காக்கைப்பின் பேரவதே என்று சொல்லி லீலாவிபூதியில் அநுபவந்தான் உண்மையில் சிறக்குமாகையாலே அப்படிச் சிறந்ததான தேச விசேஷத்திலே சென்று நாங்கள்; அநுபவிக்கப் பார்த் திருக்கையில் நீங்கள் அங்கிருந்து இங்கே வந்தீர்களே! இது எங்களுடைய பரம பாக்கியமன்றோ வென்று கொண்டாடினார்களென்கை.
- ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்

இறைவன் இறைவி
தெற்குநோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் இறைவன் பரமபதநாதன், வைகுண்டபதி என்று அழைக்கப்படுகிறான். இறைவி பெரியபிராட்டியார். தீர்த்தம் விரஜா நதி, அயிரமத புஷ்கரிணி.

சிறப்புகள்
வைணவ சித்தாந்தங்களின் படி இங்கு செல்லும் ஜீவாத்மாக்கள் நித்யசூரிகள் ஆகின்றன. அதாவது எப்போதும் அழிவற்ற சக்தியைப் பெறுகின்றன. இங்கு இறைவனைப் போலவே வடிவம் அவர்கட்கும் உண்டாகிறது. ஆயினும் இறைவனோடு இரண்டறக் கலக்காமல் உடனிருந்து தொண்டு செய்து கொண்டு எப்போதும் பல்லாண்டிசைத்துக் கொண்டிருப்பர்.

நித்ய சூரியாகி இங்கு சென்றுவிட்டால் படைப்புகளும், பிரபஞ்சங்களும் என்னவென்று தெளிவாகத் தெரிவதால் இதற்கு தெளிவிசும்புத் திருநாடு என்று பெயர்.இதற்குமேல் அறிவதற்கு ஒன்றுமில்லையாதலால் இதற்கு எல்லைநிலம் என்பது பொருள். இங்கு அடையும் இன்பத்திற்கும் நலத்திற்கும் முடிவே இல்லாததால் நலமந்தமில்லதோர் நாடு என்பதும் இதற்குப் பெயர். இங்கு கிடைக்கும் இன்பம் “அந்தமில் பேரின்பம்” என்று நம்மாழ்வார் பாடுகிறார். வாசுதேவன் வைகும்படியான (வாழும்படியான) இருப்பிடமாதலால் வைகுண்டம் என்றும் பெயருண்டு.

ஸ்தல வரலாறு
வைணவ அடியார்கட்கு, அவனன்றி தமக்குப் புகலிடம் யாதுமில என்றெண்ணி அடியவர்கட்கு மோட்சத்தை நல்கும் இந்தப் பரமபதமே வைணவர்களின் கடைசி இலக்காகும். பரமபதத்திலிருந்து தன்னை வ்யூகப்படுத்தி விபவ, அர்ச்சாவதாரங்களில் தன்னைக் காட்டிக் கொடுத்து இவைகளே பரத்தினும் மேலானவை என்று எண்ணி ஆட்பட்ட அடியவர்களை, பூவுலகில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட காலம் முடிவுற்ற பின் அவனே வந்து அழைத்துச் செல்கிறான். மோட்சம் பெறுவதே குறிக்கோள் என்றென்னும் அடியார்கட்கு இந்த பரமபதமே எல்லை நிலமாகும்.

திருநாட்டைப் பற்றிப் புராணங்களாலும் ஆழ்வார் பாசுரங்களாலும் உணரலாம். இராமானுஜர் இயற்றிய வேதாந்த சங்கிரஹம் என்னும் நூல் திருநாட்டைப் பற்றித் தெளிவாகவும், நேரில் பார்ப்பது போலவும் விளக்கிப் பேசுகிறது. இராமானுஜர் இயற்றிய கத்யத்ரயத்தில் ஒன்றான வைகுண்டகத்யத்தில் பரமபத வர்ணனை சிறப்பாக இருக்கும், இராமானுஜரின் வரலாற்றைப் பேசும் “ப்ரபந்நாம்ருத தர்ப்பணம்” என்னும் நூலில் பரமபதம் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.

“திருவனந்தாழ்வானின் மேல் - தடக்கையனாய் சங்கு சக்ர கதாதாரனாய், காயாம்பூ இதழ்போல் கருத்தவனாய் தாமரை இதழ்போன்ற திருக்கண்களை உடையவனாய், கோடி மன்மதர்களை ஒத்த அழகு உடையவனாய். உலகை மயக்கும் திருமேனி உடையவனாய், கோடிச்சூர்யப் பிரகாசமுடையவனாய், கோமளமான அவயவங்களால் நிற்பவனாய், தோள்வளை, ஹாரம் முன்கைவளை, சதங்கை முதலான திருஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனாய், அப்ராக்ருத சந்தனத்தால் பூசப்பெற்ற திருமேனியை உடையவனாய். பீதாம்பரத்தை தரித்தவனாய், நித்யயௌவன முடையவனாய், எப்போதும் ஸ்ரீபூமி, நீளா தேவிகளோடு கூடினவனாய் (ஈஸ்வரர்களுக்கெல்லாம் மேலான) பரமேஸ்வரனாய் நித்தியர்களாலும் முக்தர்களாலும் சேவிக்கப்படுபவனாய் (அனைவரினும்) பெரியவனாய் ஸர்வவ்வியாபியான பரமபத நாதன் பேரின்பத்துடன் எழுந்தருளியிருக்கிறான்”.

சிறப்பு
இத்திருநாட்டை அடைய இரண்டு பாதைகள் உண்டு.

1.) எல்லாவற்றையும் துறந்துவிட்டு அவன் ஒருவனே பற்றுக்கோடு என்று எண்ணி, மாலையில் இம்மியும் சிக்காதிருந்து அவனுக்கே கைங்கர்யம் பூண்டிருத்தல்

2). வைணவ அடியார்கட்கு பேதமற்ற தொண்டு செய்தல்.

இங்கு செல்லும் ஜீவாத்மாக்கள் நித்யசூரிகள் ஆகின்றன. அதாவது எப்போதும் அழிவற்ற சக்தியைப் பெறுகின்றன. இங்கு பகவானைப் போலவே ஸ்வரூபம் அவர்கட்கும் உண்டாகிறது. ஆயினும் பகவானோடு இரண்டறக் கலக்காமல் உடனிருந்து கைங்கர்யம் செய்து கொண்டு எப்போதும் பல்லாண்டிசைத்துக் கொண்டிருப்பர்.

நமக்கு இந்தப் பூவுலகில் இருக்கும்போதும் விசும்பைப் பற்றி (ஆகாயத்தப் பற்றி) ஒன்றும் புரியாத புதிராக இருக்கும் நித்ய சூரியாகி இங்கு சென்று விட்டால் படைப்புகளும், பிரபஞ்சங்களும் என்னவென்று தெளிவாகத் தெரிவதால் இதற்கு தெளிவிசும்புத் திருநாடு என்று பெயர்.

இங்கு அடையும் இன்பத்திற்கும் நலத்திற்கும் முடிவே இல்லாததால் நலமந்தமில்லதோர் நாடு என்பதும் இதற்குப் பெயர். இங்கு கிடைக்கும் இன்பத்திற்கு “அந்தமில் பேரின்பம்” என்று நம்மாழ்வார் பெயர் சூட்டியுள்ளார். அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை என்று தனக்கு வைகுந்தம் அளிப்பதாக பாடுகிறார். திருப்புளியாழ்வார் அடியிலே இருந்து கொண்டு மற்ற திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தது போல் வைகுந்தம் சென்றதாகவும் பாடுகிறார்.

எம்பெருமானின் சகல ரூபங்களுக்கும் ஆதியானதாக, மூலமானதாக, உற்பத்தி ஸ்தானமாய் பரமாய் இருப்பதால் பரமபதம் என்று பெயர்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
நம் ஆச்சார்யன் திருவடிகளே சரணம் !!

ஸ்ரீவைஷ்ணவனுக்கு உய்ய ஒரே வழி ~ எம்பெருமானிடம் சரணாகதி அடைந்து, திருவடிகளில் பிரபத்தி செய்வதே. ஸ்ரீவைகுண்டத்து எம்பெருமானிடம் நம்மை சேர்விப்பவர் நம் ஆசார்யரே

108 திவ்ய தேசங்கள் நிறைவு பெற்றது

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!