மூலவர் : சத்தியமூர்த்தி
உற்சவர் : அழகியமெய்யர்
தாயார் : உஜ்ஜிவனதாயார்
தல விருட்சம் : ஆல மரம்
தீர்த்தம் : சத்ய புஷ்கரணி
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருமய்யம்
ஊர் : திருமயம்
மாவட்டம் : புதுக்கோட்டை
மாநிலம் : தமிழ்நாடு
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார்

மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும் கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட மெய்யானை மெய்ய மலையானைச் சங்கேந்தும் கையானை கைதொழாக் கையல்ல கண்டோமே.
- திருமங்கையாழ்வார்


திருவிழா
வைகாசி பௌர்ணமி தேர் - 10 நாட்கள் - 5 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். ஆடிபூர திருவிழா - 10 நாள் திருவிழா. கிருஷ்ணஜெயந்தி, வைகுண்ட ஏகாதேசி ஆகிய நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை லட்சக்கணக்கில் இருப்பது சிறப்பு, தமிழ், ஆங்கில வருடபிறப்பு,தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் பெருமாளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.
தல சிறப்பு
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 106 வது திவ்ய தேசம்.

இது ஒரு குடைவரைக் கோயிலாகும். இத்தலத்தில் சத்திய மூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். 12 வருடங்களுக்கு ஒருமுறை தைல காப்பு மூலவர் பெருமாளுக்கு பூசப்படுகிறது.

பொது தகவல்
பல்லவர் காலத்தில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே சுற்றுச்சுவருடன் இக்கோயிலும் இதற்கு பக்கத்தில் உள்ள பெருமாள் கோயிலும் இருக்கின்றன.இருகோயில்களும் திருமயம் மலைச் சரிவில் ஒரே கல்லில் குடைவரைக் கோயில்களாக விளங்குகிறது.இந்த சத்திய மூர்த்தி பெருமாள் ஆலயத்தை தனியே சுற்றி வரமுடியாது. மூலவர் சந்நிதி குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது என்பது மிகவும் சிறப்பு.

பிரார்த்தனை
குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் ஆகியவை நிறைவேறுகிறது. உஜ்ஜீவனத்தாயாரை வழிபட்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் மற்றும் சகல சௌபாக்கியம் பெறலாம்.மேலும் மனநிலை சரியில்லாதவர்கள் பேய், பிசாசு பிடித்தவர்கள் நரம்பு தளர்ச்சி நோயில் துன்புறுபவர்கள் பலர் இத்தாயாரை வழிபட்டால் தங்கள் பிரச்சினைகள் நீங்கும் என்பது இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.

நேர்த்திக்கடன்
தாயாருக்கு திருமஞ்சனம், புடவை சாத்துதல்,வளையல்,பொம்மை ஆகியவற்றை உபயம் செய்து வழிபடுகிறார்கள்.பெருமாளுக்கு வெண்ணெய் பூசுதல், சுவாமிக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம்.ஊதுவத்தி, வெண்ணெய் சிறு விளக்குகள் துளசி தளங்கள் பூக்கள் பூமாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து இறைவனுக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம்.இது தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

தலபெருமை
இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாள் சத்தியமூர்த்தி எனும் திருநாமத்துடன் நின்ற திருக்கோலத்தில் சோமச்சந்திர விமானத்தின் கீழ், ஒரு கரத்தில் பிரயோகச் சக்கரத்துடன் மற்றொரு கரத்தில் சங்குடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சத்தியமூர்த்தி பெருமாள் பெயரால் இத்தலம் சத்ய சேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது.

இத்தலத்திற்கு திருமெய்யம் எனும் பெயர் வரக்காரணமாகிய பெருமாள் திருமெய்யர் எனும் திருநாமத்துடன் மற்றொரு சன்னதியில் பாம்பணை மேல் பள்ளிகொண்டு காட்சி அளிக்கிறார். இத்திருஉருவம் இந்தியாவிலேயே மிகப்பெரியது என்றும் கூறப்படுகிறது.பெருமாளின் பங்கையற் கண்கள் அரைக்கண்ணாக மூடியிருக்க இதழ்களில் மென்நகையுடன் பாம்பணை மேல் பள்ளி கொண்ட நிலையில் வலக்கரம் ஆதிசேசனை அணைத்துக் கொண்டு காட்சி தருகிறார்.சுற்றிலும் தேவர்கள் ரிஷிகள் பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து புறப்படும் தாமரை மலரில் பிரம்மாவும் மார்பில் குடியிருக்கும் மகாலட்சுமியும் மாமல்லபுரச் சிற்பங்கள் போல் மலையை குடைந்து பாறைகளில் செதுக்கப்பட்ட இச்சிற்பங்கள் தெய்வீக உணர்வையும் கலையுணர்வையும் ஒருங்கே ஏற்படுத்துகின்றன. 7ம் நூற்றாண்டுக் குடவரைக்கோயில் சத்ய மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த தலம்.

தல வரலாறு
ஒருசமயம் மது, கைடபர் ஆகிய அரக்கர்கள் பெருமாள் பாம்பணையில் படுத்து நித்திரையில் ஆழ்ந்திருக்கும்போது ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரை அபகரிக்க வருகின்றனர்.அது கண்டு அஞ்சி பூதேவி பெருமாளின் திருவடிக்கருகிலும், ஸ்ரீதேவி பெருமாளின் மார்பிலும் ஒளிந்து கொள்கின்றனர்.

பெருமாளின் நித்திரையை கலைக்க மனமில்லாது ஐந்து தலை நாகமான ஆதிஷேசன் தன் வாயிலிருந்து விஷ ஜ’வாலையை கக்கி விரட்டி விடுகிறான்.பெருமாளின் அனுமதியின்றி அவ்வாறு செய்ததற்காக பயந்து இருக்கையில் பெருமாள் என் அனுமதியின்றி செய்தாலும் நல்லதே செய்திருக்கிறாய் பாராட்டுக்குரிய செயல் என்று கூறியதாக வரலாறு.இதை மெய்ப்பிக்கும் வகையில் இத்தலத்தில் ஆதிசேஷன் தன் தலையை அஞ்சி சுருங்கியவாறு காட்சி தருவது சிறப்புக்குரியது.

சிறப்பம்சம்
பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இது ஒரு குடைவரைக் கோயிலாகும். இத்தலத்தில் சத்திய மூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர்.

அமைவிடம்
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : திருச்சியிலிருந்து - 72 கி.மீ.; புதுக்கோட்டையிலிருந்து - 22 கி.மீ.; மதுரையிலிருந்து - 84 கி.மீ. மதுரை - புதுக்கோட்டை நெடுஞ்சாலையிலிருந்து திருமயம் உள்ளது. எனவே மதுரை, புதுக்கோட்டையிலிருந்து பேருந்து வசதி உண்டு.

அருகிலுள்ள ரயில் நிலையம் : திருமயம்.

அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி.

தங்கும் வசதி : புதுக்கோட்டை

திறக்கும் நேரம்
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி
அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம் - 622 507 புதுக்கோட்டை மாவட்டம்