வரலட்சுமி விரதம் மேற்கொள்ளும் சுமங்கலிப் பெண்கள் முதல் நாளன்று வீட்டை சுத்தப்படுத்தி, செம்மை இட்டு, மாக்கோலம் போட வேண்டும்.

வீட்டின் தென்கிழக்கு மூலையில் அழகான மண்டபம் அமைத்து, அதில் வாழை மரம், மாவிலை தோரணம் கட்ட வேண்டும். மண்டபத்தில் வாழை இலை மீது ஒரு படி அரிசியை பரப்பி, வைக்க வேண்டும். பித்தளை செம்பு அல்லது வெள்ளி செம்பின் உள்ளே அரிசி போட்டு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, 1ரூபாய் நாணயம், எலுமிச்சம் பழம், காதோலை, கருகமணி [இவை உள்ள செம்பு கலசம் எனப்படும்]

வாய்பகுதியில் மாவிலை வைத்து கலசத்தின் மீது தேங்காய் வைக்க வேண்டும். தேங்காயில் மஞ்சள் பூசி குங்குமமிட்டு,அம்மன் திரு முகத்தை வைக்க வேண்டும். அம்மன் முகம் சந்தனத்தால் செய்தோ, வெள்ளி முகம் வைத்தோ அவரவர் வசதிக்கு ஏற்ப வைக்கலாம். வரலட்சுமிக்கு ஆடை, ஆபரணம் தரித்து, அழகூட்ட வேண்டும். வாசலுக்கு அருகில் அம்மனை முதல் நாள் வைக்க வேண்டும்.

மறுநாள், வரலட்சுமி விரதம் அன்று பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.வாசலில் வைத்த அம்மனை அழைக்கும் விதமாக, "எங்கள் வீட்டில் எழுந்தருளி எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேற, எல்லா ஐஸ்வர்யங்கள் தந்து அருள்வாயே " என்று கூறி, அம்மனை வாசலில் இருந்து எடுத்து வந்து மண்டபத்தில் கிழக்கு முகம் பார்த்து வைக்க வேண்டும். பூஜை செய்யும் போது வடக்கு முகமாக, உட்கார்ந்து பூஜிக்க வேண்டும்.

மஞ்சள் சரடை கும்பத்தின் மீது சாத்த வேண்டும்.மஞ்சள் சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜிக்க வேண்டும். மலர்களால் ,தீபங்களால் அம்பாளை ஆதரித்து, 9 இழைகள் கொண்ட மஞ்சள் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கணவனிடம் கொடுத்தோ அல்லது மூத்த சுமங்கலிகளை கட்டிவிட சொல்லி, சரடை கட்டி கொள்ள வேண்டும். பூஜைக்கு வந்திருக்கும் சுமங்கலி பெண்களுக்கும் கட்டி விடுதல் வேண்டும். அஷ்ட லக்ஷ்மிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை தூவி, வழிபட வேண்டும். அஷ்ட லட்சுமி சுலோகம், பாடல்கள் பாடி வழிபட வேண்டும்.

லக்ஷ்மிக்கு சாதம், பாயசம், வடை, கொழுக்கட்டை, இட்லி, தயிர், பசும்பால், நெய், தேன் அல்லது கலந்த சாதம் 3 அல்லது 5 என்ற எண்ணிக்கையில் செய்து நிவேதனம் செய்ய வேண்டும்.

வரலக்ஷ்மி விரதத்தன்று நம் இல்லம் தேடி வருபவள் லட்சுமி .

சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து, அம்பாளாக எண்ணி, உணவளித்து வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், ரவிக்கை துணி, பணம், அம்மாளுக்கு பிடித்தமான பொருட்களை தாம்பூலமாக வைத்து கொடுத்து உபசரிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் நாம் லட்சுமி தேவிக்கு பிடித்தமானவர்கள் ஆகின்றோம். நம் கோரிக்கைகளை தீர்த்து, என்றென்றும் தீர்க்க சுமங்கலியாக வாழும் வரத்தை நமக்கு தருவாள் நம் தாய். சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுப்பதால் கொடுப்பவர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் அன்னை மகாலக்ஷ்மியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

தாம்பூலம் யார் கொடுத்தாலும் அதை பெறுவது அன்னை மகாலக்ஷ்மியின் அனுக்கிரகத்தை பெறுவதாகும். பூஜை முடிவில் லட்சுமி தேவிக்கு மங்களம் பாடி ஆரத்தி எடுக்க வேண்டும். தெய்வங்களுக்கு எடுக்கும் ஆரத்தி மஞ்சளும், குங்குமமம் கலந்த கலவையாக இருக்க வேண்டும். ஆரத்தி எடுத்தவுடன், யார் காலிலும் மிதிப்படாதவாறு மரத்தின் கீழ் ஊற்றிவிட வேண்டும்.

மறுநாள் காலையில், வரலட்சுமி அம்மனுக்கு எளிமையான பூஜை செய்து, வடக்கு முகமாக கலசத்தை நகர்த்தி அலங்காரத்தை அகற்ற வேண்டும். பூஜையின்போது" இந்த வருடம் போல் அடுத்த வருடமும் நான் பூஜை செய்யும் பாக்கியத்தை தர வேண்டும்" என்று கூறி, அம்பாளை வழி அனுப்பும் விதமாக கலசத்தை வடக்கு முகமாக நகர்த்த வேண்டும்.

கலசத்தை அரிசி பாத்திரத்துள் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அன்னபூரணியின் பேரருள் இல்லத்தில் நிரந்தமாக நிறைந்திருக்கும் அக்ஷயமாக இருப்பவள் அம்பாள்!

பூஜையில் பயன்படுத்திய பச்சரிசி, கலச தேங்காய் போன்றவற்றை கொண்டு, அடுத்து வரும் வெள்ளிக்கிழமையன்று உடைத்து பாயசம் செய்து நிவேத்தியம் செய்யலாம்.

வரலக்ஷ்மியை வழிபட்டால் அனைத்து செல்வங்களையும் பெறலாம். இவ்விரதம் அனுஷ்டிப்பதால், குழந்தைகளுக்கு கல்வி ஞானம் கிடைக்கும். கர்ம நோய்கள் நீங்கும். திருமணம் நடைபெறும். புத்திர பாக்கியம் உண்டாகும்.