ஒரு மனிதனின் நிம்மதியான வாழ்க்கைக்குத் தேவை அருளும் பொருளும். இவை இரண்டும் இருந்து விட்டால், எதற்கும் கவலை இல்லை. அருள் அதிகம் இருக்க வேண்டும். பொருள் போதுமான அளவில் இருக்க வேண்டும். பொருள் அதிகம் இருந்தால், அருளைப் பெறுவதில் சிரமம் இருக்கும். அதாவது, அருளைப் பெறுவதில் மனம் நாட்டம் கொள்ளாது. அருளும் பொருளும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதவை. அருளை வைத்துக் கொண்டு பொருள் பெற முடியாது; பொருளை வைத்துக் கொண்டு அருளைப் பெற முடியாது. இரண்டையுமே தேடித்தான் பெற வேண்டும். நல்ல ராசிக்காரர்கள் சிலரை இவை இரண்டுமே தேடி வருவதும் உண்டு. அருள் என்றால், இறை இன்பம். இறை அருள். இறைவனின் ஆசி என்றெல்லாம் சொல்லலாம். என்றென்றைக்கும் எப்போதும் நல்ல நிலையில் ஒருவரை வைத்திருக்க உதவுவது அருள். இத்தகையோரைப் பார்த்தாலே, கையெடுத்துக் கும்பிடத் தோன்றும். பொருள் என்றால், நாம் தேடிச் சேகரித்த செல்வம். பொருள் தேடும் ஆசை குறையக் குறையத்தான் அருள் வந்து சேரும். ஒருவர் வைத்துக் கொண்டிருக்கும் செல்வத்தால், படிப்பால், பதவியினால், ஞானத்தால் அருளை வாங்க முடியாது. அருள் கடைச் சரக்கு அல்ல.
மனத்தூய்மையே அருளைப் பெற முயற்சிப்பதன் முதல் படி. ஸ்ரீராமபிரானின் மனத் தூய்மையை ராவணனே வியந்து போற்றி இருக்கிறான். எதிரியே என்றாலும், ராமனின் இந்தக் குணத்தை தன் மனைவியான மண்டோதரியிடம் வியந்து சொன்னதாக, பரமஹம்சர் சொல்வார். சீதையைத் தங்கள் நாயகி ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஏன் இவ்வளவு அவஸ்தைப்படுகிறீர்கள்? ராமனைப் போன்ற மாய வடிவம் எடுத்து, சீதையிடம் சென்று அவளை ஏன் ஏமாற்றி அடையக் கூடாது. என்று கேட்டாளாம் மண்டோதரி. கணவனின் இந்த இச்சையைப் பூர்த்தி செய்ய விரும்பிய மண்டோதரியே இப்படி ஒரு வழியைச் சொன்னாள். அதற்கு ராவணன், சேச்சே... அப்படி இல்லை மண்டோதரி. ராமனை நினைத்த மாத்திரத்திலேயே வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஆனந்தமும் இன்பமும் மனதில் உண்டாகின்றன. பரமபதமான சொர்க்கமும்கூட வெறுப்பாகி விடும் போலிருக்கிறது. அப்படி இருக்கும்போது, அவனுடைய திவ்ய சொரூபத்தை எடுத்துக் கொண்டால், எனக்கு எப்படி சிற்றின்பத்தில் நாட்டம் செல்லும்? மனம் இச்சையில் லயிக்காது என்று மண்டோதரியிடம் சொன்னானாம். பொருளாசை மற்றும் இன்ன பிற ஆசைகளில் மனம் சென்று கொண்டிருந்தால், அருள் கிடைக்காது. இறைவனை தரிசிக்க முடியாது. பணம், பதவி, பட்டம், ஆற்றல் இவற்றைச் சேர்க்க முயலும் ஆசை அறவே அடங்கினால்தான் இறை தரிசனம் கிடைக்கும். அந்த இன்பத்தை உணர முடியும்.
அருளில் கிடைக்கும் ஆனந்தத்தை ஒருமுறை ருசித்துப் பார்த்து விட்டால், அதன் பின் வேறு எந்த ஆசையும் ஒரு மனிதனுக்கு எழாது. சான்றோர்கள் அனுபவித்துப் பெற்ற அந்த அருள் அமுதத்தைப் பெற முயற்சிக்கலாமே! அருளைப் பெறுவதற்கு மனதை முதலில் பக்குவப்படுத்துங்கள். பக்குவப்பட்ட மனதில்தான் அருள் ஆனந்த தாண்டவம் ஆடும்.