அரச பதவி அருளும் கஜலக்ஷ்மி வழிபாடு

how to worship of gajalakshmi
அஷ்டலக்ஷ்மிகளுள் விசேஷமானவள் கஜலக்ஷ்மி. இவளே நடுநாயகமாக இருந்து, ஏனைய லக்ஷ்மி வடிவங்களை தன்னுள் கொண்டவள்.

திருநிலையில்...இவள் நிலைப்படிமேல் அமர்ந்துள்ளதால், திருநிலை நாயகி எனப் புகழப்படுகின்றாள்.

தாமரை மலரில் பத்மாசனமாக மகாலக்ஷ்மி வீற்றிருக்க, இருமருங்கிலும் (இரு பக்கங்களிலும்) யானைகள் புனித நீரினைக் கொண்டு (கலசம்) அபிஷேகத்தில் அல்லது கவரி வீசுவது போலவும் அமைக்கப்படும்.

விஷ்ணு புராணத்தில்

விஷ்ணு புராணம், இவள் கடலிலிருந்து வெளிப்பட்டதும், திசையானைகள் எட்டும் பொற்குடங்களால் புனித நீரை ஏந்தி வந்து நீராட்டின என்று கூறுகிறது.

யானைகள் நீராட்ட நடுவில் வீற்றிருப்பதால் இவளை கஜலக்ஷ்மி என்று அழைக்கின்றனர்.

விரும்பியதைக் கொடுப்பவள்

நல் விருப்பங்களை அளிக்கும் தேவியாக இருப்பதால், அரண்மனை, வீடு, ஆலயம், சபை முதலான நிலை வாயிலின் மேல், இவளுடைய திருவுருவத்தை அமைக்கின்றனர்.

இப்படி அமைப்பதின் மூலம், வீட்டின் உரிமையாளர்கள் விரும்பிய நல்லதை விரும்பியவாறு நிறைவாக அளித்து, வீட்டில் அமைதியை நிலவச் செய்கின்றாள்.

இவளை சாந்தலக்ஷ்மி, தயாலக்ஷ்மி, சுதந்திர லக்ஷ்மி என அழைப்பதும் உண்டு.

சிவாலயங்களில் கஜலக்ஷ்மி

சிவாலயங்களில் கஜலக்ஷ்மியாக விளங்கும் திருமகளுக்கு, வாயிலைத் திறக்கும்போதும், பூட்டும்போதும் மந்திர பூர்வமாக பூஜை செய்யப்படுகிறது.

மேலும் சிவாலயத்தின் வாயு மூலையில் சுதை வடிவிலோ அல்லது சிலாரூபத்திலோ ஆவரணத்தில் இவள் விளங்குவாள்.

சோழர் கற்றளியில்

சோழ மன்னர்கள் தாங்கள் அமைத்த சிவாலயங்களில் பரிவாரங்களில் ஒருத்தியாக கஜலக்ஷ்மியை அமைத்து வழிபட்டனர்.

லக்ஷ்மி தாண்டவம்

ஒருமுறை லக்ஷ்மி செய்த தவத்துக்கு மகிழ்ந்த சிவபெருமான் பத்து கரங்களுடன், அவள் முன்னே தோன்றி நடனமாடினார். அந்தத் தாண்டவம் லக்ஷ்மி தாண்டவம் என்றழைக்கப்படுகிறது.

தாயார்

வைஷ்ணவ வழிபாட்டில் மகாலக்ஷ்மியை தாயார் என்றே போற்றுகின்றனர்.

விஷ்ணு ஆலயங்களில் விளங்கும் தாயார் சன்னிதியில், நீரை அபிஷேகிக்கும் யானைகளோடு பத்மா சனத்தில் ஸ்ரீதேவி விளங்குகின்றாள். சில ஆலயங்களில் தாமரையில் கிளிகள் அமர்ந்திருக்கும்.

நீராட்டல்

திருமகளாகிய லக்ஷ்மி வழிபாட்டில் யானைகள் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன.

பல்லவர்கள் அமைத்துள்ள குடைவரைக் கோயில்கள், பலவற்றில் யானைகள் நீரை முகந்து நீராட்ட தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளைக் காண்கின்றோம்.

வேத மந்திரமான ஸ்ரீசூக்தம் அவள் யானைகளின் பிளிறல்களைக் கேட்டு மகிழ்வதாகக் கூறுகிறது.

மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்,
கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத,
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மஹா லக்ஷ்ம்யை நம:

காயத்ரி

ஓம் மகாலக்ஷ்மியை
ச விதமஹேவிஷ்ணு பத்ன்யை ச
தீமஹி தந்நோ லக்ஷ்மி: ப்ரசோதயாத்!

மகாலக்ஷ்மி வாசம் செய்யும் இடங்கள்!

‘ஓம் பில்வ நிலையாயை நம: என்று லக்ஷ்மி சகஸ்ர நாமாவளியில் வருகின்றது.

வில்வ வனத்தில் லக்ஷ்மி அவதாரம் / வாசம் செய்கின்றாள். அதுபோல நெல்லி, தாமரை, துளசியில் தங்கி அருள் செய்கின்றாள் என்பர் பெரியோர்.

விரதங்கள்

வெள்ளிக் கிழமையில் மகாலக்ஷ்மி பூஜை சிறந்தது. பவுர்ணமி பூஜை உகந்தது.

ஆவணி வளர்பிறை பஞ்சமிக்கு ‘மகாலக்ஷ்மி பஞ்சமி’ என்று பெயர். அன்று தொடங்கி அஷ்டமி வரை நான்கு நாட்கள் வழிபடுவது மகாலக்ஷ்மி நோன்பாகும்.

சித்திரை மற்றும் கார்த்திகை மாத பஞ்சமியை ‘ஸ்ரீபஞ்சமி’ என்பதால் லக்ஷ்மி பூஜை செய்வது உத்தமம்.

நவராத்திரி (புரட்டாசி) விழாவின், 4,5,6 வது நாட்களிலும், ஐப்பசி மாத பௌர்ணமியிலும் மகாலக்ஷ்மியை வழிபட செல்வம் பெருகும். ஐப்பசி அமாவாசையன்று (தீபாவளிக்கு அடுத்த நாள்), மகாலக்ஷ்மி பூஜை செய்தல் வேண்டும்.

அப்போது இனிப்புப் பலகாரங்களை நிவேதனம் செய்தல் சிறப்பு.

கஜலக்ஷ்மியை யாரொருவர் நித்தம் வழிபடுகின்றாரோ, அவருக்கு மற்றவர்களிடம் கருணையும், கொடுக்கும் (ஈதல்) எண்ணமும், சகல சம்பத்தும் என்றும் கிடைக்கும்.

புண்ணிய தினங்களில் மங்களப் பொருட்களை மற்றவர்களுக்கு கொடுத்தால், புண்ணியமும் சம்பத்யோகமும், புகழும் பெருகும்

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!