கிருஷ்ண ஜெயந்தி விரதமுறை

krishna jayanti fasting procedure
(I) காலை முதல் நள்ளிரவு வரை விரதம் இருத்தல் வேண்டும். முடியாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம்.

கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், நெய் பண்டங்களை நைவேத்யம் செய்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

பதினாறு வார்த்தைகள் அடங்கிய

'ஹரே ராம ஹரே ராம'
'ராம ராம ஹரே ஹரே'
'ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண'
'க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே'

என்ற மகா மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.

பகவத் கீதை படிக்க வேண்டும்.

கோவிலுக்குச் சென்று கிருஷ்ணரை பிரார்த்திக்க வேண்டும்.

(II) சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்..

அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் போதித்த கீதோபதேசக் கருத்துகள் இங்கு இடம் பெற்றுள்ளன.

உலகத்தில் தர்மத்தை நிலைநாட்டவும், நல்லவர்களைக் காக்கவும், தீயவர்களை அழிக்கவும் ஒவ்வொரு யுகத்திலும் நான் இந்த பூமியில் மனிதனாக அவதரிக்கிறேன். நீயும் தர்மத்தைக் காக்க துணிந்து நில்.

எல்லா உயிர்களின் இதயத் தாமரையில் கிருஷ்ணனாகிய நானே வீற்றிருக்கிறேன். எனது சக்திக்கு கட்டுப்பட்டு உயிர்கள் அனைத்தும் பொம்மை போல ஆட்டுவிக்கப்படுகின்றன.

பச்சிலை, மலர், தண்ணீர் எது வேண்டுமானாலும் அன்புடன் எனக்கு அளித்தால் போதும். அவர்களின் அன்பை ஏற்றுக் கொண்டு அருள்புரிய தயாராக இருக்கிறேன்.

குரு என்னும் திறமையான மாலுமியும், தெய்வீக அருள் என்னும் காற்றும் சாதகமாக இருந்து விட்டால், பிறவிக்கடலை எளிதாக ஒருவனால் கடந்து விட முடியும்.

மண்ணில் பிறந்த உயிர்கள் அனைத்தும், என்றாவது ஒருநாள் பிறப்பு, இறப்பு இரு நிலைகளையும் கடந்தே ஆக வேண்டும். இதுவே வாழ்வின் குறிக்கோள்.

கிடைப்பதற்கு அரிய மனிதப்பிறவி மூலம் ஆன்மிக வாழ்வில் முன்னேற முயற்சிக்க வேண்டும். எல்லா உயிர்களுக்கும் உதவி செய்ய மனிதன் கடமைப்பட்டிருக்கிறான்.

மனம் போல போக்கில் மனிதன் வாழ்வது கூடாது. புலன்களுக்கு அடிமைப்பட்டவன் தன் நிலையில் இருந்து தாழ்ந்து விடுகிறான். பகுத்தறிவால் நன்மை, தீமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஆமை தன் உறுப்புகளை ஓட்டுக்குள் உள்ளிழுத்துக் கொள்வது போல, புலன்களை புத்தியால் அடக்க வல்லவன் ஞான நிலையை அடைய முடியும்.

மனிதப்பிறவி மகத்தானது. அதனால் தேவர்களும் மண்ணில் பிறப்பெடுத்து அன்பு நெறியில் வாழ்ந்து உயர்ந்த ஞானம் அடைய விரும்புகின்றனர்.

நேர்மை, பணிவு, பொறுமை, சேவை மனப்பான்மை, மனத்தூய்மை, தன்னடக்கம் ஆகிய நற்பண்புகள் அறிவுடையோரின் அடையாளங்களாகும்.

தேனீக்கள் பல பூக்களில் இருந்து தேனைச் சேகரிப்பது போல மனிதன் பல வழிகளிலும் நற்பண்புகளைப் பெற முயற்சிக்க வேண்டும்.

உணவு, உறக்கம், உழைப்பு அனைத்திலும் மிதமாக இருப்பவனே சிறந்த மனிதன். அடங்காத முரட்டுக் குதிரையான மனதை அடக்கும் வல்லமை அவனிடம் மட்டுமே இருக்கும்.

வேலையின்றி கணப்பொழுதும் சும்மா இருக்க கூடாது. அவரவர் கடமையைச் சரிவர செய்ய வேண்டும். செயலற்று இருந்தால் உடலைப் பராமரிப்பது கூட சிரமமாகி விடும்.

செய்யும் கடமையைக் கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டால், பலனைப் பற்றிய சிந்தனை உண்டாகாது. அப்போது தான் மனிதன் சுதந்திரமாக வாழ முடியும்.

அளவான பேச்சும், உணவில் கட்டுப்பாடும் இருந்து விட்டால் மனிதன் தன்னை அறியும் அறிவைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வான்.

நாடாளும் மன்னராக இருந்தாலும் பெரியவர்களைக் கண்டால் வணங்குவது அவசியம். மனப்பூர்வமாக பெரியவர்களுக்குச் சேவை செய்தால் அகந்தையை வெல்ல முடியும்.

கொழுந்து விட்டு எரியும் தீ, கட்டைகளை எரித்து சாம்பலாக்குவது போல என்னிடம் முழுமையாகச் சரணடைந்தால் பாவம் அனைத்தும் முற்றிலும் அழிந்து போகும்.

(|||) - வசுதேவர் தேவகி பொருள் என்ன ?

கிருஷ்ணரை பெற்ற தந்தை வசுதேவர். வசு என்ற சொல்லுக்கு எங்கும் பரவியிருப்பது என்று பொருள். எங்கும் பரவியிருக்கும் தேவனான கிருஷ்ணரைப் பெற்றதால் அவர் வசுதேவர் என பெயர் பெற்றார். கிருஷ்ணரின் தாய் தேவகி. இதற்கு தெய்வீகம் எனப்பொருள். ஒரு தெய்வத்திருமகனை பெற்றெடுத்ததால் இந்தப் பெயர் பெற்றாள்.

(IV) - விடாக்கண்டன் கொடாக்கண்டன்!

அவரவர் கருத்தில் உறுதியாக நிற்பவர்களை விடாக்கண்டன் கொடாக்கண்டன் என்பார்கள். பாரதப்போரில் கிருஷ்ணரும், அர்ஜுனனும் இப்படி பேசிக்கொண்டனர். தன் எதிரே நிற்கும் பீஷ்மர், துரோணர் உள்ளிட்ட குருமார்களையும், உறவினர்களையும் எதிர்த்து போராட முடியாது என அர்ஜுனன் கிருஷ்ணரிடம் சொல்லி விட்டான்.

அப்படியானால் உன் பெயரான விஜயன் (வெற்றியாளன்) என்பதை இழக்க வேண்டி வருமே என்றார் கிருஷ்ணன். போனால் போகட்டும் என்ற அர்ஜுனனிடம், “அப்படியானால் நீ இழந்த நாட்டை மீட்க முடியாது. உன் சுகமெல்லாம் போய் விடுமே! என்றதும், அதுவும் போகட்டும் என்றான் அர்ஜுனன். தன் வழிக்கு வராத அர்ஜுனனிடம்,“சரி...உன் சகோதரர்கள் இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டுமே! என்று கிருஷ்ணர் சொல்லவும், “எங்களுக்குள் அப்படி கருத்து வேறுபாடே வராது.

நான் சொல்வதை மற்றவர்கள் நிச்சயம் ஏற்பார்கள், என்றான் அர்ஜுனன். சரி...நீ என்ன தான் சொல்ல வருகிறாய்? என்று கிருஷ்ணன் கேட்கவும், “நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உனக்கு தெரியாதாக்கும். சரியான ஆளாக இருக்கிறாயே! என் மனதில் மட்டுமல்ல...ஊரில் எல்லார் மனதிலும் என்ன இருக்கிறது என்று அறிந்த நீயா இவ்வளவு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாய் என்று மடக்கி விட்டான் அர்ஜுனன்.

ஆம்...எல்லாம் அறிந்த கிருஷ்ணர் நம் மனதில் இருப்பதையும் அறிவார். அதனால் நாம் நல்லதையே நினைப்போம்.

ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளே சரணம்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!