ஸ்ரீமதே ராமானுஜாய நம :
ஸ்ரீமந்நாதமுனிகள் வைபவம்
திருநக்ஷத்திரம் : ஆனி "அனுஷம்"
தனியன் :
நமோ சிந்த்யாத் புதாக்லிஷ்ட ஜ்ஞாநவைராக்ய ராஸயே |
நாதாய முநயே காதபகவத் பக்திஸிந்தவே ||
ஸ்ரீமந்நாதமுனிகள் வாழித்திருநாமம்:
ஆனிதனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே
ஆளவந்தார்க்கு உபதேசம் அருளிவைத்தான் வாழியே
பானுதெற்கிற் கண்டவன் சொற்பலவுரைத்தான் வாழியே
பராங்குசனார் சொற்பிரபந்தம் பரிந்துகற்றான் வாழியே
கானமுறத் தாளத்திற் கண்டிசைத்தான் வாழியே
கருணையினால் உபதேசம் கதியளித்தான் வாழியே
நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே
நலந்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே.
ஸ்ரீமந்நாதமுனிகள் வைபவம்
திருநக்ஷத்திரம் : ஆனி "அனுஷம்"
தனியன் :
நமோ சிந்த்யாத் புதாக்லிஷ்ட ஜ்ஞாநவைராக்ய ராஸயே |
நாதாய முநயே காதபகவத் பக்திஸிந்தவே ||
விளக்கம்: இப்படிப்பட்டதென்று நினைக்கமுடியாததும் ஆச்சர்யமானதும் (பகவானுடைய அருளாலே) எளிதாகக் கிடைத்ததுமான ஞானத்தினுடையையும், வைராக்கியத்தினுடையையும் குவியல் போன்றவராகவும், பகவானை மனனம் செய்பவராகவும், ஆழ்ந்த பகவத்பக்திக்குக் கடவுளாய் இருக்கிற நாதமுனிகளுக்கு நமஸ்காரம் செய்கிறேன்.
ஆசார்யர்களில் முதல்வரான ஸ்ரீமந்நாதமுனிகள் சேனை முதலியாருடைய முக்கியமான படைத்தலைவரான கஜாநந்தர் என்னும் யானை முகமுடைய நித்யசூரியினுடைய அம்சமாய், சோழதேசத்தில் உள்ள வீரநாராயணபுரத்தில் (காட்டுமன்னார் கோயில்) சோபக்ருத் ஆண்டு (கி.பி.823) ஆனி மாதம் 7ஆம் தேதி புதன்கிழமை பௌர்ணமி திதி அனுஷ நக்ஷத்திரத்தில் ஈஸ்வர பட்டாழ்வாருக்குக் குமாரராய் சொட்டைக்குலத்திலே அவதரித்தார். இவருக்குத் திருத்தகப்பனார் இட்ட திருநாமம் ஸ்ரீரங்கநாதன் என்பதாகும். இவர் யோகாப்யாஸம் கைவந்தவராகையாலே ஸ்ரீரங்கநாத முனிகள் என்றும், சுருக்கமாக நாதமுனிகள் என்றும் வழங்கப்பட்டார்.
இவர் தம் தகப்பனார் ஈஸ்வர பட்டாழ்வாரோடும், தம் திருக்குமாரரான ஈஸ்வரமுனிகளோடும் ஸகுடும்பமாக (ஒரே குடும்பமாக) காட்டுமன்னார் எம்பெருமானின் நியமனத்தோடு வடநாட்டு யாத்திரை புறப்பட்டு, வடதிசை, மதுரை, சாளக்கிராமம், வைகுந்தம் துவரை, அயோத்தி முதலான வடநாட்டு திவ்யதேசங்களை சேவித்துவிட்டு, யமுனைக்கரையிலே ஸ்ரீகேசவர்த்தனபுரம் என்கிற கிராமத்திலே எழுந்தருளியிருந்தார். "தூயபெருநீர் யமுனைத்துறைவன்" என்கிற எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்துகொண்டு சில வருஷங்கள் அங்கேயே எழுந்தருளியிருந்தார்கள். ஒருநாள் காட்டுமன்னார் நாதமுனிகளின் கனவில் தோன்றி, "வீரநாராயணபுரத்திற்குத் திரும்பி வருவீர்" என்று நியமித்தருள, அவர்களும் யமுனைத்துறை வனிடம் நியமனம் பெற்றுக்கொண்டு, பல திவ்யதேசங்களை சேவித்துக்கொண்டு வீரநாராயணபுரத்திற்குக் குடும்பத்தோடு எழுந்தருளினார்கள். மன்னனாருக்குச் ( வீரநாராயணபுரத்து எம்பெருமானின் திருநாமம்) சில வருஷம் கைங்கர்யம் செய்துகொண்டிருக்கும்போது, அங்கே ஸேவார்த்திகளாக வந்த சில ஸ்ரீவைஷ்ணவர்கள் பெருமானை ஸேவிக்கும்போது, ஐந்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழியை ("ஆராவமுதே") பாடித் துதித்தனர். இந்தப் பதிகத்தின் முடிவில், "குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் மழலைதீர வல்லார்" என்று பாடியதைக் கேட்ட நாதமுனிகள் அவர்களைப் பார்த்து, "நீங்கள் "ஆயிரத்துள் இப்பத்தும்" என்று பாடுகிறீர்களே! இந்தப் பிரபந்தம் முழுவதும் உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். அவர்கள் அதற்கு, "எங்களுக்கு ஆயிரம் தெரியாது; இந்தப் பத்துப் பாடல்கள் மட்டும்தான் தெரியும் என்று கூறினர் , பிறகு, தீர்த்தப் பிரசாதம் முதலியன அவர்களுக்கு அளித்து அனுக்ரஹித்து விடைகொடுத்தார். அன்றுமுதல், திருவாய்மொழி ஆயிரத்தையும் பெறவேண்டும் என்ற பேராவல் நாதமுனிகளின் சிந்தையில் ஓங்கி நின்றது அதற்காக அனவரதமும் முயற்சிகளை மேற்கொண்டுவந்தார். முடிவில் உறுதியான மனத்துடன் மன்னனாரை வணங்கி விடைபெற்றுக் கொண்டு, நம்மாழ்வாரின் அவதார ஸ்தலமான திருக்குருகூருக்கு எழுந்தருளினார். அங்கு சென்று விசாரித்ததில், அந்தப் பிரபந்தம் யாருக்கும் வராது என்று தெரிந்துகொண்டார். என்றாலும், தான் கைக்கொண்ட பணியில் சற்றும் அயராமல் மேன்மேலும் முயற்சி செய்தார்.
அதன் பலனாக முடிவில் உபாயம் (வழி) ஏற்பட்டது. நாதமுனிகள் "குருகூர்ச்சடகோபன்" என்று ஆழ்வாரால் அருளிச்செய்யப்பட்ட திருக்குருகூருக்குச் சென்று ஸ்ரீமதுரகவி ஆழ்வார் சம்பந்தம் பெற்ற பராங்குசதாசர் என்பவரிடம் விசாரித்தார். அவரும் "நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியும் மற்ற ஆழ்வார்கள் அருளிய திவ்யப்ரபந்தங்களும் நீண்ட காலத்துக்கு முன்னேயே மறைந்துவிட்டன. எங்களுடைய பரமாசார்யரான ஸ்ரீமதுரகவிகள், நம்மாழ்வார் விஷயமான "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்கிற பிரபந்தத்தை என்னிடம் அளித்து, " ஒருமுகமாக நம்மாழ்வார் திருமுன்பே இருந்து ஆழ்வார் திருவடிகளை தியானித்துக்கொண்டு நியமத்துடன் 12000 முறை அனுசந்தித்தால் நம்மாழ்வார் ப்ரசன்னாமாவார் என்று கூறினார்" என்று நாதமுனிகளிடம் தெரிவித்தார். அவர் உபதேசித்தபடி நாதமுனிகளும் உடனே நம்மாழ்வார் திருமுன்பே நியமத்தோடு 12000 முறை "கண்ணிநுண் சிறுத்தாம்பு" அனுசந்தித்தார். நம்மாழ்வாரும் அவர் நெஞ்சிலே தோன்றி, ""உமக்கு என்னவேண்டும்" என்று கேட்க, நாதமுனிகள் "திருவாய்மொழி முதலான திவ்யப்ரபந்தங்களை அடியேனுக்கு உபதேசித்து அருளவேணும்" என்று பிரார்த்திக்க, ஆழ்வாரும் அவருக்கு மயர்வற மதிநலம் அருளி, ரஹஸ்ய த்ரயத்தையும், திருவாய்மொழி முதலான திவ்யப்ரபந்தங்களையும் அவற்றின் அர்த்தவிஷயங்களையும், அஷ்டாங்க யோக ரஹஸ்யத்தையும் அனுக்ரஹித்து அருளினார் அதற்குப்பின், சில காலம் நாதமுனிகள் ஆழ்வார் திருநகரியிலே திவ்யப்ரபந்தங்கள் முதலானவற்றை அனுசந்தித்துக்கொண்டு எழுந்தருளியிருந்தார். ஒருநாள் இவரை வீரநாராயணபுரத்திற்கு வரச்சொல்லி மன்னனார் கனவிலே நியமித்தருள, ஐவரும் ஆழ்வாரிடம் விடைபெற்றுக்கொண்டு, வீரநாராயணபுரம் சென்று, மன்னனார் நியமனத்தாலே தமது மருமக்களான மேலையகத்தாழ்வார் மற்றும் கீழையகத்தாழ்வார் ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு திவ்யப்ரபந்தங்களுக்கு தேவகானத்தாலே ராகம் தாளம் முதலானவற்றை அமைத்து இயலும் இசையும் ஆக்கிப் பாடச்செய்து, பரப்பிவந்தார். இவருடைய முக்கிய சிஷ்யர்கள் உய்யக்கொண்டாரும், குருகைக் காவலப்பனும் ஆவர். அவர்கள் மூலமாக திவ்யப்ரபந்தத்தையும் யோக ரஹஸ்யத்தையும் பிரசாரம் செய்து, பிறக்க இருக்கும் தம்முடைய பேரனான யமுனைத்துறைவனுக்கு (ஸ்ரீ ஆளவந்தார்) இவற்றை அளிக்கும்படி நியமித்துவிட்டு குருகைக் காவலப்பன் கோயிலிலே பரமபதித்தருளினார்.
தாது வருஷம் (கி.பி.917) மாசி மாதம் சுக்லபக்ஷம் ஏகாதசி இவருடைய தீர்த்த தினமாகும். சுமார் 93 திருநக்ஷத்திரங்கள் (ஆண்டுகள்) இவர் எழுந்தருளியிருந்தார்.
இவர் அருளிச்செய்த கிரந்தம் "ந்யாய தத்வம்" என்பது. இதிலிருந்து சில பகுதிகள் எம்பெருமானார், ஸ்ருதபிரகாசிகா பட்டர், ஸ்ரீ வேதாந்த தேசிகர் முதலான ஆசார்யர்களால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. கிரந்தம் இப்போது இல்லை யோக ரஹஸ்யாம், புருஷநிர்ணயம் என்னும் இரண்டு க்ரந்தங்களையும் இவர் செய்ததாகப் பெரிய திருமுடியடைவில் உள்ளது. இவையும் இப்போது இல்லை.
ஸ்ரீமந்நாதமுனிகள் வாழித்திருநாமம்:
ஆனிதனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே
ஆளவந்தார்க்கு உபதேசம் அருளிவைத்தான் வாழியே
பானுதெற்கிற் கண்டவன் சொற்பலவுரைத்தான் வாழியே
பராங்குசனார் சொற்பிரபந்தம் பரிந்துகற்றான் வாழியே
கானமுறத் தாளத்திற் கண்டிசைத்தான் வாழியே
கருணையினால் உபதேசம் கதியளித்தான் வாழியே
நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே
நலந்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே.