மரணம் ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 1
வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம் - இதில்
எல்லா பலசாலிகளும் வெற்றி பெறுவதில்லை
முடியும் என்ற நம்பிக்கை உள்ளவர் மட்டுமே
வெற்றி பெறுகிறார்.....!!
மரணத் தருவாயில் உடலில் என்னென்ன நடக்கும் உபநிடதம் சொல்லும் உயிர் ரகசியம் ..
தவறாமல் படியுங்கள் நீண்ட நாட்களாகவே எனக்கு மரணம் அடைந்தவர்கள் வீட்டில் பதிமூன்றாம் நாளன்று கிரேக்கியம் எனப்படும் புனித சடங்கின் மாலையில் கூறப்படும் ‘ஆத்மாவின் பயணக் கதை’ பற்றி பார்ப்போம்
நான் பல இடங்களில் அந்தக் கதைகளைக் கேட்டு இருந்தாலும் அவற்றைக் கூறும் பண்டிதர்கள் இடை இடையே ஆன்மீக் கதையை விட்டு சற்றே விலகி உலக நடப்புகளைக் சேர்த்துக் கூறி எதை குறித்து அவசியம் கூற வேண்டுமோ அது குறித்து கூறாமல் அந்த கதையில் இருந்து விலகிச் செல்கிறார்கள் என்பதை நேரிடையாக பல முறைக் கண்டிருக்கிறேன்.
அந்தக் கதை மூலம் உடலைவிட்டு வெளியேறும் ஆத்மா எங்கு செல்கிறது, அதன் அமைதியான பயணத்துக்கு நாம் என்ன செய்ய வேண்டும், இறந்தவர்களின் வீட்டில் செய்யும் சடங்குகள் என்ன, அந்த இறப்பை நாம் எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்பதை சுருக்கமாக அதே நேரத்தில் அனைவரும் அறிந்து கொள்ளும் விதத்தில் ஒரு பாடம் போல எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது தாத்பர்யம்.
சமீபத்திலும் அப்படிப்பட்ட சடங்குகள் நடைபெற்ற ஒரு இடத்தில் கதையைக் கேட்டேன். மனதிற்கு ஏற்புடையதாக இல்லை. இறந்தவருக்கு பதிமூன்று நாட்கள் சடங்குகளை எப்படி செய்ய வேண்டும், அதன் அர்த்தம் என்ன, ஆத்மா பயணிப்பது எப்படி போன்றவற்றை கூறாமல் அதை விட்டு விலகிச் சென்று கூறப்படும் கதைகள் போதனாமுறையில் அமைந்தவையாக இல்லாமலும் தாத்பர்யத்தை விட்டு விலகிச் செல்வதும் போலத் தோன்றியது.
ஆகவே அப்படிக் கூறப்பட்ட கதைகள், மற்றும் மயானத்திலும், சடங்குகள் செய்யப்படும் இடங்களிலும் இருந்த சில பண்டிதர்களிடம் பேசிக் கொண்டு அவர்கள் மூலம் தெரிந்து கொண்ட விஷயங்கள், அவற்றைக் குறித்து சுமார் பதினைந்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டு இருந்த சிறிய அளவிலான புத்தகம் போன்றவற்றின் விவரங்களை எடுத்துக் கொண்டேன். அவை அனைத்தையும் தொகுத்து இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
இதன் மூலம் மரணம் அடைந்தவர்களின் ஆத்மா பயணிக்கும் கதை மட்டும் அல்ல உண்மையிலேயே நாம் அனைவரும் இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகள் என்ன என்பதைக் குறித்து சாஸ்திரங்களிலும் அந்த காலத்திலும் என்னென்ன கூறி உள்ளார்கள் என்பதையும், அவற்றின் அடிப்படைக் காரணம் என்ன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் என் அறிவுக்கு உகந்தவகையில் அவற்றை விளக்க முற்பட்டு இருக்கிறேன்.
இது வேத புத்தகம் போல எழுதப்பட்டு உள்ள கட்டுரை அல்ல. நாம் நம்மை சுற்றி நடப்பது என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட பொது நலக் கட்டுரை ஆகும்.
1) பூவுலக வாழ்க்கைக்கு எப்படி பூதேவி, இந்திரன், அக்னி, வாயு மற்றும் வருணன் போன்றவர்கள் முக்கியமோ அப்படித்தான் மரணம் அடைந்து விட்டவர்களின் ஆத்மாக்களையும் காப்பாற்ற பிரும்மனால் படைக்கப்பட்ட எட்டு வஸுக்கள் மற்றும் ஏகாதச ருத்திரர் மற்றும் துவாதசாதித்யர் போன்றவர்கள் முக்கியமானவர்களாக உள்ளார்கள்.
அந்த எட்டு வஸுக்கள் வஸு, ருத்ர, ஆதித்ய, ஸ்வரூபா, பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹ என்பவர்கள் ஆவர். அவர்களது பாதுகாப்பில்தான் இறந்தவர்களது ஆத்மாக்கள் அவர்களுக்கு கர்மம் ஆகும்வரை தங்கி இருக்கும் என்பதாக ஐதீகம் உண்டு.
2) சாதாரணமாக நோயினால் பீடிக்கப்பட்டு, வயோதிகம் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களினாலோ சுய நினைவற்று மெல்ல மெல்ல சுவாசம் நிற்கும் நிலையில் வந்துவிட்டவர்களையும், மருத்துவர்கள் கைவிட்டப் பின், இன்னும் சில மணி நேரத்திலேயே மரணம் அடைய உள்ள நிலையில் உள்ளவரையும் சுற்றி உள்ளவர்கள் அவர்களுடைய மூச்சு நிற்கும்வரை விஷ்ணு சஹஸ்ரநாமம், நாராயணீயம் போன்றவற்றை பாராயணம் செய்தபடி இருப்பார்கள்.
சிலர் ராம நாமத்தை ஜெபித்தபடி இருப்பார்கள். ஆனால் அவற்றில் முக்கியமான ஒரு காரியத்தை அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் செய்ய வேண்டும் என்பதாக சாஸ்திரங்கள் கூறி உள்ளன. அதை பலரும் அறிந்திருக்கவில்லை.
3) அந்த காரியம் என்ன என்றால் மரணத்தை தழுவும் நிலையில் உள்ளவர்களின் குடும்பத்தில் மூத்த மகன் இருந்தால் முடிந்தவரை மரணம் அடைய உள்ளவருடைய வலது காதில் அஷ்டாக்ஷரீ, மந்திரங்களை அவர்கள் சற்று நேரம் ஓதிக் கொண்டு இருக்க வேண்டும்.
இப்படி மந்திரம் ஓதுவதின் மூலம் உடம்பில் உள்ள ஐந்து பிராணன்கள் ஒன்றாகி வெளியேறும் என்பது ஐதீகம். அப்படி மந்திரம் ஓதத் தெரியாதவர்கள், அல்லது செய்ய முடியாதவர்கள் தம் வீட்டில் இவற்றை ஓதத் தெரிந்தவர் யாராவது இருந்தால் அவர்கள் மூலம் அந்த மந்திரங்களை ஓதலாம். ஆனால் மூத்த மகன் அதை செய்வதின் மூலம் மரணம் அடைய உள்ளவர் மனம் மேலும் அமைதி அடையும் என்பது நம்பிக்கை.
இப்படி எல்லாம் செய்ய வேண்டியதின் அவசியம் அந்த ஆன்மா இறைவனையே எண்ணும்படியான சூழ்நிலையை அங்கே உருவாக்க வேண்டும் என்பதே.
4) அது மட்டும் அல்ல வீட்டில் கூடி உள்ளவர்கள் தொடர்ந்து சஹஸ்ரநாம பாராயணம் அல்லது நாராயணீயம், சுந்தரகாண்டம், ராம ராமா, கோவிந்த நமஹா … கோவிந்த நமஹா…. போன்றவற்றை உச்சரித்துக் கொண்டும் உரக்கப் படித்துக் கொண்டு இருக்க வேண்டும்.
அப்படி யாரும் இல்லை என்றால் ஒலி நாடாவில் போட்டு அதை அமைதியான சூழ்நிலையில் ஒலி பரப்பினால் அதுவும் நல்லதற்கே ஆகும். இது சாஸ்திர விதிகளுக்கு உட்பட்டதா என்ற தயக்கம் தேவை இல்லை.
நாகரீகம் அதிகரிக்காத முன் காலத்தில் இப்படிப்பட்ட ஒலி நாடாக்கள் கிடையாது என்பதினால், மக்கள் மிக சாதாரண நிலையில் தெய்வ பக்தி கொண்டு வாழ்ந்து வந்ததினால் இப்படிப்பட்ட சாதனங்களை பயன்படுத்தும் நிலையில் இருந்திடவில்லை.
இப்படிப்பட்ட சாதனங்களும் இருந்திடவில்லை. ஆகவே இந்த காலத்தில் அவற்றை பயன்படுத்துவதில் தவறு எதுவும் இல்லை. அந்த சூழ்நிலையில் பகவான் நாம ஒலியே முக்கியம் ஆகும்.
இறக்கும் தருவாயில் உள்ளவர் அருகே கூடி உள்ளவர்கள் வாய் வழியே மட்டுமே நாமாவளியை நேரடியாக ஓத அல்லது பாடிட வேண்டும் என எந்த சாஸ்திரத்திலும் கூறப்படவில்லை. அதற்கு விஞ்ஞான ரீதியிலான காரணமும் கிடையாது.
மனிதர்கள் வாய் வழியே ஓதுவதற்கு இணையாக பகவானின் நாமகரணத்தை எந்த விதத்திலாவது அந்த இடத்தில் பரவ வைப்பதே முக்கியம் ஆகும்.
5) இந்த பாராயணங்களை ஓத வேண்டும் என்று அறிவுறுத்துவதின் காரணம் அந்த இடத்தில் உள்ள சூழ்நிலையை முதலில் தெய்வீகத் தன்மைக் கொண்டவையாக மாற்ற வேண்டும். அதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது. சாதாரணமாகவே பல்வேறு நல்ல மற்றும் தீய கணங்கள் வான் வெளியில் அங்காங்கே சுற்றிக் கொண்டு இருக்கின்றன.
யாராவது மரணம் அடையும் நிலையில் இருந்தால் தீய கணங்களோ அந்த இடத்துக்குச் சென்று மரணப் படுக்கையில் உள்ளவர் மேல் பகுதியில் வெற்றிடத்தில் சுற்றியபடி இருக்கும். இறந்தவரது ஆத்மா வெளியேறும்போது அதை தம்முடன் இழுத்துக் கொண்டு செல்ல முற்படும். அவை நம் கண்களுக்கு புலப்படாது.
ஆனால் அவற்றினால் மனிதர்கள் எவரையும் ஒன்றும் செய்ய முடியாது. அந்த சக்தி அவைகளுக்கு இல்லை. அதே நேரத்தில் அவற்றினால் வான் வெளியில் மற்றும் வீட்டின் உள்ளேயும் சுற்றிக் கொண்டு இருக்கும் மற்ற கணங்களை கட்டுப்படுத்த முடியும். அந்த தீய கணங்களினால் தெய்வீக மந்திர சக்தி ஒலிகளை தாங்க முடியாது. இது இயற்கை நியதி ஆகும்.
மரணம் அடைந்தவரது ஆத்மா அவரது உடலை விட்டு வெளியேறி மேலுலகில் உள்ள வஸுக்களிடம் கொண்டு சேர்க்கப்படும் முன்னால் அந்த ஆத்மாவை தம்முடையக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அங்குள்ள தீய கணங்கள் முயலும். அப்படி செய்வதின் மூலம் அதற்கு செய்யப்படும் கர்மாக்களின் பலன் தமக்கும் வந்து சேரும், தமக்கும் நல்லகதி கிடைக்கும் என அவை எண்ணுமாம்.
எப்போது உடலில் இருந்து ஆத்மா வெளிவரும்
என்று எதிர்பார்த்து மரணம் அடைய உள்ளவர்
மேலுள்ள வெற்றிடத்தில் காத்திருக்கும் தீய கணங்கள்
6) அதனால்தான் உரத்தக் குரலில் ஓதப்படும், அல்லது பாடப்படும் தெய்வீக மந்திர ஒலிகள் இறக்கும் தருவாயில் உள்ளவர்களது வீட்டின் சூழ்நிலையை ஆக்கிரமித்தபடி இருக்கும்போது அந்த மந்திர உச்சாடனையின் சக்திகள் அங்கிருந்து தீய கணங்களை துரத்தி அடித்து விடும்.
மேலும் அந்த மந்திர உச்சாடனைகள் இறந்தவரது உடலில் இருந்து வெளிவந்த ஆத்மாவை சுற்றி உள்ள வெற்றிடத்தை ஆக்ரமித்துக் கொண்டு ஆத்மாவினால் உலக பந்தத்தின் வேறு எதையும் யோசனை செய்ய இயலாதவாறு செய்து விடும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையை நாம் அமைத்துக் கொடுப்பதின் மூலம் மரணம் அடையும் நிலையில் உள்ளவர்களின் ஆத்மா தெய்வ நினைவோடு இருந்தபடி அது வாழ்ந்திருந்த உடலுக்கு நல்ல கதி கிடைக்க வழிவகுத்து, அடுத்த ஜென்மத்தில் தான் யாராக பிறக்க வேண்டும் என எண்ணினார்களோ அவர்களாகவே பிறக்க உதவும் என்பதெல்லாம் நம்பிக்கை ஆகும்.
7) அடுத்து மரண நிலையில் இருந்தவர் மரணமும் அடைந்து விட்டார். அப்போது அவர் உடலில் இருந்து பிராணன் வெளியேறி அந்த உடலின் மேல்பகுதியில் சுற்றிக் கொண்டே இருக்கும். ஆகவே மரணம் அடைந்தவர் உடலை தர்பைப் புல்லைப் பரப்பிய தரையில் உடலின் தலைப் பகுதியை தெற்கு நோக்கி இருக்குமாறு படுக்க வைக்க வேண்டும்.
8) இறந்தவரின் ஆன்மா இறைவனை அடைய வேண்டும் என்பதற்காகவும், பிதுர்லோகத்தில் உள்ள தனக்கு முன் இறந்த ஏழு தலைமுறையினரின் குடும்பத்தினருடன் சேர்ந்து சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக சில சடங்குகளை துவக்க வேண்டும்.
தென் பகுதியில்தான் யமதேவர் இருப்பதாகவும், அந்த பிராணனை அழைத்துக் கொண்டு செல்ல வந்துள்ளவரை நோக்கி காலை நீட்டி படுக்க வைத்து அவரை அவமதிக்கக் கூடாது என்பதினால் இறந்தவருடைய தலையை தெற்கு நோக்கி படுக்க வைப்பது ஐதீகம் ஆகும்.
பிணத்தின் தலையை தென் பகுதியை நோக்கி வைப்பதின் மூலம் இறந்து கிடப்பவர் தன் உடலில் அதுவரை குடி இருந்த தன் ஆத்மாவை அழைத்துக் கொண்டு போக வந்து உள்ள யமதர்மனை சாஷ்டாங்கமாக நமஸ்கரிப்பதாகவும் ஐதீகம் உண்டு .
தென் பகுதியில் தலையை வைத்து உடலைக் கிடத்துவதற்கு விஞ்ஞான ரீதியான இன்னொரு காரணமும் உள்ளது. தென் பகுதியில் காந்த சக்தி அதிகமாக உள்ளதினால் உடலில் இருந்து வெளியேறும் சக்தி எளிதில் உடலில் இருந்து பிரிந்து வெளியில் வர தென் திசை உதவுகிறது.
மரணம் அடைந்ததும் உடலை விட்டு வெளியேறும் ஆத்மா மயானம் சென்று தகனம் செய்யும்வரை அந்த உடல் மேல் பகுதியில் அதைத் தொடர்ந்து சென்று கொண்டே இருக்குமாம். அடுத்து கர்மாக்களை எப்போது, எப்படி செய்யத் துவக்க வேண்டும்? சாஸ்திரத்தின்படி என்னென்ன செய்வார்கள் என்பதைக் காணலாம்.
தொடரும்...