ஆத்மாவின் பயண கதை - 10

மரணம் ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் 10

139) தீட்டு என்பது என்ன என்பதை ஏற்கனவே முந்தைய பாகங்களில் விளக்கி உள்ளேன். ஆகவே தீட்டு என்பதை விஞ்ஞான ரீதியிலும் சரி, ஆன்மீக ரீதியிலும் சரி, விலக்கி வைத்துக் கொள்ள வேண்டிய காலம் என்பதாக வைத்துக் கொள்ளலாம். காலம் காலமாக தொடரப்பட்டு வரும் நம்பிக்கையின் அடிப்படையில் யாருக்கு விருப்பமோ அவர்கள் அவற்றைக் கடைபிடிக்கலாம். ஏன் எனில் இவை எதற்காக ஏற்படுத்தப்பட்டவை என்பதற்கு சாஸ்திர ரீதியிலான விளக்கம் கிடையாது.

 பெரும்பாலும் கருட புராணமே இந்த நியதிகளுக்கு ஆதாரமாக காட்டப்படுகிறது. ஆகவே இவற்றைக் கடை பிடிப்பது  அவரவர் விருப்பம் ஆகும்.

யாருக்கெல்லாம் தீட்டு உண்டு?  தீட்டுக் காலம் என்பவை எத்தனை?

தீட்டுக் காலத்தை ஸ்நானத் தீட்டு, பக்ஷிணீ   தீட்டு,   ஒரு நாள் தீட்டு, 1 1/2 நாள் தீட்டு, மூன்று நாட்கள் தீட்டு மற்றும் பத்து நாட்கள் தீட்டு எனப் பிரித்து உள்ளார்கள்.  தீட்டிலும் பிரசவ தீட்டு மற்றும்  மரணத் தீட்டு என இரு வகை உண்டு.  இங்கு நாம் மரண தீட்டை மட்டும் பார்க்கலாம்.

மரண தீட்டைப் பற்றிய பொது விதிமுறைகள் :

1) தற்செயலாய் துர்மரணம் அடைவோருக்கு அதாவது விபத்தில் உயிர் இழந்தவர் என யாராக இருந்தாலும் அவர்களுடைய உறவினர்களுக்கு தீட்டு உண்டு. ஆனால் அதே சமயத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் உறவினர்களுக்கு தீட்டு கிடையாதாம் .

2) கர்மா செய்பவனுக்கு பதினோராம் நாள் கர்மா செய்த பின் தீட்டுப் போகும்.

3) திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு சென்று விட்ட பெண் இறந்து விட்டால் அவள் பிறந்த வீட்டுப் பங்காளிகளுக்கு தீட்டில்லையாம்.  ஆனால்  இறந்த சேதி கேட்டதும் குளிக்க வேண்டுமாம். அதாவது அவர்களுக்கு அந்த செய்தி கொடுப்பது ஸ்நானத் தீட்டாம்.

4) ஒரு தீட்டுக்காரன் மற்றொரு தீட்டுக்காரனைத் தொடக்கூடாது. தீட்டுள்ளவன் வீட்டுக்கும் அவன் சாமான்களுக்கும் தீட்டுண்டு. ஆகவே தீட்டுள்ளவன் வீட்டுக்குச் சென்று விட்டு தம் வீடு வந்ததும் இன்னொரு  முறை ஸ்நானம் செய்ய வேண்டுமாம்.

5) தீட்டு இல்லாதவர்களுக்கும்  துக்கத் தீட்டு உண்டு. அதாவது தீட்டுக் காலம் முடியும் முன்னால் ஆனால் சஞ்சயனம் முடிந்தப் பின்னர் இறந்தவர்  வீடுகளுக்குச் சென்று துக்கம் விசாரித்தாலும் அங்குள்ளவர்களைத் தொட்டு விட்டாலும் வீட்டுக்கு வந்து கால்களை அலம்பிக் கொண்டுதான்  உள்ளே செல்ல வேண்டும். அதன் பின் குளித்து விட வேண்டும். இல்லை என்றால் குளிக்கும்வரை தற்காலிக தீட்டு உண்டு.

6)  எவர் வீட்டில் ஸ்ரார்தம் நடைபெறுகிறதோ அன்றைய தினத்தன்று துக்கம் விசாரிக்க செல்லலாகாது.

7) தீட்டு முடியும்வரை தீட்டு உள்ளவர்கள் வீட்டினர் எந்த ஒரு புண்ணிய காரியங்களுக்கோ, புண்ணிய சடங்குகளுக்கோ அல்லது ஆலயத்துக்கோ செல்லக் கூடாது.

  எத்தனைதான் அதிக வயதானவர் என்றாலும் தீட்டு உள்ள காலத்தில் தீட்டு இல்லாதவர்கள் அல்லது அதே வீட்டில் உள்ள  தீட்டு உள்ளவர் கூட அவரை  நமஸ்கரிக்கலாகாது.

9) திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு சென்று விடும் பெண்களுடைய கோத்திரம் புகுந்த வீட்டுக் கோத்திரமாகி விடுவதினால்  அவர்களுக்கு பிறந்த வீட்டு தீட்டு  கிடையாது. அவளுடைய  தாய் மற்றும் தந்தை இறந்தால் மட்டுமே அந்தப் பெண்ணிற்கு மூன்று நாட்கள் தீட்டு உண்டாம். மற்ற உறவினர் இறந்தால் அதைக் கேட்டதும் ஸ்நானம் செய்தால் மட்டுமே போதுமானது.

  அதை தீட்டு என்பதாக கருதாமல், குளிக்கும்வரை அந்த தீட்டை ஆசாரம் அற்ற நேரமாக  அதாவது விழுப்பு என்று கருதுவார்கள்.  ஒருவேளை அந்த செய்தி வரும் முன்னரே அவள் ஏற்கனவே குளித்து விட்டு இருந்தாலும் மரண செய்தியைக் கேட்டதும் மீண்டும் ஒருமுறை அவள் ஸ்நானம் செய்ய வேண்டும்.

10)  ஒரு குடும்பத்தில் தாய் தந்தையின் மரணத்தை அவர்களது மகன்களோ, திருமணம் ஆகாத பெண்களோ எப்போது கேட்டாலும் அவர்களுக்கு பத்து நாள் தீட்டு உண்டு. ஒரு  வேளை தாய் மற்றும் தந்தையின் மரணச் செய்தி  தவிர்க்க முடியாத காரணத்தினால் அவர்களுக்கு பத்து நாட்களுக்குள் கிடைக்காமல் மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்துக்குப் பிறகு கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். தாய் மற்றும் தந்தை இறந்து எத்தனைக் காலம் ஆனாலும் சரி, அது குறித்து  முதல் செய்தி எப்போது கேட்டாலும் சரி, அந்த செய்தி கிடைத்த  நாள் முதல்  அடுத்த பத்து நாட்கள் தீட்டு உண்டு.

11​)  Y’  குடும்பத்தில் உள்ள  உறவினர் இறப்பினால்  ‘Y’  குடும்பத்துக்கு பத்து நாள் தீட்டு  உள்ளதாக வைத்துக் கொள்வோம்.  ‘Y’  குடும்பத்துக்கு அந்த தீட்டு முடியாத நிலையில், அவர்களுடைய இன்னொரு குடும்ப உறவினருடைய இறப்பினால், அதாவது ‘X’ குடும்ப உறுப்பினரின் மரணத்தினால்  அவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய இன்னொரு பத்து நாள் தீட்டு வந்து விட்டால் இரண்டு தீட்டுக்குமான கால அளவு எத்தனை ?

‘Y’  குடும்பத்தினர்  பத்து நாள் தீட்டை  காத்துக் கொண்டு இருக்கையில் அவர்களுக்கு ‘X’  குடும்பத்தில் ஏற்பட்டு விட்ட மரணத்தினால் இன்னொரு பத்து  நாள் தீட்டு வந்து விட்டது.  அந்த மரணமும் முதல் பத்து நாள் தீட்டின்போதே நிகழ்ந்து விட்டது. அப்போது என்ன செய்வது?  அதற்கு குழப்பம் அடைய வேண்டாம். முதல் பத்து நாள் தீட்டு முடியும் முன்னரே   இன்னொரு பத்து நாள் தீட்டு குறித்த செய்தி   வந்து விட்டால் அந்த இரண்டாவது பத்து நாள் தீட்டும், முதல் பத்து நாள் தீட்டோடு முடிந்து விடும். 

 ஆனால் அந்த செய்தி முதல் தீட்டு முடிய உள்ள பத்து நாட்களுக்குள் வர வேண்டும். அப்படி வந்தால் அடுத்து வந்த பத்து நாள் தீட்டும் முதல் தீட்டுக் காலமான பத்து நாள் தீட்டோடு விலகி விடும்.

ஒரு வேளை ‘X’ குடும்ப உறுப்பினரின் மரண செய்தி ‘Y’ குடும்பத்துக்கு பத்தாம் நாளன்று இரவு வருகிறது என்று வைத்துக் கொள்வோம், அப்போது இரண்டாவது தீட்டு காலத்தை ‘Y’ குடும்பத்தினர் இன்னும் எத்தனை நாள் அனுஷ்டிக்க வேண்டும்?  குழப்பம் அடைய வேண்டாம். 

அந்த நிலையில் அவர்கள் இன்னும் மூன்று நாட்கள் தீட்டு காக்க வேண்டும். அந்த தீட்டு முதல் தீட்டுக் காலம் முடிந்து அடுத்த  மூன்று  நாட்களுக்குப் பின்னரே போகும். ஆனால்  ‘X’ குடும்பத்தில் ஏற்பட்ட மரணம் குறித்த அதே செய்தி  ‘Y’  குடும்பத்துக்கு பத்து நாட்களுக்குப் பிறகு அதாவது பதினோராம் நாள் விடியற்காலையில், முதல் தீட்டு முடிவடைந்து குளிக்கப் போகும் முன்னால் தெரிய வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது ‘Y’  குடும்பத்துக்கு  தீட்டுக் காலம் எத்தனையாக இருக்கும்?   

அதாவது ‘X’ குடும்பத்தில் இறந்து விட்டவரின்  செய்தியை பத்து நாட்களுக்கு மேல், அடுத்த மூன்று மாதங்களுக்குள் ‘Y’ குடும்பத்தினர் எப்போது கேட்டாலும் அவர்கள் பத்து நாள் தீட்டு காக்கத் தேவை இல்லை. அவர்கள் செய்தி கேட்டதில் இருந்து மூன்று நாட்கள் தீட்டு காத்தால் அது மட்டுமே போதுமானது.

அதே போலத்தான் பத்து நாள் தீட்டு காலம் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய பத்து நாள் கால தீட்டை பற்றி  மூன்று  மாதங்களுக்கு  மேல் ஆனால் அடுத்த ஆறு மாதங்களுக்கு முன்னால்  கேட்டால் அவர்கள் மூன்று நாட்கள் கூட தீட்டு காக்கத்  தேவை இல்லை.  அவர்கள் செய்தி கேட்டதில் இருந்து ஒன்றரை  நாட்கள் தீட்டு காத்தால் அது மட்டுமே போதுமானது.

 ஆனால் அதே  செய்தியை அந்த குடும்பத்தினர் ஆறு மாதங்களுக்கு  மேல் ஆனால் ஒரு வருடத்துக்கு முன்னால்  கேட்டால், அந்த  செய்தியைக்  கேட்டதில் இருந்து  ஒரு நாள் தீட்டு காத்தால், அது  மட்டுமே போதுமானது..ஆனால் அதே செய்தியை அவர்கள் ஒரு வருடத்துக்கு பிறகு கேட்டால்  அது தீட்டாக கருதப்பட மாட்டாது. அந்த செய்தி கேட்டதில் இருந்து குளிக்கும்வரை அதை ஆசாரம் அற்ற நேரமாக கருதி ஒரு ஸ்நானம் மட்டும் செய்தால் அதுவே போதுமானது.

12) ஒருவருடைய மரணத்தினால் ஒரு குடும்பத்தினருக்கு மூன்று நாட்கள் தீட்டு காலம் ஏற்பட்டிருந்த  நிலையில், அந்த  மூன்று நாள்  தீட்டை பற்றிய செய்தியை இறந்தவரது கர்மா முடிவடைந்த பத்து நாட்களுக்குப் பிறகு  கிடைத்தாலும் மூன்று நாட்கள் தீட்டு காக்க வேண்டுமா?

ஒருவர் மரணம் அடைந்து விட்டப் பின் அவருக்காக மூன்று நாட்கள் தீட்டு காக்க வேண்டியவர்களுக்கு அந்த செய்தி  மரணம் நிகழ்ந்த நாளில் இருந்து அடுத்த பத்து நாட்களுக்குள் எப்போது கிடைத்தாலும், அந்த செய்தியைக் கேட்ட தினத்தில் இருந்து அவர்களுக்கு மூன்று நாட்கள் தீட்டு உண்டு.  அந்த செய்தி இறந்தவரின் பத்தாம் நாள் மாலை வந்தால் கூட அன்றில் இருந்து அடுத்த மூன்று நாட்கள் தீட்டு உண்டு.

ஆனால் அதே செய்தி அவர்களுக்கு  மரணம் நிகழ்ந்த நாளில் இருந்து பத்து நாட்களுக்குப்  பிறகு கிடைத்தால், அதாவது பதினோராம் நாள் விடியற் காலையில்  கிடைத்தால் அவர்களுக்கு மூன்று நாட்கள் தீட்டு கிடையாது, ஸ்நானம் செய்தால் அது மட்டும் போதுமானது.

13) இதில் இன்னொரு சின்ன மாறுதல் உண்டு.  ஒருவர் மூன்று நாள் தீட்டுக் காலத்தை வரித்துக் கொண்டு இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்த மூன்று நாட்களுக்குள் அவர்களுக்கு  இன்னொரு பத்து நாள் தீட்டு பற்றிய செய்தி வந்து விட்டால் அந்த தீட்டும்   முதல் தீட்டு ஆரம்பித்த  மூன்றாவது நாள்  தீட்டோடு முடிந்து விடுமா?

மூன்று நாள் திட்டை விட பத்து நாட்கள் தீட்டு அதிகம் என்பதினால், மூன்று நாட்கள் தீட்டை வரித்துக் கொண்டு இருக்கையில், பத்து நாள் தீட்டைப் பற்றிய செய்தி அந்த குடும்பத்துக்குக் கிடைத்தால்,  அவர்களுக்கு மூன்று நாட்கள் தீட்டு ஆரம்பித்த நாளில் இருந்து பத்தாவது நாள்தான் இரண்டு தீட்டு காலமும் முடிவுறும். 

அதாவது மொத்தம் பத்து நாட்கள் தீட்டு காக்க வேண்டி இருக்கும். உதாரணமாக 1 ஆம் தேதி மூன்று நாட்கள் தீட்டு பெற்றிருந்த  நிலையில், 3 ஆம் தேதியன்று இன்னொரு பத்து நாள் தீட்டு பற்றிய செய்தி கிடைத்தால் அவர்கள் தீட்டு 13 ஆம் தேதியன்றுதான் போகும்.

14)  ஒரு குழந்தை பிறந்த பின் பத்து நாட்களுக்குள் அந்தக் குழந்தை இறந்து விட்டால், அந்தப் பெற்றோர்களுக்கு இருக்கும் பிறந்த தீட்டான பத்து நாள் காலத்துடன் குழந்தையின் இறப்பு தீட்டும் பத்தாவது நாளே முடிவடைந்து விடும். அதாவது பதினோராம் நாள் காலையில் குளித்து விட வேண்டும்.

15) ஒரு குடும்பத்தில் ஏற்படும் மரணத்தினால் அந்தக் குடும்பத்தினர் வரிக்கும் தீட்டுக் காலத்தை அதே அளவில் தீட்டுக் காக்க வேண்டிய பங்காளிகள் என்பவர்கள் யார்?  பங்காளிகள் என்பவர்கள் ஒரு குடும்ப வாரிசை சேர்ந்த ஏழு  .தலைமுறையினர் ஆவார்கள்.

16)  அதாவது ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆணுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகள் (மகன்கள்), அந்த ஆண் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் (பேரன்கள்), அந்த ஆண் பேரன்  குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் (கொள்ளு பேரன்கள்), அந்த ஆண் கொள்ளுப் பேரன் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் என வரிசையாக அவர்கள் சந்ததியில் பிறக்கும்  ஆண்கள் அனைவரும் பங்காளிகள் எனப்படுவர்.

17) இப்படியாக ஏழு தலைமுறை பங்காளிகளுக்கு – அதாவது ஒரு  குடும்பத் தலைவருக்கு பிறக்கும் ஆண்  பிள்ளைகள், அவர்களது ஆண்  பிள்ளைகள், அந்த ஆண்  பிள்ளைகளின் பிள்ளைகள் என ஏழு வம்சத்துக்கு பிறக்கும் ஆண் வழி குடும்பத்தை சேர்ந்த  யார் இறந்தாலும்  அந்த ஏழு வம்சத்தினருக்கும் தீட்டு உண்டு.

 எட்டாவது வம்சத்தை சேர்ந்தவர்  அவருக்கு முன் உள்ள  ஏழு வம்சத்தை சேர்ந்த  குடும்பத்தினரின்  பங்களிகளாக  இருப்பார்கள். ஆனால் அவர்கள் அவர்களுக்கு முன்னால் உள்ள எட்டாவது குடும்பத்தினரின் பங்காளிகளாக ஆக  மாட்டார்கள்.

18) தீட்டு உள்ளவர்கள் வீட்டில் தீட்டு இல்லாதவர்கள் உணவு உண்டால் அன்று  அவர்களுக்கும் தீட்டுக் காலம் இருக்கும். மறுநாள் காலையில் குளித்தப் பிறகுதான் அவர்களுக்கு அந்த தீட்டு போகும்.

தொடரும் ...

''Acknowledgement: மேலுள்ள மூல  கட்டுரையை எழுதிய ஆசிரியர்  'சாந்திப்பிரியா'விற்கு (https://santhipriya.com/) நன்றி''

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!