ஆத்மாவின் பயண கதை - 11

மரணம் ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் பாகம் 11

19) எந்த ஒரு தீட்டுக் காலமும் காலை 8 மணி 24 நிமிடங்களில் இருந்துதான் விலகும் என்கிறது சாஸ்திரம். அதற்கு மேல்தான் தீட்டு விலகும் என்பதினால் தீட்டை விலக்கிக் கொள்ள காலையில் 8 மணி 24 நிமிடங்களுக்குப் பிறகுதான் குளிக்க வேண்டும், அதற்கு முன்னால் குளித்தால் தீட்டு விலகியதாக எடுத்துக் கொள்ள முடியாது, அது தொடரும் என்கிறார்கள். 

ஆனால் தற்காலத்தில் இதை நடைமுறையில் வைத்திருக்க முடியவில்லை என்பதினால் விடியற்காலை ஐந்து மணிக்கு மேல் குளிப்பதில் தோஷம் இல்லை என்பதாக பண்டிதர்கள் கூறுவார்கள். ஆகவே இது விஞ்ஞான அடிப்படையில் எழுந்துள்ள நியதி அல்ல, ஓரளவிற்கு ஆன்மிகம் மற்றும் தர்ம நெறி முறைகளின் அடிப்படையில் அமைந்ததே என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

20)  அது சரி, 8 மணி 24 நிமிடங்கள் என்பது என்ன கணக்கு என்ற கேள்வி எழலாம்?  இந்த நேரம் மிக முக்கியமானது. அதை புரிந்து  கொள்ள முதலில் இவற்றை படியுங்கள்.  சாஸ்திரங்களின்படி ஒரு நாள் என்பது அறுபது நாழிகை ஆகும். அதில் பகல் நேரம் 30 நாழிகை கொண்டதாகவும், இரவு நேரம் 30 நாழிகையையும் கொண்டதாகும். 

சாஸ்திர விதிப்படி அந்த காலைப் பொழுதான 30 நாழிகை பொழுதை ஐந்து காலமாக பிரித்து வைத்து ஒவ்வொரு காலத்துக்கும் 2 மணி நேரம் 24 நிமிடங்கள் என பிரித்து வைத்து உள்ளார்கள். ஏன் என்றால் அந்த ஒவ்வொரு கால பிரிவிலும் சூரியனின் கிரணங்கள் சில தனித்தன்மைக் கொண்டவையாக உள்ளனவாம்.  அதனால்தான் ஐந்து தன்மைகளைக் கொண்டக் காலமாக பிரித்து வைத்துள்ளார்கள்.

தேவலோகத்தில் சூரியம் எழுவது  காலை 4 மணி 30 நிமிடம் ஆகும். அந்த தேவ கிரணங்கள் பூமிக்கு வந்து விழும்போது பூமியில் அப்போது  காலை  6 மணியாக இருக்குமாம்.  அப்படி வந்து விழும் கிரணங்கள் கண்களுக்கு தெரியாமலும் இருக்கும், சில நேரங்களில் தெரியும்.

 இதனால்தான் பூமியில் சூரியோதயம்  காலை 6 மணி என சாஸ்திரங்கள் கருதி  காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலான கால கட்டத்தை ஐந்தாக பிரித்து வைத்தார்கள்.

காலை 6 மணியிலிருந்து காலை 8 மணி  24 நிமிடம் வரை ப்ராதஹ் காலம் என்றும், 

 8 மணி 24 நிமிடம் முதல் 10 மணி 48 நிமிடம் வரை ஸங்கவ காலம் என்றும், 

10 மணி 48 நிமிடத்திலிருந்து பகல் 1 மணி  12 நிமிடம் வரை மாத்யானிக காலம் என்றும்,

 மதியம் 1 மணி 12 நிமிடத்திலிருந்து 3 மணி 36 நிமிடம் வரை அபரான்னம் காலம் என்றும், 

3 மணி 36 நிமிடத்திலிருந்து மாலை 6 மணி வரை சாயங்கால காலம் என்றும் பெயரிட்டு உள்ளார்கள்.

அந்த ஐந்து கால கட்டத்தில் சூரியனின் கிரணங்கள் சில விசேஷ தன்மைகளைப் (சக்தியை) பெற்றதாக  இருந்தாலும் சில பிரிவில், முக்கியமாக மத்தியான வேளையில் இருந்து துவங்கி மாலை வரை அவற்றின் தன்மையில் சில தன்மைகளையும் அவை இழக்கின்றன. காலை 6 மணியிலிருந்து காலை 8 மணி  24 நிமிட காலத்தில்  பூமியில் விழும் சூரிய கிரணங்கள் மிதமான தன்மைக் கொண்டவையாக, மனதுக்கு அமைதி தரும் கிரணங்களாக உள்ளன. 

அதாவது அந்த ஒளிக் கற்றைகள் நமது உடலுக்குள் ஊடுருவி, மனதில் அமைதியான காந்த அதிர்வலைகளை தோற்றுவிக்கின்றன. அந்த விசேஷ சக்தி கொண்ட சூரிய கிரணங்கள் நமது கண்களுக்கு புலப்படுவது இல்லையாம். விடியற்காலைப் பொழுதுகளில் மனம் அமைதியாக இருக்கும். ஆகவேதான் தபஸ்விகளுக்கும், யோகக் கலை மற்றும் தியானங்களை செய்பவர்களுக்கும்  அதை உகந்த நேரமாக வைத்து உள்ளார்கள்.

அதைப் போலவே ஸங்கவ காலம் துவங்குகிறது எனக் கூறப்பட்டு உள்ள காலை நேரமான 8 மணி 24 நிமிடங்களுக்கு பூமியிலே விழும் கண்களுக்கு தெரியாத விசேஷ  சக்தி கொண்ட சூரிய கிரணங்கள்  நமது உடல் நலத்தைப் பேணும் வகையில் உள்ளதாம்.

முன்னரே கூறி உள்ளபடி தீட்டு காலத்தில் தினமும் கர்மா செய்து விட்டு வரும் இடங்களில் பல்வேறு காரணங்களினால், முக்கியமாக அங்கு உலவும் ஆத்மாக்களினால் படர்ந்திருக்கும் தீய அணுக்கள் நமது உடல்களிலும் தொற்றிக் கொண்டு இருந்திருக்கும்.  இரவில் நாம் படுத்திருக்கும்போதும், வீட்டில் உலவும்போதும் கூட அவை நம் உடலை விட்டு விலகுவதில்லை. 

ஆன்மீக எண்ணப்படி அந்த கணங்கள் உடல் பந்தத்தினால் நம்மை விட்டு வெளியில் செல்வதில்லை. ஆனால் அந்த கணங்கள்  சூரிய ஒளியின் ஒரு குறிப்பிட்ட தன்மையின் விளைவாக அழிந்து போகக் கூடியவை. ஆகவே குளித்தப் பின் சூரியனின் ஒளி உடலில் படும்போது அதன் கிரணங்களின் தன்மையினால் அந்த கணங்கள் ஓடி விடும், 

நமது உடலின் மீதுள்ள தோல் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அதை மனதில் கொண்டுதான் அந்த குறிப்பிட்ட தன்மைகளைக் கொண்ட சூரிய ஒளிக் கிரணங்கள் நம் மீது படவேண்டும் என்பதற்காகவே எந்த ஒரு தீட்டையும் விலக்கிக் கொள்ளும் உத்தமமான காலம் காலை 8 மணி 24  நிமிடங்களுக்கு அதாவது ஸங்கவ காலம்தான் என்பதாகவும், அதனால்தான் காலை 8 மணி 24 நிமிடங்களுக்குப் பிறகுதான் குளிக்க வேண்டும் என்பதான விசேஷ  நடைமுறை இருந்துள்ளது என்பதாகவும்  சாஸ்திரங்கள் கூறி உள்ளதான ஐதீகம் உள்ளது.

சூரியோதயம் இடத்துக்கு இடம் மாறுபட்டாலும்,  பூமியிலே அப்படிப்பட்ட தனித் தன்மைக் கொண்ட கிரணங்கள் விழும் காலம் காலை ஆறு மணிக்கு துவங்குவதால்தான் பூமியிலே சாஸ்திரப்படி சூரியன் ஆறு மணிக்கு உதயம் ஆவதாக கருதி உள்ளார்கள்.

சூரியோதயம் இடத்துக்கு இடம் மாறுபட்டாலும், பூமியிலே தனித்தன்மைக் கொண்ட சூரிய கிரணங்கள் (நமது பார்வைக்கும் தெரியாமல் உள்ளவை) ஆறு மணிக்குதான் விழத் துவங்குகின்றதாம். இவற்றை எல்லாம் விளக்கி எழுதி வைக்கப்படாவிடிலும், வாய் மொழி வாய்மொழியாக கூறப்பட்டு வரும்  நம்பிக்கையின் அடிப்படையில் இவை இருந்திருந்தாலும்,  நவீன கால விஞ்ஞான ஆராய்ச்சிகள் மூலம் சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ள  அர்த்தங்களும்  காரணங்களும் மெல்ல மெல்ல தெரிய வருகின்றன.

21) மேலே தொடரும் முன் ஒரு விஷயத்தை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட தர்ம சாஸ்திர  நெறிகளையும் அவற்றின் அர்த்தங்களையும் நாம் பண்டைக் கால தேவ முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் போன்றவர்களின் அவரவர் தர்க்க வாதங்கள், மற்றும் அவர்களால் பிறருக்கு போதித்தவை மூலமே அறிகிறோம்.

அப்படிப்பட்ட மகரிஷி மற்றும் முனிவர்களில் மனு, கர்கர், கௌசிகர், கோபிகர், பராசரர், யாக்யவால்யகர், ஜமதக்னி, அன்கீரசர், ஆபஸ்தம்பர், அகஸ்தியர், போகர், வியாசர், தேவலர், காத்யாயனர், போதாயனர் போன்ற மாபெரும் புருஷர்கள் உள்ளதினால் அவர்களின் கூற்றுக்கள் அனைத்துமே காரணம் இன்றி இருந்திடாது என்பதை நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.

அவற்றில் சில ஆன்மீகத்தின் அடிப்படையில், தர்ம நெறியை போதிக்க இருந்தாலும், பெரும்பாலானவை உள் அர்த்தம் கொண்டவையாக இருந்துள்ளன. அவை நமக்கு விளங்கவில்லை. அர்த்தம் அற்றதாக நாம் பல காலம் கருதி வந்திருந்த பல விஷயங்கள் தற்காலத்தில் விஞ்ஞானத்தின் அடிப்படையில் அர்த்தம் உள்ளதாக தெரிய வருகின்றன.

22) இப்படி பல காலமாக போதிக்கப்பட்டு  வந்திருந்த தர்ம சாஸ்திர நெறி முறைகளை ஆராய்ந்து அவற்றை தொகுத்து அளித்திருந்ததில் காலம் காலமாக முன்னோடியாக காட்டப்படுவது கிரந்த மொழியில் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படும்  ‘வைத்தியநாத  தீக்ஷிதீயம்  ஆசௌச  காண்டம்’ என்பதாகும்.  

தொடரும்

''Acknowledgement: மேலுள்ள மூல  கட்டுரையை எழுதிய ஆசிரியர்  'சாந்திப்பிரியா'விற்கு (https://santhipriya.com/) நன்றி''

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!