மரணம் ஆத்மாவின் பயணமும் சடங்குகளும் பகுதி 12

23) அடுத்த கேள்வி, இரவு நேரத்தில் ஒருவர் இறந்து விட்டால் அந்த குடும்பத்தினருக்கு தீட்டுக் காலம் எப்போது துவங்கும் என்பதாகும்? சாஸ்திரங்களின்படி சூரியோதாயத்துக்கு பதினொன்றே கால் நாழிகைகளுக்கு முன்னர் ஒருவர் இறந்து விட்டால் அவர் இறந்தது முதல் நாள் கணக்கில் அடங்கும். சூரியோதாயத்துக்கு பதினொன்றே கால் நாழிகை என்பது பூமியில் இரவு 1 மணி 30 நிமிடத்தைக் குறிக்குமாம்.

ஆகவே ஒரு குடும்பத்தில் இரவு 1.30 மணி வரை நேரத்தில் யாராவது இறந்து விட்டால் அவரது மரணம் முதல் நாளைய கணக்கில் சேரும். 1.30 மணிக்கு மேல் இறந்தால் மறுநாள் கணக்கில் சேருமாம். பூமியில் மறுநாள் விடியற்காலை என்பது இரவு 12 மணிக்கு பிறப்பதாக நாம் கணக்கிடுகிறோம் என்றாலும், சாஸ்திரங்களின்படி பூமியில் இரவு 12 மணி ஆகும்போது தேவலோகத்தில் அப்போதைய நேரம் இரவு 11.50 ஆக இருக்குமாம். ஆகவே தேவலோகத்தில் இரவு 12 மணியாக இருக்கும்போது பூமியில் அப்பொழுதைய நேரம் 1.30 மணியாகும்.

தேவலோகக் கணக்கின்படி காலை ஆறு மணி என்பது தேவலோகத்தில் விடியற்காலை 4 மணி 30 நிமிடமாகுமாம். அப்போது அங்கு எழுந்து பூமியைப் பார்க்கும் சூரியனின் ஒளிக் கற்றைகள் பூமியிலே ஆறு மணிக்கு வந்து சேர்கிறதாம். அதாவது தேவலோகம் மற்றும் பூமியின் நேரக் கணக்கில் சுமார் 1.5 மணி நேர வேறுபாடு உள்ளது. அதனால்தான் தேவலோகத்தில் நடு இரவு 12 மணி ஆகும்போது பூமியில் அந்த நேரம் இரவு 1 மணி 30 நிமிடங்களாக உள்ளது.

 பூமியில் விடியற்காலை துவங்குவது இரவு 12 மணிக்கு என்பது தேவலோகத்தில் இரவு 10 மணி 30 நிமிடம் ஆகும். ஆகவே தேவலோக நேரத்தையே ஆசௌச காரியங்களில் பயன்படுத்துகிறார்கள் என்பதினால் தேவலோகத்தில் மறுநாள் விடியும் நேரமான நடு இரவு 12 மணியை பூமியில் மறுநாள் விடியும் நேரமாக கருத வேண்டி உள்ளது. அதனால் பூமியில் இரவு 1 மணி 30 நிமிடங்களாக உள்ள நேரத்தை விடியற்காலை விடியும் நேரமாக ஆசௌச காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.

சாஸ்திரங்களில் இரவு மரணம் அடைந்தவர்கள் மரண நேரத்தைக் குறிப்பிடுகையில், மரணம் சூரியோதாயத்துக்கு பதினொன்றே கால் நாழிகைகளுக்கு முன்னர் என்றால் அது முதல் நாள் கணக்கே என்றும், அதன் பின் இறந்தால் மறு நாள் கணக்கு என்றும் கூறுகிறார்கள். அதன்படி பூமியில் இரவில் ஒருவர் 1.30 க்கு முன்னால் இறந்து விட்டால் அவர் இறந்தது முதல் நாள் கணக்கில் சேர்ந்து விடும் என்று ஆகிறது.

 சூரியோதாயத்துக்கு பதினொன்றே கால் நாழிகைகளுக்கு முன்னர் என்பது முதல் நாள் கணக்கு என்பது எப்படி ? தேவலோகக் கணக்கின்படி ஒரு நாழிகை என்பது பூமியில் 24 நிமிடங்கள் ஆகும். ஆகவே கீழுள்ள கணக்கை பாருங்கள்.

பதினொன்றே கால் நாழிகை x 24 நிமிடங்கள் = 270 நிமிடங்கள்
270 நிமிடங்கள் என்பது = 270 நிமிடங்கள் /60 நிமிடங்கள் = 4.30 மணி
பூமியில் சூரியோதயம் = காலை 6.00 மணி

ஆகவே சூரியோதயத்துக்கு முன்னால் பதினொன்றே கால் நாழிகை என்பது = சூரியோதயம் காலை 6 மணியில் இருந்து பதினொன்றே கால் நாழிகை 4.5 மணி நேரத்தைக் கழித்தால் வருவது = 1.30 நிமிடங்கள். அதாவது இரவு 1.30 நிமிடங்கள் என்பதாகும்.

24) ஒரு கிரஹஸ்தர் சன்யாசி ஆகி விடுகிறார் என்றால் அவருடைய தாய் மற்றும் தந்தை அல்லது உறவினர் இறந்தால் அவருக்கு தீட்டுக் காலம் உண்டா என்றால் இல்லை என்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. சன்யாசியின் தாய் அல்லது தந்தை இறந்தால் ஸ்நானம் மட்டுமே உண்டு. தீட்டு கிடையாது. அதன் காரணம் அந்த சன்யாசியின் உடலை அவர்கள் ஈன்று எடுத்ததினால் அந்த உடலுக்கு தர வேண்டிய மரியாதை ஆகும் அந்த செயல்.

25) சாஸ்திரத்தின்படி பத்து நாள் தீட்டு உள்ள ஆண் ஒருவர் நோயினால் குளிக்க முடியாத நிலையில் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் கிடக்கிறார். அப்படி என்றால் அவருடைய தீட்டு எப்படி விலகும்? அப்படிப்பட்ட நோயாளியை எவராவது ஒருவர் தொட்டு விட்டு குளிக்க வேண்டும். குளித்தப் பின் மீண்டும் தொட்டுவிட்டு குளிக்க வேண்டும். இப்படியாக பத்து முறை தொட்டு விட்டு தொட்டு விட்டு குளித்தால் நோயால் படுத்துள்ளவரின் தீட்டு விலகி விடுமாம்.

 அதென்ன பத்து முறை தொட்டு விட்டு பத்து தடவை குளிக்க வேண்டும்? நோயால் படுத்திருப்பவருக்கு பதிலாக இன்னொருவர் பத்து முறைக் குளிப்பதின் மூலம் பத்து நாளைய கர்மாவில் நோயால் படுத்துள்ளவர் கலந்து கொண்டு விட்டதாக தேவர்கள் ஏற்றுக் கொள்வார்களாம். ஆனால் அந்த நோயாளி நோய் விலகி வீடு திரும்பியதும் வீட்டில் புண்ணியாஜனம் செய்ய வேண்டும். இது முழுமையாக நம்பிக்கையின் அடிப்படையில் ஆன்மீக கண்ணோட்டத்தில் அமைந்த விதியாகும். விஞ்ஞான பூர்வமான காரணம் எதுவும் கிடையாது.

26) அது போலவே சாஸ்திரத்தின்படி பத்து நாள் தீட்டு உள்ள பெண் ஒருவர் குளிக்க முடியாத நிலையில் பாதிக்கப்பட்டு படுத்தப் படுக்கையில் கிடக்கிறார். அப்படி என்றால் அவருடைய தீட்டு எப்படி விலகும்? இவரை யாராவது ஒரு பெண்மணி 12 முறை தொட்டு பன்னிரண்டு முறை குளித்து விட்டால் அவளது தீட்டு விலகி விடுமாம். ஆனால் அந்த நோயாளி நோய் விலகி வீடு திரும்பியதும் வீட்டில் புண்ணியாஜனம் செய்ய வேண்டும்.

27) ஒருவர் வீட்டில் சிரார்த்த காரியம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அந்த சிரார்தத்தை செய்பவருக்கு சிரார்த்தம் நடந்து கொண்டு இருக்கும்போதே இன்னொரு இறப்பு தீட்டு வந்துவிட்டது எனும் போது அந்த தீட்டு சிரார்த்தம் முடிந்த பின்னர்தான் துவங்கும்.

28) எந்த ஒரு பிரும்மச்சாரிக்கும் தீட்டு இல்லை.

29) ஒருவருக்கு ஒரு குடும்ப உறுப்பினரால் மரணத் தீட்டு உள்ள காலத்தில் அவர்கள் முன்னர் செய்ய வேண்டிய குடும்ப உறுப்பினருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டிய தேதி வந்து விட்டால் அவர்கள் அந்த தீட்டு சமயத்தில் அவர்கள் சிரார்த்தம் செய்யக் கூடாது.

30) திருமணம் நடக்கும்போது, மணப்பெண் அல்லது மாப்பிள்ளையின் பெற்றோர்கள் இறந்து விட்டால், அந்த திருமணம் முடிந்து, மணமக்களின் கிரஹப்பிரவேச சடங்கும் முடிந்து சுபமாக திருமண சடங்கை முடித்து வைக்கும் சேஷ ஹோமம் செய்யும்வரை அவர்களுக்கு தீட்டு கிடையாதாம்.

31) சாதாரணமாக தீட்டு உள்ளவர்களின் வீடுகளில் உள்ள உணவு பண்டங்களை அந்த நாட்களில் வேறு யாரும் பயன்படுத்த மாட்டார்கள். காரணம் அந்த பொருட்களுக்கும் தீட்டு உண்டு என்பதே. ஆனால் அவர்கள் வீட்டில் உள்ள தயிர், பால், நெய், காய்கறிகள், உப்பு, தேன், மற்றும் பழங்களுக்கு தீட்டு கிடையாது. அவற்றை அந்த வீட்டில் உள்ளவர்கள் யார் மீதும் படாமல் அவர்கள் வீட்டில் இருந்து எடுத்து வந்து உபயோகிக்கலாமாம்.

32) எத்தனை நாள் தீட்டானாலும் சரி, அந்த தீட்டு உள்ள காலத்தில் கிரகணம் வந்தால் கிரகணம் துவங்கி முடியும்வரை அங்குள்ளவர்களுக்கு தீட்டுக் கிடையாதாம்.

33) ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து பார்க்காமலும், எந்த சம்மந்தமும் இல்லாமல் இருந்திருந்தால் ஒருவருக்கொருவர் குடும்பத்தில் ஏற்படும் மரணத்தில் மற்றவர்களுக்கு ஸ்நானத் தீட்டு மட்டுமே உண்டு. அவர்களுக்கு பத்து, மூன்று, ஒரு நாள் தீட்டு போன்றவைக் கிடையாதாம்.

34) குழந்தை பிறப்பினாலும் தீட்டு உண்டாகும். அதை விழுப்பு என்பார்கள். ஆனால் குழந்தைப் பிறப்பினால் பத்து நாள் தீட்டு உள்ள நேரத்தில் மரணத்தினால் இன்னொரு பத்து நாள் தீட்டு வந்து விட்டால் பிறப்பு தீட்டுடன் மரணத் தீட்டு போகாது. செய்தி கிடைத்த நாளில் இருந்து பத்தாவது நாள் வரை மரணத் தீட்டு தொடரும். அதாவது ஒன்றாம் தேதி குழந்தைப் பிறப்பினால் பத்து தீட்டு வந்து விட்டது. 

ஐந்தாம் நாள் மரணச் செய்தி ஒன்றினால் அவர்களுக்கு பத்து நாள் தீட்டு வந்துவிட்டது. அப்படி என்றால் பிறப்பு தீட்டு முடிவுறும் பத்தாம் தேதியுடன் மரணத் தீட்டு முடியுமா என்றால், கிடையாது என்பது பதில் ஆகும். அவர்களது தீட்டு பதினைந்தாம் தேதிதான் முடிவடையும். ஆனாலும் அடுத்த நாளும் மீண்டும் வரும் தீட்டையும் சேர்த்து அனைத்து தீட்டும் சுபஸ்வீகாரம் செய்யும் 13 ஆம் நாளைக்கு காலையில் குளித்ததும்தான் போகும்.

35) அதைப் போல ஒருவர் பத்து நாள் மரணத் தீட்டை அனுஷ்டித்துக் கொண்டு இருக்கும்போது, அவருக்கு குழந்தைப் பிறந்து அதனால் இன்னொரு பத்து நாள் தீட்டு வந்து விட்டது. அப்போது என்ன செய்வது? தீட்டு எப்போது விலகும்? மரணத்தினால் ஏற்பட்ட பத்து நாள் தீட்டு உள்ள நேரத்தில் குழந்தைப் பிறப்பால் இன்னொரு பத்து நாள் தீட்டு வந்து விட்டாலும் அந்த தீட்டு மரணத் தீட்டுடன் போய் விடும்.   

அதாவது ஒன்றாம் தேதி ஒரு மரணத்தினால் பத்து நாள் தீட்டு வந்து விட்டது. ஐந்தாம் நாள் குழந்தைப் பிறந்ததினால் அவர்களுக்கு இன்னொரு பத்து நாள் தீட்டு வந்துவிட்டது. அப்படி என்றால் மரணத்தினால் ஏற்பட்டு உள்ள தீட்டு முடிவுறும் பத்தாம் தேதியுடன் பிறப்பினால் ஏற்பட்ட தீட்டு முடியுமா என்றால், முடியும் என்பது பதில் ஆகும். அவர்களது தீட்டு பத்தாம் தேதியுடன் முடிவடைந்து விடும். ஆனாலும் அடுத்த நாளும் மீண்டும் வரும் தீட்டையும் சேர்த்து அனைத்து தீட்டும் சுபஸ்வீகாரம் செய்யும் 13 ஆம் நாளைக்கு காலையில் குளித்ததும்தான் போகும்.

36) ஒரு பெற்றோருக்கு அவர்களுக்குப் பிறந்த குழந்தையினால் பத்து நாள் தீட்டு உள்ளது. அதாவது ஒன்றாம் தேதி குழந்தைப் பிறக்க அவர்களுக்கு அந்தக் குழந்தை பிறந்ததினால் ஏற்பட்ட தீட்டு பத்தாம் தேதியுடன் அகலும்.

ஆனால் அதே குழந்தை பிறந்த பத்து நாட்களுக்குள், அதுவும் பத்தாவது நாளன்று காலை அந்தக் குழந்தை இறந்தும் விட்டது என்றால் அந்த குழந்தையின் மரணத்தினால் எத்தனை நாள் தீட்டு இருக்கும்? அந்த நிலையில் இரண்டு தீட்டும் அதே குழந்தை மூலமே என்பதினால் இரண்டு தீட்டுமே பத்தாவது நாளிலேயே விலகி விடுகிறது. 

ஆனாலும் அடுத்த நாளும் மீண்டும் வரும் தீட்டையும் சேர்த்து அனைத்து தீட்டும் சுபஸ்வீகாரம் செய்யும் 13 ஆம் நாளைக்கு காலையில் குளித்ததும்தான் போகும். இதில் ஒரு சின்ன மாற்றம் உண்டு. பத்தாவது நாளன்று கடைசி நேரத்தில் அதாவது மறுநாள் பிறக்கும் சில மணி நேரத்துக்கு முன்னால் குழந்தை இறந்து விட்டது என்றால் அந்தக் குழந்தையின் பெற்றோர்களுக்கு அதிகமாக மூன்று நாட்கள் தீட்டு உண்டு. அதாவது அவர்களுடைய தீட்டு பதிமூன்றாம் நாள்வரை இருக்கும்.
இன்றுடன் மரண ஆத்மாவின் பயணகதை முடிவடைந்தது.
            
முற்று பெற்றது

''Acknowledgement: மேலுள்ள மூல  கட்டுரையை எழுதிய ஆசிரியர்  'சாந்திப்பிரியா'விற்கு (https://santhipriya.com/) நன்றி''