32) மரணம் அடைந்தவர் வீட்டு வாயிலில் அடுத்த பன்னிரண்டு நாட்களும் கோலங்களையும் போட்டு அலங்கரிக்கக் கூடாது. நமது இல்லத்திற்கு தினசரி நாம் ஆராதிக்கும் தெய்வங்களும் தேவர்களும் வருகிறார்கள் என்று ஐதீகம் உள்ளது. ஆகவே அவர்களை வரவேற்கும் விதமாக இருக்கவும் மங்களச் சின்னமாக இருக்கவுமே கோலத்தைப் போடுவார்கள்.
ஆனால் ஏற்கனவே கூறியது போல இறந்தவர் வீட்டில் தற்காலிகமாக மங்கள காரியங்கள் நடைபெறாமல் இருக்கும் என்பதாலும் இறந்தவர்களின் ஆத்மா அங்கிருந்து செல்லும்வரை தெய்வங்களோ அல்லது தேவர்களோ அங்கு நுழைய மாட்டார்கள் என்பதாலும் இறந்தவர்கள் வீடுகளில் கோலங்களை போடுவது இல்லை.
33) ஒருவர் இறந்து விட்டால் அந்த பிரேதத்தின் தலையை தெற்கு நோக்கி தர்பைப் புல்லில் படுக்க வைத்து தென் பகுதி மூலையில் சின்ன விளக்கேற்றி வைக்க வேண்டும். இதற்கான காரணத்தை பாகம்-2 / பதிவில்
17 முதல் 19 ல் விளக்கி உள்ளேன். முடிந்த அளவிற்கு அதன் உடலில் போடப்பட்டு உள்ள துணிகளை அகற்றி விட்டு வெள்ளைப் போர்வையினால் உடலைப் போர்த்தி வைக்க வேண்டும்.
நெற்றியில் விபூதி/நாமம் பூசியும் வைப்பார்கள். கால் கட்டை விரல்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து சின்ன துணியினால் கட்டி வைத்து விட வேண்டும். மூக்கிலும் பஞ்சை வைத்து மூடி விடுவார்கள். இதற்கான காரணத்தை கீழே பதிவில் 35 ல் படிக்கவும். எதற்காக தலையை தெற்குப் பக்கம் பார்த்தபடி படுக்க வைக்க வேண்டும் என்பதை பாகம் -2 ல் ஏற்கனவே விளக்கி உள்ளேன். மூக்கின் இரு துவாரங்களிலும் பஞ்சை வைத்து மூடுவார்கள்.
34) எதற்காக கட்டை விரல்களை ஒன்று சேர்த்துக் கட்டி வைக்கிறார்கள் என்பதை விஞ்ஞான ரீதியில் சாஸ்திரங்கள் விவரிக்காவிடிலும் அதை தர்ம சாஸ்திர விதியாக கூறி உள்ளார்கள். ஒருவர் இறந்தப் பின் அவர்கள் உடலில் உள்ள பிராண சக்தி உடலை விட்டு உடனடியாக அகன்று விடுவது இல்லை.
அந்த உடலில் இருந்து வெளியேறும் ஆத்மாவானது சில காலம்வரை அங்கேயே சுற்றிக் கொண்டு இருக்கும் (இதன் காரணத்தை பின் வரும் பத்திகளில் விளக்கி உள்ளேன்). அதைத் தொடர்ந்து விண்வெளியில் உள்ள பல ஆத்மாக்களும் அங்கு வந்து சுற்றத் துவங்கும் (இதன் காரணத்தையும் பின் வரும் பத்திகளில் விளக்கி உள்ளேன்).
35) மேலே கூறிய தன்மையினால் இறந்தப் பின் இயற்கையாகவே கால்கள் இரண்டும் அகலமாக திறந்து கொண்டு ஒன்றை விட்டு ஒன்று விலகி நிற்கத் துவங்கும். அப்படி கால்கள் விலகும்போது பின்புறத்தில் உள்ள ஆசனத் துவாரம் விரிவடைந்து விடும். அதையே மூலாதாரம் என்பார்கள். அதன் வழியே இறந்தவர் உடலில் இருந்து வெளியேறிய ஆத்மாவும், அங்கு சுற்றித் திரியும் மற்ற ஆத்மாக்களும் அந்த உடலுக்குள் மீண்டும் மீண்டும் நுழைய முயலும்.
அப்படி அவை நுழைந்து விட்டால் அந்த உடலுக்கு செய்யப்படும் கர்மாவின் பலனை அந்த ஆத்மாக்களும் பெற்றுக் கொள்ளத் துவங்கி விடும். அப்படி உடலின் உள்ளே புகுந்து கொண்ட ஆவிகள் தகனத்தின் போது வெளியில் வந்து விடும். மயானத்தில் மந்திரவாதிகள் அப்படி உடலுக்குள் நுழைந்து வெளி வரும் ஆவிகளை தன்வயப்படுத்தி துர்பிரயோகம் செய்ய வழி வகுத்து விடும். அது அந்தந்த குடும்பங்களை பாதிக்கும். ஆகவேதான் அந்த மூலாதார துவாரம் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்பதற்காக கட்டை விரல்களை இறுக்க கட்டி வைத்து விடுவார்கள்.
36) ஆத்மாக்களினால் இறந்து விட்டவர்களின் உடலில் உள்ள மற்ற துவாரங்கள் வழியே உள்ளே நுழைய முடியாதாம். நாசித்துவாரம் அல்லது மூலாதாரம் வழியே மட்டுமே நுழைய இயலுமாம். அதனால்தான் நாசியின் துவாரங்களை பஞ்சு வைத்து மூடியும், கால் கட்டை விரல்களை ஒன்றாக சேர்த்துக் கட்டியும் வைத்து விடுவார்கள். இனி கர்மாக்கள் என்னென்ன, கர்மாக்கள் எப்படி செய்யப்படுகின்றன என்பதை படித்தப் பின் அவற்றுக்கான சந்தேகங்களையும் விளக்கங்களையும் பார்க்கலாம். தலைமாட்டில் சடங்குகளை துவக்குவார்கள்
37) உறவினர் அனைவரும் வந்து கூடிய பின், வீட்டினர் தகனக் கிரியை அல்லது கர்மாவை துவக்க முடிவு செய்தப் பின் பொதுவாக தலைப் பகுதியில் செங்கல்லை அடுக்கி வைத்து சின்ன குண்டம் அமைத்து, அதன் பக்கத்தில் கும்பங்கள் வைத்து கும்ப பூஜைகளைத் துவக்குவார்கள். தலைப் பகுதியில் சடங்குகளை செய்ய ஆரம்பிப்பதின் காரணமும் யமதர்மராஜருக்கு மரியாதை தருவதற்காகத்தான். பூதவுடலை ஒரு பூணூல் மூலம் கும்பங்களுடன் இணைத்து வைத்து ஹோம குண்ட அக்கினியுடன் சங்கமிக்கச் செய்வார்கள்.
அதாவது இறந்தவர் உடலில் இருந்து வெளியேறிய ஜீவனை அக்னி ஹோமத்தின் மூலம் பூர்வாங்கமாக தகனம் செய்து யமதர்ம தேவரிடம் அனுப்பி வைப்பதான ஐதீகம் அது. அந்த சடங்கு முடிந்ததும் அக்கினி ஹோமம் வளர்க்கப்பட்டு பூத உடலை தண்ணீர் விட்டு அலம்புவார்கள். அந்த சடகுகளை வீட்டில் உள்ளவர்கள் செய்கிறார்கள். அன்றே கல் ஊன்றுதல் எனும் சடங்கும் நடைபெறும். அதை பாஷண ஸ்தாபனம் என்றும் கூறுவார்கள். அதன் தாத்பர்யம் குறித்து பின்னர் கூறுகிறேன்.
இந்த சடங்கும் குடும்பத்துக்கு குடும்பம் மாறுபட்டு இருக்கலாம். அதற்கான கர்மாக்களை எப்படி செய்ய வேண்டும் என்பதை கர்மாவை செய்ய வந்துள்ள புரோகிதர்கள் கூறுவார்கள்.
38) அதற்கு இடையில் அங்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் பிரேதத்துக்கு மலர் மாலைகளை அணிவிப்பார்கள். பூக்களையும் உடல் மீது தூவுவார்கள். எதற்காக இறந்தவர் உடலின் மீது மலர்களை போட வேண்டும் அல்லது , மலர் மாலைகளை வைக்க வேண்டும் என்பதற்கு சாஸ்திர நியதி இல்லை. தர்ம சாஸ்திர நம்பிக்கையின்படி இறந்தவர் தெய்வமாகி விட்டார் எனக் கருதுவதினால்தான் அதை செய்கிறார்கள். இது பிற்காலத்தில் இறந்தவருக்கு செலுத்தப்படும் மரியாதைக்குரிய பழக்கமாக ஏற்படுத்தப்பட்டு உள்ளது ஆகும்.
39) இறந்து போனவர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களுக்குப் பிறந்த பெண்கள் மற்றும் மருமகள்கள் (பிள்ளைகளின் மனைவிகள்) போன்றவர்கள் தாம் உடுத்திய புடவையுடன் தலைக்கு ஸ்நானம் செய்துவிட்டு, தலையை முடியாமல், ஈரப் புடவையுடன் குடத்தில் தண்ணீர் ஏந்திக் கொண்டு வந்து ஆளுக்கொரு குடமாகவோ அல்லது ஒரு குட ஜலத்தையே எல்லோரும் பிடித்துக் கொண்டோ கால் பாதத்தில் இருந்து இருந்து தலை வரை உடம்பு முழுவதும் நன்றாக நனையும்படி நிதானமாக, படுக்க வைக்கப்பட்டு உள்ள பிரேதத்தின் மீது தண்ணீர் விடுவார்கள். சவத்தின் மீது தண்ணீரை ஊற்றி குளிப்பாட்டுவார்கள்
40) உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றி உடலை நனைத்தப் பின், முடிவாக முகத்தில் தண்ணீரை ஊற்றியதும் தலை அருகே குடத்தைக் கவிழ்த்து வைத்து விட்டு அதில் இருந்து கீழே வடிந்த ஜலத்தை எடுத்து அதே குடத்தின் மீது தெளித்தப் பின் அந்தக் குடத்தை எடுத்து பிரேதத்தின் வடக்குப் பக்கத்தில் வைத்து விடுவார்கள். அப்படி செய்வது கங்கை நீரால் அந்த குடத்தை அலம்பியதற்கு சமம் என்பார்கள்.
அதனால்தான் அந்த சடங்கை இறந்தவரது பிரேதத்துக்கு செய்யும் அபிஷேக பூஜை என்றும் கூறுவார்கள். இறந்தவர்கள் தெய்வத்துக்கு சமானம் எனக் கருதப்படுவதினால் அதற்கு செய்யும் மரியாதை சடங்கு ஆகும் இது என சாஸ்திரங்களும் கூறுகின்றன. இந்த சடங்கை சில பண்டிதர்கள் ஒரு விதத்தில் அஸ்வமேத யாகத்துக்கு இணையானது என்று கூறி உள்ளார்கள்.
41) அதன் பின்னர் இறந்தவரது கர்த்தாக்கள் அனைவரும் பிரேதத்தை பிரதர்ஷணம் செய்த பின் அந்த இடத்தில் இருந்து வெளியில் சென்று விடுவார்கள். செல்லும் முன் அதற்கு நமஸ்கரிப்பது மெத்த சிறந்தது ஆகும். அங்குள்ள மற்றவர்கள் அந்த இடத்தை ஈரமின்றி நன்றாகத் துடைத்து விடுவார்கள். அதன் பின் மரணம் அடைந்தவர் பெண் என்றால் பெண்களும், ஆண் என்றால் ஆண்களும் ஈரமாக உள்ள பிரேதத்தின் உடலை நன்றாகத் துடைத்து விட்டு அந்த சடலத்துக்கு மாற்று உடை அணிவிப்பார்கள்.
இறந்தவர்கள் உடலில் நகைகள் ஏதாவது அணிவிக்கப்பட்டு இருந்தால் அதையும் அந்த நேரத்தில் கழற்றி எடுத்து விடுவார்கள். அனைவரும் தெற்கு பக்கமாகப் பார்த்து சவத்தை நமஸ்கரித்தப் பின்னர் பிணத்தை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்வார்கள். இவை அனைத்தையும் அங்குள்ள புரோகிதர் மந்திரங்கள் ஓதி நடத்தி வைப்பார்.
42) பொதுவாக கர்மாக்கள் நடைபெறும் வீட்டின் முற்றத்தில் பந்தல் போட்டு மாவிலை மற்றும் தோரணம் கட்டி தரையை சாணத்தினால் மெழுகி வைப்பார்கள் (உறவினர் வந்து அமர மற்றும் சடலத்தைக் கட்டும் பாடையை அங்கு வைப்பதற்காக). இந்த பழக்கம் கிராமங்களில் மட்டுமே தற்காலத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இட வசதி காரணமாக நகரங்களில் இந்த பழக்கம் அதிகம் காணவில்லை. இப்படி செய்வதும் இறந்தவருக்கு மரியாதை காட்டும் சடங்கு ஆகும்.
தயாராக வைக்கப்பட்டு உள்ள பாடையில் பிணத்தைக் வைத்ததும், உரிமைக்காரப் பெண்களும், வீட்டுப் பெண்களும் அதன் வாயில் வாய்க்கரிசி போட்டப் பின், இறந்தவர்களின் உடலை ஒரு போர்வையினால் நன்கு மூடி வைத்தப் பின், அதை பாடையுடன் சேர்த்து கட்டியதும் நான்கு பேர்கள் அந்தப் பாடையை தூக்கி தமது தோள் மீது வைத்துக் கொள்ள, நெருப்புச் சட்டியுடன் இறந்தவரது மகன்கள் முன்னே செல்ல, பிணத்தின் பின்புறத்தில் இறந்து போனவரின் பேரப்பிள்ளைகள் தீப்பந்தம் ஏந்தியபடி பிணத்துடன் செல்வார்கள்.
சாதாரணமாக இறந்தவருக்கு முன்னால் கூட்டமாக செல்லக் கூடாது என்றும், பிணத்துடன் செல்பவர்கள் அதன் பின்னால் செல்ல வேண்டும் என்பார்கள். பிணத்தின் முன்னால் தீ சட்டியுடன் கர்த்தாக்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்பார்கள். ஆனால் இதற்கான காரணம் நமக்கு விளங்கவில்லை. இறந்தவரின் பேரன்கள் தீப்பந்தம் தூக்கிச் செல்லும் பழக்கம் இறந்தவரது குடும்பத்து சிறுவர்களும் சுடுகாட்டுக்கு செல்லும் உடலுக்கு தீ மூட்டி எரிக்க தானும் உரிமை உள்ள கர்த்தா என்பதை காட்டவும், மேலுலகம் செல்லும் ஆத்மாவுக்கு மரியாதைக் கொடுத்து அனுப்ப வேண்டும் என்பதற்காகவும் செய்யப்படும் ஐதீகமே தவிர அதற்கு வேறு எந்த விஞ்ஞான பூர்வமான அல்லது சாஸ்திர காரணமோ கிடையாது.
சில குடும்பங்களில் பிள்ளைகளோ மற்ற கர்தாக்களோ இல்லை என்றால் இறந்தவரது பேரன்கள் கர்மாவை செய்ய உரிமை உள்ளவர்கள் ஆகின்றார்கள். ஆகவே இது அதை எடுத்துக் காட்டும் சம்பிரதாய சடங்கு முறையே ஆகும்.
43) மேலும் அந்த சிறுவர்களும் பின் வரும் நாட்களில் தாம் பெரியவர்கள் ஆகும்போது இறந்து போக உள்ள தமது தாய் தந்தைக்கு சடங்குகளை எந்த விதத்தில் செய்ய வேண்டும் என்பதை காட்டும் போதனையாக இருக்கவே சாஸ்திர சம்பிரதாயமாகவும் அவற்றைக் காட்டி உள்ளார்கள். முன் காலங்களில் பேரப்பிள்ளைகளும் சுடுகாடுவரை சென்று சிதைக்கு கொள்ளி வைக்கும் பழக்கம் இருந்தது. தற்போது பலரது வீடுகளிலும் சிறு பிள்ளைகளை சுடுகாட்டிற்கு அழைத்துச் செல்வது இல்லை. சுடுகாட்டில் பிணங்களைக் கண்டு அவர்கள் பயந்து விடுவார்கள் என்பதே அதன் காரணம்.
44) வாய்க்கரிசி போடுவது எதற்கு எனில் அதுவரை இறந்து போனவருக்கு தாம் உணவு தரவில்லை எனில், அந்த கடைசி நேரத்திலாவது அவருக்கு உணவு கொடுத்தோமே என்ற மன நிறைவு இருக்கட்டும் என்பதற்காக போடப்படும் சம்பிரதாயமே தவிர அதன் தத்துவம் வேறு எதுவும் இல்லை. ஆனால் ஆன்மீகத்தில் அரிசியை தெய்வீகத் தன்மைக் கொண்டதாகக் கூறுவார்கள்.
ஹோமம் ஆனாலும் சரி பூஜைகள் ஆனாலும் சரி அவற்றில் அரிசி முக்கிய இடம் பெறுகிறது. அரிசி மீதுதான் பூஜை கலசங்களைக் கூட வைத்திருப்பார்கள். மஞ்சள் அரிசியைத்தான் பூஜைகளிலும் உபயோகிப்பார்கள். எந்த நாடாக இருந்தாலும் சரி, எங்கு மரணம் நிகழ்ந்தாலும் சரி, இந்துக்கள் அங்கெல்லாம் மரணம் அடைந்தவர் வாயிலே கடைசியாக போடுவது அரிசி தானியமே தவிர பருப்புக்களோ, கோதுமையோ அல்லது பிற தானியமோ இல்லை. இறந்தவரது வாயில் போடப்படும் அரிசியும் அவர் உடலை தகனம் செய்யும்போது எரிந்து போகும்.
இறந்தவர் உடலை தகனம் செய்யும் சடங்கு ஒரு விதத்தில் அந்த புனித ஆத்மாவுக்கு செய்யப்படும் ஹோமம் போன்றது. எப்படி ஹோம குண்டத்தில் அரிசியைப் போடுவது முக்கியம் ஆனதோ அது போலவேதான் இறந்தவரது சின்ன வாயையும் ஹோம குண்டமாகக் கருதி அதில் அரிசியைப் போட்டு உடலை தகனம் செய்கிறார்கள்.
45) சாஸ்திர நம்பிக்கையின்படி இறந்தவரது வாயில் போடப்படும் அரிசியானது அவர் உடலை விட்டு வெளியேறிய ஆத்மாவினால் ஆவாகிக்கப்பட்டு அந்த குடும்பத்தின் ஏழு தலை முறைக்கான ஆத்மாக்களுக்கும் பங்கிட்டு தரப்படும், அதன் மூலம் அந்த பித்ருக்களின் மனம் சாந்தி அடையும் என்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ள செய்திகளின் அடிப்படையில், நம்பிக்கைகளின் அடிப்படையில் அந்த சடங்கு செய்யப்படுகிறது.
அதை செய்வதின் மூலம் வாய்க்கரிசியை உணவாக போட்டவர்களது குடும்பத்துக்கு மேலுலகில் உள்ள ஆத்மாக்களின் ஆசிகள் வந்து சேரும், அது அவர்களுடைய குடும்பத்தைக் காப்பாற்றும் என்பார்கள். பேரப்பிள்ளைகளும் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் சவத்தின் பின்னால் தீப்பந்தங்களை ஏந்திச் கொண்டு சற்று தூரம் செல்வார்கள்
46) முன் காலங்களில் சுடுகாடு எத்தனை தூரம் இருந்தாலும் பிணத்தை மாறி மாறி நான்குபேர் தூக்கிக் கொண்டு நடந்தே சுடுகாடுவரை செல்வார்கள். ஆனால் தற்காலத்தில் சற்று தூரம் சென்றப் பின் வாகனத்தில் பிணத்தை வைத்து கொண்டு சென்று விடுகிறார்கள். இரண்டு முறைகளுமே தவறல்ல. சாஸ்திரத்துக்கு எதிரானதும் அல்ல. காரணம் சவத்தை தோளில் மட்டுமே சுமந்து கொண்டு செல்ல வேண்டும் என்பது சாஸ்திர விதியல்ல. அது இறந்தவரது குடும்பத்தினருக்கு தாமும் தோளோடு தோள் கொடுத்து துணையாக நின்று இருப்போம் என்பதை எடுத்துக் காட்டும் சம்பிரதாயமே ஆகும்.
47) அந்த காலத்தில் சவங்களை தோளில் மட்டுமே சுமந்து கொண்டு செல்வது நடைமுறையில் இருந்தது என்பதின் காரணம் சுடுகாடுகள் அதிக தூரத்தில் இருந்ததில்லை என்பது மட்டும் அல்ல வாகன வசதிகளும் கிடையாது, மனிதர்களும் திடகார்த்தமாக இருந்தார்கள் என்பதே. நேரம் அதிகமாக ஆக சவத்தின் எடை அதிகரிக்கத் துவங்கும். இது இயற்கையின் தன்மை ஆகும்.
ஆகவேதான் நேரமாக நேரமாக, உடல் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கும் சவத்தை அத்தனை தூரமும் சுமந்து கொண்டே செல்ல முடியாமல் வண்டியில் வைத்துக் கொண்டு செல்லும் பழக்கமும் துவங்கியது. சுடுகாடுகள் நீண்ட தூரத்தில் இருந்ததினால் பாதி தூரம் சவத்தை தோளிலே வைத்துக் கொண்டு சம்பிரதாயமாக நடந்து சென்றதும் பாடைகளுடன் கட்டப்பட்ட சவங்களை ஒரு கட்டை வண்டியில் வைத்து இழுத்துச் செல்வார்கள்.
தொடரும்...
''Acknowledgement: மேலுள்ள மூல கட்டுரையை எழுதிய ஆசிரியர் 'சாந்திப்பிரியா'விற்கு (https://santhipriya.com/) நன்றி''