மரணம் ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் பாகம் 6
84) வஸுக்களிடம் இருந்து யமகணங்களின் கட்டுப்பாட்டிற்கு ஆத்மா போய் விட்டாலும் பத்து நாட்களுக்கு மேலாக அடுத்த இரண்டு நாட்களும் அந்த ஆத்மாவை அங்கு இருந்தவாறு மீதமுள்ள சடங்குகளில் பங்கேற்க அனுமதிக்குமாம் அந்த யம கணங்கள்.
அதனால்தான் பன்னிரண்டு நாட்களும் கல் ஊன்றிய இடத்தில் செய்யப்படும் சடங்குகளில் செய்யப்படுபவற்றை அந்த ஆத்மாவானது ஏற்றுக் கொள்கிறதாம்.
கல் ஊன்றிய பிறகு தினமும் வாஸோதகம் எனப்படும் துணி பிழிந்த ஜலத்தாலும், திலோதகம் எனப்படும் எள்ளு தண்ணீராலும் தர்ப்பணம் பண்ண வேண்டும். எள்ளும் தண்ணீரும் தர்பைப் புல்லின் மீது பட்டவாறு சமர்பிக்கப்படுகிறது.
அதன் பின்னர் சாதத்திலான பிண்டம் சமர்ப்பிக்க வேண்டும். கர்மாவில் அரிசி சாதம், தர்பை, எள் மற்றும் தண்ணீர் என்பன முக்கியமானவை ஆகும்.
வஸுக்களிடம் இருந்து ஆத்மாவை அழைத்துக் கொண்டு செல்லும் யமதூதர்கள் யமராஜரிடம் அவரை சமர்ப்பிக்கிறார்கள்.
85) மரணம் அடைந்தவர் உடலில் இருந்து வெளியேறும் ஜீவன் எனப்படும் ஆத்மா அந்த உடலை சுற்றி உள்ள காற்றின் மூலம் வஸுக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டதும் அந்த வஸுக்கள் அந்த ஜீவனை முதலில் எமனுலகில் உள்ள எமதேவர் முன்னிலையில் கொண்டு சென்று அவர் முன் நிறுத்தி அதன் கணக்கை ஆராயுமாறு வேண்டிக் கொள்ளும். அதன் பின் யமராஜரின் அனுமதியோடு மீண்டும் அந்த ஆத்மா வஸுக்கள் மூலம் பூமியில் அது வாழ்ந்த இடத்திற்கே திரும்ப அழைத்து வரப்படும்.
அங்கு அது அடுத்த இரண்டு நாட்களை கழிக்க வேண்டும். பாஷண ஸ்தாபனம் எனும் பெயரில் என்றைக்கு கல் ஊன்றுகின்றார்களோ அன்றைக்கு அந்த ஆத்மா அந்த கல்லுக்குள் குடி புகுந்து கொள்ள, கர்மாவைத் துவக்கிய முதல் நாள் முதல் அடுத்த பத்து நாட்களும் அதன் குடும்பத்தினரால் போடப்படும் எள்ளும் தண்ணீரையும், பிண்டத்தையும் அங்கிருந்தவாறே அது பெற்றுக் கொண்டு மெல்ல மெல்ல முழுமையான பிண்ட உடலைப் பெற்றுக் கொள்ளத் துவங்கும். பிண்ட உடல் என்பது மனித உடல் அல்ல. நமது கண்களுக்கு தெரியாத பிரேத உடல் ஆகும்.
86) மனித உடலைப் போன்ற அந்த பிரேத உடல் முழுமை அடைந்தப் பின்னரே பன்னிரண்டாம் நாள் கர்மா முடிந்த பின் யமலோகத்துக்கு அந்த ஜீவன் அழைத்துச் செல்லப்படும். அந்த ஜீவன் பிரேத உடலை முழுமையாக அடையும்வரை ஏன் காத்திருப்பார்கள் என்றால் சொர்க்க நரகங்களில் அவை தமக்கு தரப்படும் தண்டனைகளையும் சுகபோகங்களையும் மனித உடல் அனுபவிக்கும் அதே உணர்வுகளுடன் இருந்தவாறு அனுபவிக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டு உள்ள நியதி ஆகுமாம் (அந்த பிரேத உடல் அனுபவிக்கும் நன்மை தீமைகளை பின் வரும் பாகங்களில் படங்களுடன் விளக்கி உள்ளேன்).
87) அந்த ஜீவன் எப்படி முழுமையாக வளர்ச்சி அடைகிறது? கர்மா துவக்கப்பட்ட முதல் நாள் அன்று தலை பாகத்தில் அமர்ந்து எள் கலந்த தண்ணீரையும் பிண்டத்தையும் பெற்றுக் கொள்ளும் அந்த ஆத்மா அடுத்தடுத்த நாட்களில் முகம், கழுத்து, தோள் மற்றும் கைகள், மார்பு, வயிறு, தொப்பிள், புட்டம், மலத் துவாரம், தொடைகள், கால்கள் எனப் படிப்படியாக அனைத்து இடங்களிலும் அமர்ந்தபடி எள் கலந்த தண்ணீரையும் பிண்டத்தையும் பெற்றுக் கொள்ளும் காலத்தில் இறந்தவர் உடலின் அந்தந்த பாகங்களின் அனைத்து பரிசங்களையும் அந்த ஜீவன் தான் பெறும் பிரேத உடலில் அடக்கிக் கொள்கிறது.
இறந்தவரின் அனைத்து உடல் பரிசங்களையும் பதினொன்றாவது நாளன்று முழுமையாக அந்த ஆத்மா பெற்று விடும்போது அந்த ஆத்மாவானது வஸுக்களிடம் இருந்து விலகி யமகணங்களோடு சேர்ந்து கொண்டு விடும். ஆனாலும் பத்தாவது நாட்களுக்குப் பின்னர் அடுத்த இரண்டு நாளும் அந்த ஆத்மா மீதமுள்ள எள் கலந்த தண்ணீரையும் பிண்டத்தையும் பெற்றுக் கொண்டப் பின்னரே பதிமூன்றாவது நாளன்று எமதூதர்கள் வந்து அழைத்ததும் துயரத்தோடு அவர்களுடன் செல்லத் துவங்கும்.
அந்த ஆத்மா பத்து நாட்களில் படிப்படியாக எப்படி முகம்,கழுத்து,
தோள் மற்றும் கைகள் மார்பு, வயிறு, தொப்பிள், புட்டம், மலத் துவாரம்,
தொடைகள், கால்கள் என பிரேத உடலின் அனைத்து பரிசங்களையும்
தன்னுள் அடக்கிக் கொள்கிறது என்பதைக் காட்டும் படம்
88) இறந்தவரது உடல் தகனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் வேளையில் மயானம்வரை அதில் இருந்து வெளியேறிய ஜீவனும் அதன் மீதே பயணித்துக் கொண்டு இருக்கும். அதன் காரணம் உடலுக்குள் உள்ள ஆத்மா அதுவரை தான் தங்கி இருந்த உடல் அழிக்கப்படுவதை நேரடியாகக் கண்ட பின்னரே திருப்பதி அடைந்து வஸுக்களிடம் செல்லுமாம்.
மயானத்தை அடைந்ததும் அது வாழ்ந்திருந்த உடல் எரிந்து சாம்பலாகிப் போனதும் அந்த ஆத்மா வஸுக்களுடன் வான்வெளிக்குச் சென்று விடும். சாம்பலாகி விட்ட அந்த ஜீவனின் உடல் (பிரேத உணர்வுகள் என்பார்கள்)
89) ஆனால் மரணம் அடைந்து விட்டவரது ஆத்மாவை வஸுக்கள் அந்த உடல் தகனம் செய்யப்பட்ட மற்றும் கல் ஊன்றப்பட்ட இடத்தின் மேல் பகுதியிலேயே அடுத்த பன்னிரண்டு நாட்களும் தங்க வைத்துக் கொண்டு இருப்பார்கள் என்பதின் காரணம் அடுத்த பன்னிரண்டு நாட்களும் அந்த ஆத்மாவை பிண்ட தானத்தில் தினமும் பங்கேற்க வைக்க வேண்டும் என்பதற்காகவேதான்.
90) அப்படி என்றால் கல் ஊன்றியதும் அந்தக் கல்லில் அந்த ஆத்மாவை மந்திர பூர்வமாக ஆவாஹனம் செய்து வைப்பார்கள் என்ற கூற்று தவறா என்றால், அதுவும் ‘இல்லை’ என்பதே அதற்கு பதிலாகும். கல் ஊன்றிய இடத்தில் மந்திரங்களை ஓதி அந்த ஆத்மாவை அதற்குள் வைக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை ஆகும். அது எப்படி ஊன்றப்பட்டு உள்ள கல்லுக்குள் ஆவாஹிக்கப்பட்ட ஜீவனால் தகனம் செய்யப்பட்ட இடத்தின் மேலும், தான் வாழ்ந்திருந்த வீட்டுக்கும் அடுத்த பன்னிரண்டு நாட்களும் செல்ல முடியும் எனதும் நியாயமான கேள்விதான்.
91) கல் ஊன்றிய இடத்தில் மந்திரங்களை ஓதி அந்த ஆத்மாவை அதில் செலுத்தி வைத்ததும் அந்த இடமே அதன் அரண்மனை போல மாறி விடும். ஊன்றப்பட்டு உள்ள அந்தக் கல் அதனுடைய சிம்மாசனம் போன்றது ஆகும். அந்த கல் அதற்கு சிறைசாலை போன்றது அல்ல. அதனால் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். ஆனால் அதற்க்கு அதை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள வஸுக்களின் அனுமதி தேவை மட்டுமல்ல, அந்த வஸுக்கள் வராமல் அதனால் எங்கும் தனியே செல்ல முடியாது.
92) ஜீவன் எங்கிருந்தாலும், கர்மாக்கள் நடைபெறும் சமயத்தில் அந்த ஜீவனை வஸுக்கள் அங்கு அழைத்து வந்து அந்த கல்லுக்குள் (சிம்மாசனத்தில்) அமர வைத்து விடுவார்கள். அங்கிருந்தபடி அந்த ஜீவனால் கர்மாவில் தரப்படும் எள் கலந்த தண்ணீரையும் பிண்டத்தையும் ஏற்றுக் கொண்டு பிண்ட உடலைப் பெற்றுக் கொள்ளும். அதை விடுத்து நேரடியாக அந்த ஆத்மாவை யமலோகத்துக்கு அனுப்பி விட்டால் அங்கிருந்து அது மீண்டும் பூமிக்கு திரும்பி வர இயலாது,
எள் கலந்த தண்ணீரையும் பிண்டத்தையும் அதனால் ஏற்க முடியாது என்பதினால் இந்த சடங்கை தினமுமாக பத்து நாட்கள் தொடர்ந்து செய்வார்கள். அதை வாஸ்சோதகம், திலோதகம் மற்றும் நித்ய விதி என்பார்கள். அந்த நித்ய விதியில் ஏகோத்ர விருத்தி ஸ்ரார்தமும், நவ ஸ்ரார்தம் போன்றவை நடைபெறும். அவற்றை பண்டிதர் செய்து
வைப்பார்கள்.எள்ளையும் தண்ணீரையும் நேராக ஊற்றாமல் கையை எதிர்புறமாக திருப்பி வைத்துக் கொண்டு ஊற்றுவார்கள். இதுவே ஸ்ரார்த்த காரியத்தின் முக்கியத்துவம்.
93) முதல் நாளில் மூன்று தடவை, அடுத்த நாள் நான்கு தடவை, அதற்கு அடுத்த நாள் ஐந்து தடவை எனப் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே போய் பத்தாம் நாளன்று பன்னிரண்டு முறை செய்யப்படும் ஏகோத்ர விருத்தி ஸ்ரார்தம் எனப்படும் சடங்கில் எள் கலந்த தண்ணீரையும் பிண்டத்தையும் தரும் தர்ப்பணமும் சிலர் குடும்பங்களில் மாறுபட்டு இருக்கும். அதையும் புரோகிதர் கூறுவார்கள்.
94) சரி ஒருவர் இறந்து போனதும் அடுத்த பத்து மணி நேரத்துக்குள் கர்மாக்களை துவங்க முடியவில்லை. வெளி ஊர்களில் உள்ள மரணம் அடைந்தவருடைய புத்திரன் அல்லது முக்கிய உறவினர்கள் வந்தே ஆக வேண்டும். அதற்க்கு முன்னாள் காரியங்களை துவக்கக் கூடாது என்கின்ற நிலை. வெளி ஊர்களில் வசிக்கும் அவர்கள் வந்து சேர குறைந்தபட்ஷம் இருபது மணி நேரம் ஆகும்.ஆகவே காலையில் இறந்தவரது காரியங்களை மறுநாள்தான் துவக்க முடியும். அந்த நிலையில் என்ன செய்வது?
95) முக்கியமான கர்த்தாக்கள் வரும்வரை இறந்தவர் உடலை குளிர்சாதன பெட்டி அல்லது ஐஸ் மீது வைத்து இருப்பது தற்காலத்தில் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. அது சரியா அல்லது தவறா என்பது கேள்வி. உதாரணமாக காலையில் ஆறு மணி அளவில் ஒருவர் மரணம் அடைந்து விட்டாலும் முக்கியமானவர்கள் வந்து சேரும்வரை இறந்தவர் உடலை தகனம் செய்ய முடியாமல் நேரம் நகர்ந்து கொண்டே இருக்கிறது.
மாலை ஐந்து மணிக்கு மேல்தான், அல்லது மறுநாள் காலையில்தான் தகனம் செய்ய முடியும் என்ற நிலைமை. அது பத்து மணி நேரத்துக்கும் அதிகமாகி விடுகிறது அல்லவா. அப்படி என்றால் என்ன செய்வது? பத்து மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டால் சாஸ்திர நம்பிக்கையின்படி உடலில் இருந்து வெளியேறிய ஆத்மாவை தீய ஆத்மாக்கள் சூழ்ந்து கொள்ளாதா என்ற கேள்வி எழலாம் .
96) சாஸ்திர விதிகளில் இது பற்றிய விளக்கம் கிடையாது. பத்து மணி நேரத்துக்கும் அதிகமாக உடலை வைத்திருந்தால் இயற்கையின் விளைவாக அதன் உடலில் தீய கிருமிகள் தோன்ற வாய்ப்பு உள்ளது, அது நோய்களை பரப்பும், அது மட்டும் அல்லாமல் அந்த இடத்தில் துற நாற்றமும் வீசத் துவங்கும் என்பதினால்தான் கர்மாவைத் துவக்க பத்து மணி நேர அவகாசம் மட்டுமே கொடுத்துள்ளார்கள் என்பது விஞ்ஞான அடிப்படையின் ஒரு உண்மையாகும். அதை ஆன்மீக போர்வை போர்த்தி தந்துள்ளார்கள். காரணங்கள் இல்லாமல் இந்த நியதிகளை வைத்திருக்கவில்லை என்பது தெளிவு.
97) சாஸ்திரத்தில் இரவு 9.30 மணிக்கு முன்னால் இறந்தவரை தகனம் செய்து விட வேண்டும் என்பது மட்டுமே விதியாக இருந்தது. அதே சமயத்தில் பத்து மணி நேரத்துக்கும் அதிகமாகி விட்டது என்ற நிலையில் உள்ளவர்கள் தகனம் செய்யக் கிளம்பும் முன் அந்த சவத்தை பசுவிடம் இருந்து பெறப்படும் ஐந்து புனித திரவ்வியங்களைக் கொண்டு தயாரிக்கும் பஞ்சகவ்யம் எனும் கலவையைக் கொண்ட தண்ணீரால் குளிப்பாட்டிய பின்னரே தகனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விதியும் இருந்தது.
சிலர் அதை சவத்தின் மீது புரோஷணம் செய்வார்கள். பஞ்சகவ்யம் என்பது பசுவின் சாணம், மூத்திரம், பால், பாலில் எடுத்த நெய், பாலில் செய்த தயிர் – போன்றவற்றைக் கொண்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கலவை ஆகும்.
தேவலோகப் பசு காமதேனு,
அதனுள் வசிக்கும் தேவர்கள்
98) பஞ்சகவ்யம் எனும் கலவையைக் கொண்டு குளிப்பாட்டிய பின்னரே தகனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறப்பட்டதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது. விஞ்ஞான ஆராய்வில் பஞ்சகவ்யம் கிருமி நாசினி என்றும், இறந்தவர் உடலில் உள்ள கிருமிகளை அவை நாசம் செய்து விடும் என்றும் கூறுகிறார்கள். பசு என்பது காமதேனுப் பசுவின் சந்ததி என்பதினால் பசுக்கள் தெய்வத்துக்கு சமமானவை,
அதன் ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு தேவர்கள் அமர்ந்துள்ளனர் என சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ளது. பசுவின் மூத்திரத்தில் வருணன் வசிக்கிறார், சாணத்தில் அக்னி வசிக்கிறார், தயிரில் வாயுவும், பாலின் சந்திரனும் மற்றும் நெய்யில் சூரியனும் வசிக்கிறார்கள். அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து பஞ்சகவ்யம் செய்யப்படும்போது காயத்ரி மந்திரத்தை ஓதியே ஒன்று சேர்க்க வேண்டுமாம்.
ஆகவே அத்தனை சக்தி வாய்ந்த பஞ்சகவ்யம் கலந்த நீரைக் கொண்டு சவத்தைக் குளிப்பாட்டும்போது அதில் இருந்து வெளிவரும் அந்தந்த தெய்வங்களின் கணங்கள் அங்குள்ள தீய ஆத்மாக்களை விரட்டி அடிக்குமாம். இப்படியாக சாஸ்திரங்கள் அந்த சடங்கை நியாயப்படுத்தி உள்ளார்கள். ஆகவே இறந்தவருக்கு கர்மா செய்ய பத்து மணி நேரத்துக்கும் அதிகமாகி விட்ட நிலையில் பஞ்சகவ்யம் கொண்டு அந்த உடலை குளிக்க வைத்தாலோ அல்லது புரோஷணம் செய்தாலோ தகனத்துக்கு பத்து மணிக்கும் மேலாகி விட்ட நிலையில் அங்குள்ள தீய கணங்களை பஞ்சகவ்யம் துரத்தி விடும் என்பது நம்பிக்கை.
99) மரணம் சம்பந்தமான வைதீக காரியங்களை அபர காரியம் அதாவது அசுப காரியம் என்று பண்டிதர்கள் கூறுவார்கள். பரம்பொருள் என்றால் அழிவற்ற நிலையான ஜீவன் என்பது பொருள் ஆகும். அதற்கு எதிர்மாறான அபரம் என்பது நிலையற்ற அழியும் தன்மை கொண்ட ஜீவனைக் குறிக்கும். அதனால்தான் அபர காரியம் என்பது இறந்து போன பிரேத கர்மம் அல்லது நீர்த்தாருக்கு செய்யும் கடன் என்பதினால் அசுபமான காரியம் என்பதாகக் கருதுகிறார்கள். அதையே சாஸ்திரமும் கூறுகிறது.
இறந்தவர்களுக்கு பன்னிரண்டு நாட்கள் செய்யப்படும் கர்மா என்பது தஹனம் முதல் பன்னிரண்டாம் நாளன்று நடைபெறும் கர்மாக்கள் ஆகும். ஆனால் அந்த கர்மாக்களின் தொடர்ச்சியாக பதிமூன்றாம் நாளன்று செய்யப்படும் கிரேக்கியம் என்பது குடும்பத்தினரின் துயரத்தை நீக்கிக் கொள்ள செய்யப்படும் சுபஸ்வீகாரம் ஆகும். அதாவது அபார காரியம் சுப காரியத்துடன் முடிவடைகிறது. அதன் பின் மரணம் அடைந்தவரது ஜீவன் பிதுர்லோகத்தில் தெய்வமாகிவிட்ட அவருக்கு முன் இறந்த ஏழு தலைமுறையினரின் குடும்பத்தினரிடமும் போய் சேர்கிறது என்பது ஐதீகம் .
100) ஒரு மனிதன் இறந்த பிறகு அவருடைய ஆன்மா இறைவனை அடைய வேண்டும் என்பதற்காகவும், பிதுர்லோகத்தில் உள்ள அவருக்கு முன் இறந்த ஏழு தலைமுறையினரின் குடும்பத்தினருடன் சேர்ந்து சாந்தி அடைய வேண்டும் என்பதற்காகவும்தான் இந்தக் பன்னிரண்டு நாள் காரிய சடங்குகள் செய்யப்படுகின்றன.
அந்த கர்மாக்கள் நடக்கும் காலத்தில் சாதாரணமாக வீடுகளில் அடுப்பை மூட்ட மாட்டார்கள். அங்கு சமைக்க மாட்டார்கள் என்பார்கள். முதல் பத்து நாட்களும் உறவினர்கள் வீடுகளில் இருந்துதான் சாப்பாடு வரும். இதற்கு விஞ்ஞான காரணம் கிடையாது என்றாலும் இந்த நியதி வைக்கப்பட்டு உள்ளதற்கு ஒரு அடிப்படை காரணம் இருந்துள்ளது.
101) பண்டைக் காலங்களில் முதல் நாளில் இருந்து அடுத்த பத்து நாட்களும் நதிக்கரையில் சென்று கல் ஊன்றிய இடங்களில் காரியங்களை செய்ய வேண்டி வரும். ஆகவே அந்த காரியம் முடிக்கப்பட்டு வீட்டிற்கு வரும்வரை வீட்டில் உள்ளவர்களால் சமைக்க முடியாது. இந்த காலத்தில் செய்யப்படும் சடங்குகளைப் போல அல்லாமல் பண்டை காலங்களில் கர்மாவை செய்து முடித்து விட்டு வர பல மணி நேரம் ஆகும்.
அதற்கு காரணம் அதில் பல நியதிகளை வைத்திருந்தார்கள்.
சடங்குகளை முடித்து விட்டு வீடு வந்தப் பின் மீண்டும் குளித்து விட்டுதான் அடுப்பை மூடிவிட்டு சமையல் செய்ய முடியும். அதற்கும் அதிக நேரம் ஆகும். வீடுகளில் குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை இருந்தால் அவர்களால் அத்தனை நேரம் பட்டினியுடன் இருக்க முடியாது.
ஆகவே உறவினர்கள் சாப்பாட்டைக் கொண்டு வந்து வைத்தார்கள். ஆகவே அதுவே மனிதாபிமான அடிப்படையில் வைக்கப்பட்டு உள்ள சடங்காகி விட்டதே தவிர இதற்கு வேறு விஞ்ஞான ரீதியிலான காரணம் இருப்பதாகத் தெரியவில்லை.
102) இதற்கு ஒரே ஒரு ஆன்மீக அடிப்படையிலான காரணம் மட்டுமே உள்ளது. பண்டை காலங்களில், அடுப்பை மூட்டி சமைத்ததும் சிறிதளவு சாதத்தை அடுப்பில் போட்டு அக்னிதேவருக்கு தரப்படும் நைவித்தியமாக’ கருதினார்கள். அதாவது அக்னிதேவரை ஆராதிக்கும் ஒரு பூஜைப் போன்ற சடங்கு ஆகும். இன்றும் சில வீட்டில் இதைக் கடைபிடிக்கிறார்கள்.
பண்டை காலத்தில் வீடுகளில் தற்காலத்தைப் போல மின் அடுப்புக்களும், எரிவாயு (காஸ்) அடுப்புக்களும் இல்லாத நிலையில் விறகுகளைப் போட்டு நெருப்பு பற்ற வைத்து சமையல் செய்து வந்தார்கள். ஆகவே இறந்தவரது வீடுகளில் அந்த ஜீவன் வீட்டைவிட்டு வெளியேறும்வரை, மயானத்தில் விறகுகளை வைத்து தகனம் செய்ததைப் போல, வீட்டில் விறகு எரிக்கக் கூடாது, அடுத்த பன்னிரண்டு நாட்கள் கர்மாக்களை முடிக்கும்வரை, வேறு எந்த தெய்வீக பூஜையையும் செய்யக் கூடாது என்பதை வெளிப்படுத்தும் விதமாக சாஸ்திர ரீதியில் இந்த நியமத்தை வைத்துள்ளார்கள்.
தொடரும்
''Acknowledgement: மேலுள்ள மூல கட்டுரையை எழுதிய ஆசிரியர் 'சாந்திப்பிரியா'விற்கு (https://santhipriya.com/) நன்றி''