திருவாய்மொழி ஈட்டில் சரணாகதி பற்றிய கேள்வி & பதில்கள்
சரணாகதி என்றால் என்ன?
நம் முயற்சியால் எதுவும் முடியாது என்பதை உணர்ந்து, பெருமானே கதி! எனது பாரத்தை அவர் மீது வைக்கிறேன், எனது கர்மவினைகளை (பாவம் & புண்ணியம்) போக்கி என்னை வைகுந்தம் கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும், எனக்கு நித்யகைங்கர்யத்தை கொடுத்தருள வேண்டும். ஒரு ஆசாரியன் மூலமாக நாம் இந்த சரணாகதியை செய்ய வேண்டும்.

சரணாகதியின் தத்துவத்தை பெருமானே அவரது மூன்று அவதாரங்களில் நமக்கு உபதேசித்துள்ளார். கூர்ம அவதாரம், ராமாவதாரம் மற்றும் கிருஷ்ணா அவதாரம்.

ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம்
ஸ்திதே மனஸி ஸூ ஸ் வதே சரீரே சதி யோ நர |
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபஞ்ச மா மஜம் ||

ததஸ்தம் ம்ரியாம்நாம் து காஷ்ட்ர பாஷாணாம் சன்னிபம்|
அஹம் ஸ்மராமி மத்பக்தம் ந்யாயாமி பரமாம் கதிம்||

ஸ்ரீ இராமாயண சரம ஸ்லோகம்
ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ் மீதி ஸ யாசதே|
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் யேதத் வ்ரதம் மம யுத்த || 18.33

ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம் (பகவத் கீதை)
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ|
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச ||18.66

இதேபோல் நமது ஆழ்வார்களும் & ஆச்சார்யர்களும் இதனை நமக்கு உபதேசித்து உள்ளனர். ஸ்வாமி ராமானுஜர் இந்த தத்துவத்தை நமக்கு உணர்த்த சரணாகதி கத்யம் இயற்றியுள்ளார்.

திருவாய்மொழிக்கு பல வியாக்கியானங்கள் இருந்தாலும் ஸ்வாமி நம்பிள்ளை ஈடு வியாக்கியானமே மிகவும் தலைசிறந்ததாகப் போற்றப்படுகின்றது.

திருவாய்மொழியில் ஒன்பதாம்பத்து பத்தாவது பதிகத்தில் ஆழ்வார் திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் குறித்து சரணாகதி செய்ய “பெருமான் நம்மாழ்வாருக்கு மரணம் ஆனால் வைகுந்தம் கிடைக்கும் என்றார்!”

சரணமா கும்தன தாளடைந் தார்க்கெலாம்,

மரணமா னால்வைகுந் தம்கொடுக் கும்பிரான்,

அரணமைந் தமதிள் சூழ்திருக் கண்ணபுரம்,

தரணியா ளன்,தன தன்பர்க்கன் பாகுமே

( (திருவாய்மொழி 9.10.5)
திருவாய்மொழி ஈட்டில் சரணாகதி பற்றிய ஐந்து கேள்வி & பதில்கள்
ஏன் மரணமானால் தான் வைகுந்தம் கிடைக்கும்? ஏன் உடனே கிட்டாது? என்பது பற்றி ஒரு ஐந்து கேள்விகள் நம்பிள்ளை ஈட்டில் வியாக்கியானம் கூறியுள்ளார்!

மரணமாகிய அனைவருக்கும் வைகுண்டம் கிட்டுமா?
வேதம் மற்றும் வேதாந்தங்களில் பல ஜென்மங்கள் எடுத்து கர்மங்களை தொலைந்தால்தான் மோக்ஷம் கிட்டும் என்று சொல்கிறது! ஆனால் நம்மாழ்வார் மரணமானால் வைகுந்தம் கிட்டும் என்கிறார். அதாவது இந்த ஜென்மத்தின் முடிவிலேயே வைகுந்தம் கிட்டும் என்று சொல்கிறாரே? இரண்டும் ஒன்றுக்கு ஒன்று எதிராக இருக்கிறதே?
ஏன் மரணமாகும் வரை காத்திருக்க வேண்டும்? ஏன் சரணாகதி செய்த உடனே மோக்ஷம் கிட்டாது? என்ன காரணம்?
இவ்வுலகில் 99% மக்கள் சரணாகதி செய்வதில்லை! சரணாகதி செய்தவருக்கும் செய்யாதவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக தெரியவில்லையே? சரணாகதி செய்தவர்களுக்கு வித்தியாசம் பெருமாள் காட்ட வேண்டாமா?
சரணாகதி என்பது ஒரு நாள் விஷயமல்ல, வாழ்நாள் முழுவதும் பெருமானை அடிபணிந்து அந்த நினைவுடன் வாழ வேண்டும்! கடைசி காலத்தில் நினைவு தப்பி, படுத்தபடுக்கையாக தன்னிலை மறந்து இருக்கும்பொழுது எப்படி நினைப்பது?
கேள்வி – 1:

1. மரணமாகிய அனைவருக்கும் வைகுண்டம் கிட்டுமா?charanagathi“சரணமாகும் தனதாள் அடைந்தார்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்”

எந்த அடியவர்கள் பெருமான் திருவடிகளை சரணடைந்து, சரணாகதி செய்கிறார்களோ, அவர்களுக்கு பெருமான் வைகுந்தம் கொடுப்பார். யார் அந்த அடியவர்கள்?

1)தன்னுடைய முயற்சியை விடுத்து பெருமாளே நீதான் எனக்கு கதி என்று தம் பாரத்தை பெருமானின் திருவடிகளில் வைத்து எவர் சரணாகதி செய்கிறார்களோ! அவர்களுக்கு பெருமாள் வைகுண்டம் கொடுப்பார். பெருமாளை தவிர எனக்கு வேறு கதி ஏதும் இல்லை என்று இருக்கும் அடியவர்கள்.

2)மரணம் அடையும் தருணம் நமக்குத் தெரியாது! அதனால் சரணடைந்த காலத்திலிருந்து பெருமான் முகமலர்ச்சிக்காக அவருக்கு கைங்கர்யம் வாழும் அடியவர்கள்.

3)சரணடைந்த நொடியிலிருந்து சரீரம் விழும் வரை பெருமானின் அருளை நோக்கி, அவர்மேல் திட விசுவாசம் வைத்து வாழும் அடியவர்கள்.

கேள்வி – 2:
வேதம் மற்றும் வேதாந்தங்களில் பல ஜென்மங்கள் எடுத்து கர்மங்களை தொலைந்தால்தான் மோக்ஷம் கிட்டும் என்று சொல்கிறது! ஆனால் நம்மாழ்வார் மரணமானால் வைகுந்தம் கிட்டும் அதாவது இந்த ஜென்மத்தின் முடிவிலேயே வைகுந்தம் கிட்டும் என்று சொல்கிறாரே? இரண்டும் ஒன்றுக்கு ஒன்று எதிராக இருக்கிறதே?

Charama_2 இதில் வேதம் சொல்வது பொய்யா? அல்லது ஆழ்வார் சொல்வது பொய்யா?

இரண்டுமே உண்மைதான். வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஞான யோகமோ/ கர்ம யோகமோ/ பக்தி யோகமோ கொண்டு தங்கள் வினைகள் தீர்த்துக் கொள்ள பெருமானின் அருளைப் பெற முயற்சி செய்யும் அடியார்கள்! தங்களது முயற்சியை கொண்டு கர்ம/ ஞான/ பக்தி யோகங்களை மூலம் கருமங்களை தொலைக்க முயற்சி செய்பவர்கள்.

நம்மாழ்வார் குறிப்பிடுவதோ சரணாகதி செய்த ப்ரபன்னனை. என் முயற்சியால் எதுவும் முடியாது பெருமாளே உனது திருவடியில் சரணடைகிறேன் நீயே எனக்கு கதி என்று சரண் அடைந்த அடியார்களை குறிப்பிடுகின்றார். இதே கருத்தை கண்ணன் கீதையில் சரம ஸ்லோகத்தின் மூலம் விளக்கியுள்ளார்.

“ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச:”

“நீ உனது முயற்சியால் கர்ம, ஞான, பக்தி யோகங்களை கொண்டு துளைப்பதைவிட என்னிடம் சரணடைந்தால், உனது கர்மங்களை போக்கி உனக்கு முக்தி அளிக்கிறேன்”

நாம் நமது சொந்த முயற்சியால் கர்மங்களை போக்க நினைப்பது வேதங்களில் சொன்ன மார்க்கம். ஆழ்வார் என்ன மார்க்கம் – நம்மால் எதுவும் முடியாது என்று பெருமானின் திருவடியில் தஞ்சமடைந்து சரணாகதி செய்தால் அவர் நமது கர்மங்களைத் போக்குவார்.

நம் முயற்சியால் எத்தனை ஜன்மங்கள் ஆகும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் பெருமானிடம் சரணாகதி அடைந்தால் இந்த ஜென்மத்திலேயே மோக்ஷம் கிடைக்கும். அதாவது கருமங்களை போக்கும் நமது பாரத்தை பெருமானிடம் வைத்து விட வேண்டும்.

“கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே”

ஸ்வாமி ராமானுஜரும் இதே தத்துவத்தை தனது வேதார்த்த சங்கரமத்தில் குறிப்பிட்டுள்ளார். கர்மாவை போக்கும் கார்யத்தை பெருமானிடம் ஒப்படைத்து சரணாகதி செய்தால் இந்தப் பிறவியின் முடிவில் மோட்சம் கிட்டும் என்பதே நம்மாழ்வாரின் வாக்கு

கேள்வி-3:
ஏன் மரணமாகும் வரை காத்திருக்க வேண்டும்? ஏன் சரணாகதி செய்த உடனே மோக்ஷம் கிட்டாது? என்ன காரணம்?

Charangathi_3 புராணங்களில் சில உதாரணங்கள் உள்ளதே சரணாகதி செய்த உடனே மோட்சம் பெற்றதாக!

உதாரணங்கள்
1. கருட புராணத்தில் மாதவி என்பவள் சரணாகதி செய்தால், உடனே முக்தி அடைந்தார் என்று கூறப்படுகிறது!
2. விஷ்ணு தர்மம் என்கின்ற சாஸ்திரத்தில் நரகத்தில் இருப்பவர்கள் நாராயண நாமம் கேட்டு அதன் மூலம் மோக்ஷம் அடைந்ததாக கூறப்பட்டுள்ளதே!
3. தொண்டரடிப்பொடியாழ்வார் ” நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க நரகமே சுவர்க்கமாகும் நாமங்கள் உடைய நம்பி” குறிப்பிடுகிறார்!

நம்மை வைத்திருக்க வேண்டும் என்று சர்வேஸ்வரன் நினைக்கிறாரா! அவர் காரணமா?
நம் கர்மவினைகளை இதற்கு காரணம்! அவரவர் செய்த கர்மங்களை கழித்து அதன் பின்னர் மோக்ஷம் அடைகிறார்கள்.

சரணாகதி அடைந்த உடனே கர்மங்களை போக்கி விடுகிறேன் என்று கீதையில் கூறியுள்ளாரே? ஏன் கர்மங்கள் உடனே தொலையாதா?

பதில்கள்:
1. சரணாகதி செய்த உடனே உயிர் பிரிந்து விடும் என்றால் நாம் அவனிடம் சரணாகதி செய்ய அருகில் வர மாட்டோம்! இது ஒரு விஷம் கலந்த குளம்போல் ஆகிவிடும்!

2. சரணாகதி செய்வதை நாம் வாழ்க்கையின் இறுதிக்கு தள்ளி போட்டு விடுவோம்! உயிர் பிரியும் நாள் நமக்கு எப்போது என்பது தெரியாது!

3. பீஷ்மரை போல்! ஆழ்வார்கள் & ஆசாரியன்களை போல்! சரணாகதி செய்த பின்னர் சிறிது காலம் அடியார்கள் இருந்தால் அவர்கள் மூலம் மேலும் நமக்கு பயன்கள் நமக்கு கிட்டும், மேலும் பலர் செய்வார்கள் திருந்துவார்கள்!

4. யஜுர் வேதத்திலே சரணாகதி செய்த பின்னர் இருக்கும் இறுதி சரீரத்தை பெருமான் விரும்புகிறார். நாம் பல பிறவிகள் பல ஜென்மங்கள் எடுத்து இருந்தாலும், இந்த பிறவியில் தான் சரணாகதி செய்வதால் இந்த சரீரத்தின் மீது பெருமானுக்கு அன்பு ஏற்படுகிறது! சரணாகதி செய்த பின்னர் இந்த நமக்கு கைங்கரியம் செய்யட்டும் என்ற அன்பு “இதற்கு உதாரணம்தான் திருவரங்கம் கோயிலில் இருக்கும் எம்பெருமானார் சன்னதி“

5. சரணாகதி செய்தவுடன் உயிர் பிரிந்து விட்டால் இது சரணாகதிக்கு நமது உடலை பலி கொடுத்தால் போல் ஆகிவிடும். இதர தேவதைகள் பலி கொடுப்பதை வைத்து பிரதிபலன் கொடுக்கிறார்கள்! நாராயணனோ நம்மிடம் நாம் எதையும் கொடு அதற்குப் பிரதிபலனாக மோக்ஷம் தருகிறேன் என்று கூற மாட்டார்!

இந்த காரணங்களால் நாம் இன்றே ஒரு ஆசார்யண் மூலம் சரணாகதி செய்ய வேண்டும். சரணாகதி செய்தவர்கள் மேன்மேலும் கைங்கர்யம் செய்ய வேண்டும்

கேள்வி-4:

இவ்வுலகில் 99% மக்கள் சரணாகதி செய்வதில்லை! சரணாகதி செய்தவருக்கும் செய்யாதவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக தெரியவில்லையே? சரணாகதி செய்தவர்களுக்கு வித்தியாசம் பெருமாள் காட்ட வேண்டாமா?question-4

உலகில் கிடைக்காத ஒரு பொருள் கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்? அதைப் போன்று தானே சரணாகதி. நமது சரீரம் கீழே விழுந்தவுடன் நமக்கு வைகுந்தம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சரணாகதி செய்யப்படுகிறது. இப்படி ஒரு உபாயம் கிடைத்த அடியார்களை விட சரணாகதி செய்யாதவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதைப் போல் தெரிகிறது!

சரணாகதி செய்வது இந்த உடலின் மேல் விரக்தி ஏற்பட்டு பெருமானின் திருவடியில் சரணடைந்து என்றும் நித்திய கைங்கரியம் பெறவேண்டும் என்ற பிரார்த்தனையில் சரணாகதி செய்யப்படுகிறது எனவேதான் இந்த சரீரம் விழுந்தவுடன் வைகுண்டப்பிராப்தி கிடைக்கும்.

1. சரணாகதி செய்தவுடன் இந்த சரீரத்திற்கு மேலும் இன்பங்கள் கிடைக்குமென்றால், செய்தவர்கள் சரீரத்தின் மேல் பற்று கொண்டு விடுவார்கள். உடலின் மீது விரக்தி பிறக்க வேண்டும் என்பதற்காகவே சிறு கஷ்டங்களை அனுபவிக்கும் போல் தெரிந்தாலும் அவரது கைங்கர்யத்தில் ஈடுபட்டு வாழ்ந்தால், நமக்கு வைகுந்தம் கிடைக்கும். இன்பங்கள் அதிகரித்தால் எப்படி உடலின்மீது விரக்தி பிறக்கும்?

“நம்மாழ்வார் அதனால்தான் தன்னை என்று வைகுண்டம் கொண்டு செல்லப் போகிறார் என்று கதறுகிறார்”

2. உடலின் மீது பற்று ஏற்பட்டு இன்பங்களை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டால், நாம் ஏன் இன்னும் ஒரு பிறவி எடுத்து இன்னும் பல இன்பங்களை அனுபவிக்கக் கூடாது என்று எண்ணங்கள் தோன்றலாம்! சரணாகதியின் முக்கியமான தத்துவமே “பெருமாளின் திருவடியை அடைந்து, முக்தி பெற்று இந்த சரீரத்தில் இருந்து விடுபட்டு மறு பிறவி என்னும் சுழற்சியிலிருந்து வெளிவர வேண்டும் என்பதே!”

3. சரீரத்தின்மேல் இன்பத்தை ஏத்தி வாழ்நாளை நீட்டித்தால் இது சரணாகதி தத்துவத்திற்கு எதிராக அமைந்து விடும். அந்தப் பழியும் பெருமாள் மீது சொல்லிவிடுவார்கள்.

4. சரணாகதி செய்யும் போது சரீரத்தில் இருந்து விடுபட்டு முக்தி அடைய வேண்டும் என்று பிரார்த்தித்தேன் ஆனால் உடலில் இன்பங்கள் உயர்த்தி, வாழ்நாளை நீட்டிக்க செய்து விட்டாயே என்று கூற தோன்றும்!

மேலே சொன்ன காரணங்களால்தான் சரணாகதி செய்தவுடன் உடலின் மீது விரக்தி பிறக்கவேண்டும். ஆழ்வார் திருவாய்மொழியில் கூறியுள்ளது போல் இந்த குடும்ப சுழற்சியிலிருந்து விடுபட வேண்டும்!
“கொண்டபெண்டிர்மக்களுற்றார் சுற்றத்தவர்பிறரும்” – (திருவாய்மொழி 9.9.1)

கேள்வி-5:

சரணாகதி என்பது ஒரு நாள் விஷயமல்ல, வாழ்நாள் முழுவதும் பெருமானை அடிபணிந்து அந்த நினைவுடன் வாழ வேண்டும்! கடைசி காலத்தில் நினைவு தப்பி, படுத்தபடுக்கையாக தன்னிலை மறந்து இருக்கும்பொழுது எப்படி நினைப்பது?

Charanagathi_5
காஷ்ட பாஷாணங்கள் (काष्ठं पाषाणम)போல் விழுந்து கிடக்கும் போது என்ன செய்வது? – காஷ்ட(काष्ठं – Kāṣṭhaṁ) என்றால் கட்டை போலும், பாஷாணம் (पाषाणम -pAShANamn) என்றால் கல் போலும், நினைவு தப்பி விழுந்து கிடக்கும் நிலையில் பெருமாளை நினைக்க முடியாதே என்ன செய்வதே?

பதில்:1
1. வராஹ சரம ஸ்லோகத்தில் இதற்கான பதில் சொல்லப்பட்டுள்ளது –
“ததஸ்தம் ம்ரியாம்நாம் து காஷ்ட்ர பாஷாணாம் சன்னிபம்|
அஹம் ஸ்மராமி மத்வக்தம் ந்யாயாமி பரமாம் கதிம்||”

வராஹ்பெருமாள் பூமாதேவிக்கு தானே கூறும் விளக்கம்:
என்னை பிறப்பு அற்றவனாக நன்கு உணர்ந்து, மனது நல்ல முறையிலும், உடலில் சக்தி இருக்கும்போது
1) எவன் என்னுடைய திருநாமத்தை உரக்க தினமும் சொல்லுகிறானோ
2) எவன் என்மேல் விஸ்வாசம் கொண்டு என் திருவடியிலே புஷ்பங்களை இட்டு அர்ச்சனை பண்ணுகிறானோ
3) அவனது முயற்ச்சியை விட்டு என்னை மட்டுமே உபாயம் என பற்றி என்னுடைய திருவடியிலே ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகிறானோ (சரணாகதி) அவனுக்கு:
அந்திம காலத்தில் அவன் கட்டை மாதிரி கிடக்கும் போது (காஷ்ட்ர பாஷாணாம் சன்னிபம்!), எல்லாரும் கை விட்ட நிலையில்! பெருமாள் சொல்லறார், நான் கைவிடமாட்டேன்! (அஹம் ஸ்மராமி மத்பக்தம் )

அந்த காலத்தில் என் நாமத்தை சொல்ல வில்லை என்றால் நான் அவனை கை விடுவேனா?
சரணாகதி பண்ணிய நாளிலிருந்து நினைவு தப்பும் வரை என்னை நினைத்து இருந்தான், அவனை விட்டு விடுவேனா?

சரணாகதி செய்த அடியார் (மறந்தும் புறந்தொழா மாந்தர்) என்னுடைய பக்தன், என் பெயரை சொன்னவன், என்னுடைய திருவடியில் சரணாகதி பண்ணினவன், அவனை நான் ஒரு நாளும் கை விட மாட்டேன்..

நானே வருவேன், என்னுடன் அர்சிராத்ரி மார்கத்தில் வழித்துனையாக (வழித்துனை பெருமாள் – திருமோகூர்) அழைத்துக்கொண்டு வைகுந்தம் சென்று (ந்யாயாமி பரமாம் கதிம்) நித்ய கைங்கரியத்தை கொடுத்து அருளுவேன்

பதில்-2:
எம்பெருமானார் திருக்கச்சி நம்பிகள் மூலமாக வரதராஜ பெருமாளிடம் கேட்ட ஆறு வார்த்தைகளில் ஒன்று – “அந்திம காலத்தில் பெருமாளை நினைத்தால்தான் வைகுந்தம் கிட்டுமா?
தேவாதி ராஜனும் இதற்கு சரணாகதி செய்து என் மேல் திட விஸ்வாசம் கொண்டிருக்கும் அடியார்களை கடைசி காலத்தில் என்னை நினைக்காவிட்டாலும் வைகுந்தம் கொடுப்போம்!

இதிலிருந்து நாம் அறியும் விஷயம் என்னவென்றால் கடைசி காலத்தில் அவர் நம்மை நினைக்க வேண்டும் (அஹம் ஸ்மராமி மத் பக்தம்) என்றால்- சரணாகதி செய்த பின்னர் நாம் அவரை எப்பொழுதும் (நினைவு தப்பும் வரை) நினைத்து இருக்க வேண்டும்! கைங்கர்யத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும்!

ஶ்ரீமதே இராமானுஜாய நம ஹா: பிரபந்த வியாக்கியானத்தில் கேட்டது!