Manakkal Nambi Vaibhavam | மணக்கால் நம்பி வைபவம்
மணக்கால் நம்பி வைபவம்
திருநக்ஷத்திரம் : மாசி “மகம்”

தனியன்கள் :

அநுஜ்ஜி தக்ஷமாயோக மபுண்யஜநபாதகம் |
அஸ்ப்ருஷ்டமதராகம் தம் ராமம் துர்யமுபஸ்மஹே ||

[(பரசுராமனைப் போல்) பொறுமையை (பூமியை) விடாதவராய், (ராமனைப் போல்) புண்யஜனங்களை (ராக்ஷஸர்களை) பாதிக்காதவராய், (பலராமனைப் போல்) மதுபானமதம் இல்லாதவரான நாலாவது ராமனை (மணக்கால் நம்பியை) உபாசிக்கிறோம்].

பகவத்பக்திதுக்தாப்தி க்ருதகாடாவகாஹநம் |
நிர்முக்ததாபத்ரிதயம் ஸ்ரீராமம் ஸரணம் ஸ்ரயே ||

[பகவத் பக்தியாகிர பாற்கடலில் குடைந்தாடப் பெற்றவராய் (அதனால்) ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம், ஆதிபௌதிகம் என்னும் மூன்று தாபங்களும் நீங்கப்பெற்றவரான ஸ்ரீராமன் என்னும் மணக்கால் நம்பியை ஆச்ரயிக்கிறேன்.

திருநக்ஷத்திர தனியன் :

கும்பமாஸே மகோத்பூதம் ராமமிஸ்ரமுபாஸ்மஹே |
புண்டரீகாக்ஷ பாதாப்ஜ சமாஸ்ரயண ஸாவிதம் ||

கும்ப (மாசி) மதம் மகம் நக்ஷத்திரத்தில், உய்யக்கொண்டார் என்னும் ஆச்சார்யரின் திருவடித் தாமரைகளில் தஞ்சமடைந்த ராமமிஸ்ரரை (மணக்கால் நம்பி) வணங்குகிறேன்.

நாதமுனி தொடக்கமாக இருக்கும் ஓராண் வழி ஆசார்யர்கள் வரிசையில் மூன்றாவதாக வீற்றிருப்பவர் மணக்கால் நம்பி என்பவர் ஆவார். உய்யக்கொண்டாருடைய பிரதான சிஷ்யரான "ஸ்ரீராமமிஸ்ரர்" என்னும் பேருடைய மணக்கால் நம்பி, உய்யக்கொண்டார் என்னும் ஆசார்யர் அவதரித்து 43 வருடங்களுக்குப் பின்பு (கி.பி.929) விரோதி வருஷத்திலே மாசி மாதம் மகம் நக்ஷத்திரத்திலே ஸுக்ல பக்ஷம் சதுர்த்தசி கூடிய புதன் கிழமையில் காவேரிக்கரையில், லால்குடிக்கு அருகில் மணக்கால் என்னும் கிராமத்தில் பிராம்மண குலத்தில் குமுதாக்ஷர் என்னும் நித்யஸுரியின் அம்சமாக அவதரித்தவர்.

இவர், தம் ஆச்சார்யர் உய்யக்கொண்டார் நியமனப்படி (உத்தரவு), நாதமுனிகளின் பேரனான ஆளவந்தாரைத் திருத்திப் பணிகொண்டு, அவருக்கு "ரஹஸ்யத்ரய"த்தையும், திவ்யப்ரபந்தங்களையும் அவற்றின் அர்த்த விசேஷங்களையும், பவிஷ்யதாசார்ய விக்ரஹம் அளித்தருளினார். பவிஷ்யதாசார்ய விக்ரஹம் - ஸ்ரீ ராமானூஜரின் திவ்யமங்கள விக்ரஹம் - இது ஸ்ரீ ராமானுஜர் அவதரிப்பதற்கு முன்னமேயே, அவர் அவதாரம் நிகழப்போவதை ஞானத்தால் உணர்ந்த நம்மாழ்வார், அவரது விக்ரஹத்தை நாதமுனிகளிடம் கொடுத்தது).

மணக்கால் நம்பி 12 வருடங்கள் ஆசார்யனைப் பிரியாது அவருக்குக் கைங்கர்யங்கள் (தொண்டு) புரிந்துவந்தார். இவர், தன் ஆசார்யரான உய்யக்கொண்டாரின் துணைவியார் பரமபதித்த பின்னர், அவர் வீட்டு காரியங்களையும் சேர்த்து செய்து வந்தார். ஒருநாள் தம் ஆசார்யரின் பெண் குழந்தைகள் இருவரையும் நீராட்டி அழைத்து வரும்போது, வழியில் வாய்க்கால் சேறாக இருந்ததனால், அதைக் கடப்பதற்குக் குழந்தைகள் தவித்தனர். இதைப் பார்த்து மணக்கால் நம்பி, அந்தச் சேற்றில் படுத்துக் கிடந்து, தம் முதுகில் அக்குழந்தைகளை அடிவைத்துத் தாண்டும்படி செய்தார். இப்படி, குழந்தைகளின் கால்கள் சேற்றில் படாதபடி அருளியதால், அந்தக் குழந்தைகளின் மணல் படிந்த கால்கள் இவர் மீது பதிந்ததால், இவர் “மணக்கால் நம்பி” என்று உய்யக்கொண்டாரால் திருநாமம் இடப்பட்டு சிறப்பிக்கப்பட்டார். அதே சமயம் இவர் பிறந்த ஊரும் "மணக்கால்" என்னும் கிராமமாகும். இதை வைத்துப் பார்த்தாலும், இவர் மணக்கால் நம்பி என்று பெயர் கொண்டது பொருத்தமாக உள்ளது. இதை அறிந்த உய்யக்கொண்டார், "இப்படியும் செய்ததே" என்று மிகவும் கொண்டாடித் தம் திருவடிகளை அவர் முடிமேல் வைத்து அனுக்ரஹித்தார் (ஆசீர்வாதம் செய்தல்) . மேலும், "உமக்கு என்ன செய்யவேண்டுவது?" என்று கேட்டார். நம்பியும் அதற்கு, "உற்றேன் உகந்து பணிசெய்து உனபாதம் பெற்றேன், ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்" (நம்மாழ்வார், திருவாய்மொழி, "திருமாலிருஞ்சோலை" பதிகம், 10.8.10) என்று பிரார்த்தித்தார். அதாவது, ஆழ்வார் இப்படிப் பாட எது காரணம் என்று கேட்டால், எம்பெருமான் ஆழ்வார் தனக்குச் செய்யும் அடிமைத் தொழிலால் மகிழ்ந்து, அவர் முன் தோன்றி என்ன வேண்டும் கேளும் தருகிறோம் என்று கூற, ஆழ்வார் மேலும் மேலும் கைங்கர்யங்கள் புரிந்து, ஆனந்தமயமான உன் திருவடித் தாமரைகளில் எப்போதும் லயித்திருக்கவேண்டும் என்பதைத் தவிர அடியேன் வேண்டுவதற்கு வேறு என்ன உள்ளது? என்று பதில் அளித்தார்.

அதேபோல், மணக்கால் நம்பி செய்த கைங்கர்யத்தை அறிந்த உய்யக்கொண்டார் அவரிடம் உமக்கு நாம் ஏதாவது செய்யவேண்டும்; கேளும் என்று கூற, நம்மாழ்வார் அருளிய மேற்பாசுரத்தை எடுத்துரைத்து, அடியேன் உமக்கு மேலும் மேலும் கைங்கர்யங்கள் புரியும் பாக்கியத்தை அருளவேண்டும் என்று பிரார்த்தித்தார்.

பின்னர், உய்யக்கொண்டார் பரமபதத்திற்கு எழுந்தருளும்போது, மணக்கால் நம்பி அவரிடம், உமக்குப் பின்னர் இந்த குரு பரம்பரையை அலங்கரிக்கப் போவது யார் என்று கேட்க அதற்கு உய்யக்கொண்டார், நம்பியைப் பார்த்து நீரே அதற்குத் தகுதியானவர் என்றும், உமக்குப்பின் ஸ்ரீமந் நாதமுநனிகளுக்குப் பேரனாக அவதரிக்கப் போகும் ஆளவந்தாரை ஆசார்யராக நியமிக்கும்படி உபதேசித்து அருளினார்.

குலசேகர ஆழ்வார் அருளிய பெருமாள் திருமொழி என்னும் ப்ரபந்தத்திற்குத் ("ஆரம்கெடப் பரனன்பர்".....) தனியன் அருளியவர் ஆவார் மணக்கால் நம்பி.

மணக்கால் நம்பி வாழி திருநாமம்:

தேசம் உய்யக் கொண்டவர்த்தாள் சென்னிவைப்போன் வாழியே
தென்னரங்கர் சீர் அருளைச் சேர்ந்திருப்போன் வாழியே
தாசரதி திருநாமம் தழைக்கவந்தோன் வாழியே
தமிழ் நாதமுனி உகப்பைத் தாபித்தான் வாழியே
தேசமுடன் ஆரியனை நியமித்தான் வாழியே
நீணிலத்தில் பதின்மர்கலை நிறுத்தினான் வாழியே
மாசிமகந்தனில் விளங்க வந்துதித்தான் வாழியே
மால்மணக்கால் நம்பிபதம் வையகத்தில் வாழியே.

மணக்கால் நம்பி திருவடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.