ஸ்ரீமந்நாதமுனிகள் திருநக்ஷத்திர தனியன் :
ஜ்யேஷ்டமாஸே த்வநுராதே ஜாதம் நாதமுநிம் பஜே |
ய: ஸ்ரீஸடாரே ஸ்ருதவான் ப்ரபந்தமகிழம் குரோ ||
ஆனி அனுஷத்தில் அவதரித்தவராய், ஆசார்யரான நம்மாழ்வாரிடமிருந்து எல்லா திவ்யப்ரபந்தங்களையும் கெட்டவரான நாதமுனிகளிடம் பக்தி செய்கிறேன்.
ஸ்ரீமதுரகவிகள் அருளிய கண்ணிநுண்சிறுத்தாம்பு பிரபந்தத்தை 12000 முறை ஒரேமுகமாக நம்மாழ்வாரின் திரு முன்பு ஜபிக்க, நம்மாழ்வாரும் இவரது வைராக்கியத்தில் உகந்து, நாலாயிர திவ்யப்ரபந்தங்களை ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு உபதேசித்து அவரைக் கடாக்ஷித்தார் என்றும், நாதமுனிகளும் தாம் நம்மாழ்வாரிடமிருந்து பெற்றுக்கொண்ட ஸ்ரீஸுக்திகளை அகிலத்தோர் அனைவரும் அறியும் வண்ணம் பரப்பி, வைணவம் தழைத்தோங்கி வளர செயற்கரிய கைங்கர்யங்களைச் செய்தார் என்பதை முன்பகுதியில் அனுபவித்தோம். இதைப் போற்றும் வண்ணம் மணவாள மாமுனிகள் உபதேசரத்தினமாலையில்,
தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர்
அருளிச்செயலை அறிவார் ஆர் - அருள்பெற்ற
நாதமுனி முதலான நம் தேசிகரை அல்லால்
பேதைமனமே உண்டோ பேசு.
(பாசுரம் 36) என்று பாடியுள்ளார்.
பாசுர விளக்கம்: அறிவற்ற மனமே! யதார்த்த ஞானிகளான ஆழ்வார்களின் பெருமையை அறிபவர்கள் யார்? அவர்கள் அருளிச்செய்த திவ்ய ஸ்ரீஸுக் திகளை பெருமையை அறிபவர்கள் யார்? நம்மாழ்வாரால் போர கடாக்ஷிக்கப்பட்ட ஸ்ரீமந்நாதமுனிகள் முதலாக உள்ள நம் ஆசார்யர்களைத் தவிர வேறு யாரேனும் உளரோ? ஆராய்ந்து சொல்வாயாக!
ஆழ்வார்களின் நாலாயிர திவ்யப் பிரபந்தங்களை ஒருசேர நம்மாழ்வாரிடமிருந்து பெற்றுக்கொண்டாலும், அவற்றை ஒவ்வொரு ஆயிராமாகப் பிரித்து, ஒவ்வொன்றிற்கும் ஏற்ற சந்தங்களை அமைத்து அதன் ஆழ்ந்த உட்பொருள்களையும் ஓராண்வழியாய் தன் சீடரான உய்யக்கொண்டாருக்கு உபதேசித்தவர் ஸ்ரீமந்நாதமுனிகள்.
நாதமுனிகள் தேவகானத்தை விளக்குதல் :
ஒரு சமயம் வீரநாராயணபுர தேசத்து மன்னன் ராஜேந்திர சோழன் சபையில் இரண்டு தேவதாசிகள் மனித கானத்தையும், தேவ கானத்தையும் தம் தம் காணமே சிறந்ததென்று விவாதித்து இசைவல்லுநர்களை அழைத்துப் பாடினர். அந்த சபையில் தேவகானத்தை எவரும் அறிந்திறாமையால், மனித கானம் பாடினவர் பெருமைபடுத்தப்பட்டார். தேவகானம் பாடின அப்பெண் வீரநாராயணபுரம் வந்து மன்னனாரைத் தரிசித்து அவர்முன் தேவகானத்தாலே பாட, நாதமுனிகள் அவளை மிகவும் கொண்டாடினார். உடனே, அவள் அந்தச் சோழனிடம் சென்று தேவகானம் அறிந்தவர் நாதமுனிகள் என்னும் விஷயத்தைத் தெரிவித்தாள். உடனே அரசன் பல்லாக்கு முதலியவற்றை அனுப்பி நாதமுனிகளை அரசவைக்கு அழைத்தான்.
"தேவகானத்தை தேவரீர் அறிந்தவர் என்பதை நாங்கள் எப்படி அறிவது எப்படி?" என்று அரசன் நாதமுனிகளிடம் கேட்க, நாதமுனிகளும் நூறு தாளங்களை ஒரே சமயத்தில் தட்டச்செய்து அவற்றின் ஓசை நயத்தாலே தனித்தனியே ஒவ்வொரு தாளத்தின் எடையைச் சொன்னார் அரசனும் அவற்றை எடைபோட்டுப் பார்த்து, எடையில் கூடுதல் குறைதல் இல்லாமையைக் கண்டு நாதமுனிகளுக்கு வெகுமதிகள் பல கொடுக்க விரும்பினான் நாதமுனிகள் அவற்றை வேண்டாமென்று சொல்லி, வீரநாராயணபுரத்திற்குத் திரும்பிவந்து வழக்கப்படி பெருமாளுக்குக் கைங்கர்யங்களைச் செய்துகொண்டு யோகத்தில் ஆழ்ந்திருந்தார். நாதமுனிகளின் யோக நிலையைப் பற்றி கேள்விப்பட்ட ராஜா, தானும் தன் மனைவியுமாக அவரை ஸேவித்துவிட்டுத் திரும்பினான். அப்போது யோக நிலையிலிருந்து விழித்த நாதமுனிகள் வந்துபோன அரச தம்பதிகளைக் கண்ணனும் கோபியருமாகக் கருதி, அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். இதனை அறிந்த அவர் சிஷ்யர்களான உய்யக்கொண்டார், குருகைக் காவலப்பன் முதலானோர் தேற்றித் திரும்ப அழைத்து வந்தனர்.
மற்றொரு சமயம் மன்னனாரை ஸேவிக்க வந்த அரசன் தனது மெய்க்காவலர் தலையின் மீது அடிவைத்து யானையின் மேல் ஏறுவதைப் பார்த்து நாதமுனிகள், "ஸ்ரீமந் நாராயணன் பிரம்மா, உருத்திரர் (சிவன்) முதலானோரின் தலையில் அடியிட்டு கருட வாகனத்தில் ஏறுவதுபோல் உள்ளதே!" என்று யோசித்தார். சிலகாலங்களுக்குப் பிறகு, நாதமுனிகள் யோக ரஹஸ்யத்தைக் குருகைக் காவலப்பனுக்கு உபதேசித்தார் உய்யக்கொண்டார், "பிணம் கிடக்க பணம் புனரலாமோ? என்று அதை ஏற்க மறுத்து, சாஸ்த்ரார்த்தங்களையும், திராவிட வேதங்களையும் நாடும் நகரமும் நன்கறியப் பரப்பினார் நாதமுனிகளுக்கு எட்டு சிஷ்யர்கள். அவர்களுள் குருகைக் காவலப்பனும் உய்யக்கொண்டாரும் முதன்மையானவர்கள்.
நாதமுனிகள் சிஷ்யர்களுக்கு இட்ட ஆணை :
முன்னர் ஸ்ரீரங்கத்தில் திருமங்கை ஆழ்வார் காலம் தொடங்கி நடந்து வந்த அத்யயன உத்சவம் எனப்படுகின்ற "திருவாய்மொழித் திருநாள்" (இராப்பத்து உத்சவம்) வெகுகாலமாகவே, அதாவது, ஆழ்வார்கள் ப்ரபந்தம் வழக்கத்திலிருந்த காலம் முதலாகவே நின்று போயிருந்தது. அதை நாதமுனிகள் ஆரம்பித்துவைத்து மேலும் மற்றைய ஆழ்வார்களின் பிரபந்தங்களையும் நம்பெருமாள் திருச்செவி சாத்தியருள வேண்டுமென்று (காதில் கேட்கவேண்டுமென்று) பகல் பத்து உத்சவத்தையும், இராப்பத்து சாற்றுமறைக்கு மறுநாள், இயற்பா சாற்றுமறை ஒருநாள் உத்சவத்தையும் ஆரம்பித்து, இன்று வரையும் அத்யயன உத்சவமானது வெகு விமரிசையாக 21 நாட்கள் நடந்துவரும்படி ஏற்பாடு செய்தருளினார்.
நாதமுனிகள் தம் குமாரரான ஈஸ்வர முனிகளைப் பார்த்து, "உனக்கு ஒரு குமாரன் பிறப்பான்; அவனுக்கு யமுனைத்துறைவன் என்று பெயரிடும்" என்று நியமித்தார். உய்யக்கொண்டாரை அழைத்து, நாம் உமக்கு உபதேசித்த அர்த்தங்களையெல்லாம் யமுனைத்துரைவருக்கு உபதேசிக்க வேணும் என்று நியமித்தார். மேலும் யமுனைத்துரைவருக்கு ரகஸ்யத்தை உபதேசிக்கும்படி குருகைக் காவலப்பனுக்கும் நியமனம் செய்தார்
சில நாட்கள் கழிந்ததும், ஒருநாள் வேட்டையாடிவிட்டுச் சேனையோடு ராஜா வந்துபோக, அதனை யோகத்திலிருந்து மீண்ட நாதமுனிகளிடம் அவருடைய பெண்கள், "ஐயா! நம் அகத்துக்கு ஒரு குரங்கும் இரண்டு வில்லிகளும் ஒரு பெண்பிள்ளையுடன் வந்து, "நாதமுனிகள் எங்கே என்று தேடிப்போனார்கள்!" என்று கூறினார்கள் நாதமுனிகளும் அவர்களை அநுமானும் இராம லக்ஷ்மணர்களும் சீதையுமாக பாவித்து, வழியாரக் கேட்டுக்கொண்டே சோழபுரம் வரை சென்றார் அங்குள்ளோரைக் கேட்டபோது, நாங்கள் அப்படி யாரையும் காணவில்லையே என்று கூறினார். இருந்தாலும், நாதமுனிகளின் முன் அவர்கள் மூவரும் (இராமன், சீதை, லக்ஷ்மணன்) தோன்றித் தோன்றி மறைந்ததால், நாதமுனிகள் கீழே விழுந்து மூர்ச்சித்து பரமபதித்து அருளினார்.
திருவரங்கத்தமுதனார் அருளிய இராமானுச நூற்றந்தாதியில் (பாசுரம் 20) நாதமுனிகள் புகழுரைக்கும் பாசுரம் :
"ஆரப்பொழில் தென்குருகைப்பிரான் அமுதத்திருவாய்
ஈரத்தமிழின் இசை உணர்ந்தோர்கட்கு இனியவர்தம்
சீரைப் பயின்று உய்யும் சீலங்கொள் நாதமுனி"யை நெஞ்சால் \
வாரிப்பருகும் இராமானுசன் எந்தன் மாநிதியே.
பாசுர விளக்கம் : சந்தனச் சோலைகளை உடைய அழகிய திருக்குருகூரிலே அவதரித்த மஹோபகரரான ஆழ்வாருடைய பரமபோக்யமான திருப்பவளத்தில் பிறந்த ஈரச்சொல்லாகிய திருவாய்மொழியின் இசையை அறிந்தவர்களுக்கு இஷ்டமாயிருப்பவர்களுடைய குணங்களை அப்யசித்து (தியானித்து, ஜபித்து) ஸத்தைப்பெறும் (ஞானத்தைப் பெறும்) சீலத்தை உடையவரான நாதமுனிகளை தம் திருவுள்ளத்தாலே அபிநிவேசத்தோடு அனுபவிக்கின்ற எம்பெருமானார் (இராமானுசர்) எனக்கு அக்ஷயமான திதி.
ஸ்ரீபராசர பட்டர் அருளிய ஸ்ரீரங்கராஜஸ்தவம் (1-6) :
நௌமி நாதமுநிம் நாம ஜிமுதம் பக்த்யவக்ரஹே |
வைராக்ய பகவத் தத்த்வ ஜ்ஞாந பக்த்யபிவர்ஷுகம் ||
விளக்கம் : பக்தியாகிற மழைநீர் பெய்யாமலிருந்த பஞ்ச காலத்தில் வைராக்யம், எம்பெருமானைப் பற்றிய ஜ்ஞாநபக்திகள் ஆகியவற்றைப் பொழியும் ஸ்ரீமந்நாதமுனிகள் என்னும் கார்முகிலைத் துதிக்கிறேன்.
ஸ்ரீதேசிகன் அருளிய யதிராஜஸப்ததி (ஸ்லோ.5)
நாதேச முநிநாதேச பவேயம் நாதவாநஹம் |
யஸ்ய நைகமிகம் தத்தவம் ஹஸ்தாமவகதாம் கதம் ||
விளக்கம் : வேதாந்த விழுப்பொருளான பரப்ரஹ்மம் கையிலங்கு நெல்லிக்கனியாயிற்றோ! அந்த முனிவர் தலைவரான நாதமுனிகளாலே அடியேன் நாதன் உடையவனாகக் கடவேன்.
திவ்யப்ரபந்தங்களில், திருப்பல்லாண்டுக்கு "குருமுகமநதீத்ய ப்ராஹ வேதாநஸேஷாந்" என்று தொடங்கும் தனியனையும், "கண்ணிநுண் சிறுத்தாம்பு"க்கு "அவிதிதவிஷயாந்தரஸ்ஸடாரே" மற்றும் "வேறொன்றும் நானறியேன்" என்று தொடங்கும் தனியன்களும், திருவாய்மொழிக்கு "பக்தாம்ருதம் விஸ்வஜநாநுமோதனம்" என்று தொடங்கும் தனியனும் அருளியவர் ஸ்ரீமந்நாதமுனிகள்.
ஸ்ரீமந்நாதமுனிகள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.