வைஷ்ணவ : வைஷ்ணவ தத்துவம்
இதற்கு பிரமாணம் பிருஹதாரண்யக உபநிஷத்து
''பச்சைமாமலைப்போல் மேனி
பவளவாய் கமலச்செங்கன்
அச்சுதா வமரரேறே யர்தம்
கொழுந்தோ வென்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திரலோகமாளும்
அச்சுவைபெறினும் வேண்டேன்!''
நூல்கள் : நாலாயிர திவ்ய பிரபந்தம், பஜகோவிந்தம்,
கோவில் : காஞ்சிபுரம், அயோத்யா, துவாரகை, மதுரா, திருப்பதி, திருவரங்கம், திருபெருமந்தூர் உட்பட108 பாடல்பெற்ற திருத்தலங்கள்.
இந்து சமயத்தில் மும்மூர்த்திகளாகக் கருதப்படும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரில் விஷ்ணுவை முழு முதற் கடவுளாகக் கருதும் சமயம் வைணவம் அல்லது வைஷ்ணவம் என்று அழைக்கப்படும். விஷ்ணு உலகில் பத்து அவதாரங்களாக அவதரித்தார் என்பது வைணவ நம்பிக்கை. உபநிடதங்களில் பதின்மூன்று வைணவ உபநிடதங்களாகும். பன்னிரு ஆழ்வார்கள் வைணவ சமயம் பற்றித் தமிழிற் பாடியுள்ளனர்.
இராமானுஜர் பரப்பிய வைணவ தத்துவத்தில் ஆதிப்பரம் பொருள் நாராயணன் என்ற விஷ்ணுவே. அவன்தான் உபநிடதங்கள் கூறும் பிரம்மம். அவன் குணம் என்ற குன்றேறித் தாண்டியவன் என்று உபநிடதங்கள் கூறுவதன் உட்பொருள் அவனிடம் எல்லா நல்ல குணங்களும் இருக்கின்றன என்பதாம். அறம், ஞானம், சக்தி, அன்பு இவை யாவும் முடிவிலாத அளவுக்கு அவனிடம் உள்ளன. அவன் உயிரினங்களிடம் வைத்திருக்கும் அபார கருணையினால் அவ்வப்பொழுது அவதரித்து இடர் போக்கி தன்னுடன் சேர்ந்துகொள்ள வழி வகுக்கிறான். பிரம்மமும் ஜீவனும் உயிரும் உடலும் போல. ஜீவர்களனைவரும், மற்றும் பிரபஞ்சமனைத்தும் பிரம்மத்தின் உடலாகும்.
"யோ விஞ்ஞானே திஷ்டன், விஞ்ஞானாதந்தர:, யம் விஞ்ஞானம் ந வேத யஸ்ய விஞ்ஞானம் சரீரம் யோ விஞ்ஞானமந்தரோ யமயதி ஏஷ ஆத்மா அந்தர்யாம்யம்ருத:."
இதன் பொருள்: எவன் அறிவுக்குள் உறைபவனோ, அறிவுக்குள் அறிவாக இருப்பவனோ, எவனை அறிவும் அறியமுடியாதோ, எவனுக்கு அறிவே உடலோ, எவன் அறிவையும் உள்ளிருந்து ஆட்டிவைப்பவனோ அவன்தான் இவ்வான்மா, அழியாமல் உள்ளுறைபவன்.
உயிரும் உடலும் வெவ்வேறானதால் பிரம்மத்திற்கு தன்னுள் வேற்றுமை (ஸ்வகத பேதம்) உண்டு. ஆனால் வேறு வேற்றுமைகள் கிடையா. பிரம்மத்திற்கு சமானமான வேறு உண்மைகள் இல்லை. அதனால் பிரம்மத்தினிடத்தில் ஸஜாதீய பேதம் என்று கூறப்படும் பகுப்புக்குள்ளிட்ட வேற்றுமை கிடையாது. பகுப்புக்கும் பகுப்புக்கும் உள்ள வேற்றுமையும் (விஜாதீய பேதம்) கிடையாது; ஏனென்றால் வேறு ஒரு பகுப்பு அறவே இல்லை. இதனால் இதுவும் ஒருவித அத்வைதம் (இரண்டற்றது) தான். பிரம்மத்தினிடம் குணம் என்ற தன்மை உள்ளதா இல்லையா என்ற ஒரு ஆழமான பிரச்சினையின் இருவேறு விடைகள் தான் இதை அத்வைதக் கோட்பாட்டிலிருந்து வேறுபடுத்துகிறது. அதனால் இராமானுஜரின் இக்கோட்பாட்டிற்கு விசிஷ்டாத்வைதம் (விசிஷ்டமான அத்வைதம்) என்று பெயர். விசிஷ்டம் என்றால் சிறப்புற்ற என்று பொருள்
ஸ்ரீ: விசிஷ்டாத்வைதத்தில் ஸ்ரீ என்ற அன்னை தத்துவம் மையத்திலுள்ளது. இதனால் தான் இந்த சமயப் பிரிவுக்கே ஸ்ரீவைஷ்ணவம் என்ற பெயர். இராமானுஜருடைய எல்லா நூல்களிலும் (முழுவதும் வேதாந்தக் கடலிலேயே நீந்துகிற ஸ்ரீபாஷ்யத்தைத் தவிர) ஸ்ரீ என்ற மகாலட்சுமி, விஷ்ணுவின் மார்பில் அவருடன் என்றும் இருப்பதாகவே பேசப்படும். யாண்டும் கூட இருப்பவள் என்று பொருள்படும் அனபாயினி என்ற வடமொழிச் சொல்லை அடிக்கடி காணலாம். இராமானுஜருக்குப் பின் வந்தவர்கள் அன்னை ஸ்ரீயின் அருள் இல்லாமல் கடவுளிடம் நம் வேண்டுதல் செல்லாது என்பர்.
வைணவத்தில் மோட்சம்
படைத்தல் ஒரு மாயையல்ல, அது கடவுளின் ஒரு உண்மையான செய்கை. உலகப்பொருள், ஜீவன், ஈசன் ஆகிய மூன்று தத்துவங்களும் மூன்று படிகளிலுள்ள உண்மைகள். கீழ்ப்படியிலுள்ள பொருள் அறிவற்றது. ஜீவன் அறிவுள்ளது. ஆனால் இரண்டும் கடவுளுடைய எள்ளத்தனை பாகமே. மனிதனுடைய புலன்கள் கீழ்ப்படியில் உறையும் பொருள்களின் பலவித சேர்க்கையே. ஜீவர்கள் இப்புலன்களின் உந்துதலாலும் உதவியாலும் பொருள்களை அனுபவிக்கின்றன. அவர்களுடைய முந்தைய பிறவிகளில் செய்த தீவினை, நல்வினையை யொட்டி அவர்களுக்கு பயன்களைக் கொடுத்து ஆள்பவன் ஈசன். மோட்சம் என்பது ஈசனான நாராயணனுடன் வைகுண்டத்தில் வசிப்பதே. ஈசனுடன் ஐக்கியமாவதல்ல. அங்கு ஜீவர்களின் தனித்துவம் மறைவ தில்லை. பிறவிப் பெருங்கடலைக் கடப்பது என்பது மட்டுமே மோட்சம். மோட்சத்தை அடைவதற்கு கடவுளின் அருள் தேவை. இவ்வருளைப் பெறுவது தன்னலமற்றதும் தன்னை மறந்ததுமான பக்தியாலும் சரண்புகுதலாலும் தான் முடியும்.
வைணவத்தில் கடவுள்
இறைவனுக் கெல்லாம் இறைவன் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் நாராயணன் என்ற மந்திர நாமமுடைய மகாவிஷ்ணுவும் இராமர், கிருஷ்ணர் உள்பட அவருடைய பல அவதாரங்களும். அவர்தான் திருமூர்த்திகளில் மற்ற இருவர்களான பிரம்மனையும் சிவனையும் படைத்தவர். யாவற்றையும் மீறிய பரம்பொருளாயிருந்தாலும் அவரே தன்னை சிலைகளில் கட்டுப்படுத்திக் கொண்டு அர்ச்சாவதாரமாக கோயில்களில் காட்சியளிக்கிறார். இவைகளை வணங்குவதே அவரை அடைய எளிதான வழி. மாந்தரனைவருக்கும் தாயும் தந்தையுமாக இருக்கும் அவரை சுலபமாக அடையலாம் என்பதை கிருஷ்ணராக அவதரித்தபோது தன்னுடைய லீலைகளால் காண்பித்தார். திவ்யப் பிரபந்தங்களில் இச்சுவையை நிறைய ருசிக்கலாம். ஆண்டவனின் இச்சுலபத்தன்மை தான் வைணவத்தின் சிகரமான மதச்சாதனை.
வைணவ ஆச்சாரியர்கள்
புராண காலத்திலேயே தொடங்கிய ஸ்ரீவைஷ்ணவம், ஆழ்வார் காலத்துப் பிரபந்தங்களில் பெருமை பெற்றது. ஒன்பதாவது நூற்றாண்டில் இப்பிரபந்தங்கள் நாதமுனிகள் என்பவரால் தேடி ஒருங்கிணைக்கப்பட்டு புத்துயிர் பெற்றது. அதனால் நாதமுனிகளே தற்கால ஸ்ரீவைஷ்ணவத்தின் முதல் ஆச்சாரியாராகக் கருதப்படுகிறார்.
சுந்தரசோழர் என்ற இரண்டாம் பராந்தகன் (956-973) காலத்தில் அன்பில் கிராமத்தைச் சேர்ந்த வைணவ ஆச்சாரியர் ஸ்ரீநாதர் என்பவருக்கு மான்யம் கொடுக்கப்பட்டதாக ஒரு செப்பேடு ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ளது. இந்த ஸ்ரீநாதர் நாலாயிரப் பிரபந்தங்களை பாடமாகவே நடத்தி ஸ்ரீரங்கம் கோயிலில் உற்சவங்களில் சேவை செய்தாராம். இவர் தான் நாதமுனிகளாக இருக்கலாம் என்ற அபிப்பிராயமும் உள்ளது. ஸ்ரீரங்கம் கட்டுரை
நாதமுனிகளுக்குப்பிறகு ஆச்சாரிய பதவியில் வந்தவர்களில் சரித்திரப் பிரசித்தி பெற்றவர்கள் மூவர். இராமானுஜர், வேதாந்ததேசிகர், பிள்ளை லோகாச்சாரியர். வேதாந்த தேசிகர் தென்னிந்தியாவின் வைணவத்தின் வடகலைப் பிரிவின் முதல் ஆச்சாரியராகவும், பிள்ளை லோகாச்சாரியர் தென்கலைப் பிரிவின் முதல் ஆச்சாரியராகவும் போற்றப்படுகிறார்கள்.
வைணவ பிரிவு : வடகலையும் தென்கலையும்
தமிழ்ப் பிரபந்தங்களை வேதங்களாகவே மதிக்கவேண்டும் என்பது இராமானுஜரின் போதனை. அதனால் வேதங்கள், உபநிடதங்கள் இவைகளுக்கு பதிலாகவே பிரபந்தங்களை வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு கருத்து தலை தூக்கியது. இரு நூற்றாண்டுகளில் இந்த விதைக்கருத்து கொழுந்துவிட்டு மரமானபோது அது வைணவத்தையே இரு பிரிவுகளாக்கிவிட்டது. இப்படி ஏற்பட்டது தான் வடகலையும் தென் கலையும். தமிழ்ப் பிரபந்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது தென்கலை. வடகலையாருக்கு முக்கிய நகரமாக காஞ்சீபுரமும், தென்கலையாருக்கு ஸ்ரீரங்கமுமாக இருந்ததே அவர்கள் அப்படி அழைக்கப்பட்டதற்குக் காரணம். காஞ்சீபுரத்தில் வடமொழிப் புலவர்களின் நடமாட்டம் அதிகம். ஸ்ரீரங்கமும் அதன் சுற்றுவட்டாரமும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்.
இதைத்தவிர தத்துவ ரீதியாகவும் இருபிரிவுகளுக்கும் கருத்து வேறுபாடுகள் வேரூன்றின. ஆண்டவனின் அருள் யாருக்குக் கிடைக்கும்? சுயமுயற்சியுடன் ஆண்டவனை வழிபடுபவனுக்கா, அல்லது, ஆண்டவன் விட்ட வழி விடட்டும் என்று சுயமுயற்சியையும் கைவிட்டவனுக்கா? இரண்டாமவனுக்குத் தான் என்பது தென்கலை வைணவர்கள் கொள்கை. இக்கொள்கையை பூனை விதி என்பர். ஏனென்றால் பூனைக்குட்டியை தாய்ப்பூனை கவ்வி எடுத்துச்செல்கிறது. பூனைக்குட்டி சுயமாக முயற்சி ஏதும் செய்வதில்லை. ஆனால் குரங்குக் குட்டியோ தானே தாய்க் குரங்கைக் கவ்விக் கொள்கிறது. வடகலை வைணவக் கொள்கை இதுதான். சுயமுயற்சியால் தான் ஆண்டவனின் அருளைப்பெற முடியும் என்பர். சுயமுயற்சி என்பது இவ்விடத்தில் பக்தியும் பிரபத்தியும்.
வடகலையார் ஸ்ரீயாகிய மகாலட்சுமியை நாராயணன் என்ற மலரிலிருந்து பிரிக்கமுடியாத அதன் மணமாகக் கொள்வர். அதனால் ஸ்ரீயும் மோட்சத்தைக் கொடுக்கக் கூடியவள். தென்கலையாருக்கோ ஸ்ரீயும் ஒரு ஜீவன் தான்; ஆனால் முக்கியமான ஜீவன். ஆண்டவனிடம் நமக்காகப் பரிந்து பேசக்கூடிய ஜீவன்.
மதக்கோட்பாட்டு வல்லுனர்கள் வடகலைக்கும் தென்கலைக்கும் 18 வேறுபாடுகள் சொல்வர். ஒரு சராசரி வைணவனுக்கு இந்த வேறுபாடுகள் பொருளற்றவை. ஒரே பரம்பொருளான ஸ்ரீமந்நாராயணனிடம் அளவு கடந்த பக்தியும், இராமானுஜர் சொல்லியபடி எல்லா ஜீவர்களிடமும் காட்ட வேண்டிய அன்புமே அடிப்படை வைணவ லட்சணமாகும்.
வைஷ்ணவ ஆகமங்கள்
வைஷ்ணவ ஆகமங்கள் 2 ஆகும். இவை,
1) பாஞ்சராத்திரம், 2) வைகானசம் என்பனவாகும்.
விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் வைஷ்ணமாகும். இந்து மதத்தவரில் பெரும்பாண்மையோரால் பின்பற்றப்படும் சமயமும் இதுவாகும்.சைவரை எவ்வாறு மிளிரும் திருநீறு அடையாளம் காட்டுகிறதோ அவ்வாறே வைஷ்ணவரை திருநாமாம் உணர்த்துகிறது. விஷ்ணுவை முத்தொழில்களுள் காத்தல் தொழிலையும் புரியும் தெய்வம் எனக் குறிப்பிடுவதுண்டு. விஷ்ணு என்னும் பொருள் எங்கும் பரந்து இருப்பவன் என்பதாகும். ஆகவே கடல், வானம் என்று உலகெங்கும் வியாபித்துள்ள நீல நிறத்தை அவனுடைய நிறமாகக் கருதுவது சாலப் பொருத்தமானது. இதன் பொருட்டே கார்மேக வண்ணன் என வர்ணிக்கப்படுகிறான்.
பாற்கடலின் நடுவே ஆதிசேஷன் யோக நித்திரைழ்ந்திருந்தவாறே திருமால் நமக்கு பல்வேறு தத்துவ விளக்கங்களை அருள்கிறாள். ஊழிக்கால் முடிவினிலே அண்டங்களெல்லாம் ஒடுங்கிய நிலைக்கு வருவதை பாற்கடல் விளக்குகிறது. அப்போது அண்டங்கள் அனைத்திற்கும் சுகமாக இருக்க திசக்தி என்னும் திருமாலே. ஆதிசேஷன் என்னும் பாம்பு ஐந்து தலையையுடையவனாகவும் இருக்கிறான்.இது பஞ்ச பூதங்களை குறிக்கிறது. திருமாலின் யோக நித்திரையானது அறிதுயில் என்னும் தூங்காத்துயில் என்றும் பொருள் உணர்த்தப்படுகிறது.
சித்தர்கள் இதனை, 'தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது' என்பார்கள். அந்நிலையிலிருந்தவாறே உலகனைத்தையும் காத்துக் கொண்டிருக்கிறார். திருமாலின் நாபிக் கமலத்தின்று உருவானவர் நான்முகன் பிரம்மா. பஞ்ச பூதங்கள், உயிர்கள், இயற்கை அனைத்துக்கும் தோற்றுவாயிலாக அமைந்துள்ளது பிரம்மாவின் தோற்றம்.
திருமாலின் நான்கு திருக்கரங்களுள் சங்கை ஏந்திய கை. இறைவன் பிரணவப் பொருள் என்பதை உணர்த்துகிறது. மற்றக்கை உள்ள தர்ம சக்கரம் அல்லது அறிவாழியைக் கொண்டு உலகனைத்தையும் காத்துக் கொண்டு வருகிறார் திருமால்.அறம் செய்கின்றவர்களை காப்பாற்றியும் கேடு செய்கின்றவர்களை தண்டித்தும் வருகின்றது. இவ்வறவாழி திருமாலே காலச்சொரூபம் எனபதை உணர்த்த ழியை காலச்சக்கரம் எனச் சொல்வதும் உண்டு. மற்ற இரண்டு கைகளிலுள்ள கதையும், கமலமும் அறிவின் தோற்றங்களாகிய வல்லியல்பு, மெல்லியல்பை உணர்த்துகின்றன. துன்பம் வழங்கும் வல்லியல்பானது, முன்னேற்றத்தை வழங்குகிறது.
இதை உணர்த்த கதையும், இனிமையின் வடிவினை தரும் மெல்லியல்பை உணர்த்த கமலமும், திருமாலின் கையில் விளங்குகின்றன. இவ்வாறு உலகெங்கும் நீக்கமற வீற்றிருக்கும் விஷ்ணுவை பற்பல பெயர் கொண்டு அழைக்கின்றனர்.
நாராயணன் : தன்னிடத்தினின்று தோன்றி வந்த உலகில் வீற்றிருப்பவன்.
கோவிந்தன் : சீவன்களின் நிலையை அறிபவன்.
பரமாத்தமன் : பிரபஞ்சத்துக்கு அப்பால் உள்ளவன்.
கேசவன் : மும்மூர்த்தி வடிவினன்
என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுப்படுவதுண்டு.
விஷ்ணு வழிபாடானது திகாலந் தொட்டே இருந்து வந்ததாயினும் இதிகாச புராண காலத்தின் (கி.மு 600 - கி.பி 200) போது வளர்ச்சி பெற்றதுள்ளது. இக்காலத்தில் தோன்றிய இதிகாசங்களான மகாபாரதம், இராமாயணம் என்பன.
விஷ்ணுவின் அவதாரமாக இராமன், கிருஷ்ணன்-- விஷ்ணுவையே முழுமுதற்கடவுளாக கொண்டு எழுதப்பட்டன. மேலும் விஷ்ணுவை நோக்கி நோற்க்கபடும் விரங்களில் ஏகாதசியும், கிருஷ்ண ஜெயந்தியும் முக்கியமானவை. இன்றும் இவை உலகெங்கும் பெருவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
சைவத்தில் நாயன்மார் போன்று வைஷ்ணவத்தில் பொய்கைழ்வார், பூதத்ததாழ்வார் முதலிய பன்னிரு ஆழ்வார்கள் இறைவனை வணங்கி பேறு பெற்றனர்.
''பச்சைமாமலைப்போல் மேனி
பவளவாய் கமலச்செங்கன்
அச்சுதா வமரரேறே யர்தம்
கொழுந்தோ வென்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திரலோகமாளும்
அச்சுவைபெறினும் வேண்டேன்!''
நூல்கள் : நாலாயிர திவ்ய பிரபந்தம், பஜகோவிந்தம்,
கோவில் : காஞ்சிபுரம், அயோத்யா, துவாரகை, மதுரா, திருப்பதி, திருவரங்கம், திருபெருமந்தூர் உட்பட108 பாடல்பெற்ற திருத்தலங்கள்.