இரவு நேரத்தில் ஆகாயத்தில் அதிகமான நட்சத்திரங்களைக் காண்கிறாய்; ஆனால், சூரியோதயமானதும் அவைகள் தென்படுவதில்லை.
ஆதலால், பகற்பொழுதில் ஆகாயத்தில் நட்சத்திரங்களே இல்லையென்று சொல்லலாமா? மனிதனே! உனது அஞ்ஞான காலத்தில் நீ கடவுளைக் காண முடியாததனால், கடவுளே இல்லையென்று சாதிக்காதே.
2. ஆழமான கடலில் முத்துக்கள் இருக்கின்றன. ஆனால், அவைகளை எடுப்பதற்கு ஒருவன் எல்லாவிதமான ஆபத்துக்களுக்கும் துணிய வேண்டும்.
கடலிம் ஒரு முறை மூழ்கியதில் உனக்கு முத்துக்கள் அகப்படாது போனால், அக்கடலில் முத்துக்களே இல்லை என்று தீர்மானித்து விடாதே. அடிக்கடி முழுகு;
கடைசியில் உனக்குப்பலன் கிடைக்கும். உலகில் கடவுள் தரிசனமும் அப்படிப்பட்டதுதான். அவரைக் காண வேண்டுமென்று நீ செய்யும் முதல் பிரயத்தன்ம் பயனற்றதாகுமானால் நீ அதைரியப்படக் கூடாது. அம்முயற்சியில் இன்னும் சிரமப்படு. கடைசியில் நீ கடவுளைக் காண்பாய்.
3. மனிதர்கள் தலையணையைப் போன்றவர்கள். ஒன்று சிவப்பாயும், மற்றொன்று நீலமாயும், வேறொன்று கருப்பாயுமிருந்த போதிலும், அவைகளினுள்ளிருக்கும் பஞ்சு ஒன்றே.
அதுபோலத்தான் மனிதனும் ஒருவன் பார்வைக்கு அழகாக இருக்கிறான். இன்னொருவன் கருப்பாக இருக்கிறான். இன்னொருவன் பரிசுத்தவானாக இருக்கிறான். வேறொருவன் கெட்டவனாக இருக்கிறான்.
இருப்பினும், கடவுள் அவர்கள் அனைவரிடமும் இருக்கிறான்.
4. வேக வைத்த நெல்லை பூமியில் விதைத்தால் அது மறுபடியும் முளைக்காது; வேகவைக்காத நெல்தான் முளைவிடும்.
அது போல், சித்தனான பிறகு ஒருவன் இருப்பானானால் அவன் மறுஜென்மம் அடைவதில்லை. அசித்தனோ தான் சித்தனாகும் வரையில் திரும்பத் திரும்ப பிறவியெடுக்க வேண்டும்.
5. பாம்புக்கு பல்லில் விசமிருந்த போதிலும், அவ்விசத்தால் அது தீமையை அடைவதில்லை. ஆனால், அது பிறரைக் கடித்தால் அவ்விசம் கடியுண்டவனுக்கு மரணத்தைத் தரும்.
இதைப் போல கடவுளிடத்திலும் மாயையுள்ளது. ஆனால் அது அவரைப் பந்தப்படுத்தாமல், இவ்வுலகம் முழுவதையும் மயக்கத்திற்கு உள்ளாக்கிக் கொண்டு வருகிறது.
6. பூனையானது தனது குட்டிகளைப் பற்களால் பிடிக்கும் போது அக்குட்டிகளுக்குத் தீங்குண்டாவதில்லை. ஆனால், அது ஓர் எலியை அப்படிப் பிடிக்குமானால் அவ்வெலி உடனே இறக்கின்றது.
இதைப் போலவே மாயையானது மற்றவர்களை வருத்துவதாயினும் பக்தனை ஒரு போதும் துன்புறுத்தாது.
7. தராசுத் தட்டின் எந்தப் பக்கம் கனமாக இருக்கிறதோ அந்தப் பக்கத்தில் தராசு முள்ளானது மையத்தை விட்டுச் சாய்ந்து விலகியிருக்கும்.
அது போல பெண்ணாசை பொன்னாசைகளால் கனத்த மனம் கடவுளை விட்டு விலகித் தடுமாறுகிறது.
8. வெள்ளைப் பூண்டின் சாறு வைக்கப்பட்டிருந்த பாத்திரம் எத்தனை தரம் கழுவித் துடைக்கப்பட்ட போதிலும் நாற்றத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும்.
அகங்காரமானது வெகு பிடிவாதமுள்ள அஞ்ஞானம், எவ்வளவு சிரமப்பட்ட போதிலும் அதை முற்றிலும் போக்குவது முடியாத காரியம்.
9. அல்லிப்பூவின் இதழ்கள் காலக்கிரமத்தில் உதிர்ந்து போனாலும் அவைகளின் வடு மட்டும் இருக்கும். அதுபோல் மனிதனுடைய அகங்காரம் முழுவதும் நசித்துப் போகுமானாலும், அதன் பூர்வ அடையாளங்கள் இருந்தே தீரும் என்றாலும் அவை கெடுதல் உண்டாக்கக் கூடியவையல்ல.
10. கஞ்சா எனும் வார்த்தையை ஆயிரம் தரம் உச்சரித்தாலும் கஞ்சா மயக்கம் வராது. அதைக் கொணர்ந்து கசக்கிக் குழாயிலிட்டு நெருப்பு வைத்துப் புகையை இழுத்தால்தான் மயக்கம் வரும்.
“கடவுளே, கடவுளே” என்று உரக்கக் கத்துவதனால் பயன் என்ன? பக்தி மார்க்கத்தில் இடைவிடாது சென்றால் கடவுளை நிச்சயமாகக் காண முடியும்.