சுதாமர் என்ற ஓர் அந்தணர் இருந்தார். அவர் கிருஷ்ணரின் அன்புக்கு உகந்த நண்பர். அவர் வேதங்களை நன்கு கற்றவர். ஆனால் மிகவும் ஏழை. மிகவும் அழுக்கடைந்த ஆடைகளை அவர் உடுத்தி இருந்ததனால் அவரைக் குசேலர் என்றும் அழைப்பார்கள்.
தெய்வாதீனமாக எது கிடைக்கிறதோ அதைக் கொண்டு தான் அவர் உயிர் வாழ்ந்தார்.
அவருடைய மனைவி எல்லா வகையிலும் அவரைப் போலவே இருந்தாள். இளம் வயதில் அவர் சாந்தீபனி முனிவரின் குருகுலத்தில் கிருஷ்ணரோடு சேர்ந்து படித்தவர்.
குழந்தைகள் படும் கஷ்டத்தைப் பொறுக்க முடியாமல் ஒரு முறை அவருடைய மனைவி அவரைப் பார்த்து, "பகவான் கிருஷ்ணர் ஒரு சமயம் தங்களுடைய நெருங்கிய நண்பராக இருந்தார் என்று பல தடவை என்னிடம் கூறியுள்ளீர்கள். நல்லவர்கள் மீதும், ஏழைகள் மீதும் அவர் மிக்க அன்பு கொண்டவர் என்பது பிரசித்தமாக இருக்கிறது. தாங்கள் அவரைப் பார்த்து ஏதாவது உதவி கேட்டால் என்ன?" என்று கேட்டாள். சுதாமர் அவள் நிலையைக் கண்டு பரிதாபப்பட்டார்.
மிகவும் சாதாரண ஒரு புடவையை அவள் அணிந்திருந்தாள். அந்தப் புடவையும் பல இடங்களில் கிழிந்திருந்தது. அவரைத் திருமணம் புரிந்து கொண்டதிலிருந்து, அவள் ஒரு நாள் கூட வயிறு நிறையச் சாபிட்டதில்லை.
இதுதான் முதல் தடவையாக அவள் அவரை ஏதோ கேட்பது, அதுவும் அவர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
அவர் தமக்குள், "அவள் திருப்திக்காக நான் கிருஷ்ணரைப் பார்க்கப் போவேன். ஆனால் இது காரணமாக என் பழைய நண்பனை இத்தனை வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்" என்று நினைத்துக் கொண்டார்.
"அவருக்குக் காணிக்கையாகக் கொடுக்க வீட்டில் ஏதாவது இருக்கிறதா? வெறும் கையுடன் நான் என் நண்பனை எப்படிப் பார்க்க முடியும்?" என்று கேட்டார். அப்படிக் கொடுக்க வீட்டில் ஒன்றும் இல்லை.
உடனே அவள் வெளியே சென்று நான்கு பிடி நெல், பக்கத்துக்கு வீடுகளிலிருந்து வாங்கி வந்தாள். அதை இடித்து அவலாகச் செய்து, அதை ஒரு துணியில் கட்டினாள்.
அதை எடுத்துக் கொண்டு, அந்த ஏழை பக்தரான அந்தணர் துவாரகை நோக்கி நடந்தார். வழியெல்லாம் கிருஷ்ணரைத் தாம் சந்திக்கப் போவதைப் பற்றியே எண்ணிக் கொண்டு சென்றார்.
துவாரகையை அடைந்ததும், அந்த அழகிய நகரைக் கண்டு இன்புற்றுக் கொண்டே சென்றார், கிருஷ்ணருக்குச் சொந்தமான பல மாளிகைகள் இருந்த இடத்தை அடைந்தார்.
எல்லா மாளிகைகளையும் விட மிகச் சிறப்பாகத் தோன்றிய ஒரு மாளிகைக்குள் நுழைந்தார். அவரை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. வாயிற் கதவைத் தாண்டி உள்ளே இருந்த கூடத்துள் நுழைந்தார். தூரத்தில் கிருஷ்ணர் ஒரு கட்டிலில், ருக்மிணியோடு உட்கார்ந்திருந்தது தெரிந்தது.
அவர் உள்ளே நுழைந்துதான் தாமதம். கிருஷ்ணர் வெகு ஆவலோடு ஓடி வந்து அவரைக் கட்டித் தழுவிக் கொண்டார். தம் நண்பரைத் தழுவிக் கொண்டது கிருஷ்ணருக்குப் பேரானந்தத்தைத் கொடுத்தது.
அவருடைய தாமரைக் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்தது. சுதாமரும் தம்மை அடக்கி கொள்ள முடியாமல் அழுதார். கிருஷ்ணர் அவரைத் தம் கட்டிலில் உட்காரவைத்து, அவர் கால்களை அலம்பி அந்தத் தண்ணீரைக் குடித்ததுடன், தம் தலையிலும் தெளித்துக் கொண்டார். கிருஷ்ணர் பக்கத்தில் நின்றுகொண்டு ருக்மிணி சுதாமருக்கு விசிற ஆரம்பித்தாள்.
எலும்பும் தோலுமாக இருந்த அந்த அந்தணரை, அதுவும் கிழிந்த அழுக்கு வேட்டி கட்டிக் கொண்டிருந்தவரைக் கிருஷ்ணர் பூஜை செய்தது, அரண்மனையில் உள்ள எல்லோருக்கும் வியப்பாக இருந்தது.
கிருஷ்ணரும் சுதாமரும் கைகோர்த்துக் கொண்டு உட்கார்ந்து குருகுலத்தில் தாங்கள் கழித்த இன்பநாட்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.
தம் நண்பருடைய நிலை கிருஷ்ணருக்கு நன்கு தெரியும், அவர் ஏன் அங்கு வந்தார் என்பதும் கிருஷ்ணருக்கு தெரியும். அவருக்கு நிறைய தனம் கொடுக்க வேண்டுமென்று அவர் நினைத்தார். பணத்திற்க்காகச் சுதாமர் என்னை ஒரு நாளும் பூஜை செய்ததில்லை.
இப்பொழுது கூட அவருடைய தர்மபத்தினியின் தூண்டுதலினால்தான் வந்திருக்கிறார். அவர் கனவிலும் நினைத்துப் பார்க்காத அளவுக்கு அவருக்கு செல்வதைக் கொடுக்க வேண்டும் என்று கிருஷ்ணர் நினைத்தார்.
கடைசியில் கிருஷ்ணர், "என்ன நண்பா, எனக்கு என்ன கொண்டு வந்திருக்கிறாய்?" என்று கேட்டார். சுதாமரின் தலை குனிந்தது, தாம் கொண்டு வந்திருந்த அவலைக் காண்பிக்க அவருக்கு வெட்கம். அத்தனை அற்புதமான பொருளைக் கிருஷ்ணருக்குக் கொடுக்க அவருக்கு அவமானமாக இருந்தது.
ஆனால் கிருஷ்ணர் அவரை விடவில்லை. "நீ ஏதோ சாதாரணப் பொருளைக் கொண்டு வந்திருக்க வேண்டும். அது தான் யோசனை செய்கிறாய், ஆனால் என் பக்தன் அன்போடு ஒரு சிறிய பொருளைக் கொடுத்தாலும் அதை நான் பெரிதாகக் கருதுவேன்.
பக்தி இல்லாமல் கொடுக்கப்படும் பொருள், அது எத்தனை பெரியதாக இருந்தாலும் சரி, அது எனக்கு இன்பத்தைத் தருவதில்லை. எனக்கு அன்போடு அளிக்கப்படும் பொருள், அது இலையாக இருந்தாலும் சரி, மலராக இருந்தாலும் சரி, ஏன் வெறும் தண்ணீராக இருந்தாலும் சரி, அதை நான் மகிழ்ச்சியோடு ஏற்கிறேன். ஏனெனில், அது பக்தியும் அன்பும் உள்ளவர்களால் கொடுக்கப்படுகிறது" என்றார்.
ஆனால் கிருஷ்ணர் இப்படி பேசியும் சுதாமர் அசையாமல் பேசாமல் இருந்தார்.
உடனே கிருஷ்ணரே சுதாமர் அவலை முடித்து வைத்திருந்த துணியை எடுத்துத் திறந்தார். அதில் அவலைக் கண்டதும் அவர் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தார்.
"ஓ நண்பனே! அவல் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நீ கொண்டு வந்திருக்கிறாயே!" என்று ஒரு பிடி அவலை எடுத்துச் சாப்பிட்டார்.
இரண்டாம் பிடியை எடுத்து அதை வாய்க்குள் போட்டுக் கொள்ளப் போகையில் ருக்மிணி சிரித்துக் கொண்டே அவர் கையைப் பிடித்துக் கொண்டாள்.
ஏனென்றால் கிருஷ்ணர் முதல் பிடி அவல் சாப்பிட்டதுமே உலகத்தின் செல்வம் முழுவதையும் அவர் சுதாமருக்கு வழங்கிவிட்டார்.
இரண்டாம் பிடி அவல் சாப்பிட்டால், ருக்மிணியே பக்தன் வீட்டுக்குப் போய்ப் பணிவிடை செய்ய வேண்டியிருக்கும். அந்தத் தர்ம சங்கடமான நிலையைத் தடுப்பதற்காகத் தான் அவள் இரண்டாம் பிடி அவலைக் கிருஷ்ணர் சாப்பிடாமல் தடுத்தாள்.
மறுநாள் காலை, கிருஷ்ணரிடம் விடைப்பெற்று கொண்டு, அவர் தமது வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார். கிருஷ்ணர் அவரோடு சிறிது தூரம் சென்று விடை கொடுத்தனுப்பினார்.
செல்வம் வேண்டும் என்று சுதாமர் கிருஷ்ணரை ஒரு பொழுதும் வேண்டியதில்லை. இந்த அற்பப் பொருளை நாடி அவரிடம் சென்றோமே என்று வெட்கப்பட்டார்.
ஆனால் கிருஷ்ணரைத் தரிசித்ததில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. "கிருஷ்ணர் எத்தனை அன்புள்ளம் கொண்டவர் என்பதை இன்று நான் பார்த்தேன்.
கிழிந்த அழுக்கான உடைகளை அணிந்துள்ள இந்த ஏழையை அவர் அன்பாக தழுவிக் கொண்டார். நானோ அற்பனுக்கும் அர்ப்பன். அவரோ தேவர்களுக்கெல்லாம் தேவர்! இருந்தும் என்னைத் தழுவிக் கொண்டாரே! அவருடைய எல்லையற்ற அன்புதான் என்னே!"
என்று நினைத்துக் கொண்டே சுதாமர் வீடு திரும்பினார். என்ன ஆச்சரியம்! பணம் வேண்டுமென்று சுதாமர் கிருஷ்ணரைக் கேட்கவேயில்லை, இருந்தும் அவருடைய பழைய குச்சுவீடு இருந்த இடத்தில ஒரு பெரிய மாளிகை இருந்தது!
அவரால் தம் கண்களை நம்ப முடியவில்லை. எங்கோ பார்த்தாலும் நந்தவனங்களும் பூங்காக்களும் இருந்தன.
"என்ன இது! இது எந்த இடம்! என்னுடைய பழைய குடிசை எங்கே?" என்று கேட்டார்.
அப்பொழுது மாளிகையிளிருந்து அவர் மனைவி ஓடிவந்து, அவர் காலில் விழுந்து கண்ணீர் விட்டாள், அவள் மிகவும் அழகாக மாறி, மிகவும் உயர்ந்த உடைகள் அணிந்திருப்பதைப் பார்த்தார்.
அந்த வீடு இந்திரனுடைய மாளிகை போலச் செல்வச் செழிப்புடன் ஒளி வீசியது. மிக்க விலையுயர்ந்த பொருள்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சுதாமர் இந்தப் பொருள்களை கண்டு மயங்கவில்லை. கிருஷ்ணரோடு தாம் இருந்த நேரங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார்.
திடீரென்று கிடைத்த இந்தப் பொருள்களைவிடக் கிருஷ்ணருடைய கமல பாதங்களைத் தியானிப்பதே அவருக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது. அவருடைய மனைவியும் மிகுந்த உத்தமி. அவளும் கிருஷ்ணரைத் தியானிப்பதில்தான் உண்மையான ஆனந்தம் இருக்கிறது என்று அறிந்து கொண்டாள்.
கிருஷ்ணனுக்கு பகட்டான ஆடை அலங்காரமோ பிரமாதமான அக்கார அடிசலோட கூடிய சித்ராண்ணமோ தேவையில்லை அவன் எதிர்பார்பதெல்லாம் பக்தியுடன் எந்த வித வேண்டுதலும் இல்லா பரம சரணாகதி பக்தியுடன் சமர்பிக்கபட்ட ஒரு பச்சிலை ஒரு துளி தீர்த்தம் ஒரே ஒரு புஷ்பம் இல்லாவிடில் ஒரு சொட்டு கண்ணீர் போதும் அந்த வைகுந்தத்தையே தருவான்.