ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் மங்களகரமான பல பண்புகளைக்கொண்ட, ஸ்ரீமன் நாராயணனாலேயே தொடங்கப்பட்டு, பின்னர் ஆழ்வார்கள் ஆசார்யர்களால் பிரசாரம் செய்யப்பட்ட பெருங்கடல்.
நம் ஸத்ஸம்ப்ரதாயம் உபய வேதாந்தக் கோட்பாடுகளின்மீது எழுப்பப்பட்டது. அதாவது ஸம்ஸ்க்ருத த்ராவிட வேதாந்தங்கள். இந்த நெறியை நாம் புரிந்துகொள்ளவும், அதில் நம் ஒழுக்கத்தை நிலை நிறுத்திக்கொள்ளவும் நமக்கு ஆசார்யர்களின் வாழ்வும் வாக்கும் பெரும் பங்கு ஆற்றுகின்றன.
இன்றியமையாத மற்றும் அடிப்படையான இந்தக் கோட்பாடுகளை மிக எளிய முறையில் ஒரு கட்டுரைத் தொடரில் அளிக்க ஒரு முயற்சியே இதுவாகும்.
ஸ்ரீமன் நாராயணன் ஸ்ருஷ்டி காலத்தில் ப்ரம்மாவுக்கு சேதனர்களை உய்விப்பதற்காக நிர் ஹேதுக க்ருபா மாத்ரமடியாக வேதங்களை உபதேசித்தான்.வைதிகர் அனைவர்க்கும் வேதமே ப்ரமாணம். ஒரு ப்ரமாதா (ஆசார்யன்) ஒரு ப்ரமாணம் (சாஸ்திரம்) மூலமாகவே ப்ரமேயத்தை (எம்பெருமானை) நிர்ணயிக்க முடியும். எப்படி எம்பெருமான் பிற எல்லாவற்றினின்றும் அவனை வேறுபடுத்திக் காட்டும்படி அகில ஹேய ப்ரத்யநீகதானத்வம் (எல்லாத் தாழ் குணங்களுக்கும் எதிர்த்தட்டாயிருத்தல்), கல்யாணைகதானத்வம் (அனைத்துக் கல்யாண குணங்களுக்கும் இருப்பிடமாயிருத்தல்) எனத் தனிசிறப்புகளோடு திகழ்கிறானோ, அவ்வாறே பிற ப்ரமாணங்களினின்றும் தன்னை வேறுபடுத்திக் காட்டும் பின்வரும் சிறப்புகளைப் பெற்றுள்ளது:
அபௌருஷேயத்வம் – ஒருவரால் படைக்கப்படாமை. ஒவ்வொரு ஸ்ருஷ்டி காலத்திலும் எம்பெருமான் ப்ரம்மனுக்கு வேதத்தைக் கற்றுத் தருகிறான். ஆகவே, சாதாரணர் படைப்புகளிலுள்ள குறைகள் எதுவும் இன்றித் திகழ்கிறது வேதம்.
நித்யம் – அழியாமல் சாஸ்வதமாய் உள்ளது. தொடக்கமோ முடிவோ இல்லாமல், எப்போதும், அதன் உள்பொருளை நன்கு அறிந்தவனான எம்பெருமானாலேயே ப்ரம்மனுக்கு உபதேசிக்கப் படுகிறது.
ஸ்வத: ப்ராமாண்யத்வம் – இது பிரமாணம் என்று உணர்த்த இன்னொரு நூலின் தேவையின்றித் தானே அடிப்படையாய் இருப்பது.
வேதங்களின் அளவற்ற பரப்பை உணர்ந்தும், அவற்றை நாள்பட நாள்படக் குறைந்துகொண்டே வரும் மானிட ஞானத்தினால் அறிந்துகொள்வது கடினமென்னும் நினைவாலும், வேத வ்யாசர் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என நான்காகப் பகுத்தார்.
வேதங்களின் ஸாராம்சமே வேதாந்தம். இப்படி எம்பெருமானைப் பற்றிய நுட்பமான விஷயங்களைப் பேசுவன உபநிஷத்துகள். வேதங்கள் உபாசனை முறைகளைப் பற்றிப் பேசும்; வேதாந்தமோ அந்த உபாசனைக்குப் பொருளான எம்பெருமானைப் பற்றிப் பேசும். உபநிஷதங்கள் பல. ஆயினும் பின்வரும் உபநிஷதங்கள் ப்ரதானம்:
ஐதரேய
ப்ருஹதாரண்யக
சாந்தோக்ய
ஈச
கேந
கட
கெளஷீதிகீ
மஹா நாராயண
மாண்டூக்ய
முண்டக
ப்ரச்ன
ஸுபால
ச்வேதாச்வதர
தைத்திரிய
உபநிஷதங்களின் ஸாரமாகக் கருதப்படும் வேதவ்யாசரால் தொகுக்கப்பட்ட ப்ரஹ்ம ஸூத்ரமும் வேதாந்தத்தின் பகுதியாகக் கருதப் படுகிறது.
வேதங்கள் அனந்தம் – எண்ணற்றவை, அளப்பரியன, நம்மால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியாதவை என்பதால் நாம் வேதங்களையும் வேதாந்தத்தையும் ஸ்ம்ருதி, இதிஹாசங்கள், புராணங்களின் துணையோடு அறிகிறோம்.
மநு, விஷ்ணு ஹாரீதர், யாஞவல்க்யர் போன்ற மஹரிஷிகளால் தொகுக்கப்பட்ட சாஸ்த்ரங்கள் ஸ்ம்ருதி எனப்படும்.
ஸ்ரீ ராமாயணமும், மஹா பாரதமும் இதிகாசங்கள். .ஸ்ரீ ராமாயணம் சரணாகதி சாஸ்த்ரமாகவும், மஹா பாரதம் பஞ்சமோ (ஐந்தாம்) வேதம் என்றும் போற்றப் பெறுகின்றன.
ப்ரம்மனால் தொகுக்கப்பட்ட பதினெட்டு முக்ய புராணங்களே புராணங்கள் எனக் கருதப் படும். இந்த ப்ரம்மனே, தான் ஸத்வ குணத்திலுள்ளபோது எம்பெருமானையும், ராஜச குணத்திலுள்ளபோது தன்னையேயும், தாமஸ குணத்திலுள்ளபோது அக்னி போன்ற தாழ்ந்த தேவதைகளையும் ஏத்திப் பேசுவதாகக் கூறுகிறார். ஆகவே அந்தந்தப் புராணங்களின் நிலையும் அதுவேதான்.
இவ்வாறு பல்வேறு சாஸ்த்ரங்களும் இருப்பினும் அவற்றால் ஞானம் அடையாது ஜீவர்கள் லௌகிகத்திலேயே மூழ்கிக் கிடந்தது துவள்வதால் எம்பெருமான் தானே கருணையால் அவதாரங்கள் செய்து அறிவூட்டித் திருத்தப் பார்த்தான். மானிடரோ திருந்தாததோடு ஈச்வரனோடும் எதிரம்பு கோக்க முற்பட்டனர்! ஆகவே அவர்களிலேயே சிலரைத் தன் க்ருபையினால் மயர்வற மதிநலம் அருளி, ஆழ்வார்களாக பகவதநுபவம் பெற்று மற்றோர்க்கும் அதைப் பகிர்ந்தளிக்கும் காருணிகர்களாக நிறுத்தியருளினான். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார்,பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார்,திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் (நம்மாழ்வாரின் சீடர்), ஆண்டாள் (பெரியாழ்வார் திருமகளார்) என்கிற ஆழ்வார்கள் மூலம் மங்களாசாசனமே வாழ்வாகக் காட்டியருளினான்.
இவ்வாறு ஜீவர்களை உஜ்ஜீவிப்பிக்க எம்பெருமான் ஆழ்வார்களைத் தோற்றுவித்தும் திருப்தியுறாது, நாதமுநிகள் முதலாக மணவாள மாமுனிகள் ஈறாக ஆசார்யர்களையும் தோற்றுவித்தான். ஆதிசேஷனின் அவதார விசேஷமான ராமானுஜர் நம் ஆசார்ய பரம்பரையில் நடு நாயகமாகத் திகழ்ந்து ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தையும் விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தையும் சிறந்து விளங்கும்படி செய்தார்.
பராசரர், வ்யாசர், த்ரமிடர், டங்கர் போன்ற ரிஷிகள் வழியில் சென்று விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நன்கு ஸ்தாபித்தார்.
எழுபத்து நான்கு சிம்ஹாசநாதிபதிகள் வாயிலாக விசிஷ்டாத்வைதத்தை எங்கும் பரப்பி, ஆசையுடையோர்க்கெல்லாம் ஸ்ரீவைஷ்ணவத்தை அளிக்கும்படி செய்தார். இப்படிப்பட்ட இவரின் சிறந்த செயல்களாலும், எல்லோரையும் உஜ்ஜீவிக்கக் கூடியவராய் இருந்ததாலும், நம் ஸம்ப்ரதாயம் எம்பெருமானார் தரிசனம் என்றே பேர் பெற்றது. பின்பு, திவ்ய ப்ரபந்தங்களையும் அதன் அர்த்தங்களையும் நன்கு பரப்புவதற்காக அவரே மணவாள மாமுனிகளாக அவதரித்தார்.
பெரிய பெருமாளும் அவரை ஆசார்யனாக ஏற்றுக் கொண்டு, தன்னால் தொடங்கப்பட்ட ஆசார்ய ரத்ன ஹாரத்தைத் தானே முடித்து அருளினான். பின்பு, மாமுனிகளின் சீடர்களான அஷ்ட திக் கஜங்களால், முக்கியமாக அதில் ப்ரதான சீடரான பொன்னடிக்கால் ஜீயர் மூலமாக ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் நன்றாக வளர்க்கப் பட்டுள்ளது. அக்காலத்திற்குப் பிறகு பல பல ஆசார்யகள் அவதரித்து நம் பூர்வாசார்யர்களின் திருவுள்ளப்படி ஸம்ப்ரதாயத்தை நன்கு வளர்த்தனர்.
அடிப்படையான சிறப்புச் சொற்கள்/ஸ்ரீ வைஷ்ணவ பரிபாஷை
ஆசார்யன்/குரு – திருமந்த்ரார்த்த உபதேசம் செய்பவர்
சிஷ்யர் – மாணாக்கர்
பகவான் – ஸ்ரீமன் நாராயணன்
அர்ச்சை/அர்ச்சா – சந்நிதிகள்,மடங்கள்,இல்லங்களில் இருந்து நமக்கு அருள் புரியும் எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹம்
எம்பெருமான், பெருமாள், ஈச்வரன் – எம்பெருமான், பகவான்
எம்பெருமானார் – எம்பெருமானைக் காட்டிலும் கருணையுள்ளவர், ஸ்ரீ ராமாநுஜர்
பிரான் – உபகாரகன், உதவுபவன்
பிராட்டி, தாயார் – ஸ்ரீ மஹா லக்ஷ்மி
மூலவர் – சந்நிதிகளில் அசையாமல் நிரந்தரமாகப் ப்ரதிஷ்டை ஆகியுள்ள எம்பெருமான்
உத்ஸவர் – திருவீதிகளில் புறப்பாடுகள் கண்டருளும் எம்பெருமான்
ஆழ்வார்கள் – பகவானால் அருளப்பட்டு அவன் நினைவோடேயே தக்ஷிண பாரதத்தில் த்வாபரயுக முடிவு முதல் கலி யுகத் தொடக்கம்வரை வாழ்ந்த வைணவ அடியார்கள். பகவானிடத்தில் ஆழ்ந்திருந்ததால் ஆழ்வார்கள் எனப்பட்டனர்.
பூர்வாசார்யர்கள் – ஸ்ரீவைஷ்ணவ மரபை ஸ்ரீமன் நாராயணன் முதலாக நமக்குக் கொடுப்பவர்கள்
பாகவதர்கள்/ஸ்ரீவைஷ்ணவர்கள் – எம்பெருமானின் அடியார்கள்
அரையர்கள் – எம்பெருமான் திருமுன்பே இசையோடு திவ்யப்ரபந்தப் பாசுரங்களை அபிநயத்தோடு பாடுபவர்கள்
ஓராண் வழி ஆசார்யர்கள் – பெரிய பெருமாள் முதல் மாமுனிகள் ஈறான ஆசார்யர்கள்
பெரிய பெருமாள்
பெரிய பிராட்டியார்
ஸேனை முதலியார்
நம்மாழ்வார்
நாதமுனிகள்
உய்யக்கொண்டார்
மணக்கால் நம்பி
ஆளவந்தார்
பெரிய நம்பி
எம்பெருமானார்
எம்பார்
பட்டர்
நஞ்சீயர்
நம்பிள்ளை
வடக்கு திருவீதிப் பிள்ளை
பிள்ளை லோகாசார்யர்
திருவாய்மொழிப் பிள்ளை
அழகிய மணவாள மாமுனிகள்
திவ்ய ப்ரபந்தம் – ஆழ்வார்களின் பாசுரங்கள்; அருளிச்செயல்
திவ்ய தம்பதி – ஸ்ரீமன் நாராயணனும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியும்
திவ்யதேசம் – ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட எம்பெருமான் உகந்து எழுந்தருளியுள்ள திவ்ய க்ஷேத்ரங்கள்
திவ்யஸூக்தி/ஸ்ரீ ஸூக்தி – பகவான்/ஆழ்வார்/ஆசார்யர்கள் திருவாக்கு
அபிமான ஸ்தலம் – பூர்வாசார்யர்கள் மண்டிய எம்பெருமானின் க்ஷேத்ரங்கள்
பாசுரம் – பாட்டு, ச்லோகம்
பதிகம் – பத்துப் பாட்டுகளின் தொகுப்பு
பத்து – பத்துப் பதிகங்கள், நூறு பாட்டுகளின் தொகுப்பு
பொதுச் சொற்கள் – அடிக்கடி வ்யவஹரிக்கப்படும் ஸ்ரீவைஷ்ணவ மரபுச் சொற்கள், சொற்றொடர்கள்
கோயில் – ஸ்ரீரங்கம்
திருமலை – திருவேங்கடம். திருமாலிருஞ்சோலையையும் சில இடங்களில் சுட்டும்.
பெருமாள்கோயில் – காஞ்சீபுரம்
பெருமாள் – ஸ்ரீராமர்
இளையபெருமாள் – லக்ஷ்மணர்
பெரியபெருமாள் – ஸ்ரீரங்கநாதன் (மூலவர்)
நம்பெருமாள் – ஸ்ரீரங்கநாதன் உத்ஸவர்
ஆழ்வார் – நம்மாழ்வார்
ஸ்வாமி – ஸ்ரீ ராமாநுஜர்
ஜீயர், பெரிய ஜீயர் – மணவாள மாமுனிகள்
ஸ்வரூபம் – உண்மை இயல்பு
ரூபம் – வடிவம்
குணம் – கல்யாண குணம்
பரத்வம் – மேன்மை
சௌலப்யம் – எளிமை
சௌசீல்யம் – பெருந்தன்மை
சௌந்தர்யம் – திருமேனி அழகு
வாத்சல்யம் – தாயன்பு
மாதுர்யம் – இனிமை
க்ருபா, கருணா, தயா, அநுகம்பா – இரக்கம் அன்பு
சாஸ்த்ரம் – நம் அனுஷ்டானங்களை வழிவகுக்கும் ஆதார பூர்வமான க்ரந்தங்கள்/நூல்கள் – வேதங்கள், வேதாந்தம், இதிஹாசங்கள், புராணங்கள், ஸ்ம்ருதிகள், திவ்யப்ரபந்தம், பூர்வாசார்ய க்ரந்தங்கள், ஸ்தோத்ரங்கள், வ்யாக்யானங்கள்
கர்மா – வினை,செயல்பாடு.புண்யம் (நற்செயல்கள்),பாபம் (தீவினைகள்) இவற்றோடு தொடர்புடையது
மோக்ஷம் – தளைகளிலிருந்து விடுதலை
பகவத் கைங்கர்ய மோக்ஷம் – தளைகளிலிருந்து விடுபட்டபின் பரமபதத்தில் நிரந்தரமாக பகவத் கைங்கர்யம் செய்திருப்பது
கைவல்யம் – தளைகளிலிருந்து விடுபட்டபின் நிரந்தரமாக ஆத்மாநுபவம் திளைத்திருப்பது
கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் – பகவானை அடைவிக்கும் வழிகள்
ப்ரபத்தி, சரணாகதி – எம்பெருமானை அடைய அவனையே ஒரே வழியாக ஸ்வீகரிப்பது. ஆசார்யன் திருவடிகளையே இப்படி ஸ்வீகரித்த ப்ரபன்னர்களை ஆசார்ய நிஷ்டர் என்பர்.
ஆசார்ய நிஷ்டர் – ஆசார்யர்களையே முற்றிலுமாகச் சரண் புகுந்தவர்கள்.
ஆசார்ய அபிமானம் – ஆசார்யனால் வாஞ்சையோடு இரட்சிக்கப் படுதல்
பஞ்ச சம்ஸ்காரம் (ஸமாச்ரயணம்) – இவ்வுலகிலும் பரமபதத்திலும் கைங்கர்யம் செய்ய மேல் சொல்லப் போகும் ஐந்து வகைகளில் ஒரு ஜீவாத்மாவைத் தூய்மைப் படுத்தும் ஸம்ஸ்காரம்….
தாப (உஷ்ணம்)-சங்க சக்ர லாஞ்சனம் – சூடு படுத்தப்பட்ட சங்கம் சக்ரம் இரண்டாலும் இரு தோள்களிலும் குறியிடுதல். இது, குறியிட்ட பாத்திரம்/பண்டங்கள் போல நாம் எம்பெருமானின் உடைமைகள் எனக் குறிக்கும்.
புண்ட்ர (குறி) – உடலின் பன்னிரு இடங்களில் திருமண்காப்பும் ஸ்ரீ சூர்ணமும் அணிதல்
நாம(பெயர்) – இராமாநுச தாசன், மதுரகவி தாசன், ஸ்ரீ வைஷ்ணவ தாசன் என ஆசார்யன் இடும் பெயர்
மந்த்ரம் – மந்த்ரோபதேசம் – ஆசார்யனிடம் ரஹஸ்ய மந்த்ரத்தின் அர்த்தம் கேட்டு உணர்தல். தன்னை நினைத்துச் சொல்பவனின் துன்பங்களைப் போக்குவது மந்த்ரம். திருமந்தரம், த்வயம்,சரம ச்லோகம் என்பன சம்சாரத் துயர் நீக்க வல்ல மந்த்ரங்கள்
யாகம் – தேவ பூஜை ஆசார்யனிடம் திருவாராதந க்ரமம் கற்றல்
கைங்கர்யம் – பகவான், ஆழ்வார்கள், ஆசார்யர்கள்,பாகவதர்களுக்குத் தொண்டு செய்தல்
திருவாராதனம் – எம்பெருமானைத் தொழுதல் (பூஜை)
திருவுள்ளம் – தெய்வ இச்சை
சேஷி – உடையவன்
சேஷன் – அடியான்/அடிமை
சேஷத்வம் – எம்பெருமானுக்குத் தொண்டு செய்ய எப்போதும் இசைந்திருத்தல். ஸ்ரீராமனுக்கு லக்ஷ்மணனைப் போல.
பாரதந்த்ர்யம் – எம்பெருமானுக்குப் பணி செய்வதில் அவனிட்ட வழக்காக இருப்பது. பரதனைப் போல. பரதன் ஸ்ரீராமனைப் பிரிந்திருக்கவும் இசைந்து பெருமாள் திருவுள்ளப் படியே நடந்து காட்டினான்.
ஸ்வாதந்த்ர்யம் – தன் இச்சையாய் நடந்துகொள்வது
புருஷகாரம் – சிபாரிசு செய்தல். சினத்தைத் தணித்தல். மஹாலக்ஷ்மித் தாயார் எம்பெருமானிடம் ஜீவாத்மாக்கள் தகுதியற்றவர்கள், பாபம் செய்தவர்கள் என்றபோதிலும் இரக்கம் காட்டி இரட்சிக்கப் படவேண்டியவர்கள் என்று சிபாரிசு செய்கிறாள். ஆசார்யர்கள் இவ்வுலகில் பிராட்டியின் பிரதிநிதிகளாகக் கருதப் படுகிறார்கள். புருஷகாரம் செய்பவர்களுக்கு மூன்று குணங்கள் வேண்டும். அவை:
க்ருபை – துன்புறும் ஜீவர்களிடம் கருணை
பாரதந்தர்யம் – ஈச்வரனிடம் ஆழ்ந்த விச்வாஸம்
அனந்யார்ஹத்வம் – முற்றிலும் பகவானைத் தவிர வேறு ஒருவர்க்கும் உரியனாய் இல்லாதிருத்தல்
அந்ய சேஷத்வம் – பகவானைத் தவிர வேறு ஒருவனுக்கு உரியனாய் இருத்தல்
விஷயாந்தரம் – உலக இன்பங்கள் அதாவது புலனின்பங்கள் – கைங்கர்யம் தவிர்ந்த பிற
தேவதாந்தரம் – எம்பெருமானே உண்மையில் தேவன், ஈச்வரன். பிறரெல்லாரும் தேவதாந்தரங்கள். உலகியல் நடக்க எம்பெருமானால் நியமிக்கப்பட்ட, கர்ம வசப்பட்ட ஜீவர்களை எம்பெருமான்போல் மயங்கிச் சில பலன்களைப் பெற நினைப்பது பிழை.
ஸ்வகத ஸ்வீகாரம் – நாம் பகவானை/ஆசார்யனை ஏற்றுக்கொள்வது(இது அஹங்கார கர்பமானது)
பரகதஸ்வீகாரம் – நம் விண்ணப்பமோ வற்புறுத்தலோ இன்றி பகவான்/ஆசார்யன் நம்மைத் தாமே ஏற்றுக்கொள்வது.
நிர்ஹேதுக க்ருபா – ஒரு காரணமற்ற க்ருபை, ஜீவன் கேளாமலே பரமாத்மா காட்டும் க்ருபை
ஸஹேதுக க்ருபை – ஜீவனின் சுய முயற்சி ப்ரார்த்தனைகளுக்காக எம்பெருமான் இரங்குதல்
நித்யர் – நித்ய ஸூரிகள் – எம்பெருமானுக்குப் பரமபத்திலும் அவன் எங்கிருந்தாலும் எப்போதும் கைங்கர்யம் செய்வோர் …இவர்கள் எக்காலத்திலும் தளைகளிலிருந்து விடுபட்டோராவர்.
முக்தர் – பௌதிக உலகில் கட்டுப் பட்டிருந்தவர், தளைகளிலிருந்து விடுபட்டு எம்பெருமான் அருள் பெற்று சுத்தாத்மாக்கள் ஆகி எபோதும் கைங்கர்யத்தில் ஆழ்ந்தவர்கள் .
பத்தர் – ஸம்ஸாரிகள்; உலகில் உலகியலில் கட்டுண்டு கிடப்பவர்
முமுக்ஷு – மோக்ஷம் அடைய விரும்புபவர்
ப்ரபன்னர் – எம்பெருமானிடம் சரண் அடைந்தவர்; முமுக்ஷு போன்றவர்
ஆர்த்த ப்ரபன்னர் – உலகியலில் இருந்து உடனே விடுபடத் துடிப்பவர்
த்ருப்த பிரபன்னர் – பகவத் பாகவத கைங்கர்யம் இவ்வுலகில் செய்து பின் பரமபதத்தில் நித்ய கைங்கர்யம் செய்ய விரும்புபவர்
தீர்த்தம் – புனித நீர்
ஸ்ரீபாத தீர்த்தம் – சரணாம்ருதம் ஆசார்யர் திருவடிகளை அலம்பிய புனித நீர்
போகம் – எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கத் தயாராக உள்ள உணவு
ப்ரஸாதம் – எம்பெருமானுக்கு ஸமர்ப்பித்தபின் அருந்தப்படும் உணவு
உச்சிஷ்டம் – ப்ரஸாதம் என்பதன் பர்யாயம் மறுசொல் (ஒருவர் உண்டு மீந்தது, பிறர் ஸ்பர்சம் பட்டது,அல்லது எச்சில் எனவும் பொருள்படும்) இடத்துக்கேற்பப் பொருள்படும்
படி – போகம் எனும் பொருள் தரும்
சாத்துப்படி – பூசும் சந்தனம்
சடாரி, ஸ்ரீ சடகோபம் – எம்பெருமானின் திருவடிகள். இவை நம்மாழ்வாராகக் கருதப் படுகின்றன.
மதுரகவிகள் – நம்மாழ்வாரின் திருவடித் தாமரைகள்
ஸ்ரீ ராமானுசன் – ஆழ்வார் திருநகரியில் ஆழ்வார் திருவடி
ஸ்ரீ ராமானுசன் – ஆழ்வார்கள் அனைவரின் திருவடிகள்
முதலியாண்டான் – ஸ்ரீ ராமானுஜரின் திருவடிகள்
பொன்னடியாம் செங்கமலம் – மாமுனிகளின் திருவடித் தாமரைகள்
பொதுவாக அணுக்கரான சிஷ்யரைத் திருவடி நிலைகளாகக் குறிப்பது மரபு. உதாரணமாக, நஞ்சீயரை பட்டரின் திருவடி என்பர். நம்பிள்ளையை நஞ்சீயர் திருவடி என்பர்.
விபூதி – செல்வம், ஸம்ருத்தி
நித்ய விபூதி – பரமபதம், ஆன்மீகச் செல்வம்
லீலா விபூதி – நாம் வாழும் இவ்வுலகச் செல்வம்
அடியேன்,தாசன் – தன்னைப் பணிவாகக் குறித்துச் சொல்லும் சொல். நான் என்பதற்குப் பதிலாகச் சொல்வது
தேவரீர், தேவர், ஸ்ரீமான் – ஸ்ரீ வைஷ்ணவர்களை மரியாதையுடன் குறிப்பிடுவது
எழுந்தருளுதல் – வருகை, அமர்கை
கண் வளருதல் – உறங்குதல்
நீராட்டம் – குளித்தல்
சயனம் – படுத்தல்
ஸ்ரீபாதம் – பெருமாள்/ஆழ்வார்/ஆசார்யரைப் பல்லக்கில் சுமத்தல்
திருவடி – தாமரை அடியிணை. அனுமனையும் குறிக்கும்
வியாக்யானம் – விரிவுரை
உபன்யாசம் – சொற்பொழிவு
காலக்ஷேபம் – மூல ஸ்ரீகோசம் சேவித்து அதன் பொருளை விளக்குவது
அஷ்ட திக் கஜங்கள் – சிஷ்யர்களை நெறிப்படுத்தவும், சத் சம்ப்ரதாயத்தைப் பேணி வளர்க்கவும் மணவாள மாமுநிகளால் நியமிக்கப்பட்ட எட்டு சிஷ்யர்கள்
எழுபத்திநான்கு சிம்ஹாசநாதிபதிகள் – ஸ்ரீ ராமானுசரால் சம்ப்ரதாயம் பேணிக் காக்கப்படவும் மேலும் வளர்த்தவும் நியமிக்கப்பட்ட ஆசார்யர்கள்
தத்வம், சித்தாந்தம் மற்றும் தொடர்புள்ள சொற்கள்
விசிஷ்டாத்வைதம் – அறிவுள்ள சித்தும், அறிவற்ற அசித்துக்களும் உடலாகக் கொண்ட பரப்ரஹ்மம் என்று உணர்த்தும் கோட்பாடு
சித்தாந்தம் – நம் கோட்பாடு
மிதுனம் – தம்பதி, இணை – பெருமாளும் பிராட்டியும்
ஏகாயனம் – திருமகளுக்கு முக்யத்வம் தாராமல் திருமாலைப் பரமன் எனும் கோட்பாடு
மாயாவாதம் – ப்ரஹ்மம் ஒன்றே உள்ளது, அல்ல பிற யாவும் மாயை எனும் கோட்பாடு
ஆஸ்திகன் – சாஸ்த்ரத்தை ஏற்பவர்
நாஸ்திகன் – சாஸ்த்ரத்தை மறுப்பவர்
பாஹ்யர் – சாஸ்த்ரத்தை ஏற்க மறுத்துத் தள்ளுபவர்
குத்ருஷ்டி – சாஸ்த்ரத்தை ஏற்று, அதைத் தம் வசதிப்படி மாற்றிச் சொல்பவர்
ஆப்தர் – நம்பத்தக்க சாஸ்த்ரவாதி
ப்ரமா – உண்மைஅறிவு/ஞானம்
பிரமேயம் – உண்மை ஞானத்தின் லக்ஷ்யம்
பிரமாதா – உண்மை ஞானத்தைத் தருபவர்
ப்ரமாணம் – உண்மை ஞானத்தை அறிய உதவும் ஸாதனம்
ப்ரத்யக்ஷம் – கண் காத்து முதலிய புலன்கள் நேர்படக் காட்டுவது
அனுமானம் – ஏற்கெனவே கற்றதன் அடிப்படையில் பெரும் ஞானம்
சப்தம் – சாஸ்த்ரச் சொற்கள்/ஆதாரபூர்வ நூல்கள்
தத்வ த்ரயம் மூன்று உண்மைகள் – பிரபன்னர் அறியவேண்டிய மூன்று கோட்பாடுகள்.
சித் – அறிவுள்ள சேதனன்,ஜீவாத்மா
அசித்/அசேதனம்/ப்ரக்ருதி – அறிவற்றது, பொருள், வஸ்து
ஈச்வரன் – ஸ்ரீமன் நாராயணன், பகவான்
ரஹஸ்ய த்ரயம் – மூன்று ரஹஸ்ய மந்த்ரங்கள் – ஆசார்யரால் பஞ்ச ஸம்ஸ்காரத்தின்போது உபதேசிக்கப் படுபவை.
திருமந்தரம் – அஷ்டாக்ஷர மஹா மந்த்ரம்
த்வயம் – த்வய மஹா மந்த்ரம்
சரம ச்லோகம் – பொதுவாக, “ஸர்வ தர்மான் பரித்யஜ்ய…” எனும் பகவத் கீதை ச்லோகத்தைக் குறிக்கும். ஸக்ருதேவ பிரபன்னாய எனும் ஸ்ரீ ராம சரம ச்லோகமும், ஸ்திதே மனசி சுஸ்வஸ்தே எனும் ஸ்ரீ வராஹ சரம ச்லோகமும் ப்ரபன்னர்களால் அனுசந்திக்கப் படுகின்றன.
அர்த்த பஞ்சகம் – பஞ்சஸம்ஸ்கார வேளையில் ஆசார்யரால் உபதேசிக்கப்படும் ஐந்து அடிப்படை விஷயங்கள்.
ஜீவாத்மா – அறியும் உயிர்
பரமாத்மா – எம்பெருமான் பகவான்
உபேயம்,ப்ராப்யம் – அடைய வேண்டிய இலக்கு – கைங்கர்யம்
உபாயம் – அந்த இலக்கை அடையும் வழி
விரோதி – இலக்கை அடையவிடாது தடுக்கும் தடைகள்
ஆகார த்ரயம் – ஒவ்வொரு ஜீவாத்மாவுக்கும் உள்ள மூன்று அடிப்படை நிலைகள்
அநந்ய சேஷத்வம் – எம்பெருமானை மட்டுமே ஒரே தலைவனாக ஏற்பது
அநந்ய சரணத்வம் – எம்பெருமான் ஒருவனையே ஒரே புகலாக ஏற்பது
அநந்ய போக்யத்வம் – பகவானை மட்டுமே அனுபவிப்பது என மேலோட்டமாகத் தோன்றினாலும், பகவான் ஒருவன் அனுபவத்துக்கு மட்டுமே உரியனாய் இருத்தல் என்பதே தேர்ந்த பொருள்.
ஸாமாநாதிகரண்யம் – ஒரே பொருளில் இரு வேறு பண்புகளைக் குறிப்பது. எடுத்துக்காட்டு – மண் குடம் எனில், மண்ணால் செய்யப்பட்டது என்றும், குடத்தின் வடிவை உடையது என்றும் இரு வேறு பண்புகள் ஒரே பொருளில் உணரப்படுகின்றன. இங்கு ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் ஒரே வஸ்துவைக் குறிக்கின்றன. சுக்ல படம் என்றதில், சுக்ல என வெண்மையும், படம் என துணியும் பொருள்படும். இரு வேறு குணங்கள் – வெண்மை, துணியாய் இருத்தல் இரண்டும் சுக்ல படம் எனும் சொல்லில் உள்ளது. இதுபோன்றே, பகவானும் சித் அசித் இரு நிலைகளிலும் வியாபித்திருந்து ஸாமாநாதிகரண்யத்தால் விளக்கப்படுகிறான். இது ஆழ்ந்த விஷயம் ஆதலால் வேத வேதாந்தம் அறிந்த வித்வான்களிடம் கேட்டுத் தெளிவு பெறவும்.
வையதிகரணம் – இரண்டும் அதற்கு மேற்பட்ட குணங்களும் ஒரு பொருளில் இருத்தல்.எடுத்துக்காட்டாக மேசை மேல் பூ எனில் மேசை வேறு, பூ வேறு எனத் தெரிகிறது.தரையில் நாற்காலி எனில் தரை வேறு, நாற்காலி வேறு.
ஸமஷ்டி ஸ்ருஷ்டி – பகவான் ஐந்து பூதங்களை ஸ்ருஷ்டித்து ஒரு ஜீவனை ப்ரஹ்மா என நியமிக்கிறான். இது வரை நடக்கும் ஸ்ருஷ்டி ஸமஷ்டி ஆகும்.
வ்யஷ்டி ஸ்ருஷ்டி – பகவான் ப்ரஹ்மாவையும் ரிஷிகளையும் மேற்கொண்டு படைக்க அதிகாரம் தந்து வெவ்வேறு வடிவும் இயல்வுமுள்ள வஸ்துக்களை அவர்கள் மூலம் ஸ்ருஷ்டிக்கிறான், இது வ்யஷ்டி ஸ்ருஷ்டி.
வ்யஷ்டி ஸம்ஹாரம் – பகவான் சிவன், அக்னி மூலமாக பௌதிக விஷயங்களை ஸம்ஹரிப்பது வ்யஷ்டி ஸம்ஹாரம்.
ஸமஷ்டி ஸம்ஹாரம் – பகவான் தானே எல்லா ஐந்து பூதங்களையும் மீதமுள்ள வஸ்துக்களையும் உட்கொள்வது ஸமஷ்டி ஸம்ஹாரம்.